Showing posts with label தோசை. Show all posts
Showing posts with label தோசை. Show all posts

Wednesday, October 7, 2015

கம்பு தோசை

தேவையான பொருட்கள்
கம்பு மாவு -2 கப்
உளுந்து - 1/2கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக
உப்பு

செய்முறை
ரெடிமேட் கம்பு மாவு(தான்) இங்கே கிடைக்கிறது. அதனை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

உளுந்துப் பருப்பை நன்கு அலசி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். கடைசி அரை மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நலம். :)  
ஊறிய உளுந்தை மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் கம்பு மாவு மற்றும் தேவையான உப்புச் சேர்த்து அரைக்கவும்.
கம்பு மாவு சேர்த்ததும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் மிக்ஸியை ஓடவிட்டால் கட்டிகளில்லாமல் மாவு கலந்துவிடும்.
வேறு பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
நான் கொஞ்சம் லேட்டா பாத்ததால மாவு பொங்ங்ங்ங்ங்....கி கீழ வழியட்டுமா? என்ற நிலையில் இருந்தது. கரெக்ட்டாப் புடிச்சட்டமுல்ல...ஹிஹி..ஃபோட்டோவத்தான்!! ;) :)
கம்பு தோசை மாவுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைக்கல்லை மூடி வைத்து...
எடுத்தால் தோசைகள் சூப்பராக வரும். காரசாரமான சட்னியுடன் பரிமாறவும்.  படத்திலிருக்கும் சட்னியின் லிங்க் இங்கே.  
பி.கு. இந்த கம்பு தோசையின் முன்னோடி ராகி தோசை..ஆமாங்க!! அறுசுவை.காம் -தளத்தில் பகிரப்பட்டிருந்த ராகி தோசையை முயற்சித்து பார்த்ததில் நன்றாக இருந்தது. அடுத்த முறை கடைக்குப் போயிருக்கையில் கம்பு மாவு கண்ணில் படவும் வாங்கிவந்து கம்பு தோசை சுட்டுப் பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்ததால் கம்புதோசை முதலில் கடைக்கு வந்துருச்சு...சாப்புட்டுப் பார்த்து எப்புடி இருந்துச்சுன்னு சொல்லீட்டுப் போங்க...நன்றி!  

Monday, April 27, 2015

கொள்ளு தோசை/ கொள்ளு-ப்ரவுன் ரைஸ் தோசை

தோசையில் உளுந்துக்கு பதிலாக கொள்ளு சேர்த்து செய்த தோசை, இட்லி அரிசி/புழுங்கல் அரிசிக்கு பதிலாக "கைக்குத்தல் அரிசி"/ப்ரவுன் ரைஸ் சேர்த்து செய்தது இந்த தோசை. எப்படியும் இட்லி தோசைய நம்ம டயட்-ல இருந்து விலக்க முடியாது என்று இருப்பதால.. அட்லீஸ்ட் கில்ட் ஃப்ரீயாச் சாப்பிடலாமே!! எங்க வீட்டில வாரத்துக்கொருமுறை இந்த தோசையும், கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையும் மாற்றி மாற்றி இடம் பிடிக்கின்றன இப்போது. நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களேன்! 

தேவையான பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 2 கப்
வெந்தயம்-1டீஸ்பூன்
கொள்ளு-1/2கப்
உப்பு 

செய்முறை
1. ப்ரவுன் ரைஸ், வெந்தயம் இரண்டையும் நன்றாக 2-3 முறை களைந்து சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கொள்ளையும் நன்றாக களைந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். 
3. க்ரைண்டரில் கொள்ளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு சும்மா பொங்கிப் பொங்கி வந்தது. க்ரீம் மாதிரி எப்படி நிற்குது பாருங்க கிண்ணத்தில்!! ;)  
 4. கொள்ளை சுமார் 20 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.
5. அரிசி-வெந்தயத்தையும் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அரைத்தெடுத்து கொள்ளுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து புளிக்க விடவும்.
6. மாவு புளித்ததும் கொஞ்சம் மாவை எடுத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாக வார்க்கவும்.
7. சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
8. சுவையான கொள்ளு தோசை தயார். நல்ல காரசாரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு
ஊறிய கொள்ளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் அரைக்கலாம்..நன்றாக மாவு காணும்.
இந்த மாவில் இட்லி செய்ய முடியாதா எனக் கேட்பவர்களுக்கு...நான் செய்து பார்க்கலை, அதனால் தெரியவில்லை. ;) :) 
இந்த தோசைக்கு தேங்காய்ச்சட்னியை விட, நல்ல புளிப்பான தக்காளிச் சட்னி, அல்லது காரசாரமான சட்னி, குழம்புவகைகள் நன்றாக இருக்கும். 

Saturday, October 19, 2013

ப்ரவுன் ரைஸ்-பச்சைப்பயறு தோசை / ப்ரவுன் ரைஸ் பெசரட்டு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1/2கப்
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
கொத்துமல்லித் தழை-கால் கட்டு
உப்பு

செய்முறை
அரிசி, பச்சைப்பயறை 2-3 முறை களைந்து நான்கு மணி நேரங்கள் ஊறவைக்கவும். 
ஊறியவற்றை தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
 அரைபட்டதும் பச்சைமிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 பெசரட்டுக்கான மாவு தயார். இது புளிக்க வேண்டிய அவசியமில்லை, அரைத்த உடனே தோசையாக சுடலாம்.
 தோசைக்கல்லை காயவைத்து தோசைகளாக ஊற்றவும்.
 சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
காரசாரமான ப்ரவுன் ரைஸ் பெசரட்டு தயார். விருப்பமான சட்னி, சாம்பார் அல்லது பொடியுடன் ருசிக்கலாம். புளிக்காத மாவில் செய்வதால் சூடாகச்  சாப்பிடவேண்டும், ஆறினால் காய்ந்து போனது போல இருக்கும்.
படத்தில் பெசரட்டுவுடன் இருப்பது வெங்காயச் சட்னி

Sunday, February 10, 2013

ரவா ரோஸ்ட்

இந்த தோசை இங்கே வந்த புதிதில் மிக்ஸி இல்லாமல் திண்டாடியபோது கை கொடுத்தது. பெங்களூரில் பக்கத்து அப்பார்ட்மென்டில் இருந்த ஒரு சென்னை தோழியின் செய்முறை, அமெரிக்காவில் சமைக்கப்பட்டது! எவ்ளோ ஊர் தாண்டி வந்திருக்கு பாருங்க! :)

 1 பங்கு ரவைக்கு 3 பங்கு அரிசி மாவு,  கொஞ்சம் மைதா.. இதுதான் பேஸிக் ரேஷியோ..அதனுடன் இந்த "மானே,தேனே, பொன்மானே.." (அதாங்க மற்ற பொருட்கள்) இதெல்லாம் விருப்பப்படி சேர்த்துக்  கொள்ளலாம். :))) சிலர் எண்ணெயில் தாளித்துக்கொட்டியும் செய்கிறார்கள். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே பச்சையாகச் சேர்ப்பேன், இந்த ருசியே நன்றாக இருப்பதால் தாளித்துக் கொட்டப்போகல இன்னும்! :)

தேவையான பொருட்கள்

ரவை -1/4கப்
அரிசி மாவு-3/4கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1/2கப்
[தயிர் உபயோகிப்பதானால் அரைக் கப்புக்கும் கொஞ்சம் குறைவான தயிருடன் தண்ணீர் விட்டு, கரைத்து உபயோகிக்கவும்]
உப்பு

சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-2 (பொடியாக நறுக்கியது)
முந்திரி -5 (பொடியாக நறுக்கியது) - விரும்பினால் சேர்க்கலாம், நான் சேர்க்கவில்லை.

 செய்முறை
அரிசிமாவு-ரவை-மைதா-உப்பு இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும்  முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.
~~
யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோது இந்த தொகுப்பு சிக்கியது. அருமையான பாடல்கள். போட்டுவிட்டால் ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நேரமிருந்தால் நீங்களும் கேளுங்க. 
:)
 

Saturday, January 7, 2012

வெள்ளரிக்காய் தோசை/ thellevu

தேவையான பொருட்கள்
பச்சரிசி-11/2கப்
உளுந்து -1/4கப்
வெள்ளரிக்காய்-1
வெந்தயம்-1டீஸ்பூன்
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
அரிசி-உளுந்தை கழுவி வெந்தயத்துடன் சேர்த்து 4-5 மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
அரிசியை அரைக்கும் நேரம் வெள்ளரிக்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கி அரிசி-உளுந்து-வெந்தயத்துடன் சேர்த்து (தேவைப்பட்டால் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு) நைஸாக அரைத்து எடுக்கவும்.
அரைத்தமாவை 7-8 மணி நேரங்கள் புளிக்க விடவும்.

தோசை செய்யும்போது தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை, மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் இவற்றை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைக்கவும். ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும் கொஞ்சம் எண்ணெய் தடவி,ஒரு கரண்டி மாவை ஊற்றி மெல்ல்ல்ல்ல்லிய தோசையாகத் தேய்த்துவிடவும்.

லேசாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும். திருப்பியும் போட வேண்டியதில்லை, அப்படியே மடித்து எடுத்துவிடலாம்.[provided, your griddle is well seasoned and in a good condition!! தோசைக்கல்லுக்கு ஆயில் மசாஜ் எல்லாம் செஞ்சு, வெங்காயம் தேய்ச்சு, உருளைக்கிழங்கு தேய்ச்சு ஐஸ் வைச்சு(!!) ரெடியா வைச்சிருக்க வேண்டியது உங்க வேலை!;)]

இந்த ரெசிப்பியைப் பார்த்த வலைப்பூவில் ஒரு வீடியோவும் இருக்கு..அவங்க தோசை மாவை க்ரெடிட் கார்டு (பயப்புடாதீங்க..புதுக்கார்டில்ல, வேஸ்ட்டான கார்டுதான்!] வைச்சு தேய்ச்சுவிடுவாங்க..அதற்கு லிங்க் இங்கே. நானும் அப்புடி செய்யலாமான்னு பார்த்தேன்..அன்னைக்குன்னு பார்த்து கைவசம் பழைய கார்டு எதுவும் இல்லை..என்னவரின் பர்ஸை நோண்டலாம்னு பாத்தா..அவர் படு பிஸியா ஆஃபீஸ் வொர்க்ல மூழ்கியிருந்தார். பழைய கார்டு எதுவும் இருக்கான்னு கேட்டது அவர் காதிலயே விழல..சரின்னு கரண்டிலயே தோசையை பேப்பர் மாதிரி ஊத்திட்டேன்.

இந்த தோசைக்கல்லு புதுசா வாங்கிருக்கேனாக்கும்..டார்கெட்-ல டார்ட்டியா மேக்கர்னு பேர் போட்டு வைச்சிருந்தாங்க..ரெண்டு ஹேண்டிலோட லைட் வெயிட்டா இருக்குது..வாங்கியாந்து நம்மூரு டார்ட்டியா(சப்பாத்தி) தோசைன்னு சுட்டுட்டு இருக்கேன்..சூப்பரா வருது(டச் வுட்! ;))

தோசை ரெடி..மேலே கண்ட 3 படங்களையும் தனித்தனியே எடுத்த பின்பு என் மூளையில் ஒரு பல்பு எரிஞ்சு கீழ்க்கண்ட படத்தை எடுத்தேன்..3 இன் 1!!! ;))))))

தோசை ரெடியாயிருச்சு..சாப்பிடும் ஆள்தான் ரெடியில்லை! மும்முரமா வேலையிலயே மூழ்கியிருந்தார். நமக்கெல்லாம்[எனக்கெல்லாம்னு படிச்சாலும் சரிதேன்! ;)] யாராச்சும் இப்புடி சுடச்சுட தோசை சுட்டுத் தரமாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும்..ஆனா பாருங்க.."கிடைப்பதின் அருமை கிடைக்கும்போது தெரியாது,அது கிடைக்காத போதுதான் தெரியும்!" னு சொல்லுவாங்கள்ல..அந்த மாதிரி தோசைய சுட்டு வச்சிட்டு சாப்பிட வாங்க,வாங்க,வாங்கன்னு வாய்வலிக்கக் கூப்ட்டும் ஒருத்தர் வரவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

தோசையசுட்டு முடிச்சுட்டு ரெண்டு பேரும் தோசை & தேங்காய்ச் சட்னி சாப்பிட்டோம்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு. ஆனா சாப்பிட்டேன்ங்கறதுதான் நிஜம்...கொஞ்சம் காரசாரமான/புளிப்பான சட்னி, குழம்புடன் சாப்பிட்டிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

இது எல்லாம் நடந்து முடிஞ்சப்பறம் ஒருவர் எழுந்து சாப்பிட வந்தார். ஒரு வாய் தோசை & சட்னி சாப்பிட்டதும், "ப்ரிட்ஜ்ல இருக்க அந்த வத்தக்குழம்ப எடு!"னாரு..அப்பதான் மணத்தக்காளி வ.குழம்பு ப்ரிட்ஜிலே இருக்குங்கறதே எனக்கு ஞாபகம் வந்தது. சூப்பரா இருக்கு தோசையும் குழம்பும்னு ஒரு புடி புடிச்சாரு... ம்ம்..என்ன பண்ணறது..அல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணுங்கோஓஓஓ!!! ;)

குறிப்பு
வெள்ளரிக்காய் கிடைக்கலைன்னா zuccini கூட யூஸ் பண்ணி செய்யலாம், அதுவும்கிடைக்கலைன்னா உளுந்து அளவை கொஞ்சம் அதிகரிச்சு மாவை அரைச்சு செய்யலாமாம். ட்ரை பண்ணிப் பாருங்க. :)

Wednesday, December 28, 2011

ரசித்து ருசித்தவை - 6

ரசித்து ருசித்தவற்றை பகிர்ந்து பலநாட்களாகி விட்டதுபோல தோன்றியது..அதனால் இந்த வருடத்தின் கடைப்பதிவாக ரசித்து ருசித்தவை ஆறாம் பகுதி! :)

1.Sweet Shells/Gavvalu - ஸ்வீட் ஷெல்ஸ்

Gavvalu -இது ஆந்திரா இனிப்பு, கவ்வாலு(கவ்வலு?) என்பது தெலுங்கில் சிப்பியைக் குறிப்பது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை இதனை செய்திருக்கிறேன். சுத்தமாக மறந்து போயிருந்த இந்த இனிப்பை இங்கே பார்த்ததும் மறுபடி செய்து பார்ப்போம் என்று செய்தேன். கடந்தமுறை முள்கரண்டி மூலம் சிப்பி வடிவம் செய்தேன், இந்தமுறை சீப்பு(!)!!! ஆமாங்க, comb-தான்!! புத்தம்புதுசா ஒரு சீப்பை இந்த ஷெல்ஸ் செய்யன்னு எடுத்து வைச்சிருக்கேன். ;) விரைவில் ஸ்டெப் வைஸ் படங்களுடன் ரெசிப்பியை போஸ்ட் பண்ணுகிறேன்.

2.தெள்ளேவு/Thellevu - தோசை

இதுவும் அதே ப்ளாகில் பார்த்து செய்ததுதான்..தோசையேதான்,ஆனா நார்த் கர்நாடகா ஸ்பெஷல் தோசை. அரிசி-உளுந்து-வெந்தயம்-வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து புளிக்கவைத்து தோசையாக ஊற்றவேண்டியதுதான். தோசை மிக மெல்லியதாக, பேப்பர் மாதிரி இருக்குமாம். கரண்டியால் தோசையை வட்டமாக தேய்க்காமல், வாழையிலையால் மெல்லியதாக தேய்த்து செய்வார்களாம். நாம கரண்டிலயே மெல்ல்ல்ல்ல்ல்ல்லிசா தோசை சுடுவம்ல?~ இதுக்கு ரெசிப்பியும் அடுத்து வந்துட்டே இருக்கு. :)

Thanks Vani Lohith for the yummy recipes! :)

3.எண்ணெய் கத்தரிக்காய் /Stuffed Brinjals

நித்து'ஸ் கிச்சன்ல இருந்து செய்த ஸ்டஃப்ட் எண்ணெய் கத்தரிக்காய். அவங்க ரெசிப்பியுடன் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை(தனியா) சேர்த்து வறுத்து பொடித்து ஸ்டஃப் பண்ணினேன். தக்காளி பிரியாணியுடன் சூப்பரா மேட்ச் ஆச்சு. நன்றி நித்து! ஸ்டெப் பை ஸ்டெப் படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

4.தோசைப்பொடி

வானதியின் வலைப்பூவிலிருந்து தோசைப்பொடி! இதுவரை இட்லிப்பொடியைத்தான் தோசைக்கும் வைத்து சாப்பிடுவது வழக்கம். தோசைக்குன்னு தனியாப் பொடி அரைச்சதில்லை. ;) அதனாலேயே இந்தப் பெயர் என்னைக் கவர்ந்தது. கரெக்ட்டா வீட்டிலும் இட்லிப்பொடி தீர்ந்து போயிருந்ததால் உடனே வறுத்து அரைத்துவிட்டேன்..
அரை கப் ட்ரை தேங்காய்ப் பவுடர், கால்கப் எள்ளு, ரெண்டு வரமிளகாய், ஒரு டீஸ்பூன் குறுமிளகு எல்லாம் கருகாமல் வறுத்து எடுத்து உப்பு சேர்த்து அரைத்தா தோசைப்பொடி ரெடி.

இங்கே வழக்கம்போல மகி காமெடி ஒண்ணு நடந்தது..வறுத்த பொருட்களை மிக்ஸில போட்டு அரைஅரைஅரைன்னு அரைச்சுட்டேன் போல..எள்ளுல இருந்து கிட்டத்தட்ட நல்லெண்ணெயே வந்துடுச்சு..ஹிஹிஹி! இந்தப் பொடிக்கு எண்ணெயே வேணாம்,அப்படியே சாப்புடலாம்னு என்னவர் ரசித்து சாப்ட்டார். அப்புறம்தான் அவங்க ப்ளாக்ல பாத்தேன், ஒண்ணா ரெண்டாதான் அரைக்கணும் போல! ;) எப்படி அரைச்சா என்ன..பொடி சூப்பரா இருந்தது.நன்றி வானதி!

இது நான் இட்லிப்பொடிக்கு வறுத்து வைத்த பொருட்கள். இந்தமுரை ப.பயறு-கொள்ளு-து.பருப்பு-அரிசி இப்படி ஒரு காலத்தில் அம்மா சொன்ன ரெசிப்பிய ஃபாலோ பண்ணினேன்.கூடவே கொஞ்சம் மிளகும் சேர்த்துகிட்டேன்..படத்திலிருக்கும் பொருட்கள்+ சிறுதுண்டு வெல்லம்-தேவையான உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தா சூப்பர் இட்லிப்பொடி ரெடி! நீங்க விரும்பின தானியங்களை வறுத்து சேர்த்துக்கலாம், என்ன ஒண்ணே ஒண்ணு...கடலைப்பருப்பும்,உளுந்துப்பருப்பும் மேக்ஸிமம் க்வான்டிட்டி இருக்கறமாதிரி பாத்துக்குங்க. :)

4.மணத்தக்காளி வத்தக்குழம்பு

இது என்னோட வலைப்பூவில இருக்க சுண்டக்காய் வத்தக்குழம்பை ரசித்து ருசித்து, அடுத்து மணத்தக்காளி வத்தல்ல குழம்பு வைத்தேன். :) கசப்பு-புளிப்பு-இனிப்புன்னு தூளா இருந்தது! :P:P
நம்ம சமையலையே ரசித்து ருசிக்கக்கூடாதா என்ன??என்ன சொல்றீங்க?! ? :))))))))))
நீங்களும் ரசித்து ருசியுங்க! நன்றி! :)
~~~
CNN-லயும் வந்தாச்சாம்...ஒய்....ஒய்....ஒய்...ஒய்?!!!!!!!!!!!!!!



ஒரிஜினல் பாட்டைவிட இந்தக் குட்டிப்பையன் பாடறது எனக்குப் பிடிச்சிருக்கு. நார்த் இண்டியன் வாசத்தோட, மழலையில் இந்தக்குட்டி பாடறதை கேட்டுப்பாருங்க. கொலவெறி அப்பப்ப குலவெறி ஆகும்..மூன் மூணாகும்!! க்யூட்டா இருக்கு! :))))

Tuesday, September 6, 2011

பார்லி-ப்ரவுன் ரைஸ் தோசை

தேவையான பொருட்கள்
பர்ல் பார்லி(pearl barley)-1/2 கப்
ப்ரவுன் ரைஸ்(brown rice)-1/2கப்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
உருட்டு உளுந்து-1/4கப்

செய்முறை
அரிசி-பார்லி-வெந்தயத்தை களைந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
உளுந்துப் பருப்பை கழுவி 11/2 மணி நேரம் (அரிசி-பார்லியுடன் சேர்த்தே)ஊறவிடவும்.
மிக்ஸி/க்ரைண்டரில் மாவாக அரைத்து 12 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசை ஊற்றும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து ஊத்தப்பம் போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
ஸாஃப்ட்டான, ஹெல்த்தியான தோசை ரெடி!
காரசாரமான குழம்பு/சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு
கொஞ்சமாக செய்ததால் பார்லி,அரிசி- உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துவிட்டேன். அதிகமாக செய்கையில் உளுந்தை தனியே ஊறவைத்தும் அரைக்கலாம்.
ஊத்தப்பமாக ஊற்றாமல் மெல்லிய தோசையாகவும் சுடலாம், பார்லி சேர்த்திருப்பதால் மிகவும் க்ரிஸ்ப்பாக சூப்பரா வரும். இந்த மாவை இட்லியாகவும் செய்யலாம்,ஆனால் தோசை வேலை சுலபமாக முடிந்துரும் என்பதால் நான் எப்பொழுதுமே தோசையாக ஊற்றிவிடுவேன். இட்லியை விட தோசை டேஸ்டும் பெட்டராக இருக்கும். ;)
அரிசி-பார்லியை அரைக்கையில் கவனமாகத் தண்ணீர் ஊற்றவும், கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தால் போதும்.

Wednesday, June 1, 2011

தோசை,ஆறு வகை!

கோவையிலே ஹோட்டலுக்கு(கவனிக்க,ரெஸ்டாரன்ட் இல்ல,நாங்கள்லாம் கொஞ்சம் பட்டிக்காடுங்க, ஹோட்டல்ல போய் சாப்பிடறதுன்னுதான் சொல்லுவோம்!:)). ஊர்ல எல்லாம் ரெஸ்டாரன்ட் எல்லாம் போனதில்லீங்க. அன்னபூர்ணா,சுகம், ஆனந்தாஸ்,அமுதசுரபி,லலிதாஸ்,ஐயப்பாஸ் பர்ல், ஆரியபவன் இதெல்லாம் நாங்க ரெகுலரா சாப்பிடும் ஹோட்டல்கள். சான்ஸ் கிடைச்சப்ப எல்லாம் தவறாம சாப்பிடுவது காலிஃப்ளவர் ரோஸ்ட். மூணுவகை சட்னி-சாம்பாரோட சுடச்சுட மொறுமொறு தோசை சூப்பரா இருக்கும்.:P :P

இங்கே இண்டியன் ரெஸ்டாரன்ட்ஸ்லே இட்லி தோசை நான் சாப்பிடவே மாட்டேன். (சாப்பிட்டா வெறுத்துப்போயிரும்,அந்தளவுக்கு சுமார் ரகம்தான் இதுவரை சாப்பிட்ட ஹோட்டல்கள்ல எல்லாமே!) எப்பவாவது ஊர்ல சாப்பிட்ட தோசைகள் நினைவுகள் வரப்ப இப்படி வீட்டுலயே செய்து மனசைத் தேத்திக்கறது!!!!

ஆறு வகை தோசைகள் பத்தி சுருக்கமா ஒரு முன்னுரை..
  • மசால் ரோஸ்ட் என்னவருக்கு சுத்தமா பிடிக்காத ஐட்டம்..ஆனா இந்த மாதிரி செய்தா மூச்சுக்காட்டாம சாப்பிடுவார்.;) ரெசிப்பி இங்கே.
  • காலிஃப்ளவர் ரோஸ்ட் தனி போஸ்ட்டாவே போடுமளவு போட்டோஸ் இருக்கு,யாராவது ஆர்வமா கேட்டீங்கன்னா போஸ்ட் பண்ணறேன். :)
  • மஷ்ரூம் ரோஸ்ட்,இதுவும் ஊரிலே சாப்பிட்ட நினைவில் ஒருநாள் செய்துபார்த்தேன்,சூப்பரா இருந்தது,அதிலிருந்து மஷ்ரூம் வாங்கும்போதெல்லாம் செய்துடுவேன். அதுக்கு ரெசிப்பி இங்கே.
  • முட்டை தோசை,வெங்காய தோசை..எங்களுக்குத் தெரியாதா?-ன்னு கேப்பீங்க..ஓக்கே,அதுக்கு ரெசிப்பில்லாம் நான் சொல்லல..ஒன்லி போட்டோஸ்!
  • பொடி தோசை,ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருக்கேன்,ரெசிப்பி இங்கே.
என்ஜாய் பண்ணுங்கோஓஓஓஓ!!!
காலிஃப்ளவர் ரோஸ்ட்

~~~~~
மசால் ரோஸ்ட்
~~~~~~
ஆனியன் ரோஸ்ட்

~~~~~
முட்டை ரோஸ்ட்

~~~~~
மஷ்ரூம் ரோஸ்ட்

~~~~~
பொடி தோசை
**********************
இந்த போஸ்ட்டுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்னு யோசிக்கைல இந்தப்பாட்டு நினைவுக்கு வந்தது,இலவச இணைப்பா தோசையுடன் இதையும் இணைத்துட்டேன். :)

LinkWithin

Related Posts with Thumbnails