Showing posts with label ஜவ்வரிசி வடாம். Show all posts
Showing posts with label ஜவ்வரிசி வடாம். Show all posts

Tuesday, July 19, 2011

கோடைக்கொண்டாட்டம் -1 : வடாம்


கொளுத்தும் வெயிலை உபயோகமாகப் பயன்படுத்திக்கொள்ள வடாம் பண்ணலாம் என்று -- வருடப் பொதுவாழ்வில்(!) முதல்முறையாக வடாம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். சொல்லுகிறேன் காமாட்சி அம்மாவிடம் பல்வேறு சந்தேகங்களை மெயிலில் தட்டிவிட்டேன், அவங்களும் பொறுமையா எல்லாத்துக்கும் விளக்கம் அனுப்பினாங்க. வெற்றிகரமாக கருவடாம் தயாரானது. சாப்புடுங்க..சாரி, செய்முறையப் படிங்க,அப்புறமா வீட்டில் செய்து சாப்புடுங்க! ;)

பூசணி கருவடாம்
தேவையான பொருட்கள்
உளுந்து-அரைகப்வரமிளகாய்-5
மிளகு-சீரகம் -தலா ஒரு டீஸ்பூன்
உப்பு
பூசணிக்காய்-சிறுதுண்டு~150கிராம்
(காயைத் துருவிப் பிழிஞ்சா நாலு கைப்பிடி வந்தது. போட்டோவில் தோல் மட்டும் இருக்கும், அதை அளவா வைச்சுக்குங்க! ரொம்ப குழப்புறேனோ? :) )

செய்முறை
பருப்பை களைந்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
பூசணிக்காயைத் துருவிக்கொள்ளவும்.
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.

பருப்பை நீரில்லாமல் வடித்து மிளகாய் சேர்த்து அரைக்கவும். பூசணித்துருவலை தண்ணீரில்லாமல் ஒட்டப்பிழிந்து பருப்புடன் சேர்த்து அரைக்கவும்.

அரைக்கையில் தண்ணீர் சேர்கக்கூடாது, பருப்பு அரைபடாவிட்டால் பூசணித்துருவலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அரைத்தால் அரைபடும்னு சொன்னாங்க, ஆனா பருப்பும் மிளகாயும் சும்மாவே அரைப்பட்டது,கடைசியில் பூசணித்துருவலை சேர்த்து 2 சுற்று அரைத்தேன்.

அரைத்த பருப்பு +பூசணி கலவையுடன் உப்பு, மிளகு சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து சிறிது தண்ணீரால் பேப்பரை துடைத்துவிடவும்.
தயார் செய்த வடகக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து பேப்பரில் வைத்து நல்ல வெயிலில் காயவிடவும்.
ஒரு நாள் காய்ந்ததும், அடுத்த நாள் வடாம்களை திருப்பிப்போட்டு காயவிடவும். இங்கே அடித்த வெயிலில் இரண்டே நாளில் காய்ந்துவிட்டது. மூன்றாம் நாள் வேறு தட்டில் வடாமை மாற்றி மேலும் ஒரு நாள் காயவைத்தேன்.
வடாம் ரெடி! கூட்டு-தால்-குழம்பு வகைகள் செய்யும்போது எண்ணெயில் வடாத்தை பொரித்துவிட்டு, கடுகு தாளித்து சமையலைத் தொடரலாம். சாப்பிடும்போது வடாம் குழம்பில் ஊறி உளுந்துவடை போல சூப்பராக இருக்கும். :)

//ஏன் இவ்வளவு கஷ்டம் ...!!பேசாம உளுந்து வடையே குழம்புக்குள்ளே பிச்சு..பிச்சு...போட்டுட்டாஆஆஆஆ..... ஹா..ஹா...//ன்னு நீங்களும் யோசிக்கிறவரா இருந்தா..வடை இதோ!
டைரக்ட்டா வடையப் பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சுப் போட்டு என்சொய் பண்ணுங்க. என்ன ஒண்ணு, வடாம் பண்ணினா மாசக்கணக்கில் வைச்சு குழம்பில் போடலாம், வடைய ஒரு நாள்தான் வச்சு போடமுடியும். உங்க வசதிப்படி பண்ணிக்கலாம்,ஒண்ணும் பிரச்சனையில்ல! ;) ;)
~~~~
எங்க வீட்டில் சாதம்-வரமிளகாய்-சீரகம்-உப்பு சேர்த்து அரைத்துக் கிள்ளி கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுப்போம்,அதுதான் இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து வீட்டில் செய்த வடகம். மற்றபடி கடைகளில் விதவிதமாக வெங்காய வடகம்-தக்காளி வடகம்-ஸ்டார் வடகம்-மஞ்சக்கலர் குடல்(!) வத்தல் என்று பலவகையில் கிடைக்கும்.

ஸ்கொயர் ஸ்கொயரா இருக்கும் வெங்காயம்/தக்காளி வடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அது எதிலே செய்வது..எப்படி செய்வது என்று தெரியலை, தெரிந்தால் சொல்லுங்க. ஜவ்வரிசிதான் என்று நினைக்கிறேன்,ஆனா வடகத்தில் ஜவ்வரிசி இருப்பதே தெரியாது..அப்பளம் மாதிரி ப்ளெய்னா இருக்கும்,ஆனால் சதுர வடிவம். (நல்லா தெளிவாக் குழப்பியாச்சு, என்ன சொல்லவரேன்னு எனக்கு புரியுது..ஆனாப் படிக்கறவங்களுக்குப் புரியுதா????!)

அதனால் ஜவ்வரிசி வடாமில் தக்காளி சேர்த்து அடுத்த ட்ரையல்! :)

தக்காளி - ஜவ்வரிசி வடாம்
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி-1/2கப்
தக்காளி-2
எலுமிச்சம்பழம்-1
வரமிளகாய்-8
பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டேபிள்ஸ்பூன்

செய்முறை
ஜவ்வரிசியை களைந்து முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
தக்காளி-மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறுஎடுத்து வைக்கவும்.
தக்காளி-மிளகாய் கலவையுடன் 4 கப் தண்ணீர் கலந்து அடிகனமான பாத்திரத்தில் வைத்து கொதிக்கவிடவும்.
தக்காளி கலவை நன்கு கொதிவந்ததும் ஜவ்வரிசியை நீரில்லாமல் வடித்து சேர்க்கவும். அடிபிடிக்காமல் கிளறிவிட்டு சுமார் 12-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

ஜவ்வரிசி வெந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவைக்கவும்.

அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து நீர் தடவி தயாராக வைக்கவும். வடாம் கலவை கை பொறுக்கும் சூடுக்கு ஆறியதும் கரண்டியால் (அ) ஸ்பூனால் சிறிய வட்டங்களாக ஊற்றவும்.

(வடாம் கலவையை முழுவதும் ஆறவிட்டால் இறுகிவிடும். அப்படி ஆகிவிட்டால் சிறிது நீர் விட்டு கரைத்து வடாமாக இட்டுக்கொள்ளலாம்)

வடாம் ஓரளவு (1-2 நாட்கள், உங்க ஊர் வெயிலைப் பொறுத்து! :)) காய்ந்ததும் கவனமாக உரித்து எடுத்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். வழக்கம்போல எனக்கு 2 நாட்களில் காய்ந்துவிட்டது.வடகமெல்லாம் நன்கு காய்ந்ததும் காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

ஜவ்வரிசி வடாமை எண்ணெயில் பொரிக்கும்போது கவனமாகப் பொரிக்கவேண்டும். சட-சடவென்று சத்தம் போட்டுக்கொண்டு பொரியும்..எண்ணெய் தெறிக்கும் வாய்ப்பும் உண்டு. ஜாக்ரதையாப் பொரிச்சு சாப்டுங்கோ! :)

தக்காளிப் புளிப்பு பத்தாதோ என்று எலுமிச்சைச்சாறு சேர்த்தேன், வடாம் கொஞ்சூண்டு புளிப்பா இருந்தது போல இருந்தது. அடுத்தமுறை தக்காளி மட்டும் சேர்த்து செய்து பார்க்கவேண்டும்.

என்ன..எங்கே கிளம்பிட்டீங்க..வடாம் போடவா??வெரிகுட்...மறக்காம இங்கே ஒரு கமென்ட்டையும் போட்டுட்டுப் போங்க! நன்றி! ;) ;)

LinkWithin

Related Posts with Thumbnails