Showing posts with label கோடை கொண்டாட்டம். Show all posts
Showing posts with label கோடை கொண்டாட்டம். Show all posts

Sunday, June 30, 2019

ஜூன் 2019

நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.43க்கு ஒரு பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். :) :) :) 

இங்கே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை ஜூன் 13ஆம் தேதி முதல் துவங்கியதால் ஸ்கூல் கிளம்(ப்)பும் அவசரம் இல்லை..ஆனால் நாள் முழுதும் 2 குட்டீஸை கட்டி மேய்க்கும் வேலை தூள் பறக்கிறது. கூடவே மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி-யும் சேர்ந்துகொள்ள ஜூன் மாதம் வெகுவேகமாகப் பறந்துவிட்டது, ஜூலை இப்பவே எட்டிப்பார்க்கிறது. ;) 

சரி, இந்தப் பதிவில் மீண்டும் தோட்டத்தில் விளைந்த காய்களைக் காண்போமா?? 
 கேரட்..ஷார்ட் & ஸ்வீட் வகை விதைகள், டிசம்பர் 2018 கடைசியில் நட்டது. ஜூன் மாதம் அறுவடைக்கு தயாரானது. கேரட் கிழங்குகள் குட்டிக்குட்டியாக, கொழுகொழுவென்று இருந்தன. ஷார்ட் வெரைட்டி என்பதால் நீளமில்லை..சுவை நல்ல இனிப்பாக இருந்தது. ஒரு பேக்கட் விதைகள், முதல் அறுவடையில் சுமார் இரண்டரைக்கிலோ கேரட் கிடைத்தது. அதன் பின்னர் தேவைக்கேற்ப பறிக்கிறேன். லயாவின் ஆசிரியைக்கு ஒரு முறை, பக்கத்திலிருக்கும் நண்பிக்கு ஒரு முறை என பறித்திருக்கிறேன். இன்னும் மீதமிருக்கின்றன. நாளைக்கு மீண்டும் கொஞ்சம் பறிக்கலாம் என்று எண்ணம்.

முதன்முறையாக இத்தனை கேரட்டுகள் விளைந்தது, நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமளவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இயற்கையன்னைக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!! :)


 அடுத்து ஃபாவா பீன்ஸ்/ ப்ராட் பீன்ஸ்..ஒரு செடி வாடிப்போயாகிவிட்டது. மீதமுள்ள ஒரு செடியில் பறித்த காய்கள். சுத்தம் செய்வது ஒரு வேலை என்றாலும், சுவை அமோகம். வெண்ணெய் போல வாயில் கரைகிறது.
பீன்ஸ் குழம்பு, சுடச்சுட இட்லியுடன்!! :) 
~~~
இந்த வருடம் என் பிறந்தநாள், திருமணநாளை மிகவும் ஸ்பெஷலாக்கியது கடல் தாண்டி, கண்டங்களையும் தாண்டி, ஆகாயவிமானத்தில் அழகாகப் பறந்து வந்த வாழ்த்து மடல்கள்!! 

இத்தனை சிரத்தையெடுத்து, வெட்டி, ஒட்டி, அழகாக உருவாக்கி, வாழ்த்துகளை தன் அழகுக்கையெழுத்தால் மேலும் அழகாக்கி அனுப்பிய என் அன்புத்தோழிக்கு..நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. I am so blessed to have you as a friend Aunty..Love you!!

இந்த வருடம் கோயில் தரிசனம் மிக நன்றாக இருந்தது. கூட்டமில்லை, குட்டிகள் இருவரும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு சாமி கும்பிட்டார்கள். திரும்பி வரும் வழியில் இன்னொரு நண்பர் தம்பதி (அவர்களது திருமணநாளும் அதே ஜூன் 25)-யை உணவகத்தில் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. நல்லதொரு நாளாக அமைந்தது. முகப்புத்தகத்தில் வாழ்த்திய அன்புநட்பூக்கள் இதையும் படிப்பீர்களென்ற நம்பிக்கையில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரிங்க, மணி 11 ஆகிருச்சு..நான் தூங்கப் போறேன்..மீண்டும் ஜூலையில் சந்திப்போம். நன்றி!

Thursday, May 16, 2019

மா, பலா - மலரும் நினைவுகள்!


மாம்பழம், பலாப்பழம் என்றால் உடனே என் நினைவில் வருவது பள்ளிப்பருவத்து கோடைவிடுமுறை காலங்கள் தான்!! 8ஆம் வகுப்பு வரையிலும் கோடை விடுமுறை வந்தால் பள்ளி முடிந்த அடுத்தநாள் சித்திகள் வந்து என்னை ஊருக்கு (வீட்டிலிருந்து 2 பஸ் மாற்றி போகவேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொண்டாமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம்.) என்னவோ ஏழு கடல் தாண்டி போகிற மாதிரி இருக்கும். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் 56-ஆம் நம்பர் பேருந்துக்கு காத்திருந்து பஸ் வந்தவுடனே எல்லாரும் இறங்க காத்திருந்து ஓடிப்போய் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தால் என்னவோ ஒரு பெரிய அச்சீவ்மெண்ட் போல இருக்கும். :))))

ஊரில் பஸ் விட்டு இறங்கி, வீடு சேரும்வரை பார்க்கும் ஆட்கள் எல்லாம் "டவுன் புள்ளை"களை நலம் விசாரிக்க வீடு வந்து சேருவோம். அப்புறம் லீவு நாட்கள் எல்லாம் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் "பாண்டிங்குழி (பல்லாங்குழி) ஆடுவதும், புளியங்கொட்டைகளைப் பரப்பி வைத்து "ஒட்டி" விளையாடுவதும், தாயக்கட்டம் போட்டு தாயம் ஆடுவதும், மாலையானால் மல்லிகை மொக்குகளை பறித்து கோர்த்துவைப்பதுமாகக் கழியும்.

அப்புறம்  சித்தி ஒரு நாள் உக்கடம் வந்து மாம்பழம், பலாப்பழம் எடுத்துவருவார். எனக்கு நினைவில் இருப்பது  பாலக்காட்டு மாம்பழம், நீல மாம்பழம், கிளிமூக்கு மாம்பழம்!!! அல்போன்ஸா எல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை! ஹிஹி...போகவர மாம்பழங்களை எடுத்து கழுவி கடித்து தின்று, கையெல்லாம் மாம்பழச்சாறு வடிய வடிய சுவைத்தது எல்லாம் மன அடுக்குகளில் அழியா நினைவுகளாய்!!!


பலாப்பழத்தை சுத்தம் செய்து சுளைகளை எடுக்கும் வரை பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும். வீடெல்லாம் மணக்கும், சுத்தம் செய்த பழங்களை சீக்கிரம் தீர்த்திடுதல் நலம். இல்லையென்றால் கோடைச்சூட்டிற்கு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அக்கம் பக்கம் வீடுகளுக்கெல்லாம் பகிர்ந்து விட்டு மீதமிருப்பதை வெல்லம் சேர்த்து வதக்கியும் வைப்பார்கள். பலாக்கொட்டைகளை "தண்ணி அடுப்பில்" (குளிப்பதற்கு தண்ணீர் காயவைக்கும் அடுப்பு) போட்டு சுட்டெடுத்து சுவைப்போம். பலாச்சுளைகளை ஓவராகத் தின்று வரும் வயிற்றுவலிக்கு இந்த சுட்ட பலாக்கொட்டை நல்லது என்பார்கள். எவ்வளவு சுளைகளை வயித்துக்குள் அமுக்கினாலும், 2-3 சுட்ட பலாக்கொட்டைகள் தின்றுவிட்டால் எல்லாம் நலமே!!! :)

எதுக்கிந்த மலரும் நினைவுகள் என்றால்..தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பலாப்பழமும், சமீபத்தில் வால்மார்ட்டில் சுகந்தமான மணம் வீசிக்கொண்டிருந்த மாம்பழங்களை வாங்கிவந்து கத்தி கபடா எல்லாம் உபயோகித்து நறுக்கி நளினமாகச் சாப்பிடாமல், சும்மா கழுவிட்டு, தோலை உரித்து துப்பிவிட்டு சுவைத்து தின்னும்போது இதெல்லாம் நினைவு வந்ததுதான். :))))

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

Friday, April 12, 2013

ஸ்ட்ராபெரி பெண்ணே!..

நீங்க மார்கெட் போகாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரை தனியாக அனுப்பினால் என்ன ஆகும்?  நீங்க அனுப்பிய தேவையான பொருட்கள் லிஸ்ட்டை சுத்தமாக மறந்துபோயி, அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு, பச்சைமிளகாய்-இஞ்சி-கொத்துமல்லித் தழை போன்ற கொசுறுகளை ஒரு கணமும் நினைக்காமல், ஒரு மினி ஃப்ரூட்-வெஜிடபிள் மார்க்கட்டையே காரில் நிறைத்துக்கொண்டு வருவார்கள். :) அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ப்ளாகில் போட நமக்கு ஒரு பதிவு தேறும், ஹிஹி! :)

மினி மார்க்கெட்டைப் பார்த்து மயக்கம் போட்டுவிடாமல், எல்லாத்தையும் பத்திரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு உபயோகிப்பது உங்க பொறுப்பு! எங்க வீட்டில் நடந்த இப்படியாகப்பட்ட  நிகழ்வொன்றில் ஒய்யாரமாக கண்ணாடிப் பெட்டியில் செக்கச்செவேர் என்று வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் புளிப்புன்னா புளிப்பு, வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு!! அதற்காக தூக்கி குப்பையில் போட  மனசு வருமா? இப்படி ஒரு ஸ்மூத்தியை மிக்ஸியில் அடிச்சு, ஒரு டால் க்ளாஸ் நிறைய ஊற்றி, ஸ்டைலா ஒரு பழத்தையும் கட் பண்ணி வைச்சு போட்டோ புடிச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ந்து குடிச்சும் முடிச்சுட்டேன்!
தேவையான பொருட்கள் 
ஸ்ட்ராபெரி பழங்கள் -5 (பெரிய பழங்கள்)
தயிர்-கால்கப்
தண்ணீர்-1/2கப்
சர்க்கரை(விரும்பினல்)-2டீஸ்பூன்

செய்முறை
ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக கழுவி, அவற்றின் தலையில் இருக்கும் இலை மற்றும் தண்டுப் பகுதியை நீக்கவும்.
பழங்களை துண்டாக்கி மிக்ஸியில் போட்டு சிலநிமிடங்கள் அரைக்கவும்.
பிறகு அத்துடன் தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் அரைக்கவும்.
ஜில் ஜில் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி தயார். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி சில்லென்று பருகவும்.
பி.கு. புளிப்பான பழம் என்பதால் போட்டோவில் இருக்கும் ஒரு ஒய்யாரக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா :) போட்டோ செஷன் முடிந்ததும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கே குடியேறிவிட்டார். புளிப்பில்லாத பழம் என்றால், ஸ்மூத்தி பருகும்போது இடையிடையே அந்தப் பழத்தையும் ஒவ்வொரு கடி கடிச்சு சாப்பிடலாம். :)

இது டயட்(!) வர்ஷன்..இதிலேயே கொஞ்சம் வேரியேஷன் வேணும்னா...ஸ்ட்ராபெரி பழங்கள், குளிர்ந்த பால், சர்க்கரை, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து அரைத்தா..
ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் ப்ரேக்ஃபாஸ்ட்-டுக்கு ரெடி!  

இலவச இணைப்பு : மின்சாரக் கனவிலிருந்து ஒரு பாட்டு.. :) :)))



~~~
அனைவருக்கும் இனிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
~~~

Monday, June 25, 2012

தேங்காய்ப்பால் கடல்பாசி

தேங்காய்ப்பால் கடல்பாசி / அகர்-அகர் வித் கோக்கனட் மில்க் / சைனா க்ராஸ் வித் கோக்கனட் மில்க் /
Agar-agar/ China grass with Coconut milk

தேவையான பொருட்கள்

கடல் பாசி/ அகர் அகர் / சைனா க்ராஸ் - 15 இழைகள்
சர்க்கரை - 1/4கப்
தேங்காய்பால் பவுடர் - 2டேபிள்ஸ்பூன் ( அரைகப் சுடுநீரில் கரைத்தது) அல்லது தேங்காய்ப் பால் -1/2கப்
புட் கலர்ஸ்

செய்முறை
கடல்பாசியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த கடல்பாசி கரையும்வரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
(கிட்டத்தட்ட 25 நிமிடங்கள், on low medium heat).

அகர்-அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்து கலக்கி, தீயை குறைத்துக்கொண்டு தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.

சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, சல்லடையால் வடிகட்டவும்.
விரும்பிய வண்ணங்கள்சேர்த்து கலக்கி ஆறவைக்கவும்.

நான் பச்சை சிவப்பு 2 நிறங்களும் சேர்த்தேன். கலவை ஆறியதும் ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி குளிரூட்டியில் வைத்திருக்கிறேன். குறைந்தது 2 மணி நேரம் குளிர்ந்ததும் ஐஸ் க்யூப் ட்ரேக்களில் இருந்து கடல்பாசி நட்சத்திரங்களை பெயர்த்து எடுத்து காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜிலேயே வைத்து, தேவைக்கேற்ப எடுத்து ருசிக்கலாம்.

அச்சுக்களில் ஊற்றி உறைய வைப்பதற்கு பதிலாக கலவை ஆறியதும் அகலமான தட்டுக்களில் ஊற்றி ஆறவிட்டு கத்தியால் விரும்பிய வடிவில் நறுக்கியும் வைக்கலாம்.

தேங்காய்ப் பால் சேர்த்ததால் வண்ணங்கள் பளிச் என்று வராமல் கொஞ்சம் glossy look-ல் இருக்கிறது. சிவப்பு என்று நினைத்தது பிங்க் கலர் ஆகிவிட்டது. எப்படி பளிச் வண்ணங்கள் கொண்டுவருவது என்று அடுத்து தேடவேண்டும். ;)

LinkWithin

Related Posts with Thumbnails