Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts

Thursday, February 7, 2019

புளிக்காய்ச்சல் & புளி சாதம்

தேவையான பொருட்கள் 
புளி - பெரிய ஆரஞ்சுபழம் அளவு 
 வறுத்த வேர்க்கடலை - 1/4கப் 
கடுகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 
கடலைப்பருப்பு -1டேபிள்ஸ்பூன்
உளுந்துபருப்பு -1 டேபிள்ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2டீஸ்பூன் 
வரமிளகாய் -2 
நல்லெண்ணெய் 
வெல்லம் - சிறுதுண்டு
உப்பு 
வறுத்து பொடிக்க
கொத்துமல்லி விதை/தனியா - 1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் -3 (காரத்துக்கேற்ப) 
வெந்தயம் - 1டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் கொஞ்சமாக எண்ணெய் காயவைத்து கொத்துமல்லி விதை, மிளகாய், வெந்தயம் இவற்றை தனித்தனியே (கருகாமல்) வறுத்து ஆறவைத்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
புளியை ஒண்ணரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறவைத்து கெட்டியான புளிக்கரைசல் (சுமார் 2 கப்) எடுத்துக்கொள்ளவும். 

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காயவைக்கவும். (புளிக்காய்ச்சல் நாள்பட வைத்து உபயோகிக்க நிறைய எண்ணெய் விட்டால் நன்றாக இருக்கும். உங்க விருப்பப்படி எண்ணெய் ஊற்றிக்கலாம், மினிமம் ஒரு 4 டேபிள்ஸ்பூனாவது உபயோகித்தால் நன்று)

எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து,  கறிவேப்பிலை சேர்த்து வரமிளகாய்களை ஒடித்துப்போட்டு வறுக்கவும். பிறகு க.பருப்பு, உ.பருப்பு, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கெட்டியான புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வருகையில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். (புளி ஏற்கனவே குக்கரில்  வேகவத்ததால் சீக்கிரம் கொதித்து எண்ணெய் பிரிந்துவிடும்.)

நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்தால் வாரம், பத்துநாட்களுக்கு மேலாகவே நன்றாக இருக்கும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
உதிரியாக வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சலை கலந்தால் சுவையான புளிசாதம் தயார். சிம்பிளா ஒரு உருளை வறுவல், அல்லது தேங்காய்த்துண்டுகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

பின்குறிப்பு 
பொதுவாக எங்க வீடுகளில் புளி சாதம் வெங்காயம் போட்டுதாந் செய்வோம். எங்காவது பயணம் போகையில் முதல் நாள் இரவே இப்படி புளிக்காய்ச்சல் செய்து சாதமும் செய்து கலந்து வைத்துவிடுவோம். காலையில் நேரத்தில் கிளம்பி இதை எடுத்துப்போக சுலபமாக இருக்கும். மற்றபடி புளிக்காய்ச்சலை செய்து சில நாட்கள் வைத்து அவ்வப்போது புளி சாதம் கலப்பதெல்லாம் இல்லை..சில நேரங்களில் மீதமாகும் சாதத்துக்கு புளிக்கரைசலைப் பிரட்டி வைத்து அடுத்த நாள் காலையில் வெங்காயம் மிளகாய் மற்றும் இன்ன பிற வகைகளுடன் தாளித்து சூடாகச் சாப்பிடுவதும் உண்டு. சில நாட்கள் முன்பு தோழிகளுடன் பேசுகையில்(வாட்ஸாப்-புகையில் என்று படிக்கவும் ;)) இந்த புளிசாதம் விவகாரம் வந்தது...எல்லாரும் " என்ன...புளி சாதத்தில் வெங்காயமா? " என்று மூக்கில் விரலை வைத்தார்கள். சரி..ஒரு முறை வெங்காயம் இல்லாமல் செய்து பார்ப்போம் என்று முயற்சித்தது இது. தோழி ஒருவர் யூடியூப் லிங்க் கொடுத்தார்..அந்த லிங்க் பார்த்து செய்ததுதான் இந்த புளிக்காய்ச்சல் & புளிச்சாதம். தேங்க்யூ காயத்ரி!! :)) 
புளியை குக்கரில் வேகவிடுவதும் யுடியூபில் இன்னொரு வீடியோவில் பார்த்ததுதான். 

என்னிடம் இருக்கும் வரமிளகாய் கொஞ்சம் டூமச் காரம்..மொத்தமாகவே 5 மிளகாய் (பொடிக்க 3, தாளிக்க 2) மட்டுமே சேர்த்தும் காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. உப்புமா, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் ரொம்ப சூப்பராக இருந்தது. நீங்களும் செய்து பாருங்க.  நன்றி! 

Thursday, July 7, 2016

பச்சை வெங்காயச் சட்னி

தேவையான பொருட்கள் 
தேங்காய் 
வரமிளகாய்
புளி
வெங்காயம்   

செய்முறை 
மிக்ஸியில் தேங்காய், புளி, வரமிளகாய் சேர்த்து தண்ணீரில்லாமல் அரைக்கவும். ஓரளவு அரைபட்டதும் தேவையான உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

கடைசியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

குறிப்பு 
தேங்காய், மிளகாய், புளி, வெங்காயம் எல்லாமே அவரவர் ருசிக்கேற்ப கூடக்குறைய சேர்க்கலாம். :) வெங்காயம் மட்டும் கவனமாகச் சேருங்க, அதிகம் சேர்த்தா கசக்குது என்று சட்னி செய்து பார்த்த ஒருவர் சொல்லியிருக்காங்க. 
சட்னியை தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கஞ்சி வகைகள், இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றுடனும் சூப்பராக ஜோடி சேரும். 

Friday, April 1, 2016

இஞ்சி பூண்டு சட்னி

தேவையான பொருட்கள் 
பூண்டு - 7 முதல்10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
இஞ்சி - கட்டை விரல் அளவு
[யாரோட கட்டை விரல், யாரோட பற்கள் இப்படியான கோக்கு மாக்கான கேள்விகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் இணைக்கப்பட்டுளது மக்காஸ்!! படம் பார்த்துப் பொருளறிக! ;):) ]
புளி - சிறு துண்டு
வரமிளகாய் -1 
உப்பு 
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை 
இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சி பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் காயவைத்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.
ஈஸ்டருக்கு வீட்டுக்கு வந்த டைனோஸர்கள் டைனிங் டேபிளில் இளைப்பாறிக்கொண்டிருந்தன. இட்லி-சட்னியைப் பார்த்ததும் பறந்தோடி வந்து ருசி பார்க்க காத்திருக்கும் டைனோஸர்கள்! :) :)

Friday, October 16, 2015

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை - 1 கொத்து 
சோம்பு - 1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 (அ) பெரிய வெங்காயம் - சிறு துண்டு
புளி 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
எண்ணெய் காயவைத்து வரமிளகாய், கறிவேப்பிலை, சோம்பை வதக்கி எடுத்துக்கொள்ளவும். மிளகாயும் சோம்பும் விரைவில் பொரிந்துவிடும், கருகாமல் வறுக்கவேண்டும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாக பொரியும் வரை வதக்கி எடுத்து ஆறவைக்கவும். 
ஆறியதும் அவற்றுடன் வெங்காயம் , புளி, உப்பு  சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.
எல்லாம் நன்றாக இடிபட்டதும்,
தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
ஸ்பூனால் நன்றாக கிளறி கலக்கிவிடவும்.
எல்லாம் ஒன்றாக கலக்கும் வரை இடித்து எடுத்தால்,
இடி சம்பல் அல்லது இடிச்ச சம்பல் தயார். தேங்காய்ப் பூ சேர்த்த பிறகு நிறைய நேரம் இடிக்கக் கூடாது, தேங்காய் எண்ணெய் விட்டுவிடும். அதனால் கவனமாக இடிக்கவும்.

இலங்கை ரெசிப்பியான இது இட்லி, புட்டு, தோசை, தேங்காய்ப்பூ ரொட்டி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் வகைகளுடனும் நன்றாக இருந்தது. சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த ரெசிப்பியைக் கொடுத்த அம்முலு மற்றும் அதிராவுக்கு என் நன்றிகள்!

Tuesday, August 20, 2013

ப்ளாக் & ஒயிட்...ப்யூட்டிஃபுல் சைட்! :)

கவுனி அரிசி & பூசணிக்காய் தயிர் பச்சடி 
இரண்டு குறிப்புகளுமே மிகவும் சிம்பிளான குறிப்புகள் என்பதால் ஒரே பதிவில் வெளியிடுகிறேன்.  கருப்பு-வெள்ளை கலர் காம்பினேஷனில், தேவையான பொருட்களும் குறைவாக, செய்முறையும் சின்னதாக, உடலுக்கும் ஆரோக்கியமான குறிப்புகள். செய்து பார்த்து சொல்லுங்க! :) 
~~~!!~~~
கவுனி அரிசி -தேவையான பொருட்கள்
வைல்ட் ப்ளாக் ரைஸ்/ Wild black rice -1/2கப்
சர்க்கரை-1/4கப் (சுவைக்கேற்ப)
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
கருப்பரிசியை 2-3 முறை களைந்து, 11/2 கப் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரங்கள் ஊறவைக்கவும். [நேரமிருந்தால் 8 மணி நேரங்கள் கூட ஊறவைக்கலாம், உங்க வசதி!]
அரிசியை ஊறவைத்த தண்ணீருடன் குக்கரில் வைத்து 3-4 விசில்கள் வரும்வரை வேகவிடவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மசித்துவிட்டு, சர்க்கரை தேங்காய்ப்பூ சேர்த்து கிளறவும்.
சுவையான கவுனி அரிசி தயார்! 
கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது, ப்ரோட்டீன் அதிகம் உள்ளது என சொல்கிறார்கள். இப்படி சர்க்கரை சேர்த்து செய்கையில் சுவையாக உள்ளது. வெறும் சாதமாக வடித்து சாப்பிட (எங்களால்) முடியவில்லை! ;) முழுவதும் பாலீஷ் செய்யப்படாத அரிசி என்பதால் உமி நிறைய இருக்கிறது. விலையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது! ;)  செட்டி நாட்டுப் பக்கம் இந்த கவுனி அரிசி மிகவும் பிரபலமான இனிப்பு வகை எனத் தெரிந்தது. ஸ்ப்ரவுட்ஸ் ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் வாங்கி வந்தது இந்த வைல்ட் ப்ளாக் ரைஸ்தான்! 
~~~
பூசணிக்காய் தயிர் பச்சடி 
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்- சிறு கீற்று[துருவியதும் சுமார் அரைகப் வந்தது]
தயிர்-கால் கப்
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-1
உப்பு 
தாளிக்க
எண்ணெய்
கடுகு-1/4டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம் 
வரமிளகாய்-1
பெருங்காயத்தூள்-2 சிட்டிகை 
செய்முறை
பூசணிக்காயைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். 
அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி-பச்சைமிளகாய்-உப்பு-தயிர்-தேங்காய்த்துருவல் சேர்த்து கலக்கி வைக்கவும்.
தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து தயிருடன் சேர்க்கவும்.
சுவையான பூசணி-தயிர் பச்சடி தயார். பூசணியை பச்சையாக சேர்த்திருக்கிறோம் என்பதே தெரியாது. சுடுசாதத்துடன் கலந்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.
இந்த குறிப்பு போனவருஷம் ஊருக்கு போயிருந்த பொழுது அவள் விகடனில் பார்த்து முயற்சி செய்தேன். சூப்பராக இருந்தது. இங்கே வந்த பிறகு சுத்தமாக மறந்தே போயிருந்தேன். திடீரென நினைவு வரவே செய்தாச்சு. :) 

Tuesday, April 23, 2013

மதுரை சட்னி

 தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிக்கு இட்லி-தோசை வகைகளே பிரசன்னமாகும். என்னதான் ரவா உப்புமா- சேமியா உப்புமா-பொங்கல்-பூரி-சப்பாத்தி என்று வேறு ஆப்ஷன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கும் தேவைப்படுவது ஒரு சட்னி!!  அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம்! :))

தமிழ்-ஆங்கிலம் இரண்டு வலைப்பூக்களிலும் சேர்த்து ஒரு 25 வகை சட்னி ரெசிப்பிய நானே போஸ்ட் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்ன சட்னி செய்வது என மண்டையப் பிச்சுக்கிற மாதிரிதான் இருக்கும். நான் ஒரு டீஃபால்ட் சோம்பேறி என்பதால் இந்த சட்னி அரைப்பதில் எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். நிறைய சட்னி ரெசிப்பிகள் வெங்காயம்-தக்காளி நறுக்கி, வதக்கி, ஆறவைச்சு, அரைச்சு, தாளிச்சுக் கொட்டுவதா இருக்கும். இம்ம்ம்ம்மாஆஆஆம் பெரிய ப்ராஸஸா என மலைப்பா இருக்கும் எனக்கு!! அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும்! :))

தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது  ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ்! இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே! அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க கேக்காட்டியும் நானே சொல்லுவேன். வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள்! வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட்? கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி! ரெசிப்பிய ஆங்கிலத்தில பார்க்க இங்கே க்ளிக்குங்க.

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காய்ச்சது..இனி இன்றைய ரெசிப்பிக்கு போகலாம். ஒரு சனிக்கிழம காலைல ப்ரெஷ்ஷா எந்திரிச்சு, ஃபுல் ஆஃப் எனர்ஜியோட என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சுகிட்டே ப்ரவுஸ் பண்ணினப்ப "ஜிங்ங்ங்ங்ங்ங்"- ன்னு "குக்கிங் ஜிங்கலாலா"-ல இருந்து வந்து குதிச்சுச்சு இந்த மதுரை சட்னி. என்னதான் நான் சோம்பேறின்னாலும், இப்படி புதுசா முயற்சிப்பதில ஆர்வம் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால செய்து பார்த்தேன், சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் வேலை அதிகம்னாலும், இட்ஸ் வொர்த் அ ட்ரை! நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் 
வதக்கி அரைக்க 
வெங்காயம் - பாதி
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)
புளி- சிறிது
எண்ணெய்
தாளிக்க
வெங்காயம்- மீதி! :) [அதான் பாதிய நறுக்கி வதக்கீட்டீங்கள்ல..அதில மீதியிருக்கும் அடுத்த பாதி]
தக்காளி-1
கடுகு -1/2டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும். 
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

5நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும். காரசாரமான மதுரை சட்னி ரெடீஈஈஈ! இட்லி-தோசை-பணியாரம் இவற்றுக்கு பொறுத்தமான சட்னி இது. 

இந்தச் சட்னி செய்த அன்று பணியாரம்தான் செய்திருந்தேன். சட்னி ரெசிப்பி குடுத்த ஆளுக்கு அது எப்படியோ தெரிந்திருக்கு போல!  // Adutha murai kuzhi paniyaram kudunga.//  என்று கேட்டிருந்தாங்க..அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. மங்கள மீனாக்ஷி, என்ஜாய் குழிப்பணியாரம் அண்ட் மதுரை சட்னி!
படம்தான் கொஞ்சம் சரியில்லை, பசியில எடுத்தேனா, பொறுமையா க்ளிக்க முடில, அஜீஸ்;) பண்ணிக்குங்க!
~~~
இலவச இணைப்பு! :))) 
குரங்கு பொம்மையால முகத்த மறைச்சுகிட்டு ஒத்தக் கண்ண மட்டும் காட்டும் எங்க வீட்டுக் க்யூட் குட்டிப் பிசாசு! :))))

Tuesday, February 5, 2013

Guacamole

Guacamole (US /ɡwɑːkəˈml/; Spanish: [wakaˈmole] or [ɡwakaˈmole]), is an avocado-based sauce that originated with the Aztecs in Mexico.[1] In addition to its use in modern Mexican cuisine it has also become part of American cuisine as a dip, condiment and salad ingredient. It is traditionally made by mashing ripe avocados with a molcajete (mortar and pestle) with sea salt. Some recipes call for tomato, onion, garlic, lime juice, chili, yogurt and/or additional seasoning's.
Thanks to Wikipedia. 

க்வாக்கமோலே - இது ஒரு மெக்ஸிகன் டிப். சிப்ஸ் உடன் பரிமாறலாம், அல்லது மெக்ஸிகன் உணவுவகைகளுடன் பரிமாறலாம். இங்கே உள்ள சிப்போட்லே மெக்ஸிகன் உணவகத்தில் இதனை ருசித்திருக்கிறேன். சமீபத்தில் அவகாடோ பழங்கள் கிடைத்ததில் ஒருமுறை அவகாடோ சப்பாத்தி செய்தபிறகு, வேறென்ன செய்யலாம்னு கொஞ்சம் இணையத்தை துருவியதில்;) க்வாக்கமோலே சிக்கியது!முதன்முறையாக வீட்டில் செய்கிறேன், அதனால் எப்படி இருக்குமோ என கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், சும்மா சூப்பரா இருந்தது! :) 

க்வாக்கமோலே-வில் அவகாடோ-எலுமிச்சை சாறு -உப்பு இவைதான் மூலப்பொருட்கள் (main ingredients) இவற்றுடன் உங்க விருப்பப்படி பொருட்களைச் சேர்த்து கலந்துக்கலாம். சிலர் தயிர் சேர்க்கறாங்க, பூண்டு சேர்க்கிறாங்க..நான் எனக்குப் பிடிச்ச பொருட்களைச் சேர்த்திருக்கேன்.

தேவையான பொருட்கள்
அவகாடோ பழம்/பட்டர் ஃப்ரூட் -1
கால் பாகம் தக்காளி
சிறியதாக ஒரு வெங்காயம் (Shallot)
இரண்டு பச்சைமிளகாய் (காரத்துக்கேற்ப)
ஒரு மூடி எலுமிச்சைச் சாறு
ஒரு கைப்பிடி கொத்துமல்லித் தழை
உப்பு

செய்முறை
வெங்காயம்-தக்காளி-மிளகாய்- கொத்துமல்லித் தழை இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
தக்காளியின் விதைகள் இல்லாமல் சதைப் பற்றான பகுதியை மட்டும் நறுக்கியிருக்கேன். மிளகாயின் காரம் குறைவாக வேண்டும் என்றால் அதிலும் விதைகளை நீக்கிவிட்டு நறுக்கிகொள்ளவும். 
அவகாடோ-வை நறுக்கி, அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து, மசித்துக்கொள்ளவும்.
 
அதனுடன் நறுக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
 
தேவையான உப்பும் சேர்க்கவும்.
 
எல்லாவற்றையும் ஒன்றாக சேரும்படி கலந்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் அரைமணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்துப் பரிமாறலாம்.
ஸோ...க்வாக்கமோலே ஃப்ரிட்ஜ்ல இருக்கட்டும், நாம அப்படியே பொடிநடையா எங்கூர் உழவர் சந்தைக்குப் போயிட்டு வரலாம் வாங்க! :) 
இங்கே இன்னும் முழுவீச்சில் உழவர் சந்தை துவங்கவில்லை..குளிர்காலம் வேறு! ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு காய்கறிக்கடை! :) சில பழக்கடைகள், ஒரு ஆர்கானிக் பால்- கடை, செல்லப் பிராணிகளுக்கான கடை ஒன்று, க்ரீன் டீ கடை ஒன்று என இரட்டைப்படை எண்ணிக்கையைக் கூடத் தொடாத கடைகள்தான் உள்ளன. இருந்தாலும் நம்மள்லாம் போய் ஆதரவு குடுத்தாத் தானே இன்னும் நிறையக் கடைகள் வரும்? -அப்படீன்ற நல்லெண்ணத்தில நான் வாரவாரம் போலாம்னு இருக்கேங்க! ஹஹஹா!
சரி..போனதுக்கு சல்ஸா கடைல ஒரு பாக்கெட் சிப்ஸ் வாங்கிட்டு, காய்க்கடைக்காரம்மா கிட்ட கொஞ்சநேரம் கதையடிச்சுட்டு ஒரு முட்டைக் கோஸும், ரெண்டு தக்காளியும் வாங்கிட்டு நடையக் கட்டினேன்.
வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து guacamole-வ கொஞ்சம் கிண்ணத்தில எடுத்துவைச்சிகிட்டு, சிப்ஸையும் பிரிச்சு ஒரு புடி புடிச்சேன்! ;))))) 

சிப்ஸ் &க்வாக்கமோலே காம்பினேஷன் சூப்பரா இருக்கும்! பொரிக்காம, bake பண்ண சிப்ஸா இருந்தா உத்தமம், ருசி கம்மியா இருந்தாலும் ஆரோக்கியமா இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க..நன்றி, வணக்கம்!

Wednesday, April 4, 2012

ரசித்து ருசித்தவை - 7

மற்ற வலைப்பூக்களில் இருந்து நான் ரசித்து ருசித்தவை..நீங்களும் ருசிக்க! :)
~~
1.Baked காலிஃப்ளவர் கறி - வானதியின் வலைப்பூவிலிருந்து..
சப்பாத்திக்கு ஈஸியான சுவையான பக்க உணவாக இருந்தது. கொஞ்சம் எண்ணெய் சூடாக்கி, மஞ்சள்தூளும் சேர்த்து கலக்கி அதில் காலிஃப்ளவர் பூக்களை பிரட்டி அவனில் 15 நிமிடங்கள்
bake செய்துகொள்ளவேண்டும். பிறகு சீரகம், பூண்டு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி, மிளகாய்ப்பொடி, கரம்மசாலாபொடி, உப்பு சேர்த்து கிளறி சமைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து சூடாக்கி இறக்கினா அவ்வளவுதான். சுவையான சைட் டிஷ் ரெடி!
நன்றி வானதி!

2. சர்க்கரை வள்ளி - சித்ராசுந்தர் வலைப்பூவில் இருந்து..
பலநாளாக கிழங்கை குக்கரில் போடுவேன், அல்லது கிண்ணத்தில் வேகவைப்பேன். இனிப்பே இல்லாத மாதிரி இருக்கும். சித்ரா அவர்கள் வலைப்பூவில் இட்லித் தட்டில் வைத்து வேகவைக்கச் சொல்லிருந்தாங்க. ரொம்ப நல்லா வந்தது கிழங்கு.
நன்றி சித்ரா!
3.முறுக்கு - சித்ராசுந்தர் வலைப்பூவில் இருந்து..
பொங்கல் தீபாவளிக்கு செய்யும் முறுக்கை நினைவு படுத்திவிட்டாங்க பொட்டுக்கடலை மாவு முறுக்கை செய்து காட்டி...டெம்ப்ட் ஆகி நானும் கொஞ்சம் முறுக்கு செய்துட்டேன். :)
நன்றிங்க!


4.பொடி இட்லி - கிரிஜாவின் வலைப்பூவில் இருந்து..

மினி இட்லி அல்லது பெரிய இட்லியை நறுக்கி ரெடியா வைச்சுக்கணும். நல்லெண்ணெய் காயவைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கணும். வதங்கியதும், தேவையான இட்லிப்பொடியை சேர்த்து கலந்து, இட்லியையும் சேர்த்து ஒரு நிமிடம் சூடாக்கி இறக்கினா சுவையான பொடி இட்லி ரெடி!
நன்றி கிரிஜா!

5.வெஜிடபிள் ஊத்தப்பம் - மீராவின் வலைப்பூவில் இருந்து..

ஒரு கேரட், சிறு துண்டு இஞ்சி துருவி வைச்சுக்கணும். வெங்காயம்-பச்சைமிளகா-கொத்துமல்லி பொடியாக நறுக்கி வைச்சுக்கணும். ஊத்தப்பம் வார்த்து எல்லாப் பொருட்களையும் தூவி கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடணும். ஊத்தப்பத்தை திருப்பிப் போடாமல் அப்படியே எடுத்து வைத்தால் கலர்ஃபுல்லா அழகா இருக்கும்.
நன்றி மீரா!

6. வெங்காயம்-புதினா-தக்காளி சட்னி - கீதாவின் வலைப்பூவில் இருந்து..
இட்லி-தோசைக்கு சட்னி தேடுவதே ஒரு பெரிய குழப்பமா இருக்கும் எனக்கு. கீதா ஆச்சலின் ப்ளாகில் பாப்புலர் போஸ்டில் இந்த சட்னி இருந்தது. வழக்கமா செய்யும் சட்னியிலிருந்து ஒரு புதுவிதமான சட்னி.

கடுகு,உளுத்தம்பருப்பு வரமிளகாயை கொஞ்சம் எண்ணெயில் வதக்கி, அதனுடன் தேங்காய், புளி சேர்த்து நைஸா அரைச்சுக்கணும். அதனுடன் தேவையான உப்பு, வதக்கிய வெங்காயம்-தக்காளி-புதினாவை சேர்த்து ஒன்றிரண்டாக அரைச்சு எடுத்து தாளிச்சுக் கொட்டினா சட்னி ரெடி!
நன்றி கீதா!
~~
நீங்களும் செய்து ருசியுங்க..அந்தந்த வலைப்பூக்களின் இணைப்புக்கள் அங்கங்கே குடுத்திருக்கேன், அங்கே போனால் தெளிவான செய்முறை இருக்கும். நன்றி!

Thursday, September 1, 2011

கத்தரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்(egg plant)-1
வெங்காயம்(சிறியது)-1
தக்காளி(சிறியது)-1
புளி- சிறிய கொட்டைப்பாக்கு அளவு
பூண்டு-4பல்
வரமிளகாய்-7 (காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு-11/2டேபிள்ஸ்பூன்
தனியா-1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

தாளிக்க
கடுகு-1/2டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1கொத்து
எண்னெய்-1டீஸ்பூன்


செய்முறை

கத்தரி,வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவத்து கடலைப்பருப்பை போட்டு சிவக்க விடவும். தனியா சேர்க்கவும். தனியா வெடித்தவுடன் வெங்காயம்,பூண்டு, வரமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பின்னர் தக்காளி, புளி சேர்த்து தக்காளி குழையும்வரை வதக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்து நிறம்மாறும்வரை வதக்கி ஆறவைக்கவும்.

ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு-உ.பருப்பு-கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

காரசாரமான கத்தரிக்காய் சட்னி ரெடி. இட்லி,தோசை,சப்பாத்தி, கலந்த சாதம் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.


LinkWithin

Related Posts with Thumbnails