Sunday, March 29, 2015

வா வா வசந்தமே..சுகந்தரும் சுகந்தமே!

இந்த வசந்தத்திற்கு வீடு வந்த புதுமலர்கள்..
பேன்ஸி(Pansy), வயோலா(Viola), கெர்பரா(Gerbera), ரனன்குலஸ்(Rananculus), சீலோஷா(Celosia), ரோஜாக்கள் என்று வண்ண வண்ணப் பூக்களை எங்க வீட்டுக்கு அள்ளிக்கொண்டு வந்திருக்கு இந்த வசந்தம். [பூக்களின் அருகிலேயே ஆங்கிலப் பெயர் கொடுத்திருக்கேன், க்ளிக் பண்ணினால் கூகுளில் அந்தப் படங்களைப் பார்க்கலாம். நாங்க வாங்கி வந்த செடிகள் எல்லாம் கலந்து இருப்பதால் இப்படி ஒரு அரேஞ்ச்மெண்ட்..ஹிஹ்ஹி!!]
நம்மூர் கோழிக்கொண்டை போல இந்த சீலோஷா..மஞ்சள், சிவப்பு, பஞ்சுமிட்டாய்க்கலர் என்று பலவண்ணங்களில் சிறகை காற்றில் அசைத்து மனதை வருடின.
பளீர் என கத்தரிப்பூ மற்றும் மஞ்சள் நிறங்களில் பேன்ஸி மலர்கள்..
இரண்டு நிறங்களில் டேலியா கிழங்குகள்..படத்திலிருக்கும் பூக்கள் வருமோ இல்லை வேறு நிறப்பூக்கள் மலருமோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. விரைவில் தெரிந்துவிடும். 
வசந்தம் கடந்து கோடை வந்ததும் நடவென்று சில காய்கறி விதைகள்..இவற்றை எனது இரண்டு கால் மலர் கையிலெடுத்து குலுக்கி விளையாடிக்கொண்டே நடந்து எங்கேயோ போட்டு வைத்திருக்கிறாள்..அவற்றை முதலில் கண்டுபிடித்து எடுத்து வைக்கவேண்டும்! :) 
தொட்டிகளில் மண் நிறைத்து, செடிகளைப் பிரித்து நட்டு வாரமும் இரண்டாகிவிட்டது. மார்ச் 20ஆம் தேதி இந்த வருஷத்தின் வசந்தம் வந்தது இங்கு..நாங்கள் அதற்கும் முந்தைய ஞாயிற்றுக்கிழமையே பூச்செடிகளை நட்டாயிற்று. 
கெர்பராவில் சுகந்தம் வீசுகின்றதா என்று ஆராய்ச்சி செய்யும் எங்க வீட்டு நாலு கால் பூ!! :) [அப்பாடி...டைட்டிலுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாச்சு!:)] இவரும் பூ வாங்க கடைக்கு வந்திருந்தார். வாங்கி வந்த செடிகளை ஒழுங்கா நட்டிருக்கோமா என சோதனை செய்கிறார் ஐயா!! ;) 
~~~
இன்றைய இணைப்பு 
கடந்த டிசம்பர் இறுதியில் ஒன்று முழுவதும் பூனைக்குட்டிகளும், ஒன்றில் காட்டு மிருகக் குழந்தைகளும் என்று இரண்டு கேலண்டர்கள் வாங்கினேன். ஒவ்வொரு படமும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு! லயாவின் அறைச் சுவரில் மாட்டி வைத்து தினமும் இவற்றின் முகத்தில் விழிக்கின்றோம்! :) 
அருகிலிருக்கும் நூலகத்தில் குழந்தைகள் கலர் செய்யவென்று படங்களும் க்ரேயான்களும் வைத்திருப்பார்கள். இது லயா கலர் செய்ததுன்னா நம்பவா போறீங்க??..ஹிஹி..
சின்ன வயதில் இருந்து இப்படி படங்களுக்கு வண்ணம் தீட்டுவது எனக்கு மிகப் பிடிக்கும், இப்பொழுது அதற்கு ஒரு தீனி கிட்டியிருக்கிறது. :)
~~~
இந்தப் பதிவிற்கு தலைப்பைத் தந்த பாடல்..நான் ரசித்தது, நீங்களும் ரசியுங்களேன்! :)


Friday, March 20, 2015

காரக்குழம்பு

"சொல்லுகிறேன்"- காமாட்சி அம்மாவின் வலைப்பூவில் பார்த்து செய்த குழம்பு இது. செய்வதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும் இந்தக் குழம்பை நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களே! :)

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு-5 பற்கள்
மிளகு-8
புளிக்கரைசல்-1/2கப்
சாம்பார்பொடி-1டீஸ்பூன்
வெந்தயப்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
நல்லெண்ணெய்
உப்பு
சர்க்கரை(அ) வெல்லம் - சிறிது

செய்முறை
1.வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
2.புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
3.புளிக்கரைசலுடன் அரைத்த கலவையைச் சேர்க்கவும். சாம்பார்பொடி, வெந்தயப்பொடி மற்றும் தேவையான உப்புச் சேர்த்து கரைத்துவைக்கவும்.
4.கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை(கைவசம் இல்லை, அதனால் சேர்க்கலை!), வரமிளகாய் தாளிக்கவும்.
5. குழம்புக்கலவையை ஊற்றி தேவையான அளவு நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
6.குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பை குறைவாக வைக்கவும்.
7.தேவையான பக்குவத்துக்கு குழம்பு சுண்டி, எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
8.சுவையான குழம்பு தயார்...
9.பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றி பரிமாறவும்....ஹிஹி...படத்தில நம்பர் போட்டாச்சு...எதுக்குன்னு யோசிப்பீங்களேன்னு 9வது ஸ்டெப்பும் எழுதிட்டேன். ;) :) 
நாங்கள் கீன்வா-பிரவுன் ரைஸ் தோசையுடன் சாப்பிட்டோம். இந்தக் குழம்பு இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக ரொம்ப நன்றாக இருக்கிறது.  சாதத்துடனும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். சப்பாத்தியும் இதற்கு துணை போகும் என்றே தோன்றுகிறது. செய்து சுவைத்துப்பார்த்துச் சொல்லுங்க. நன்றி! 

சுவையான குறிப்பைத் தந்த காமாட்சிம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 


Monday, March 16, 2015

அரிசி ரவை அடை

ஒரு முறை இந்தியன் ஸ்டோருக்கு போனபோது அவசரத்தில் வெள்ளை ரவை என நினைத்து அரிசி ரவையை வாங்கி வந்துவிட்டேன். இட்லிக்கு மாவரைக்கையில் உளுந்து மாவின் அளவு அதிகமாகத் தெரிய தனியே கொஞ்சம் உளுந்து மாவை எடுத்து வைத்தேன். இரண்டையும் கலந்து ஒரு நேர டிஃபனாக மாற்றியாயிற்று. :)

தேவையான பொருட்கள்
அரிசி ரவை-11/2கப்
அரைத்த உளுந்து மாவு-1/4கப்
முட்டை-1
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை-கொஞ்சம்
சீரகம்-1/2டீஸ்பூன்
உப்பு

செய்முறை 
அரிசி ரவை, உளுந்து மாவு, உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து 6-7 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
அடை செய்யும் பொழுது முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துகொண்டு, அதனுடன் அரிசிமாவு, நறுக்கிய வெங்காயம்-மிளகாய்-கறிவேப்பிலை-கொத்துமல்லி மற்றும் சீரகம் சேர்த்து கலக்கவும்.
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து அடைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து திருப்பிப் போட்டு...
இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
நல்ல காரமான சட்னி - சாம்பார் வகைகள் எல்லாம் இந்த அடைக்கு மேட்ச் ஆகும். தயிர்-ஊறுகாய் கூட வைத்து சாப்பிடலாம். 

Thursday, March 12, 2015

Aaloo Subzi / ஆலூ சப்ஜி / உருளைக்கிழங்கு மசாலா

/// உருளைக்கிழங்கு சப்ஜி செய்வது சுலபம் தான். வெங்காயம், தக்காளி மற்றும் ஜீரகம் ஆகியவற்றை வதக்காமல் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளலாம். Pressure Pan [அ] குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தபின் அதில் அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு, உப்பு, கரம் மசாலாப் பொடி, பெருங்காயத் தூள் போட்டு, கசூரி மேத்தி பொடி, [கடைகளில் கிடைக்கும். நம் ஊரில் கிடைக்கிறதா தெரியவில்லை. இது இல்லாவிட்டாலும் தவறில்லை] கூடவே உருளைக்கிழங்கும் போட்டு விடுங்கள். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேக வையுங்கள். நான்கு ஐந்து விசில் வந்தால் போதும். உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி.

சுருக்கமாகச் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்! :)///

என்று கிடைத்த ரெசிப்பியைக் கொண்டு செய்த சப்ஜி இது. சுருக்கமாக 7 வரிகளில் திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் சொன்னதை நான் சும்மா பத்துப்படம் போட்டு தெள்ளத்தெளிவா (பார்ப்பவர்களுக்கு போரடிக்காது, உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...ஹிஹி..) செய்ததன் விளைவு உங்கள் பார்வைக்கு. அவர் கூறிய ரெசிப்பியில் கடுகு-பெருங்காயப்பொடியை மறந்தேன், பச்சைமிளகாய்-இஞ்சி-மஞ்சள்தூளைச் சேர்த்துக்கொண்டேன். ஆக மொத்தம் வழக்கமாகச் செய்யும் மசாலாவிற்கு மாற்றாக சுவையான உருளைக் கிழங்கு மசாலா ரெடி! :) 

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு-2
வெங்காயம்-1
தக்காளி-2
சீரகம்-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
இஞ்சி - சிறுதுண்டு
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
கசூரி மேத்தி-1/2டீஸ்பூன் 
சர்க்கரை-1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு 

செய்முறை
வெங்காயம், தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி.. 
சீரகத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
உருளைக் கிழங்குகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
சிறிய குக்கரில் எண்ணெய் காயவைத்து இஞ்சி-பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, அரைத்த கலவையைச் சேர்க்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கி, கரம் கசாலா, மஞ்சள்தூள், கசூரி மேத்தி இவற்றை சேர்க்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, சர்க்கரை மற்றும் உப்பும் சேர்த்து..
தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் 2-3 விஸில்கள் வரும் வரை வைக்கவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து..
 நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
குறிப்பு: 
ரெசிப்பியில் காரத்துக்கு கரம் மசாலா மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எங்கள் நாக்குக்கு இன்னும் கொஞ்சம் காரம் வேண்டும் என நினைத்து 2 பச்சைமிளகாயும், துளி இஞ்சியும் சேர்த்துக்கொண்டேன். 
கடுகு-பெருங்காயம் சேர்க்க சுத்தமாக மறந்துபோய்விட்டது. நீங்க மறக்காமல் சேர்த்து செய்து பாருங்க. 
எல்லா குழம்பு-குருமா-ரசம் வகைகளிலும் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்ப்பது என்பது என் வழக்கமாகி விட்டது. விஷயம் தெரியாமல் ருசிப்போருக்கு சர்க்கரை சேர்த்திருப்பது தெரியாது, மிக மிக லேசான இனிப்புச் சுவை மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. 

நறுக்கென்று ஒரு சுவையான ரெசிப்பியைத் தந்த சகோதரர் வெங்கட் நாகராஜுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

Thursday, March 5, 2015

முள்ளங்கி குழம்பு

தேவையான பொருட்கள்
முள்ளங்கி-1(சிறியதாக)
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கொத்துமல்லி இலை- கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய்த் துருவல்-2 டேபிள்ஸ்பூன்
சோம்பு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-3(காரத்துக்கேற்ப)

செய்முறை
முள்ளங்கியை கழுவி வட்டத்துண்டங்களாக நறுக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்துவைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய்க்கலவையைச் சேர்த்து..
தேவையான நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் தெளிந்து வந்ததும்,
கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான முள்ளங்கி குழம்பு தயார். இட்லி தோசைக்கு அருமையாக இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். சோம்பு சேர்ப்பதால் லேசான இனிப்பு சுவையுடனும் நல்ல வாசத்துடனும் இருக்கும். 

LinkWithin

Related Posts with Thumbnails