Friday, November 30, 2012

நேயர் விருப்பம்..

 இஞ்சி, உள்ளி, பிரியாணிஇலைச் செடிகளையும் வளர்த்துப் படமெடுத்துப் போடவேண்டும் என்று வெஜிடபிள் பிரியாணி பதிவில் ஒரு நேயை (!?! நேயர்- பெண்பால்! :)) விருப்பம் தெரிவித்திருந்தார். ஆகவே நேயை விருப்பமாக இந்தப் பதிவு உங்க எல்லாரின் பொறுமையைச் சோதிக்க வருகிறது. :)))

பொறுங்க,  அவரது புகைப்படம் (முதல் படத்தில் இருப்பது அவரின் back pose!;)) பதிவின் இறுதியில் உங்களுக்காக காத்திருக்கிறது, டொட்டொய்ங்! ;)))))))) 

செடிகளை  வளர்த்துப் பதிவு போடவேண்டும் என்று "மட்டிலுமே" நேயை விருப்பம் தெரிவித்திருந்தார். எங்கே வளர்க்கவேண்டும் என்று அவர் குறிப்பிடாத காரணத்தால் உள்ளியை ஒரு கார்டினில்:) இருந்து பறித்து;) வந்து  என் பதிவில் பதித்துவிட்டேன். கார்டின் ஆருது என்று மட்டும் தெரிந்தாலும், புரிந்தாலும் பப்ளிக்கில் சொல்லிராதீங்க!
"மியாவ்.. மியாவ் பூனைக்குட்டி, 
மீசைக்காரப் பூனைக்குட்டி..."...அது, சும்மா இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது, பாடிட்டு போறேன், விடுங்களேன்! :)

அடுத்து வருவது பிர்ர்ர்ர்ர்ராணி இலை..இந்த மரத்தையும் நான் வளர்க்கவில்லை, வளர்த்தது யார்  என்று முத்திரையிட்ட படமே கிடைத்தது. ஆனாலும் கூகுளில் சுட்ட படமில்லை, வீட்டில் வளர்த்த இலை என்பதால் நேயரின் விருப்பத்தை இந்த இலையும் நிறைவு செய்கிறது.
"ஆக்லாந்த்தின் பிரியாணி இலையே!
  றீச்சர் வீட்டின் தோட்ட மரமே,இலையே..."
[ஜெர்மனியின் செந்தேன் மலரே- பாடல் ட்யூனில் பாடிக் கொள்ளவும்! :))) ]

 
இஞ்சிச் செடி கோவையின் மேற்குச் சீமையில் (செம்மேடு), எங்க சித்தி வீட்டுத் தோட்டத்தில் இருந்தது. இதுவரை இஞ்சியின் பூவை நான் பார்த்ததில்லை, முதன்முறையாக இரண்டு பூக்களுடன் இருந்த இஞ்சிச் செடியைப் பார்த்தேன், படமும் எடுத்துவந்திருந்தேன். தனிப்பதிவாக வேறு படங்களுடன் சேர்த்து பதிவிடலாம் என்றிருக்கையில், முந்திக் கொண்டு, இப்பொழுதே உபயோகமும் ஆகிவிட்டது. படத்தில் சிவப்பு வட்டங்களுக்குள் இரண்டு இஞ்சிப் பூக்கள் (அல்லது மொட்டுக்கள்?!).

~~~
 
 இப்படி ஒரு பதிவுக்கு வழிவகுத்த அந்த நேயையின் புகைப்படம் இதோ!...ஊசிக் குறிப்பு: பூனைவிரும்பியான அவரது வலைப்பூவைப் பார்க்க இங்கே கைய வைங்க!.. :D :) ;)

அதிராவ், ஏதோ என்னால முடிஞ்சது! ;))))

Monday, November 26, 2012

வெஜிடபிள் பிரியாணி

புதினாச் செடியின் படம், வெஜிடபிள் பிரியாணி-ன்னு டைட்டில்!  இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னு இந்நேரம் நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க..கரெக்ட்டா? பின்னே..மகி'ஸ் ஸ்பேஸ் ரீடர்ஸ்-ஆ கொக்கா?! :))))))

பார்ட்டிகளுக்கு பெரிய அளவில் பிரியாணி செய்கையில் இந்த oven-ல  செய்யும் முறை சுலபமாக இருக்கும். சாதம் தனியாக க்ரேவி தனியாக செய்து தயாரிப்பதால் முதல்நாளே கூட க்ரேவி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, சாதம் மட்டும் சூடாகச் செய்து, உணவு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன் லேயராக அடுக்கி அவன்-ல தள்ளீட்டீங்கன்னா(!) சூடாக எடுத்து பரிமாறிவிடலாம்! :)

இந்த முறை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்கள் எடுக்கவில்லை, சிலபடங்கள் மட்டுமே எடுத்தேன். ரெசிப்பியை எழுதிவிடுகிறேன்,  ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்.

தேவையான பொருட்கள்
சாதத்துக்கு
பாஸ்மதி அரிசி -3 கப் (~3/4 கிலோ)
பிரியாணி இலை -2
பட்டை
ஏலக்காய்-2
கிராம்பு -2
நெய்- 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலைகள் - கொஞ்சம்
உப்பு
தண்ணீர் - 6 கப்

செய்முறை 
அரிசியை 2-3 முறை அலசி, தேவையான தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்.
பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர் கொதிவரும்போது வாசனைப் பொருட்கள், புதினா-கொத்துமல்லி இலைகள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

பாஸ்மதி 7 நிமிடங்களில் முக்கால்பதம் வெந்துவிடும். அதனை எடுத்து, தண்ணீரை வடித்துவிட்டு நெய் கலந்து வைக்கவும்.

வெஜ். பிரியாணி க்ரேவி - தேவையான பொருட்கள் (to marinate)
சற்றே பெரியதாக நறுக்கிய காய்கள் - 21/2 கப் (கேரட்-பீன்ஸ்-காலிஃப்ளவர்-உருளை-பச்சைப் பட்டாணி)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
புதினா-கொத்துமல்லி  நறுக்கியது - கால்கப்
பச்சைமிளகாய் -2
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா தூள் -11/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தயிர் - கால் கப்
பட்டை-கிராம்பு-ஏலக்காய்-பிரியாணி இலை  சேர்த்து அரைத்த விழுது - 2டீஸ்பூன் (முழு கரம் மசாலா பிடிக்கும் எனில் அரைக்காமல் அப்படியே சேர்க்கலாம்)
உப்பு
தாளிக்க 
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் - கொஞ்சம்
நீளமாக நறுக்கிய வெங்காயம் -2 
தக்காளி -1

செய்முறை 
மேரினேட் செய்ய வேண்டிய எல்லாப் பொருட்களையும் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கி அரைமணி முதல் ஒருமணி நேரம் ஊறவிடவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து முந்திரி பாதாம் சேர்த்து, பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி மற்றும், மாரினேட் செய்த காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும். 3/4 கப் தண்ணீர் விட்டு, உப்பு சரிபார்த்து, கடாயை மூடிபோட்டு வேகவிடவும்.


காய்களும் முக்கால் பதம் வெந்தால் போதுமானது. கலவை  கொதிக்கத் தொடங்கியதும் 5 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.  இப்போது சாதம், க்ரேவி இரண்டுமே தயார். அடுத்ததாக பிரியாணியை  அவன்-ல தம் போடுவது எப்படி என்று பார்க்கலாம். 

தம்  போட தேவையானவை
அவன் ப்ரூஃப் பாத்திரம் -1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நீளமாக நறுக்கிய தக்காளி -1
நறுக்கிய புதினா,மல்லித்தழை - கொஞ்சம்
பிரியாணி மசாலா -1/2டீஸ்பூன்
ஃபுட் கலர் (விரும்பினால்) -சிலதுளிகள், ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் கலந்து வைக்கவும்.
அலுமினியம் ஃபாயில் பேப்பர்

அவன்-ல் வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, முதலில் ஒரு லேயர் சாதத்தை சீராகப் பரப்பவும். அதன் மீது கொஞ்சம் பிரியாணி மசாலா பொடியைத் தூவிவிட்டு இரண்டாவது லேயராக காய்கறி க்ரேவியை பரப்பவும். க்ரேவி மீது நறுக்கிய தக்காளித்துண்டுகள் மற்றும் மல்லி-புதினாவை தூவிவிடவும். மூன்றாவது லேயராக சாதம், அடுத்து க்ரேவி இப்படி மாற்றி மாற்றி இதே போல லேயர்கள் வரும்படி வைக்கவும். கடைசி அடுக்காக சாதம் வரும்படி பார்த்துக்கொள்ளவும்.சாதத்தின் மேல் ஃபுட் கலரை ஆங்காங்கே தெளித்துவிடவும்.

பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாக மூடி 400F  ப்ரீஹீட் செய்த அவன்-ல வைத்து 45 முதல்  ஒரு மணி நேரம் பேக் செய்யவும். கமகம பிரியாணி ரெடி! :)

ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும்.
~~
முதன்முறை இங்கே வந்து படிப்பவர்களுக்கும், புதினா படத்துக்கு விளக்கம் கேட்பவர்களுக்கும், இதோ விளக்கம்! :)
சில மாதங்கள் முன்பு கடையில் வாங்கிவந்திருந்த புதினாவின் தண்டுகளை தொட்டியில் நட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். திரும்பிவரும் வரை  தோழி வீட்டில் சமர்த்தா :) வளர்ந்திருந்தது புதினாச் செடி.  போனவாரம் அறுவடை  செய்து, பாட்லக் டின்னருக்கு செய்த வெஜிடபிள் பிரியாணியில் உபயோகப்படுத்தியாயிற்று.

Wednesday, November 21, 2012

பவள மல்லி..

 

வெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே உண்டு.   காலைநேரத்தில் கோயிலுக்குப் போகையில் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் இந்த மலர்களை எடுத்துவந்து கோர்த்து சுவாமி படங்களுக்கு போடுவது வழக்கம்.

ஊரில் இருந்தபோது காலை வாக் போகும் நேரங்களில்  ஒரு வீட்டு வாசலில் பூத்து உதிர்ந்திருந்த பூக்களை எடுத்துவந்தேன். (உடனே கண்ணை உருட்டாதீங்க, வீட்டம்மா கிட்ட கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சுட்டு, பர்மிஷனும் வாங்கிட்டு(தான்) எடுத்துவந்தேன்.) :)


மேலே உள்ள படத்தில் நடுவில் இருப்பது நந்தியாவட்டை  மலர்..இருபுறமும் பவழமல்லி எல்லை கட்டியிருக்கு. :) என்னைக் கவர்ந்த இந்தப் பூக்களின் படங்களை வலைப்பூவில் பகிரலாம் என்று ஆரம்பித்தபோது,  கூகுளிடம் கொஞ்சம் தேடினேன், பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும் முன்னர் படங்களையும், மலர்களின் அழகான தோற்றத்தையும் பார்த்துவிடுங்கள்.


பூவின் இதழ்கள் சற்றே க்ரீம் கலர் கலந்த வெள்ளை  நிறம், காம்பு ஆரஞ்சு நிறம். அதனாலேயே இந்தப் பெயரைப் பெற்றிருக்குமோ இந்த மலர்?!..


இன்னொரு மரத்தின் மலர்கள் நல்ல பவழ நிறத்திலேயே (அடர்ந்த ஆரஞ்சு, கிட்டத்தட்ட சிவப்பு என்றே சொல்லலாம். :)) காம்புகளை கொண்டிருந்தன, ஆனால் அவற்றை எடுத்துவந்து படமெடுக்க நேரமில்லாது போயிற்று.


ஊசியில் நூல் கோர்த்தாயிற்று, இனி மலர்களை கோர்க்கவேண்டியதுதான் பாக்கி..

பாரிஜாதம் என்றும் அழைக்கப்படும் இந்த மலரைப் பற்றி புராணக்கதைகள் உண்டு. திருமாலுக்கு உகந்த மலர் என்று இதனைச் சொல்கிறார்கள். பவழமல்லியின் வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

சொர்க்கத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா-ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவழமல்லி மரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால் மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களைச் சொரிந்ததாம். இதுதானே கண்ணனின் லீலை? :)

அழகுப் பூக்களை ஆசைதீர படமெடுத்துவிட்டு, கோர்த்து பாரிஜாதப் பிரியரான திருமாலுக்கும் கொடுத்தாச்சு. :) கோயில் மரத்தில் நிறைய்ய்ய்ய பூக்கள் கிடைக்கையில், நீளமாகக் கோர்த்து பிள்ளையார் சிலை அளவுக்கு வருமளவு மாலையாக்கிக் கொண்டு போய் பிள்ளையாருக்கும் கொடுத்திருக்கிறேன்.

இன்னொரு கதை என்னவென்றால் பாரிஜாதம் - என்ற பெயர் கொண்ட ஒரு இளவரசி சூரிய பகவானை  விரும்பினாளாம்.  ஆனால் சூரியபகவானோ அவளை விடுத்து இன்னொரு பெண்ணை மணம் புரிந்துகொண்டாராம். அந்த ஏமாற்றம் தாளாமல் பாரிஜாதம் தீக்குளித்ததாகவும், அவளது சாம்பலில் இருந்து உருவானதே இந்த பாரிஜாத மரம் என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் ஏமாற்றிய காதலன் உதயமாகையில்  பவழமல்லி மரம் இரவெல்லாம் பூத்த மலர்களை கண்ணீர் சிந்துவது போல தரையில் உதிர்க்கிறது என்றும் ஒரு கதை இருக்கிறது.

பவழமல்லியை  "coral jasmine" என்றும் சொல்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Nyctanthes arbor-tristis - இதன் அர்த்தம் " a night flowering sad tree." - வருந்தும் மரம்! இந்தப் பெயர் இளவரசி பாரிஜாதத்தின் கதையால் வந்திருக்கலாமோ? மரத்தின் இலைகளும் பகலில் சுருங்கிக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள், இதை நான் கவனித்ததில்லை..யாராவது பார்த்திருந்தால் சொல்லுங்கள். :)

பவழமல்லிக்கு மருத்துவகுணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சர்க்கரை வியாதிக்கு இந்த மலர் நல்லதொரு மருந்தாக இருக்கிறது, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதனை சமைத்து சாப்பிடலாமாம், லேசான கசப்புச் சுவையுடன் இருக்குமாம் பவழமல்லி. இதன் இலைகள் மரத்தை பாலீஷ் போடவும் பயன்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். பவழமல்லியை மீனுடன் சேர்த்து சமைத்து, அதன் மருத்துவகுணங்களையும் பயன்களையும் அழகுற ஆங்கிலத்தில் தொகுத்து தரப்பட்டிருக்கிறது அந்த வலைப்பூவில்.


இவ்வளவு அழகான மென்மையான ஒரு பூவை அடுப்பில் போட்டு கொதிக்கவைப்பது என்று நினைக்கையிலேயே என் மனம் கொதிக்கிறது! இருப்பினும், மருத்துவ குணங்கள் உள்ள போது உபயோக்கிப்பதில் என்ன தவறிருக்கிறது என்றும் ஒரு பக்கம் கேள்வி எழுகிறது.

இணையத்தில் தேடும்வரை  இந்தமலரின் மருத்துவ உபயோகங்கள் பற்றிய விஷயங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. படிப்பவர்களுக்குப் பயன் தருமே என்ற எண்ணத்தில் தகவல்களை இங்கு பகிர்கிறேன். யாராவது பவழமல்லியை சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம் எனில், எப்படி என்று கருத்துப் பெட்டியில் சொன்னீர்களானால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி!

பி.கு. இது பவ மல்லியா அல்லது பவ மல்லியா? கொஞ்சம் கு(ள/ழ)ப்பமா இருக்கு! :)))))))

Friday, November 16, 2012

அச்சு முறுக்கு

முதல்லயே சொல்லிடறேன், இது அச்சு முறுக்கு ரெசிப்பி எல்லாம் இல்லைங்க, தைரியமா படிங்க! :) 

ஊரில் இருந்து வாங்கி வந்த அச்சுமுறுக்கு அச்சுக்களை எடுத்து ஒரு ட்ரையல் பண்ணிப் பார்க்கலாமே என்று ஒரு முயற்சி!  நிதானமா ஒரு வாரம் ரிஸர்ச்சோ ரிஸர்ச் எல்லாம் பண்ணேன், அப்புறம்  ஒரு நாலுநாள் முறுக்கு சுடலாமா வேணாமான்னு திங்க் பண்ணினேன்! "அலை எப்ப ஓயறது, கடல் எப்ப ஆடுவது?"  என்று திடீருன்னு ஒரு ஞானோதயம் வந்து களமிறங்கினேன். அந்த அனுபவங்களை  எல்லாம் எழுத்தில் பதித்து வைக்கலன்னா எனக்கு தூக்கம் வருமா? :))) ஸோ...என்ஜாய்! 

புது அச்சில் முதல் முறை செய்வது ரொம்ப கஷ்டம் என்று நான் தேடிய எல்லா வலைப்பூக்களிலும் போட்டிருந்தாங்க. "சிவாஜி"- படத்தில் ரஜினி சொல்லுவாரே "வாங்க, பழகலாம்"-அப்படின்னு?? அதைப் போல முறுக்கு அச்சை  பழக்க பல்வேறு டெக்னிக்ஸ் இருக்குதாம்.

சிலர் சொல்றாங்க, தினமும் எண்ணெயை சூடாக்கி, அதில் அச்சைப் போட்டு ஒரு மணி நேரம்(!) அடுப்பிலே வைச்சு சூடு பண்ணுங்க, இத ஒரு வாரம் தொடர்ந்தா அச்சு 'பழகிருமாம்!' இந்த டெக்னிக் சொல்லியிருந்தவர் "ஒரு வாரம் சூடாக்கினேன், ஆனா தினமும் எண்ணெய் சூடான பாத்திரத்தை கழுவறதுக்குள்ள தாவு தீர்ந்துருச்சு"- அப்படின்னு எச்சரிக்கையும் குடுத்திருந்தாங்க, அதனால் இந்த டெக்னிக்-ஐ  ரூல்ட் அவுட் பண்ணிட்டு அடுத்த டெக்னிக்குக்கு move on-னுங்க! ;) 

அடுத்ததாக நல்லா புளிச்ச தோசை மாவில் ஒரு நாள் முழுக்க அச்சை ஊறவிட்டு, அடுத்தநாள் கழுவி, துடைத்து..சரி, சரீ...டென்ஷன் ஆகாதீங்க, பொட்டு வைச்சு பூப்போட்டெல்லாம் கும்பிட வேணாம், ச்ச்ச்சும்மா கொஞ்சம் எண்ணெய தடவி ஒரு நாள் வைக்கணுமாம். அப்ப அச்சு பழகிருமாம்! :) இது கொஞ்சம் ப்ராக்டிகலி ஒத்து வர விஷயம்தான், ஆனா அன்னைக்குன்னு பார்த்து என்கிட்ட இட்லிமாவு-தோசைமாவு அவ்வளவு ஏன், ரெடிமேட் அரிசிமாவு, கோதுமைமாவு, மைதாமாவு ஒரு மாவு கூட இல்லைங்க! வேற வழி? மூவ் ஆன் டு நெக்ஸ்ட் டெக்னீக்! ;)))

மூணாவது முறையில அச்சை ஒரு நாள் முழுக்க புளித்தண்ணியில ஊறவிட்டு கழுவி வைக்கறது. என்னிடம் இருந்த பொருட்களை(புளி + தண்ணி தட்ஸ் ஆல்! ஹிஹி!) மட்டுமே யூஸ் பண்ணறதால் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணலாம்னு ஒரு நாள் முழுக்க புளித்தண்ணில ஊறவிட்டு, நல்லா கழுவி  எடுத்து வைச்சாச்சு.  

 கடைக்குப் போயி தேவையான பொருட்களும் எல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு. வெண்ணை  முறுக்கு சுட்ட கையோட, அச்சு முறுக்கையும் ஒரு கை பார்த்துடுவோம்னு ஆரம்பிச்சேன்.  இனி அடுத்து என்ன? ரெசிப்பி!! பல்வேறு தளங்களை பார்த்து அலுத்துப் போயி, நானா ஒரு அளவு எடுத்து ஒரு கப் அரிசிமாவு, கால்கப் மைதா,கால்கப் சர்க்கரை, கால்கப் தேங்காப் பால், முக்காக் கப் தண்ணி, ஒரு சிட்டிகை உப்பு, கொஞ்சம் எள்ளு எல்லாம் சேர்த்து ஒரு ரேஞ்சுக்கு(!) மாவை  கரைச்சுகிட்டேன்.

அதுக்கப்பறம்தான் காமெடி..அச்சை  நல்லா சூடு பண்ணி மாவில dip பண்ணி எண்ணெயில விட்டா.....அவ்வ்வ்வ்வ்வ்வ்! அச்சுல இருந்து மாவு தனியே வரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுது. எண்ணெய் வேற சூடா இருந்துதா, முறுக்கு கருகிப் போச்!! அச்சிலிருந்து முறுக்கை போராடிப் பிச்சிபிச்சி எடுத்தேன். இந்த அச்சுதான் வம்பு பண்ணுதுன்னு 2வது அச்சில ட்ரை பண்ணுனா, "அதேதாங்க இது!" ரேஞ்சில மீண்டும் அதே அழிச்சாட்டியம்! :)

இப்படியாக முதல் முயற்சி படு தோல்வியா முடிந்தது, இதற்கெல்லாம் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தி(ஹிஹி, நாந்தானுங்..டாங்க்ஸ்,டாங்க்ஸ்! :) ) அடுத்தநாள் ஃப்ரிஜ்ஜில் வைச்சிருந்த வேதாளத்த, ச்சீ,ச்சீ, மீதி மாவை  எடுத்து அதுக்கூட ஒரு முட்டை, இன்னுங்கொஞ்சம் சர்க்கரை (அளவெல்லாம் கேக்கப் புடாது, சொல்லிப்புட்டேன்!), அரிசிமாவு, தண்ணி எல்லாம் ஊத்தி கலக்கி, மறுக்கா ட்ரை பண்னேனுங்க. 

ஏற்கனவே அச்சுக்கள் ரெண்டும் சிலபல முறை எண்ணெயில போட்டு சூடு பண்ணியிருந்ததால பழகிட்டாங்க. மரக்குச்சி வைச்சு, அச்சிலிருந்து லைட்டா நகர்த்தி விட்டதும் முறுக்கு ஜூப்பரா கழண்டு வந்துருச்சு. சில முறை, ரொம்ப நல்ல புள்ள மாதிரி தானாவே முறுக்கு அச்சை விட்டு கழண்டும் வந்துது! :)))

ஆக மொத்தம் அச்சுமுறுக்கு செய்யற அச்சு ரெண்டும் பழகிருச்சு, நாந்தானுங்க இன்னும்  பழகல.... ஹாஹாஹா! முறுக்கு  texture, ருசி எல்லாம் அருமையா இருந்தாலும், முறுக்கு சைஸைப் பாருங்க, பஞ்சத்தில அடிபட்ட பரதேசி மாதிரி  இல்ல?  ;) :) என்ன ஒரு ஒல்ல்ல்ல்ல்லியான  உருவம்?!...என்னது..தெரியலையா? இருங்க, ஜூம் பண்ணறேன்...
 ...ரெடி,ஒன்!

 
... டூ!!
  ..த்ரீ! 
எப்புடி நம்ம அச்சுமுறுக்கு/அச்சப்பம்/ரோஸ் குக்கீஸ்/கொக்கீஸ் ???
:) :) :)

ஸோ..இந்தக் கதையின் நீதி என்னன்னா..[சாரி, விக்ரமாதித்தன்-வேதாளம் ஸ்டோரி லைன்லயே இருக்கறதால இடையிடையில இப்படி வசனங்கள் எல்லாம் வரும், ஆனா நீங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்க, எனக்குத் தெரியும்! ;)] அதாவதுங்க, என்ன ப்ரச்சனைன்னா, அச்சு பழகிருச்சு, மாவு கன்ஸிஸ்டன்ஸில ஏதோ கோட்டை விட்டிருக்கேன். அதனால அச்சை  மாவில dip  பண்ணும்போது, அச்சுல முக்கால் பாகம் மாவு ஒட்டாமல், கால்பாகம் மட்டும்தான் ஒட்டுது! அடுத்த முறை  இந்தத் தப்ப சரிபண்ணி, புஷ்டியான அச்சுமுறுக்கு சுடப்பட்டு, சரியான அளவுகளோடு வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது! :) ;)

அவ்ளோதாம்பா கத! கதையும் முடிஞ்சது, கத்தரிக்கா காய்ச்சது, இல்லல்ல அச்சு முறுக்கு ப்ளேட்டோட கிடைச்சது..சாப்புடுங்க, ஸ்ஸ்ஸ்ஸோ..ஓடக்குடாது, பயப்புடாமத் தைரியமாச் சாப்புடுங்க, டேஸ்ட் எல்லாம் சூப்பரா இருக்குதுங்க! ;))))

Monday, November 12, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி பலகாரம் - பட்டர்முறுக்கு &கோவை இனிப்புகள் 

Friday, November 9, 2012

நீ வருவாயென..


நீ வருவாயென..
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன், நீ வருவாயென!
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன், நீ வருவாயென...

இது நான் பாடும் பாட்டில்லீங்க, மேலே படத்தில் இருக்கும் Feeder பாடும் பாட்டு! :))) யாருக்காக காத்திருக்கிறதாம் இந்த சிவப்புத்திரவம் நிரம்பிய பூப்பூத்த ப்ளாஸ்டிக் உருவம்?
..
...
.
இதோ, இந்த வி.ஐ.பி.-க்காகத்தான்! :)


சிலநாட்கள் வீட்டில் ஆள் இல்லாததால் முன்பே வைந்திருந்த feeder காற்றில் கீழே விழுந்து உடைந்து போயிருந்தது. அதனால் போனவாரம் புதுசா ஒரு பூப்போட்ட feeder வாங்கி வந்து, humming bird nectar- ஊற்றி வைத்துவிட்டு தேன்சிட்டுக்காக காத்திருந்தோம்.
உச்சாணி மரக்கிளைமேல் உட்கார்ந்திருக்கும் தேன்சிட்டே, சீக்கிரம் வா! :))


..
...
.
...இதோ, அதிவேக ஹெலிகாப்டர்  போல வந்துவிட்டார் தேன்சிட்டம்மா! படத்தில் எங்கிருக்கிறார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? :)
 [படங்கள் மீது க்ளிக் பண்ணினால் பெரிதாக்கி பார்க்கலாம்.]

குட்டியூண்டு உடம்பையும், சிறு இறகுகளையும் வைத்துக்கொண்டு என்ன வேகத்தில் பறக்கிறது இந்தப் பறவை? கேமராவில் சிறைப்பிடிக்கப் பெரும்பாடாக இருந்தது. கஷ்டப்பட்டு ஒரு சில படங்கள் எடுத்துவிட்டேன்.


ஓரமா ஒளிஞ்சு நின்னு ஒரு வீடியோவும் எடுத்தேன். ரொம்ப சூப்பரா வந்திருக்குன்னு சொல்ல முடியலை, இருந்தாலும் திருப்திகரமாக வந்திருப்பதால் இங்கே உங்களுடன் பகிர்கிறேன். பாருங்க..


15 நொடிகள்தான் தேன்சிட்டு தேனைப் பருகியது..பிறகு பறந்து அருகிலிருந்த மரத்துக்குச் சென்றுவிட்டது. என் கேமரா கஷ்டப்பட்டு மரக்கிளைகளின், இலைகளின் ஊடே தேன்சிட்டைச் சிலபல நொடிகள் தேடும். இலைகளும், தேன்சிட்டும் கிட்டத்தட்ட ஒரே சைஸ்ல இருப்பதால் கண்டுபுடிக்க முடியவில்லை. அதுக்காக டென்ஷன் ஆகாதீங்க! ;) 

இந்த வீடியோவை  அப்லோட் செய்துகொண்டே யு-ட்யூபில் ப்ரௌஸியதில் சிக்கியது இந்த வீடியோ..என்ன ஒரு அற்புதமான வாய்ப்பு இந்த வீடியோவில் இருப்பவர்களுக்கு என்று நீங்களும் பாருங்களேன்..~~~
பதிவின் முதலில் இருக்கும் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். காலகாலமாக கதாநாயகிகளே கதாநாயகர்களுக்காகக் காத்திருப்பார்கள், ஆனால் இந்தப் பாடலில் கதாநாயகனின் காத்திருப்பும், அதைச் சொல்லும் கவிதைவரிகளும் நன்றாக இருக்கும்.

நிஜத்தில் இந்த மாதிரி பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறார்களோ இல்லையோ, இப்படி கல்யாணத்துக்காகக் காத்திருக்கும் முதிர்காளைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதென்னவோ உண்மை! :))

வழக்கம் போல, உங்களை சாக்கிட்டு, பாடலின் வரிகளை ஒருமுறை ஆசைதீர எழுத்தில் எழுதியும் ரசித்துக்கொள்கிறேன், புரிதலுக்கு நன்றி! ;)

நீ வருவாயென..
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன், நீ வருவாயென!
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன், நீ வருவாயென...
தென்றலாக நீ வருவாயா?  ஜன்னலாகிறேன்!
தீர்த்தமாக நீ வருவாயா? மேகமாகிறேன்!
வண்ணமாக நீ வருவாயா? பூக்களாகிறேன்!
வார்த்தையாக நீ வருவாயா? கவிதை..யாகிறேன்!
(பார்த்துப் பார்த்து...)

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் தினம்தினம் சேகரித்தேன்!
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்!
கவிதை  நூலோடு கோலப்புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்!
கனவில் உன்னோடு என்ன பேசலாம், தினமும் யோசிக்கிறேன்!
ஒரு காகம் கா-வென கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்!
(பார்த்துப் பார்த்து..)

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும், நிலவுக்கும் ஜோடியில்லை!
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை!
உலகில் பெண் மட்டும் நூறு கோடியாம், அதிலே நீ யாரடி?
சருகாய் வந்தே நான் காத்திருக்கிறேன், எங்கே உன் காலடி?
மணி சரிபார்த்து, தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்!
(பார்த்துப் பார்த்து..)  பாடலைப் பார்த்து/கேட்டுக் கொண்டே படிக்க வசதியாக வீடியோவும் இணைத்துவிட்டேன்!:)

Wednesday, November 7, 2012

கோலங்கள், கோலங்கள்!

  பள்ளிக் காலத்திலிருந்தே தினமும் காலையில் வாசலில் கோலமிடுவது வழக்கம்.  மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை எழுந்து கோயிலுக்குப் போய் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கோலமிட்டு, சாணப்பிள்ளையார் பிடித்து, அவருக்குப் பொட்டு வைத்து பூக்கள் சூட்டி, கோலத்தின் நடுவில் வைத்து, ஒரு குட்டிப் பூஜையும் செய்து வழிபட்டது... அது ஒரு அழகிய கனாக்காலம்! :) 

கோலத்தில் வைக்கப்படும் பிள்ளையார்கள் ஒற்றைப்படை  எண்ணிக்கையில்தான் இருக்கவேண்டும். மார்கழி ஒன்றாம் தேதி ஒற்றைப் பிள்ளையார், அருகம்புல்தான் வைக்கவேண்டும் அவருக்கு, வேறு பூக்கள் வைக்கக் கூடாது. அடுத்து வரும் நாட்களில் 3,5,7,9 என எண்ணிக்கையை அதிகரிக்கலாம், அரசாணிப்பூ, செம்பருத்திப் பூ, நந்தியாவட்டைப் பூ, தங்கஅரளிப் பூ, மற்றும் வேலிகளில் பூக்கும் எந்தப் பூவும் வைக்கலாம் அவருக்கு. என் அக்காக்கள் எல்லாம் சின்னதாக இருக்கையில், யார் வீட்டில் அதிக எண்ணிக்கையில் பிள்ளையார் வைக்கிறாங்க என்று போட்டியெல்லாம் உண்டாம்! 101 பிள்ளையார்கள் வரை வைச்சிருக்காங்க! :) 

சரி..சரி, வழக்கம் போல ட்ராக்-ஐ விட்டு வேறபக்கம் போயிருச்சு ட்ரெய்ன், கொஞ்சம் கஷ்டப்பட்டு கோலத்துக்கே திரும்பிடலாம் வாங்க! :) ஒவ்வொரு முறை ஊருக்குப் போகையிலும் ஆசை  தீர வாசலில் கோலம் போட்டுவிடுவேன். இது போனவருஷம் சென்றபோது போட்ட கோலங்கள்..
 
 தினமும் கோலம் போட்டாலும், அதை போட்டோ எடுக்கவேண்டும் என்று பலநாட்கள் தோன்றவில்லை, திடீர்னு போட்டோ எடுக்க ஆரம்பித்து சில கோலங்களை மட்டும் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு எங்க வீட்டு கோலங்கள்? கொலாஜில் கடைசி 2 கோலங்கள் அக்காவின் கைவண்ணம்! :)

அடுத்து வருவது இந்த முறை சென்றபொழுது எடுத்த கோலங்களின் படங்கள். எங்க வீட்டு மாடியில் குடியிருக்கும் இந்தக் குட்டிப் பெண்ணுக்கு கோலம் போடுவதில் அவ்வளவு ஈடுபாடு! தினமும் காலை, மாலை என இருவேளையும் அவளே வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போடுவாள்.
ரங்கோலி, புள்ளிக்கோலம் இரண்டுமே நிமிஷமாய்ப் போட்டுவிடுவாள்.வேகமாய்ப் போட்டாலும் கோலங்கள் அத்தனை அழகாய் இருக்கும். மேலே உள்ள கோலங்கள் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழா அன்று அவள் போட்டவையே.

இவை அம்மா வீட்டில் நான் போட்டிருந்த கோலங்கள். காரை வாசலில் போடும் கோலங்கள் ஒரு மாதிரி அழகு என்றால், மண் வாசலில் போடும் கோலங்கள் ஒரு மாதிரி அழகு! ஒரு நாள் போட்ட கோலத்தை மறுநாள் கூட்டித் தள்ளி, தண்ணீர் தெளித்தால் மண் வாசல் சூப்பர் ஃப்ரெஷ் ஆகிவிடும், அதுவே காரை வாசலில் அது கொஞ்சம் கஷ்டம்! :)
இது வீட்டருகில் இருந்த ஒரு பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியன்று எடுத்த படம். காவியெல்லாம் கட்டி சூப்பரா ரங்கோலி போட்டிருந்தார்கள்.
இவை  பவளமல்லிப் பூவுடன் படத்தில் புகுந்த கோலங்கள்! :) :)
 பூதான் ஹைலைட் ஆகிருக்குன்னாலும் பின்னால கோலமும் தெரிகிறது என்பதால் இந்தப் படங்களும் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன!
மறுபடியும் படங்களை வைத்தே ஒரு  பதிவு தேத்தியாச்சு, கோவிச்சுக்காம கோவை அன்னபூர்ணா-வின் வெண் பொங்கல் & காபி சாப்பிட்டு போங்க! :)

நன்றி, வணக்கம்! 
:)))

LinkWithin

Related Posts with Thumbnails