Friday, October 30, 2015

முளைகட்டிய பச்சைப்பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்
முளை கட்டிய பச்சைப்பயறு -1/4கப்
உருளை கிழங்கு (சிறியது) -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
பூண்டு - 5 பற்கள்
புளிக்கரைசல் -1/4கப்
வத்தக்குழம்பு பொடி - 11/2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்துமல்லித் தழை -கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க 
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
தக்காளி (சிறியதாக) -2

செய்முறை 
1.பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மூடி வைக்கவும். 8 -10 மணி நேரங்களில் பயிறு முளைத்துவிடும்.
2.முளைத்த பயறை தேவையான தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3. பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். 
4.வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய உருளைக் கிழங்கு, வத்தக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

5.சிறிது தண்ணீர் சேர்த்து கிழங்கை வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
6. தேங்காய் தக்காளியை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.  
7.  குழம்பு நன்கு கொதித்து புளியின் பச்சை வாடை போனதும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
8. வேகவைத்த பயிறை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும் 1டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து,  கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான முளைப்பயிறு குழம்பு ரெடி. சாதம், இட்லி தோசை எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.

குறிப்பு
தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள்(6-வது ஸ்டெப்பில் உள்ள) தேங்காய்க்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த முளைப்பயிறை தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
உருளைக்கிழங்குடன் கத்தரிக்காயும் சேர்க்கலாம். கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
வத்தக்குழம்பு பொடி இல்லையென்றால் மிளகாய்த்தூள்+மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம். 

Sunday, October 25, 2015

நரி முகத்தில முழிச்சிருக்கீங்களா? :)


என்னங்க...ஏடா கூடமா டைட்டில் வச்சிருக்கனே பாக்கிறீங்களா? வேற என்னத்தச் செய்ய?! சும்மா கம்பு தோசையும், சட்னியும் , குழம்புமாவே ப்ளாகில எழுத போரடிக்குதுல்ல? அதனால என்னைய அடிச்ச போர உங்களுக்கும் அடிக்க வைக்கலாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில தலைப்ப வச்சுப்புட்டேன். ஹிஹிஹி...

தலைப்புக்கேத்த மாதிரி என்ன செய்யலாம்னு சோஃபால உட்கார்ந்து யோசிச்சதில சமீப காலமா எங்க ஏரியாவுக்கு வருகை தரும் விசிட்டர்ஸை உங்களுக்கும் அறிமுகப்படுதலாம்னு பல்பு எரிஞ்சுது.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஊரின் ஓரம் என்பதால், வீட்டிற்கடுத்த படியாக மலைச்சரிவுகளும், ஒரு அவகாடோ தோட்டமும், காட்டுப்பகுதியுமாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது  "கயோட்டி" என்னும் மிருகம் எட்டிப்பார்ப்பதும்,  காட்டிற்குள் இருந்து இரவு நேரங்களில் சத்தமிடுவதுமாக இருக்கும். இங்கிருந்த 5 வருடங்களில், பலமுறை அவற்றின் சிரிப்பை (ஆமாங்க..அவை சத்தமிடுவது மனிதர் சிரிப்பதைப் போலவே இருக்கும்...அவ்வ்வ்வ்வ்)  நான் ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாகவே வீட்டெதிரே இருக்கும் சிறு குன்றின் சரிவிற்கப்பாலிருந்து ஒரு சில "கயோட்டி"-கள் குன்றின் மேலே ஏறி நடை பழக ஆரம்பித்திருக்கின்றன.

தனியாகவும், ஜோடியாவும், குடும்பத்தினருடனும் என்று மாலை மயங்கும் நேரங்களில் இவர்களது வருகை இருக்கும். ஜீனோ அவற்றை கண்டுகொண்டு "வள்..வள்..வள்ள்ள்ள்ள்" என்று வரவேற்பு கொடுப்பார். அவர்களுக்கு மனிதர் மற்ற விலங்குகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நிதானமாக நின்று ஒரு லுக்கு விடுவார்கள். அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று "எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ! :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான்? " என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.

இப்படியாக இருந்தது..ஒரு வார இறுதியில் மாலை 3.30-4 மணி இருக்கும், காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருக்கையில் வெளியே வந்த என்னவர், "ஏய்..அங்கே பார்" என எக்ஸைட்டட் ஆக சின்னக் குரலில் கத்த...எட்டிப் பார்த்தால்...

வீட்டெதிரே இருக்கும் பார்க்கிங் லாட்டில் கார்களுக்கப்பால் ஹாயாக ஒருவர் மேய்ந்து(!!?) கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல "யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்?" என்று அசால்டாக சிறிது நேரம் பார்த்துவிட்டு, நிதானமாக ரோட்டில் இறங்கி நடந்து சென்று மறைந்தார்.
யார்ரா அது...நம்மளை போட்டோ புடிக்கிறது??
போட்டோ தான? புடிச்சாப் புடிக்கட்டும்...நமக்கென்ன? 
சரி..அப்படியே மேலே ஏறிப் போயிரலாமா?
இல்ல...கீழ இறங்கலாம்...
ஆச ஆசையாப் படம் புடிக்கறாங்க...அயகா:) ஒரு போஸ் குடுப்பம்..!!
ஓகே..கிளம்புறன்!
என்னய்யா இது? நடக்குறதையும் விடாமப் படம் புடிக்கிறாய்ங்க? நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க? ஹ்ம்ம்ம்ம்....
ஸ்பீட் லிமிட்டு 5 மைலாம்..கி கி கி!! நாங்கள்லாம் ஆரு? எங்களுக்கெல்லாம் நோ லிமிட்!! 
வந்ததுக்கு சாப்புட ஏதும் கிடைக்கலன்னாலும் நல்லாப் போஸ் குடுத்தாச்சு...வர்ட்டா?? பய்..பய்ய்ய்ய்ய்!! 
:))) 

பி.கு. இந்த கயோட்டிகள் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகுந்து குப்பைத்தொட்டிகளை ஆராய்ந்து உணவைத்தேடும் நிலைமைக்கு வந்துவிட்டன. மனிதர்கள்,  வளர்ப்புப் பிராணிகளையும் தாக்க வாய்ப்புண்டு..நாய்கள், பூனைகளை அடித்துத் தின்னும் என்றும் சொல்கிறார்கள். மேலதிக தகவலுக்கு விக்கிபீடியா லிங்க் இங்கே...(Coyote)

Friday, October 16, 2015

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை - 1 கொத்து 
சோம்பு - 1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 (அ) பெரிய வெங்காயம் - சிறு துண்டு
புளி 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
எண்ணெய் காயவைத்து வரமிளகாய், கறிவேப்பிலை, சோம்பை வதக்கி எடுத்துக்கொள்ளவும். மிளகாயும் சோம்பும் விரைவில் பொரிந்துவிடும், கருகாமல் வறுக்கவேண்டும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாக பொரியும் வரை வதக்கி எடுத்து ஆறவைக்கவும். 
ஆறியதும் அவற்றுடன் வெங்காயம் , புளி, உப்பு  சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.
எல்லாம் நன்றாக இடிபட்டதும்,
தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
ஸ்பூனால் நன்றாக கிளறி கலக்கிவிடவும்.
எல்லாம் ஒன்றாக கலக்கும் வரை இடித்து எடுத்தால்,
இடி சம்பல் அல்லது இடிச்ச சம்பல் தயார். தேங்காய்ப் பூ சேர்த்த பிறகு நிறைய நேரம் இடிக்கக் கூடாது, தேங்காய் எண்ணெய் விட்டுவிடும். அதனால் கவனமாக இடிக்கவும்.

இலங்கை ரெசிப்பியான இது இட்லி, புட்டு, தோசை, தேங்காய்ப்பூ ரொட்டி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் வகைகளுடனும் நன்றாக இருந்தது. சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த ரெசிப்பியைக் கொடுத்த அம்முலு மற்றும் அதிராவுக்கு என் நன்றிகள்!

Wednesday, October 7, 2015

கம்பு தோசை

தேவையான பொருட்கள்
கம்பு மாவு -2 கப்
உளுந்து - 1/2கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக
உப்பு

செய்முறை
ரெடிமேட் கம்பு மாவு(தான்) இங்கே கிடைக்கிறது. அதனை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

உளுந்துப் பருப்பை நன்கு அலசி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். கடைசி அரை மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நலம். :)  
ஊறிய உளுந்தை மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் கம்பு மாவு மற்றும் தேவையான உப்புச் சேர்த்து அரைக்கவும்.
கம்பு மாவு சேர்த்ததும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் மிக்ஸியை ஓடவிட்டால் கட்டிகளில்லாமல் மாவு கலந்துவிடும்.
வேறு பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
நான் கொஞ்சம் லேட்டா பாத்ததால மாவு பொங்ங்ங்ங்ங்....கி கீழ வழியட்டுமா? என்ற நிலையில் இருந்தது. கரெக்ட்டாப் புடிச்சட்டமுல்ல...ஹிஹி..ஃபோட்டோவத்தான்!! ;) :)
கம்பு தோசை மாவுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைக்கல்லை மூடி வைத்து...
எடுத்தால் தோசைகள் சூப்பராக வரும். காரசாரமான சட்னியுடன் பரிமாறவும்.  படத்திலிருக்கும் சட்னியின் லிங்க் இங்கே.  
பி.கு. இந்த கம்பு தோசையின் முன்னோடி ராகி தோசை..ஆமாங்க!! அறுசுவை.காம் -தளத்தில் பகிரப்பட்டிருந்த ராகி தோசையை முயற்சித்து பார்த்ததில் நன்றாக இருந்தது. அடுத்த முறை கடைக்குப் போயிருக்கையில் கம்பு மாவு கண்ணில் படவும் வாங்கிவந்து கம்பு தோசை சுட்டுப் பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்ததால் கம்புதோசை முதலில் கடைக்கு வந்துருச்சு...சாப்புட்டுப் பார்த்து எப்புடி இருந்துச்சுன்னு சொல்லீட்டுப் போங்க...நன்றி!  

LinkWithin

Related Posts with Thumbnails