Thursday, July 28, 2011

ஸ்டஃப்ட் இட்லி

தேவையான பொருட்கள்
இட்லிமாவு-1கப்
உருளைக் கிழங்கு-காய்கறி மசாலா -1/2கப்

முக்கியமான முன்குறிப்பு: இந்த ரெசிப்பியைப் படிக்க வரும் அன்புள்ளங்கள் கொஞ்சம் ஸ்டெடியா இருங்க என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அபரிமிதமாகப் பொழிந்த கமெண்ட் மழையால் நனைந்து ஸ்டஃப்ட் இட்லி மிதந்துகொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாப் படிங்க!நன்றி!

மசாலா அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். இந்த மசாலா கட்லட் செய்வதற்காக செய்தேன், டீ டைமுக்கு வரவேண்டியவர் டின்னர் டைமுக்கு வந்ததால் கட்லட் ஸ்டஃப்ட் இட்லியாக புதுஅவதாரம் எடுத்துவிட்டது. அடுத்தநாள் காலையில் ப்ரெட் ரோலாகவும்
மாறி, "ஏன்தான் லேட்டா வந்தோமோ, விடாது கருப்பு மாதிரி இந்த மசாலா நம்மை துரத்துதே!"ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது! :)

மினி இட்லி பாத்திரம்(!) வாங்கும்போதே ஸ்டஃப்ட் இட்லி செய்யலாம்னு ஐடியா குடுத்தது என்னவர்தான், அதனால் இட்லிக்கு வரும் பாராட்டு (பாராட்டுவீங்கதானே எல்லாரும்? ;)) முழுவதும் அவருக்கே குடுத்துடறேன். (இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ! கர்ர்ர்ர்ர்ர்ர்!)

ஒவ்வொரு கப்லயும் கொஞ்சமா இட்லிமாவை ஊத்தி, மசாலாவை வைச்சு, மேலே இன்னுங்கொஞ்சம் இட்லிமாவை ஊத்தி வழக்கமா இட்லி வேகவைக்கிறமாதிரியே வேகவச்சு எடுக்கவேண்டியதுதான்! ரெம்ப சிம்பிள்! :)

ஸ்டஃப்ட் இட்லி ரெடி! நல்லா குண்டு குண்டா கொழுக் மொழுக்னு இருக்குதுல்ல? ;))))))

ரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைந்துடும். இந்த இட்லிக்கு தொட்டுக்க எதுவுமே தேவையில்ல,அப்புடியே சாப்பிடலாம்.

ஆனா பாருங்க,நமக்கு வெறும் இட்லிய சாப்பிட்டு பழக்கம் இல்லைல்ல,அதனால சோயாமீட் குருமாவோட சாப்பிடுங்க!

பி.கு. ஆங்காங்கே போல்ட் லெட்டர்ஸ்லே லிங்க்ஸ் குடுத்திருக்கேன்,மறக்காம அதயெல்லாம் க்ளிக் பண்ணிப் படியுங்க.:)

Monday, July 25, 2011

ரசித்து ருசித்தவை-5

கொண்டைக் கடலை குழம்பு..எப்பவும் வைக்கும் முறையிலிருந்து கொஞ்சம் வேறு மாதிரி முயற்சித்தேன். மிளகு-சோம்பு சேர்த்து அரைத்ததால் புது ருசியாய் இருந்தது. ஒரிஜினல் ரெசிப்பி இங்கே. நன்றி வனிதா!
~~
ராக்ஸ் கிச்சனிலிருந்து செய்த பூண்டு சட்னி..காரசாரமாய் சுர்ர்ர்ருன்னு சூப்பரா இருந்தது(அடுத்த முறை கொஞ்சம் காரத்தை குறைச்சுக்கணும்! ;)) . அவங்க சொல்லிருந்த அளவுடன் கொஞ்சம் புளி மட்டும் சேர்த்து அரைத்தேன், நன்றாக இருந்தது. நன்றி ராஜி!
~~
செலவு ரசம்,எங்க ஊர் ஸ்பெஷல்! :) வீட்டில் அம்மா வைக்கும்போதெல்லாம் திரும்பிக் கூடப் பார்த்ததில்லை, இங்கே வந்து சுகந்திக்கா ப்ளாகில் பார்த்து செய்தேன், அருமையாய் இருந்தது.
ஸ்டெப் பை ஸ்டெப் படம் இதோ..
தூதுவளை இருந்தால் அதையும் அரைச்சு ரசத்துடன் சேர்த்து கொதிக்கவிடலாம்,
சளி-காய்ச்சல் இப்படி உடல்நலக்குறைவுக்கு இந்த ரசம் ரொம்ப நல்லது, . ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்குங்க.
~~
ஊரிலிருந்து கொண்டுவந்த அன்னபூர்ணா ரசப்பொடி தீர்ந்துபோய் ரசப்பொடி அரைக்கவேண்டிய நேரம் வந்தது. ஜலீலாக்காவின் குறிப்பைப் பார்த்து வறுத்து அரைத்துவைத்திருக்கேன். அந்நேரம் கறிவேப்பிலை இல்லாததால் அது மட்டும் சேர்க்கலை.

ரசப்பொடிக்கு படத்தில் உள்ள பொருட்களை (ஸ்பூனில் இருப்பது வெந்தயப்பொடி) எல்லாம் வறுத்து அரைச்சுக்கணும், தக்காளிபுளிக் கரைசலுடன் ஒரு டீஸ்பூன் ரசப்பொடிய சேர்த்து கொதிக்கவிட்டு, பருப்புத்தண்ணி சேர்த்து நுரைகட்டினதும் இறக்கி, கடுகு-சீரகம்-பூண்டு தாளிச்சுக் கொட்டி, கொத்துமல்லி தழையும் போட்டா கமகம ரசம் ரெடி! நான் அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக்கறது வழக்கம். :)

நீங்களும் செய்துபாருங்க! ரெசிப்பி இங்கே.

Thursday, July 21, 2011

அமுதென்பதா,விஷமென்பதா?

அமுதென்பதா,விஷமென்பதா...அமுதவிஷமென்பதா?

காதலைப் பற்றி தொடர்பதிவு எழுதச்சொல்லி அதிரா அன்பாக அழைத்திருந்தார். என்ன எழுதுவது, எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது எதுவும் தெரியவில்லை! :)

ஒருநாள் காலை டூயட்-படத்தில் இருந்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்..அஞ்சலி செய்து, மெட்டுப்போட்டு, குண்டுக்கத்தரிக்காயாகி, கடைசியாக "என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?" என்று எஸ்.பி.பி. கேட்க ஆரம்பித்தார்.

எனக்குத் தெரிந்த வட்டத்தில் சிலுவைகள் தந்த காதலை அதிர்ஷ்டவசமாக நான் இதுவரை பார்க்கவில்லை. எங்கள் குடும்பம்/நண்பர்கள் பலருக்கு சிறகுகளைதான் காதல் தந்திருக்கிறது. எல்லாரும் சந்தோஷமாகப் பறந்துகொண்டிருக்கிறோம். :)

சிலவிஷயங்களை "இது நல்லது, இது கெட்டது" என்று அறுதியிட்டு கூற முடியாது..காதலும் அவற்றில் ஒன்று. காதல் தவறான விஷயம் என்றால் சங்ககாலம் தொட்டு இன்றைய ஹைடெக் யுகம் வரை சிரஞ்சீவியாக எப்படி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது? இல்லை, காதல் மட்டுமே சரியானது என்றால், மொட்டிலேயே கருகும் இளைஞர்களின் வாழ்வுக்குப் பொருள் என்ன?

ஒவ்வொருவர் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள், அனுபவங்கள், இன்பதுன்பங்கள் இவையே காதல் பற்றிய அவர்களின் அளவுகோலாக இருக்கிறது. இதனால் காதல் ஏமாற்றம் தருமா-தராதா,சரியா-தவறா, செய்யலாமா-கூடாதா என்று ஆராய்ச்சி செய்யாமல் அது பாட்டுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிடுவோமே! ;)

என்னைப் பொறுத்தவரை காதல் அமுதாகத்தான் இருந்திருக்கிறது,இருந்துகொண்டிருக்கிறது, இருக்கும்! (அதற்காக விஷமில்லை என்று நான் சொல்லவில்லை.;)) பெற்றோர் பார்த்து இணைத்தாலும் சரி, பிள்ளைகள் பார்த்து முடிவு செய்தாலும் சரி, இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று! அதுதான் நடக்கும். அமைந்த வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்வது அவரவர் கையில்!உங்களுக்குக் காதல் பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் இந்தப் பாட்டைப் பாருங்க..ஸோனு நிகம், அனுராதா ஸ்ரீராம் குரல்கள் -ஏ.ஆர்.ரஹ்மான் இசை-ஐஸ்வர்யா ராய் நடனம் எல்லாமே அழகா இருக்கும்! :)

இதுவரை என்னை அழைத்த தொடர்பதிவுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை எழுதியிருக்கிறேன், இதையும் ஒரு மாதிரியா எழுதிப் பூசி மெழுகிவிடலாம்னு எழுதிட்டேன். என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கேன், படித்துப் பிடித்தால் சந்தோஷம், பிடிக்கலைன்னா அது உங்க உரிமை! ஒவ்வொருவருக்கும் values வித்யாசப்படும் இல்லையா? ;)

நன்றி!

Tuesday, July 19, 2011

கோடைக்கொண்டாட்டம் -1 : வடாம்


கொளுத்தும் வெயிலை உபயோகமாகப் பயன்படுத்திக்கொள்ள வடாம் பண்ணலாம் என்று -- வருடப் பொதுவாழ்வில்(!) முதல்முறையாக வடாம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். சொல்லுகிறேன் காமாட்சி அம்மாவிடம் பல்வேறு சந்தேகங்களை மெயிலில் தட்டிவிட்டேன், அவங்களும் பொறுமையா எல்லாத்துக்கும் விளக்கம் அனுப்பினாங்க. வெற்றிகரமாக கருவடாம் தயாரானது. சாப்புடுங்க..சாரி, செய்முறையப் படிங்க,அப்புறமா வீட்டில் செய்து சாப்புடுங்க! ;)

பூசணி கருவடாம்
தேவையான பொருட்கள்
உளுந்து-அரைகப்வரமிளகாய்-5
மிளகு-சீரகம் -தலா ஒரு டீஸ்பூன்
உப்பு
பூசணிக்காய்-சிறுதுண்டு~150கிராம்
(காயைத் துருவிப் பிழிஞ்சா நாலு கைப்பிடி வந்தது. போட்டோவில் தோல் மட்டும் இருக்கும், அதை அளவா வைச்சுக்குங்க! ரொம்ப குழப்புறேனோ? :) )

செய்முறை
பருப்பை களைந்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
பூசணிக்காயைத் துருவிக்கொள்ளவும்.
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும்.

பருப்பை நீரில்லாமல் வடித்து மிளகாய் சேர்த்து அரைக்கவும். பூசணித்துருவலை தண்ணீரில்லாமல் ஒட்டப்பிழிந்து பருப்புடன் சேர்த்து அரைக்கவும்.

அரைக்கையில் தண்ணீர் சேர்கக்கூடாது, பருப்பு அரைபடாவிட்டால் பூசணித்துருவலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அரைத்தால் அரைபடும்னு சொன்னாங்க, ஆனா பருப்பும் மிளகாயும் சும்மாவே அரைப்பட்டது,கடைசியில் பூசணித்துருவலை சேர்த்து 2 சுற்று அரைத்தேன்.

அரைத்த பருப்பு +பூசணி கலவையுடன் உப்பு, மிளகு சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.
அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து சிறிது தண்ணீரால் பேப்பரை துடைத்துவிடவும்.
தயார் செய்த வடகக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து பேப்பரில் வைத்து நல்ல வெயிலில் காயவிடவும்.
ஒரு நாள் காய்ந்ததும், அடுத்த நாள் வடாம்களை திருப்பிப்போட்டு காயவிடவும். இங்கே அடித்த வெயிலில் இரண்டே நாளில் காய்ந்துவிட்டது. மூன்றாம் நாள் வேறு தட்டில் வடாமை மாற்றி மேலும் ஒரு நாள் காயவைத்தேன்.
வடாம் ரெடி! கூட்டு-தால்-குழம்பு வகைகள் செய்யும்போது எண்ணெயில் வடாத்தை பொரித்துவிட்டு, கடுகு தாளித்து சமையலைத் தொடரலாம். சாப்பிடும்போது வடாம் குழம்பில் ஊறி உளுந்துவடை போல சூப்பராக இருக்கும். :)

//ஏன் இவ்வளவு கஷ்டம் ...!!பேசாம உளுந்து வடையே குழம்புக்குள்ளே பிச்சு..பிச்சு...போட்டுட்டாஆஆஆஆ..... ஹா..ஹா...//ன்னு நீங்களும் யோசிக்கிறவரா இருந்தா..வடை இதோ!
டைரக்ட்டா வடையப் பிச்சு பிச்சு பிச்சு பிச்சு பிச்சுப் போட்டு என்சொய் பண்ணுங்க. என்ன ஒண்ணு, வடாம் பண்ணினா மாசக்கணக்கில் வைச்சு குழம்பில் போடலாம், வடைய ஒரு நாள்தான் வச்சு போடமுடியும். உங்க வசதிப்படி பண்ணிக்கலாம்,ஒண்ணும் பிரச்சனையில்ல! ;) ;)
~~~~
எங்க வீட்டில் சாதம்-வரமிளகாய்-சீரகம்-உப்பு சேர்த்து அரைத்துக் கிள்ளி கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுப்போம்,அதுதான் இதுவரைக்கும் எனக்குத் தெரிந்து வீட்டில் செய்த வடகம். மற்றபடி கடைகளில் விதவிதமாக வெங்காய வடகம்-தக்காளி வடகம்-ஸ்டார் வடகம்-மஞ்சக்கலர் குடல்(!) வத்தல் என்று பலவகையில் கிடைக்கும்.

ஸ்கொயர் ஸ்கொயரா இருக்கும் வெங்காயம்/தக்காளி வடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அது எதிலே செய்வது..எப்படி செய்வது என்று தெரியலை, தெரிந்தால் சொல்லுங்க. ஜவ்வரிசிதான் என்று நினைக்கிறேன்,ஆனா வடகத்தில் ஜவ்வரிசி இருப்பதே தெரியாது..அப்பளம் மாதிரி ப்ளெய்னா இருக்கும்,ஆனால் சதுர வடிவம். (நல்லா தெளிவாக் குழப்பியாச்சு, என்ன சொல்லவரேன்னு எனக்கு புரியுது..ஆனாப் படிக்கறவங்களுக்குப் புரியுதா????!)

அதனால் ஜவ்வரிசி வடாமில் தக்காளி சேர்த்து அடுத்த ட்ரையல்! :)

தக்காளி - ஜவ்வரிசி வடாம்
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி-1/2கப்
தக்காளி-2
எலுமிச்சம்பழம்-1
வரமிளகாய்-8
பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டேபிள்ஸ்பூன்

செய்முறை
ஜவ்வரிசியை களைந்து முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
தக்காளி-மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறுஎடுத்து வைக்கவும்.
தக்காளி-மிளகாய் கலவையுடன் 4 கப் தண்ணீர் கலந்து அடிகனமான பாத்திரத்தில் வைத்து கொதிக்கவிடவும்.
தக்காளி கலவை நன்கு கொதிவந்ததும் ஜவ்வரிசியை நீரில்லாமல் வடித்து சேர்க்கவும். அடிபிடிக்காமல் கிளறிவிட்டு சுமார் 12-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

ஜவ்வரிசி வெந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவைக்கவும்.

அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து நீர் தடவி தயாராக வைக்கவும். வடாம் கலவை கை பொறுக்கும் சூடுக்கு ஆறியதும் கரண்டியால் (அ) ஸ்பூனால் சிறிய வட்டங்களாக ஊற்றவும்.

(வடாம் கலவையை முழுவதும் ஆறவிட்டால் இறுகிவிடும். அப்படி ஆகிவிட்டால் சிறிது நீர் விட்டு கரைத்து வடாமாக இட்டுக்கொள்ளலாம்)

வடாம் ஓரளவு (1-2 நாட்கள், உங்க ஊர் வெயிலைப் பொறுத்து! :)) காய்ந்ததும் கவனமாக உரித்து எடுத்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். வழக்கம்போல எனக்கு 2 நாட்களில் காய்ந்துவிட்டது.வடகமெல்லாம் நன்கு காய்ந்ததும் காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

ஜவ்வரிசி வடாமை எண்ணெயில் பொரிக்கும்போது கவனமாகப் பொரிக்கவேண்டும். சட-சடவென்று சத்தம் போட்டுக்கொண்டு பொரியும்..எண்ணெய் தெறிக்கும் வாய்ப்பும் உண்டு. ஜாக்ரதையாப் பொரிச்சு சாப்டுங்கோ! :)

தக்காளிப் புளிப்பு பத்தாதோ என்று எலுமிச்சைச்சாறு சேர்த்தேன், வடாம் கொஞ்சூண்டு புளிப்பா இருந்தது போல இருந்தது. அடுத்தமுறை தக்காளி மட்டும் சேர்த்து செய்து பார்க்கவேண்டும்.

என்ன..எங்கே கிளம்பிட்டீங்க..வடாம் போடவா??வெரிகுட்...மறக்காம இங்கே ஒரு கமென்ட்டையும் போட்டுட்டுப் போங்க! நன்றி! ;) ;)

Friday, July 15, 2011

பூ!

பொதுவாக மே-ஜூன் மாதங்களில் இங்கே கோடை ஆரம்பித்திருக்க வேண்டும், ஆனால் இந்த வருடம் வெயில் வந்தது என்னமோ இரண்டு வாரங்கள்தான். வசந்தத்தில் பூத்த பூக்களைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்,மறந்திருக்க மாட்டீர்கள்! [மறந்திருந்தா ஒரு 'யு'-டர்ன் எடுத்து அங்க போய்ப் பார்த்துட்டு இங்கயே வந்திடுங்க. :) ]

நான்குமாதங்களின் பின்னர் கோடையை எதிர்பார்த்து புதுப்பூக்கள் மே இறுதியில் நடப்பட்டன. புதிதாக நட்ட நாற்றுக்கள் என்னவென்று நான் ஒருமாதம் கவனிக்கவில்லை..திடீரென்று ஜூன் மாதத்தில் ஒரு நாள் பலவண்ணத்தில் பூக்கள் சிரித்தன! :)


இந்தப்பூக்களின் பெயர் Zinnia. பலவண்ணங்களில் அளவெடுத்துப் போட்ட வட்டமாக, அடுக்கடுக்காக பூத்திருக்கும் பூக்களைப் பார்க்கப் பார்க்க அலுக்கவே இல்லை! செடிகளின் இலைகள் எதிரிலை அமைவில் இருக்கிறது..சிறு மொட்டாக ஆரம்பிக்கும் பூக்களின் செழுமை மிக அழகாக இருக்கிறது. சின்னஞ்சிறு மொட்டில் இவ்வளவு பெரிய மலரை ஒளித்துவைக்கும் இயற்கையின் கண்ணாமூச்சியை என்ன சொல்வது?

ஒருவேளை இந்தச் செடிக்கு மட்டும் இயற்கையன்னை காம்ப்ளான் குடுத்து வளர்த்திருக்கிறாளோ?? ;) அதுதான் மற்ற பூக்களை விட சற்றே உயரமாய் வளர்ந்து நின்று மனிதர்களை ரசிக்கிறதோ இந்தக் குங்கும நிறப்பூக்கள்?!

மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, தாமரை வண்ணம்...கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தப்பூக்கள் lilliput mix zinnia என்ற வகையைச் சேர்ந்தவை. அந்த லில்லிபுட் சேர்ந்தால்தான் இப்படி காம்பஸ் வைத்து போட்டதுபோன்ற சீரான வட்டங்களில் பூக்கள் வருகின்றது என்று நினைக்கிறேன்.


நான் சென்ற ஒரு பொன்மாலைப் பொழுதில் ஒரு தேனீ விச்ராந்தியாக ஆரஞ்சுப்பூவில் தேனை ருசித்துக்கொண்டிருந்தார்.."நீ லாங் ஷாட் எடு, இல்ல க்ளோஸ்-அப்தான் எடு, ஐ டோன்ட் கேர்! " என்று அந்தச்செடியில் எல்லா மலர்களிலும் மாறி மாறித் தேனை ருசித்தவாறே எனக்கும் 2-3 படங்களுக்கு போஸும் குடுத்தார்! :)

இந்த மலர்க்கூட்டங்கள் எங்கள் நுழைவு வாயிலருகே..ஒரு மாதத்தின் முன்பு இருந்ததற்கும், இப்பொழுதும் என்ன ஒரு வித்யாசம் பாருங்கள்...ஜூனில் பார்க்கையில் ஒரே சீராக வரிசைகளில் நடப்பட்டிருந்த செடிகள் இப்போது தழைத்துப் பல்கிப் பெருகி புதர் போல மண்டிக்கிடக்கின்றது..

இடையிடையே மண்ணைக் காட்டிக்கொண்டு மலர்ந்தாலும் சரி, புதர்போல மண்டிக்கிடந்தாலும் சரி, மலர்களும் மலர்ச்செடிகளும் அழகுதான்! மொத்தத்தில்


கு
என்ற மூன்றெழுத்துக்களில் அடக்கமுடியாத வனப்பு இது..நேரமிருந்தால் பூக்களின் கோடைக் கொண்டாட்டத்தை பார்க்க வாருங்கள்! நன்றி!
பூ!
:))))))))))))))))))))

Monday, July 11, 2011

Coconut- Some useful tips for NRIs! :)

தேங்காய் நறுக்குவது எப்படி?--ன்னுதான் டைட்டில் வைக்க நினைத்தேன். அதுக்கு முதலில் தேங்காயை உடைக்கணும், தேங்காத்தொட்டியில் இருந்து தேங்காயைத் தோண்டி எடுக்கணும், அப்புறம்தானே நறுக்க முடியும்னு நீங்க கேக்கறதுக்கு முன்னாலயே என் மூளையிலே பல்பு எரிஞ்சுட்டதால், டைட்டில் மாறிப்போச்சு!

ஊரை விட்டு இங்கே வந்ததும் வந்த மாற்றங்களில் முக்கியமானது உணவுப்பொருட்கள்..அதிலே பர்ட்டிகுலரா தேங்காய்! (:-/அவங்கவங்களுக்கு ஆயிரத்தெட்டுக் கவலை/வேலை, இவிங்களுக்கு தேங்கா பத்தி கவலைன்னு நீங்க முகவாய்க்கட்டைய தோள்ல இடிச்சுக்கறது தெரியுது..ஹிஹி! பாத்து...மெதுஉஉ....ஊவா இடிச்சுக்குங்கோ,வலிக்கப்போகுது! :-\ ;) )

இங்கே இண்டியன் ஸ்டோர்ல கிடைக்கும் ப்ரோஸன் தேங்காய்த்துருவல் பெரிய சதுரக்கட்டியா இருக்கும். ஒரு முறை யூஸ் பண்ணறதுக்கு கொஞ்சூண்டு உடைச்சு எடுக்கறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. முழு பேக்கையும் ஒரு 30செகண்ட் மைக்ரோவேவ் பண்ணிட்டு தேவையானளவு எடுக்கலாம்,ஆனா அப்படி செய்யறது சரியில்லை, ப்ரீஸரில் இருந்து எடுத்து thaw பண்ணிய பொருட்களை மறுபடி ப்ரீஸர்ல வைப்பது உடலுக்கு நல்லதில்லைன்னு படிச்சேன்.

முதல் முறை thaw பண்ணியதுமே சின்னச் சின்னத் துண்டுகளா உடைச்சு வைச்சுக்குங்கன்னு சொன்னாங்க, அப்படி செய்தாலும் எனக்கு அது வொர்க் அவுட் ஆகல. என்னதான் உடச்சு வச்சாலும் அடுத்தமுறை அவசரமா எடுக்கும்போது எலும்பு மாதிரி ஆகிருது! :-|

வெறுத்துப்போய் என்னவர் ஆலோசனைப்படி ட்ரை கோக்கனட்பவுடர் வாங்க ஆரம்பிச்சேன். பொரியல், குழம்புக்கு அரைச்சுவிட, வறுத்து அரைக்கும் சட்னி இதுக்கெல்லாம் ஓக்கேவா இருந்தாலும் "தேங்காச் சட்னி"ன்னு நம்ம ஃபேவரிட் ஐட்டத்தை மிஸ் பண்ணறமாதிரியே இருந்தது!

வந்த புதுசில் ஒருமுறை தெரியாமல் இனிப்புத்தேங்காய்த் துருவலை வாங்கிட்டேன். என்ன செய்யறதுன்னு தெரியாம திண்டாடி [இப்பல்லாம் மக்ரூன் அது இதுன்னு செய்துடலாம்,வந்த புதுசுல எதுவுமே தெரியாதே..] தோசைமேலே எல்லாம் போட்டு ஸ்வீட் தோசை சுட்டு காலி பண்ணினேன். :)

தேங்காய்த் துருவல் வகைகள்
இப்படி இருக்கையில்தான் பக்கத்திலிருந்த ஒரு மதுரைக்காரத் தோழி "நாங்க முழுசா தேங்காய் வாங்கி உடைச்சு தோண்டி எடுத்து ப்ரீஸர்லே வச்சுப்போம்"னு சொன்னாங்க. அப்ப அது என்னமோ ஒரு பெரிய மலை போல வேலையாத் தெரிந்தது எனக்கு! ட்ரை கோக்கனட்டிலேயே காலத்தை ஓட்டினேன். அங்கிருந்து சால்ட் லேக் சிட்டி போய்ச்சேர்ந்தோம். ஏதோ ஹார்ட்வேர் வேலை செய்வதற்காக என்னவர் வாங்கியிருந்த சுத்தியும் எங்ககூடவே வந்து சேர்ந்தது.

வீட்டுப்பக்கத்திலேயெ இருந்த வால்மார்ட் சூப்பர் சென்டரில் தேங்காயைப் பார்த்ததும் ஏதோ ஒரு தைரியத்தில் வாங்கிட்டு வந்துட்டேன். முதல் முறை வாங்கி உடைத்து சட்னி அரைத்ததும் தைரியம் வந்துட்டது.. நானும் முழுத்தேங்காய் வாங்க ஆரம்பித்துட்டேன். :) யூட்டாலயே கிடைக்கற தேங்கா கலிஃபோர்னியால கிடைக்காம இருக்குமா? இங்கே கொஞ்சம் ஈஸியாவே கிடைச்சது. இந்த டெக்னிக்கை (தாமஸ் ஆல்வா எடிசன் ரேஞ்சுக்கு பந்தா வுடறியேன்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது,ஹிஹி) இங்கே பக்கத்தில் இருந்த ப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் பரப்பினேன்.. அவிங்களும் இப்ப என்னோட மெத்தடுக்கு மாறிட்டாங்க. நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க..ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு சில விஷயங்களை சொல்லறேன். கண்டிப்பா உங்களுக்கு உபயோகமா இருக்கும்.:)

தேங்காய் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலது..
1.நல்லா ப்ரவுன் கலரா இருக்கற காயா பாத்து எடுக்கணும். [வெள்ளைகலர் எடுத்தீங்கன்னா இளநியாவும் இல்லாம தேங்காயாவும் இல்லாம பல்ல இளிக்கும்,ஜாக்கிரத!]
2.தேங்காயின் மூணு கண்ணும் நல்லா இருக்குதான்னு பாத்து எடுங்க. நல்ல தேங்காய்னா கண்கள் அழுகிப்போகாம, வெள்ளை படிந்து பூசணம் பிடிக்காம க்ளீனான கண்ணோட இருக்கும்.
3.மூச்சு விட்ட காய் இல்லாம பாத்து எடுக்கணும். [அதாவது தேங்காய் ஓடு வெடிப்பு விடாம இருக்கோணும்,ஹிஹி]
4. தேங்காயின் உள்ளே தண்ணி நல்லா ஆடணும்.[குச்சுப்புடியா,ப்ரேக் டான்ஸான்னு கேக்காதீங்க..நல்ல நல்ல பாயின்ட் சொல்லும்போது தொந்தரவு பண்ணக்குடாது.கர்ர்ர்ர்ர்ர்ர்]

இந்த பாயின்ட்டை எல்லாம் சொல்லறதுக்காகத்தான் இந்த போட்டோவ எடுத்தேன். க்ளிக் பண்ணும்போதே தேங்கா பரிதாபமா முழிக்கிற மாதிரி தெரிஞ்சுதா..அதான் கேப்ஷன் போட்டு உங்களையெல்லாம் கொஞ்சம் பயமுறுத்த வேண்டியதாப் போச்சு! :)

தேங்காயை இடது கையில் புடிச்சுகிட்டு வலதுகையில் இருக்கும் சுத்தி(அல்லது உங்க வசதிக்கேத்த ஆயுதத்தால) கவனமா உடையுங்க. அரிதாக சில சமயம் சரிபாதியா உடையும், பல சமயம் கோணல் மாணலா உடையும்..இட்ஸ் ஓக்கே, நாம என்ன உடைச்ச தேங்காய அழகிப்போட்டிக்கா அனுப்பப் போறோம்? ;)

தேங்காய் வாங்கி உடைக்கறதில் இன்னொரு அட்வான்டேஜ் என்னன்னா போனஸா சில்லுன்னு ஒரு கப் தேங்காத்தண்ணியும் கிடைக்கும். கஷ்டப்பட்டு உடைச்ச களைப்புத்தீர நீங்களே அதைய குடிச்சுக்கலாம், இல்லாட்டி பத்திரமா எடுத்துவச்சு ஆப்பத்துக்கு மாவரைக்கையிலே ஊத்தி அரைக்கலாம், அல்லது நீங்க அந்தப்பக்கம் திரும்பின சைக்கிள் கேப்புல வீட்டுல இருக்கர யாராவது நைஸா எடுத்து குடிச்சு டம்ளரை காலி பண்ணவும் வாய்ப்பு இருக்குது,பாத்துக்குங்க.

சிலருக்கு தேங்காத்தண்ணி குடிச்சா சேராது, சளி பிடிச்சுரும்னு பயப்படுவாங்க. அதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கு,உடைச்ச தேங்காய்ல இருந்து ஒரு சின்னத்துண்டு தேங்காய தேங்காத்தண்ணிக்குள்ள போட்டு தண்ணியக் குடிச்சுட்டு தேங்காயையும் சாப்டுட்டா சளி புடிக்காதுன்னு சொல்லுவாங்க,ஆல் த பெஸ்ட்! ;)

ஓக்கே, வெற்றிகரமா உடச்சாச்சு, நல்ல கூர்மையான கத்திய வச்சு சின்னத்துண்டுகளா தேங்காயத் தோண்டி எடுத்துருங்க. முத்தின தேங்காயா இருந்தா அது ஜஸ்ட் எ பீஸ் ஆப் கேக்! ரொம்ப ஈஸியா வந்துரும். ஒரு சிலது வரமாட்டேன்னு அடம்பிடிக்கும், டென்ஷன் ஆகாம ரெண்டு மூடி தேங்காயையும் சிலமணி நேரம் ப்ரிட்ஜ்ல வைச்சிருங்க.

அப்புறம் தோண்டினா முரண்டு பிடிச்சதெல்லாம் கூல் டவுன் ஆகி ஈஸியா வந்துரும். ஒரு சிலர் இதே ஸ்டேஜிலயே ப்ரீஸ் பண்ணுவாங்க, ஆனா நான் கையோட சின்னச் சின்னப்பல்லா நறுக்கிடுவேன். கொழுக்கட்டை,அடை,அரிசிம்பருப்பு சாதத்துக்கெல்லாம் போட வசதியா இருக்கும், மிக்ஸில அரைக்கவும் ஈஸியா இருக்கும்.

ரெண்டு மூடி தேங்காயையும் தோண்டி எடுத்து நறுக்கியாச்சு...

நறுக்கிய தேங்காய்ப் பல்லுகளை எல்லாம் ஒரு டப்பால சேகரிச்சு(!) மூடி ப்ரீஸர்லே போட்டுடுங்க,அம்புட்டுதான்!

இது ப்ரீஸர்லே வைக்கறதுக்கு முந்தி..
இது அடுத்து சிலநாட்கள் கழித்து...
கொஞ்சம் வேலை இருக்கறமாதிரி தெரிந்தாலும் இதிலே அட்வான்டேஜஸ் அதிகம்..ப்ரீஸர்லே இருந்து தேவையான அளவு தேங்காயை மட்டும் எடுக்கலாம். தேங்காய்த் துண்டுகள் தனித்தனியா இருப்பதால் ஈஸியா வந்துரும். மைக்ரோவேவ் பண்ணவேண்டிய அவசியம் இல்ல. கொஞ்சம் சுடுதண்ணில போட்டம்னா ப்ரெஷ் தேங்கா ரெடி.

ஒரு தேங்கா வாங்கினா (எனக்கு) 2 வாரத்துக்கும் மேல வரும். உங்க பர்ஸையும் கடிக்காது,டேஸ்ட்டும் நல்லா இருக்கும். எல்லாம் நல்லா நடந்தா(!) ஜஸ்ட் அரை மணி நேர வேலைதான். மேக்ஸிமம் ஒன் அவர் இழுக்கலாம், பட் இட்ஸ் வொர்த் இட்! ;)

அவ்வ்வ்வ்வ்வ்...யாரது?? ஆரா இருந்தாலும் சரி, இப்புடியெல்லாம் டென்ஷன் ஆகப்படாது,உடம்புக்கு நல்லதில்ல..உங்க கண்ணில படுவது நானில்ல, என் ப்ளாகுதான்! தக்காளி-முட்டை எல்லாம் பறந்து வர மாதிரி ஒரு மாயை தெரியுதே..உங்க கம்ப்யூட்டர் பாழாகிரும்,கூல் டவுன்ன்ன்ன்ன்! நான் ரெம்ப உஷாரு,உங்க கண்ணிலெல்லாம் படமாட்டேன்,
அதிராவுக்கு மஞ்சக்கலர் சாறி அனுப்பி ஐஸ்வச்சு கருப்பு பூனைப் படைப் பாதுகாப்புடன்தான் இப்பல்லாம் சுத்திட்டு இருக்கேன். எதுக்கு சம்பந்தமில்லாம இதை சொல்லறேன்னு பாக்கறீங்களா... எல்லாம் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான்! ச்சே,ச்சே,பயமா...எனக்கா அதெல்லாம் இல்லீங்க!!

" மாம்பழம் நறுக்குவது--தேம்பழம்(?!!!) நறுக்குவது-- (அடுத்து ஒரு பழம் கியூல வெயிட்டிங்)" இது போன்ற உபயோகமான பலபதிவுகள நான் சலிக்காமப் போடுவதற்கு உங்க எல்லாரின் அன்பும் ஆதரவும்தான் முழு முதல் காரணமா இருந்தாலும் அப்பப்ப கொஞ்சம் கை காலெல்லாம் உதறுற மாதிரியே இருக்குல்ல..அக்கம் பக்கம் இருக்க ஆட்களில் யாராவது பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்து டெரராப் பொறப்பட்டு எங்க ஏரியாவுக்கு வந்துட்டீங்கன்னாலும் பூனைகளைத் தாண்டி வரமுடியாது,be ware of black cats!???

எனவே NRI தென்னிந்திய மக்களே, நீங்க எல்லாரும் ப்ரெஷ்ஷா முழுத்தேங்கா வாங்கி உபயோகிப்பதை இந்தப் பதிவின் மூலம் கன்னா-பின்னான்னு என்கரேஜ் பண்ணுகிறேன். மற்றும் இந்தியதிருநாட்டு மக்கள் உட்பட யார் வேணும்னாலும் ப்ரீயா இந்த தேங்காப்பல் ப்ரீஸிங் டிப்ஸ் &டெக்னிக்ஸ்-ஐ உபயோகிச்சுக்கலாம். கட்டணமெல்லாம் கிடையாது, ஆனா காப்பிரைட் வாங்கிவச்சிருக்கேனாக்கும். ;) :)

இதிலே உங்களுக்கு ஏதானும் அதிருப்தி இருந்தா தேங்காய் சாப்பிடறதை நிறுத்திருங்க,ஆனா என் ப்ளாகுக்கு வந்து படிப்பதை ரசிப்பதை சிரிப்பதை நிறுத்திராதீங்க, டீல் ஓக்கேவா? ;)

Thursday, July 7, 2011

அரைத்துவிட்ட சாம்பார்-சுலப முறை

பொதுவாக அரைத்துவிட்ட சாம்பார் என்றால் கடலைப்பருப்பு,வரமிளகாய்,தனியா,சீரகம்,தேங்காய் இன்ன பிற பொருட்களை தனியாக வறுத்து அரைத்து சேர்த்துத்தான் செய்வது வழக்கம். மசாலா வதக்கி, அரைத்து,கரைத்து செய்ய நேரமும் பொறுமையும் இல்லாத சமயங்களில் அதே சுவையுடன் குறைந்த நேரத்தில் சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாமா?

0000*****0000
இந்த இடத்தில ஒரு முப்பது செகன்ட் விளம்பர இடைவேளை..யூட்யூப் போயி அவிங்கவிங்களுக்குப் புடிச்ச ஜிங்கிள்ஸ்-ஆ கேட்டுட்டு மறக்காம வந்துருங்க,சரியா?
அவ்வளவு பொறுமை இல்லையா..அப்ப இங்கயே பாருங்க..மொளகாப்பொடி விளம்பரம்தானேன்னு கோக்குமாக்காக் கேக்கக்கூடாது,இது சும்மா ஒரு சாம்பிள்தான்! ஹிஹிஹி!0000*****0000

தேவையான பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4கப்
புளிக்கரைசல்-1/4கப்
தக்காளி(பெரியதாக)-1

சின்ன வெங்காயம்-10 (அல்லது பெரியவெங்காயம் -1)
பச்சைமிளகாய்-1
நடுத்தரதுண்டுகளாக நறுக்கிய (விருப்பமான) காய்-1/2கப்
மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4 டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

கடுகு-1/2டீஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை -சிறிது


அரைக்க

தேங்காய்-கால்மூடி

தனியா-11/2டீஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு-சீரகம்-பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து புளித்தண்ணீர்-மஞ்சள்த்தூள்-மிளகாய்த்தூள்-உப்பு சேர்த்து வேகவைக்கவும்.


தேங்காய்-கொத்துமல்லி விதையை கொஞ்சமாகத்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வெந்த காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

வேகவைத்த பருப்பு,சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். கம-கம வாசனையுடன் சுவையான அரைத்துவிட்ட சாம்பார் ரெடி!

சாதம்-இட்லி-தோசை எல்லாவற்றுடனும் சூப்பராக மேட்ச் ஆகும் இந்த ஈஸி சாம்பார்.

*************

என்ன இது இம்புட்டு பவ்யமா(!) ஒரு போஸ்ட்டுன்னு நீங்கள்லாம் மூக்கு மேல விரல் வைச்சுரக்கூடாதேன்னு... அடுத்த போஸ்ட்டுக்கு ஒரு முன்னோட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

:))))))))))))

Tuesday, July 5, 2011

ப்ரோக்கலி பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்
நறுக்கிய ப்ரோக்கலிப் பூக்கள்-11/2 கப்
கடலைப்பருப்பு,துவரம்பருப்பு,பாசிப்பருப்பு மூன்றும் சேர்த்து-1/4கப்
வரமிளகாய்-6
பெருங்காயத்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-1கொத்து
உளுந்துப்பருப்பு-11/2 டீஸ்பூன்
எண்ணெய்(ஆலிவ் ஆயில்)-3 டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
பருப்புகளை அலசி ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

ப்ரோக்கலிப் பூக்களை தண்ணீர் தெளித்து மைக்ரோவேவில் 3 நிமிடங்கள் வேகவைத்து, சிலநிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து மீண்டும் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வேகவைத்து எடுத்துவைக்கவும்.

வரமிளகாய்-தண்ணீரில்லாமல் வடித்த பருப்புகள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்த்து கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும். (தண்ணீரில்லாமல் அரைத்தால் நல்லது, அரைபடவில்லையென்றால் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.)

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பருப்பு பொன்னிறமானதும் அரைத்த பருப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து, மீதியிருக்கும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பருப்புக்கலவை வேகும்வரை வதக்கவும்.

வெந்த ப்ரோக்கலிப் பூக்களை சேர்த்துக் கிளறவும்.

காய் பருப்பு கலவையுடன் கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான ப்ரோக்கலி உசிலி ரெடி!

பச்சைப்பயறு +சாதம்+ப்ரோக்கலி உசிலி...ஹெல்ப் யுவர்செல்ஃப்! ;)

இதுவரை பீன்ஸில்தான் உசிலி செய்து கொண்டிருந்தேன், ப்ரோக்கலியிலும் உசிலி செய்யலாம் என்று ஐடியா கிடைத்தது இங்கே. நன்றி வர்தினி! :)

LinkWithin

Related Posts with Thumbnails