Showing posts with label அவசர சமையல். Show all posts
Showing posts with label அவசர சமையல். Show all posts

Thursday, November 3, 2016

ஆம்லெட்

ஆம்லெட் செய்வது என்ன பெரிய கம்ப சூத்திரமா? இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா?? என்று பெரும்பாலானவர்கள் எண்ணினாலும்....அப்படி என்னதான் இருக்குன்னு படிச்சுப்பார்க்க ஒரு க்யூரியாஸிட்டியோட எட்டிப்பார்க்கிறதுக்கு பெரிய டாங்க்ஸூ!! :)))))) 

அது பாருங்க, இந்த ஆம்லெட் செய்யறது ஈஸியான வேலைதான், தோசைக்கல்ல காயவச்சோமா, அதுக்குள்ள வெங்காயத்தை நறுக்கினோமா, முட்டைய ஒடச்சு கலக்கினோமா..சுட்டு சாப்ட்டோமானு அஞ்சு நிமிஷத்தில முடியற வேலைதான். ஆனா இன்னிக்கு அதில ஒரு ஷார்ட்கட் மெதட் உங்களுக்கெல்லாம் சொல்லித்தரப்போறேன்(!!!??!! )..ஓகே ரெடி, ஸ்டார்ட் மீசிக்!! 

ஆம்லெட் செய்யற வேலை ஈஸியா இருந்தாலும் அதில மீ ஃபேஸ் பண்ணற ஒரு சில டிஃபிகல்டீஸ் ஃபார் யுவர் ரெஃபரன்ஸ் : 
1. எவர் சில்வர் கிண்ணத்தில்  முட்டைய உடைச்சு ஊத்தி ஸ்பூன் , ஃபோர்க் அல்லது விஸ்க்-ஆல முட்டைய கலக்கினா என்னோட அழகான கிண்ணங்கள் எல்லாம் காயமாகிருது யுவர் ஹானர்!! 
...சரின்னு இல்லாத மூளைய கசக்கி உலுக்கி, கண்ணாடி கிண்ணங்கள்லதான் முட்டைய உடைச்சு கலக்கணும்னு வீட்டுல ஒரு ரூல் போட்டாச்சுன்னு வைங்க. 
2. இப்ப அடுத்த பிரச்சனை..முட்டை கலக்கின கிண்ணத்தை கழுவி வைக்கிறது. என்னதான் ஆம்லெட்ட ருசிச்சு சாப்ட்டாலும் இந்த முட்டைக்கிண்ணத்தை கழுவுறது மீ-க்கு புடிக்காத வேலை...அந்த சுமெல் (!!??@@) ரொம்ப கஷ்டமா இருக்கும் கழுவி வைக்கிறதுக்குள்ள...!! 

சரி, வெங்காயமிளகாயே போடாம செய்யலாம்னா நல்லா நாலு முழம் வளத்தி வைச்சிருக்க நாக்கு அது போதாது, போதாதுன்னு மல்லுக்கட்டுது. அவசரத்துக்கு எப்பவாவது அப்படியே சாப்பிடலாம், ஆனா ஒவ்வொருக்காவும் ப்ளெயின் ஆம்லெட்டே சாப்பிட போரடிக்குதுல்ல? நீங்க என்ன சொல்றீங்க? 

இப்படியான தலையாய பிரச்சனைகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த சோம்பேறி டெக்னிக் ஃபார் ஆம்லெட். ஓகே, போதுமான முன்னுரை குடுத்தாச்சு, வாங்க ஆம்லெட் போட போலாம்!! 


அடுப்ப ஆன் பண்ணி, தோசைக்கல்ல வைச்சுட்டு கொஞ்சம் வெங்காயம், ஒரு பச்சைமிளகாயை பொடியா கட் பண்ணிக்குங்க. அதுக்குள்ள கல்லு காய்ஞ்சிருக்கும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டைரக்ட்டா தோசைக்கல்லயே நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாயைப் போடுங்க...
கொஞ்சம் உப்பையும் தூவி நல்லா வதக்குங்க.  வெங்காயம் வதங்கினதும் முட்டைய டமால்னு உடைச்சு வெங்காயத்து மேல ஊத்துங்க...
கையோட சட்டுவத்தில முட்டைய கலக்கி, வெங்காயமிளகாயோட சேர்ர மாதிரி கலந்துடுங்க..
அப்புறம், இன்னுங்கொஞ்சம் எண்ணெய் ஊத்திட்டு, மிளகுத்தூளையும் தூவிருங்க..
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப்போட்டு அடுப்பை ஆஃப் பண்ணிருங்க. கல்லு சூட்டிலயே அடுத்த பக்கம் பதமா வெந்துரும். (ஆம்லெட்டோட மறுபக்கத்தை பாக்கறதுக்குள்ள, "பார்க்க அப்பெடைஸிங்-ஆவே இல்லையே!!" அப்புடின்னெல்லாம் யோசிக்கக்குடாது..கர்ர்ர்ர்ர்ர்!!)
சில விநாடிகளில் ஆம்லெட் ரெடி...தட்டில வச்சு சுடச்சுட சாப்பிடுங்க.
எப்புடி நம்ம ஷார்ட்கட்டு?? இதை விட வேற எதாச்சும் குறுக்கு வழி உங்க கைவசமிருந்தா அதையும் சொல்லுங்க!! ;) 

Monday, October 24, 2016

ஜெயின் கிச்சடி

மதிய உணவுக்கு அவசரமாக ஏதாவது சுவையாகச் சமைத்து சாப்பிடலாமே என்று தோன்றுகையில், குக்கரில் ஒரே சாதமாக தாளிச்சு விட்டு 3 விசில் விட்டு இறக்கினால் போதும் என்ற உணவுவகைகள்தான் என் சாய்ஸ்..அஃப்கோர்ஸ், வீட்டில் ஒரு பிரியாணி பிரியர் இருப்பதால் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, கொண்டைகடலை பிரியாணி, தக்காளி பிரியாணி, மீல்மேக்கர் பிரியாணி என போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும், அதிக காரம்-மசாலா இல்லாத இந்த கிச்சடி இப்ப அடிக்கடி எங்க வீட்டில் இடம்பிடிக்கிறது. பிரியாணி பிரியரே விரும்பி சாப்பிடுகிறார்னா பாத்துக்கோங்க..!! ;) :)

அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p

இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...

அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))

தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு

பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை  - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))

செய்முறை 
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு காய்களை சேர்க்கவும்.  சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, ஊறிய அரிசி-பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ருசிக்கு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விடவும். (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்..கொஞ்சம் குழைவாக இருக்கும் இந்த கிச்சடி) 
குக்கரை மூடி , மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். 
இதனுடன் ஜோடியாக பத்லா கடியும் செய்தேன், ஆனால் அது திரும்பி கூட பார்க்கப்படாமல் தங்கிவிட்டது.  ;)

ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)
குறிப்பு
டைட்டில்-ல "ஜெயின் கிச்சடி" என இருந்தாலும், இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி அல்ல, இஞ்சி-பூண்டு, வெங்காயம் இவையெல்லாம் சேர்க்காமல் செய்தால் அதுவே ஜெயின் கிச்சடி. விருப்பமுள்ளோர் அப்படியும் செய்து பார்க்கலாம். :) நேரமிருந்தா இங்கேயும் எட்டிப் பாருங்க. இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி - கடி ஜோடி!

Friday, September 2, 2016

காலிஃப்ளவர் ஃப்ரை

தேவையான பொருட்கள் 
காலிஃப்ளவர் - 11/4கப் 
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம், சோம்பு - தலா1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/8டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணை 
உப்பு 

செய்முறை 
காலிஃப்ளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
காடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் சோம்பு தாளித்து காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். 
காய் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும். 
காலிஃப்ளவர் முக்கால்பாகம் வெந்ததும் மசாலாபொடி மற்றும் கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.
காய் நன்றாக வெந்து மசாலாவாடை அடங்கியதும் பரிமாறவும்.
விரைவில் செய்யக்கூடிய காரசாரமான பொரியல் இது. சில்லி சிக்கன் மசாலா விரும்பாதவர்கள் மிளகாய்ப்பொடி-கரம் மசாலா பொடி சேர்க்கலாம். அல்லது சாம்பார் பொடியும் சேர்க்கலாம். காய் வேக தண்ணீர் சேர்க்கவேண்டியதில்லை, மூடி போட்டு வைக்கையில் அதுவே நீர் விட்டு வெந்துவிடும். சுவைக்கேற்ப காரப்பொடியை சேர்த்துக்கொள்ளவும். சாதம் வகைகளுடன் சுவையாக இருக்கும்.

Thursday, August 11, 2016

ப்ரோக்கலி பொரியல் /Broccoli Stir-fry

 
தேவையான பொருட்கள் 
ப்ரோக்கலி - 11/2 கப் (சுத்தம் செய்து நறுக்கிய துண்டுகள்)
வெங்காயம் - 2டேபிள்ஸ்பூன் (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சைமிளகாய் -1 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
கடுகு-1/2டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
நறுக்கிய ப்ரோக்கலி துண்டுகளை ஸ்டீமரில் வைத்து..

4-5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வேகவைத்த ப்ரோக்கலி தயார். 
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து,  நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வெந்த ப்ரோக்கலி துண்டுகள், தேவையான உப்பு-மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
காய் வெங்காயத்துடன் கலந்து லேசாக சூடானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
க்விக் அண்ட் ஈஸி ப்ரோக்கலி பொரியல் ரெடி. 

Tuesday, March 22, 2016

ராகி சேமியா

ராகி சேவை, கோதுமை சேவை, தக்காளி சேவை, கம்பு சேவை என தமிழகத்தில் விதவிதமாக கிடைத்தாலும், இங்கே ராகி "சேமியா" கிடைத்தது இதுவே முதல் முறை.  மேகி நூடுல்ஸ் இருக்கும் பக்கம் இந்த "அணிலாரை"ப் பார்ததும் வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டேன். இப்படியான சேமியாவை நான் (மட்டுமே) செய்வது முதல்முறை. ஊரில் அம்மாவோ அக்காவோ செய்வார்கள், பக்கத்தில் நின்று பார்த்ததோடு சரி. கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், ஆனா அவ்வளவு கடினமில்லை..சூப்பரா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 2கப் 
வெங்காயம்- பாதி
பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய் -1 
தக்காளி -1
கடுகு -1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
உளுந்து பருப்பு -1டீஸ்பூன் 
எண்ணெய்
உப்பு 

செய்முறை
2 கப் சேமியாவுக்கு சுமார் 4 கப் தண்ணீர் (சூடாக்க தேவையில்லை, பச்சைத்தண்ணீரே போதும்) எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 

உப்பு கரைந்ததும் ராகி சேமியாவை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும். 

*மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவைக்கவும். 

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஊறிய ராகி சேமியாவை வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
 சேமியா வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய், கிள்ளிய வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் **உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் ஆறிய ராகி சேமியாவை உதிர்த்துப் போட்டு கிளறவும்.
 சேமியா வெங்காயத்துடன் நன்கு கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
* தண்ணீரில் ஊறப்போடும் சேமியாவை 3 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்கவேண்டாம்..அதிக நேரம் ஊறினால் கூழ் போல் ஆகிவிடும், கரெக்டா 3 மினிட்ஸ் மட்டும் வைங்க. (இது அந்த சேமியா பாக்கட்டிலயே போட்டிருக்காங்க..நான் பயமுறுத்தலை!! ஹிஹி...)
** சேமியாவை ஊறவைக்கும்போதே உப்பு கலந்த தண்ணில தானே ஊறவைக்கிறோம் என தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அந்த 3 நிமிட ஊறவைத்தலில் உப்பு சேமியாவில் பிடிக்கிற மாதிரி தெரியவில்லை. நீங்க பாத்து போட்டுகுங்க. :)

Tuesday, March 15, 2016

அவசர சாம்பார் / இன்ஸ்டண்ட் சாம்பார்

பருப்பு இல்லாமல்,  தேங்காயும் தேவைப்படாத சாம்பார் இது. சும்மா இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த ரெசிப்பி கண்ணில் பட சட்டென்று செய்து சாப்பிட்டாயிற்று. நீங்களும் செய்து பாருங்க..ஈஸி & டேஸ்ட்டி! 

தேவையான பொருட்கள்
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - நாலைந்து 
பச்சைமிளகாய்-1
நறுக்கிய காய் - 1/2கப் [விருப்பமான காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நான் மஞ்சள்பூசணி/அரசாணிக்காய் சேர்த்திருக்கிறேன்]
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை -கொஞ்சம் 
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
பொட்டுக்கடலை -1டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி -2 
புளி - சிறுதுண்டு
சாம்பார்பொடி -2டீஸ்பூன் 
சீரகம்-1/2டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் எடுத்து,
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தக்காளி இருப்பதால் அதுவே போதும்.
காயை சற்றே பெரிய துண்டுகளாகவும், வெங்காயம் பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி, கடுகைப் பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காயைச் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து,
தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். நான் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்தேன், உங்களுக்கேற்ற கன்ஸிஸ்டன்சி-க்கு தண்ணீரை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பதிவின் முதல் படத்தில் இருப்பது ஓட்ஸ் பொங்கல் & சாம்பார்...இறுதிப் படத்தில் இருப்பது இட்லி & சாம்பார்.
குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது, ஹிஹி...ஆனால் சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Recipe Link : HERE

Saturday, January 31, 2015

கேப்ஸிகம் பொரியல் / குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள்
குடைமிளகாய் -2
வெங்காயம் - பாதி 
பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு 

செய்முறை 
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சம அளவு சதுரத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை கீறியும், வரமிளகாயைக் கிள்ளியும் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து பருப்பு தாளித்து வெங்காயம், ப.மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து , கொஞ்சமாகத் தண்ணீர் தெளிக்கவும். 
அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். 
சுவையான குடைமிளகாய் பொரியல் சில நிமிடங்களில் தயார். 
சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என பலவண்ண மிளகாய்களை உபயோகித்தால் பொரியல் கண்ணுக்கு அழகாகவும் இருக்கும். தனியாக ஒரே வண்ண மிளகாயை உபயோகித்தாலும் நன்றாக இருக்கும். முதல் படத்தில் சிவப்பு +மஞ்சள் மிளகாய்கள், இரண்டாவது படத்தில் மஞ்சள் + பச்சை மிளகாய்கள். 
குடைமிளகாயை ரொம்பவும் குழைவாக வேக வைக்காமல் கொஞ்சம் க்ரஞ்ச்-சியாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

Tuesday, December 9, 2014

ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats)-1/2கப்
கேரட்- சிறியதாக 1
பீன்ஸ் - 2
பச்சைப் பட்டாணி - 1கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை
சாம்பார் பொடி-1/2டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தண்ணீர் - 21/2கப்
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட்-பீன்ஸ் -பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து 21/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.
மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.
கஞ்சியை அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் (அதாங்க..serve warm!! :)) பரிமாறவும்.
குறிப்பு
கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் அபாயம் உள்ளது, அதனால பாத்து பதமான சூட்டில பரிமாறுங்கோ! :)
quick cooking oats என்றால் தண்ணீர் அளவு குறைத்துக்கொள்ளவும். விரைவாகவும் வெந்துவிடும்.

Thursday, July 3, 2014

ப்ரெட் உப்புமா / ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்
ப்ரெட் ஸ்லைஸஸ்/ ரொட்டித் துண்டுகள் - 8
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-வெங்காயம் வதங்கும் அளவு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை(நான் சேர்க்கவில்லை) சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பை சேர்த்து வதக்கவும். 
ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக்கொள்ளவும். [புது ப்ரெட்-ஐ விட மீதமான ப்ரெட் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் ஈஸியாக அரைபடும். நான் ஃரெஷ் ப்ரெட்தான் உபயோகித்திருக்கிறேன். ;)] 
உதிர்த்த ப்ரெட்-ஐ வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பிரட்டவும்.
ப்ரெட் ஓரளவு சூடேறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்புமா தயார். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
உப்பு வெங்காயம் வதக்க மட்டுமே, ரொட்டியில் ஏற்கனவே உப்பு இருக்கும்.
நாங்கள் எப்போதும் கோதுமை அல்லது மல்ட்டிகிரெய்ன் ப்ரெட் தான் வாங்குவது வழக்கம்.  வெள்ளை ரொட்டியும் உபயோகிக்கலாம்.
உதிர்த்த ரொட்டி சேர்த்த பின் அதிக நேரம் வதக்கினால் உப்புமா வறவற-வென ஆகிவிடும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அதிகம்! :)
ரெசிப்பி கிடைத்தது இங்கே.

Saturday, June 14, 2014

முள்ளங்கி-குடைமிளகாய் பொரியல் / Radish-Capsicum Stir-fry

முள்ளங்கியைப் பொரியல் செய்வதா??  அதும் குடைமிளகாய் கூடவா??-என பலர் எண்ணக்கூடும், ஆனால் "மாத்தி யோசி"ச்சு இப்படி ஒரு புதிய காம்பினேஷனில் இறங்கினேன். ஏற்கனவே சிவப்பு முள்ளங்கி பொரியல் பலமுறை செய்திருப்பதால் கொஞ்சம் தைரியமாகவே வெள்ளை முள்ளங்கியில் செய்யத் தொடங்கினேன். உணவு வகைகள் வண்ணமயமாக:) இருக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு கடந்த வருஷத்தில் இருந்து பிடித்துக்கொண்டதில் கண்ணில் படும் பளிச் காய்களை எல்லாம் ஒன்றாக்கி ரணகளப்படுத்திட்டிருக்கேன், அது வேற கதை! ;)  நீங்களும் மானாவாரியான காய்கறிகளை விதவிதமான காம்பினேஷன்ல சமைச்சுச் சாப்பிடுங்க, புதுருசிகளை சுவைக்க வாய்ப்பும், அதனால ஒரு சந்தோஷமும் கிடைக்கும். :)
தேவையான பொருட்கள்
முள்ளங்கி-11/2( ஒரு கப் அளவு நறுக்கிய முள்ளங்கி)
குடைமிளகாய்-1(விரும்பிய வண்ணத்தில்)
நறுக்கிய வெங்காயம்-2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2(காரத்துக்கேற்ப)
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 

செய்முறை
முள்ளங்கியை கழுவி, தோல்சீவி விரும்பிய வடிவில் நறுக்கவும்.
குடைமிளகாயையும் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். 
வெங்காயம்-பச்சைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
அதனுடன் வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களையும் சேர்க்கவும்.
கிளறிவிட்டு, கால்கப் தண்ணீரும் தேவையான உப்பும் சேர்த்து வேகவிடவும்.
காய்கள் மெல்லியதாக நறுக்கியிருப்பதால் விரைவில் வெந்துவிடும். குழைய வேகவிடாமல் காய் வெந்ததும் தேங்காய்த்துருவல்  சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கலர்ஃபுல் பொரியல் ரெடி. எல்லா வகையான சாதங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

Sunday, September 29, 2013

புதினா-வெங்காய சாண்ட்விச் / Mint Onion Sandwich

தேவையான பொருட்கள்
புதினா சட்னி 
சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகள்-1/4கப்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப) 
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
புளி-சிறிது
உப்பு
எண்ணெய் 
வதக்கிய வெங்காயத்திற்கு
நீளமாக நறுக்கிய வெங்காயம்-1
சீரகம்-1/4டீஸ்பூன்
கறிமசாலாதூள்-1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 
வீட் ப்ரெட் (அ) விருப்பமான ரொட்டித் துண்டுகள்-6
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் சிறிது எண்ணெய் காயவைத்து பச்சைமிளகாயை வதக்கவும். அதனுடன் புதினா இலைகள், புளி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துவைக்கவும். 
ஆறியதும் இவற்றுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும்.
புதினா வதக்கிய கடாயிலேயே இன்னும் சிறிது எண்ணெய் சூடாக்கி, சீரகத்தை பொரியவிடவும். 
நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சுவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்-மல்லி-கறிமசாலாப் பொடிகளைச் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.
க்ரில்லில் லேசாக எண்ணெய் தடவி, சூடாக்கிக் கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளில் ஒரு புறம் புதினா சட்னியைத் தடவி, அதன் மேல் வதக்கிய வெங்காயத்தை வைத்து..
இன்னொரு ரொட்டித் துண்டை அவற்றின் மீது வைத்து, ஆலிவ் ஆயில் கொஞ்சம் தெளித்து விட்டு..
க்ரில்லை மூடி வைக்கவும்.
2 அல்லது 3 நிமிடங்களில் சுவையான புதினா-வெங்காய சாண்ட்விச் ரெடியாகி இருக்கும்.
கத்தியால் முக்கோணமாக நறுக்கி, சூடாகப் பரிமாறவும்.
சுடச்சுட சாப்பிட காரசாரமான  சுவையான மொறுமொறு "மின்ட்-ஆனியன் சாண்ட்விச்" ரெடி!
ஈவினிங் டீ-யுடன் சூப்பர் ஜோடி இந்த சாண்ட்விச்! :) 
க்ரில்-லிற்கு பதிலாக ப்ரெட் துண்டுகளை தோசைக்கல்லிலும் வாட்டி எடுக்கலாம். இங்கே கொடுத்துள்ள அளவிற்கு 6 முதல் 8 ரொட்டித்துண்டுகள் உபயோகித்து 3 அல்லது 4 சாண்ட்விச்கள் செய்யலாம். 

Recipe Inspiration: Here

LinkWithin

Related Posts with Thumbnails