Showing posts with label ஸ்னாக்ஸ். Show all posts
Showing posts with label ஸ்னாக்ஸ். Show all posts

Sunday, March 10, 2019

கடலை வறுக்கலாமா? :)

U.S. வந்து பலநாட்கள் நம்ம ஊர் வேர்க்கடலை கிடைக்கவில்லை/ கிடைக்குமிடம் எனக்குத் தெரியவில்லை..ஹிஹி!! வால்மார்ட்-ல் கிடைக்கும் Planters ப்ராண்ட் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையையே பலகாலம் உபயோகித்தேன். 

இந்தியன் ஸ்டோர்ஸில் கடலை பேக்கட்டை பார்த்திருந்தாலும், பச்சைக்கடலை..அதை வாங்கி வறுக்கவேண்டுமே என்ற கவலை (கவனிக்க..12 வருடங்கள் முன்பு! ;))..அதான் வால்மார்ட்டில வறுத்து தோல் நீக்கியதே கிடைக்கிறதே என வாங்கிய காலங்கள்!! பிறகொருமுறை வாங்கித்தான் பார்ப்போமே என வாங்கி உப்புத்தண்ணீர் தெளித்து வறுத்து வைத்திருக்கிறேன்.,2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது நேரம் நிறைய்ய்ய்ய இருந்தது. பிறகு பெர்ஷியன் கடையில் வறுத்த கடலை கிடைத்தது..அது வால்மார்ட் கடலையை விட கொஞ்சம் பெட்டர்!! அதனால் அங்கே வாங்க ஆரம்பித்தாயிற்று.

மறுபடி ஒரு சின்ன கொசுவர்த்தி...சிறுவயதில் பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடை (எங்க சொந்தக்காரங்க கடைதான்!! )யில் நாலணாவுக்கு "கள்ள" வாங்கி அதை அரைமணி நேரம் நிதானமாக சோடனைகள் செய்து சாப்பிடுவேன்..முதல்ல கடலையைத் தேய்த்து தோலை எல்லாம் ஊதி அப்புறப்படுத்திவிட்டு, பிறகு இரண்டிரண்டாகப் பிரித்து, பிறகு அதிலே இருக்கும் குட்டி கொண்டையையும் பிரித்து முதலில் அதைச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒவ்வொன்றாக கடலையைத் தின்பது!! :) :) :)  அந்தக் கடலையின் ருசி இங்கே கிடைக்காததால் கடலையை சட்னி, புளிசாதத்துக்கு உபயோகிப்பதோடு நின்றுபோனது.  

2013-ஆம் ஆண்டு மாமனார்-மாமியார் இங்கே வந்திருந்தபோது மறுபடி கடலை தேடல் ஆரம்பமாயிற்று..இருவரும்  வேர்க்கடலையை விரும்பிச் சாப்பிடுவார்கள், அவர்கள் மகனும் அப்படியே என அப்போதான் எனக்குத் தெரியவந்தது வேற கதை!! மாமியாருக்கு நான் வாங்கும் பெர்ஷியன் கடலை ருசி பிடிக்கவில்லை..வேறு கிடைக்குமா கிடைக்குமா எனக் கேட்டு இந்தியன் ஸ்டோரில் மறுபடி பச்சைக்கடலை வாங்கி வந்தேன். அதனை மைக்ரோவேவ்-ல வறுக்கலாமென எங்கோ இண்டர்நெட்டில் படித்தது..எக்ஸ்பெரிமெண்ட்ஸ் செய்து மெல்ல மெல்ல என்ன செய்ய வேண்டுமென பிடிபட்டது.. அப்போதிருந்து இதே முறைதான். என்ன தான் சொல்லுங்க, நம்ம ஊர் சிறு வேர்க்கடலையின் ருசி அமெரிக்காவின் மெகா சைஸ் வேர்க்கடலைல இல்லவே இல்லை!!   

இவ்வளைவையும் பொறுமையாப் படிச்சுட்டீங்க, அப்படியே கடலையையும் வறுத்துடலாம், வாங்க..

இது இங்கே இண்டியன் ஸ்டோரில் வாங்கிய பச்சைக்கடலை..
 பேக்கட்டை பிரிச்சு, ஒரு மைக்ரோவேவ் பவுல் (உயரம் குறைவான, அகலமான பவுல் அல்லது ப்ளேட் நன்று) இல் எடுத்துக்கொள்ளவும். ஆர்வக்கோளாறுல அதிகமா எடுத்துகிட்டீங்கனா அதுக்கேற்ற மாதிரி நேரம் அதிகரிக்கும். நான் எடுத்திருப்பது  ஏறத்தாழ ஒரு கப். மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். மைக்ரோவேவ் ஆஃப் ஆன உடனே அதனைத் திறக்காமல் சில நிமிடங்கள் கழித்து திறக்கணும்..பாத்திரச்சூட்டில் கடலை இன்னும் வறுபட்டுக்கொண்டிருக்கும்.
 2 நிமிடங்கள் வறுபட்ட கடலை...வெளியே வைத்து ரூம் டெம்பரேச்சருக்கு ஆறிய பின்னர் கலந்துவிட்டு, மீண்டும் 2 நிமிடங்கள் வைக்கவேண்டும். 
அதே போல ஆறவிட்டு, கலந்துவிட்டு மீண்டும் 2 நிமிடங்கள்.. 
நன்றாக ஆறிய பிறகு, சுவை பார்த்துக்கொண்டு விரும்பினால் மீண்டும் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்து ஆறவைத்தால், 
சுவையான வறுத்த கடலை ரெடி..
குறிப்பு 
இது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு..ச்சீ,ச்சீ...ஆர்ட்டிஸ்ட்களுக்கு வசதியான மெத்தட்..மைரோவேவ்-ல இரண்டு நிமிஷம் முடிந்ததை மறந்தே போய் சிலமணி நேரங்கள் விட்டாலும் பாதகமில்லை...ஆடி அசைந்து 2 நாட்கள் நிதானமாக வறுத்தாலும் ஓகேதான்.. ஸ்டவ் பக்கத்திலேயே நின்னுகிட்டு கறுகாமப் பாத்து பாத்து வறுக்கும் டென்ஷன் இல்ல.. Oven- ல ரோஸ்ட் பண்ணியும் எடுக்கலாம் என்றாலும், நம்ம கவனக்குறைவா அவரை (oven) கவனிக்காமல் விட்டா மைக்ரோவேவ் மாதிரி அமைதியா இல்லாம, கடலையைக் கறுக்கி, கத்தி, புகை வரவச்சுன்னு ரெம்ப வேலை குடுப்பார்..ஸோ, மைக்ரோவேவ் இஸ் ஈஸி யு ஸீ!! ;) :) :D :D

Monday, June 5, 2017

வெஜிடபிள் பஃப்ஸ்

தேவையான பொருட்கள் 
பஃப் பேஸ்ட்ரி ஷீட் - 1 
உருளைக்கிழங்கு -1
கேரட் -1
பீன்ஸ் - 7
பச்சைப்பட்டாணி - 1கைப்பிடி 
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
இஞ்சி-பூண்டு விழுது -1டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - கொஞ்சம்
சீரகம் - 1/2டீஸ்பூன்
தக்காளி, சிறியதாக -1
மிளகாய்ப்பொடி - 1/2டீஸ்பூன்
கறிமசாலா பொடி - 1டீஸ்பூன் 
கரம் மசாலா பொடி -1/4டீஸ்பூன்
சர்க்கரை -1/2டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை 
பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு மணி நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
கேரட்-பீன்ஸ் இவற்றை கழுவி, பொடியாக நறுக்கி, மைக்ரோவேவ்-ல் வேகவைத்து வைக்கவும். (நான் பச்சைப்பட்டாணி சேர்க்கவில்லை, சேர்ப்பதாக இருந்தால் கேரட் பீன்ஸ் முக்கால் பதம் வெந்ததும் பட்டாணியையும் சேர்த்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ்-ல் வைத்து எடுத்துக்கொள்ளவும்)
வெங்காயம்- பச்சைமிளகாய் -தக்காளியை பொடியாக நறுக்கிவைக்கவும். இஞ்சி பூண்டை தட்டிக்கொள்ளவும். 

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து  சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், கறி மசாலாதூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். 
பொடிகள் பச்சை வாசம் போனதும், மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த காய்கறிகள் (நீரை வடித்துவிட்டு) சேர்த்து கிளறவும். மசாலாவுடன் காய்கள் கலந்ததும் கரம் மசாலா பொடி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். 

அவன்(oven) - ஐ 400F அளவுக்கு ப்ரீஹீட் செய்யவும். அறை வெப்பநிலைக்கு வந்திருக்கும் பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை மாவு தூவி இன்னும் கொஞ்சம் பெரியதாக தேய்த்துக்கொண்டு 9 துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். [இங்கே நான் யூஸ் செய்திருப்பது Pepperidge form puff pastry sheet ]. 

நறுக்கிய சதுரங்களில் கொஞ்சமாக மசாலா வைத்து, ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டவும். அலுமினியம் ஃபாயில் விரித்த பேக்கிங் டிரேயில் ஒட்டிய பஃப்ஸ்களை அடுக்கவும். இதற்குள்ளாக அவன் ப்ரீஹீட் ஆகி தயாராக இருக்கும். தட்டில் அடுக்கிய பஃப்ஸ்கள் மீது சிறிது பால் அல்லது தண்ணீரை  (முட்டை சாப்பிடுவீங்கனா ஒரு முட்டைய உடைத்து சிறிது நீர் கலந்து நன்றாக கலக்கி அதை..) சீராகப் பூசிவிட்டு அவன் - ல் வைக்கவும். 
சுமார் 20 நிமிடங்கள் பேக் செய்து பஃப்ஸ்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். 16 நிமிடங்களுக்குப் பிறகு அவன் -ஐ கவனித்து தேவைப்பட்டால் பேக்கிங் டிரே-யை திருப்பி வைக்கவும். பஃப்ஸ்கள் எல்லாம் ஒரே நிறமாக வெந்ததும் அவன் -ல் இருந்து வெளியே எடுத்து சூடான டீ அல்லது காஃபியுடன் பரிமாறவும்.
குறிப்பு 
பஃப்ஸ்-களை இன்ன வடிவில்தான் ஒட்ட வேண்டும் என்ற வரையறை இல்லை...விருப்பமான வடிவத்தில் ஒட்டுங்க..கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம், மசாலா வைத்து பஃப்ஸ்கள ஒட்டும்போது மசாலா வெளியே வராதபடி ஒட்டவேண்டும். இல்லையெனில் பஃப்ஸ் பேக் ஆகும்போது மசாலா வெளியே எட்டிப்பார்த்து கருகிவிடும். :) 
அதே போல, மசாலா கொஞ்சம் காரமாக செய்தால் நன்றாக இருக்கும், பஃப்ஸ் பேக் ஆகி, அந்த லேயர்களுடன் சாப்பிடுகையில் காரம் சரியாகிவிடும்!! ;) 

Monday, April 11, 2016

மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்
பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 1/2கப் 
எண்ணெய் - பொரிக்க 
நறுக்கிய வெங்காயம் - 2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - கொஞ்சம் 
எலுமிச்சை சாறு - அரை எலுமிச்சம் பழத்திலிருந்து. 

செய்முறை
பஜ்ஜி மாவுக்கு தேவையான தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
மிளகாய்களை கழுவி, துடைத்துவிட்டு நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். சில மிளகாய்கள் காரம் இல்லாமல் இருக்கும், சிலது நல்ல காரமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைப்போர் மிளகாய் விதைகளை நீக்கிக்கொள்ளவும். :)
எண்ணெய் காயவைத்து நறுக்கிய மிளகாய்களை பஜ்ஜி மாவில் துவட்டி எண்ணையிலிட்டு பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரிந்ததும் பேப்பர் டவலில் எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை (என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை), எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
பஜ்ஜிகள் மீது வெங்காயக் கலவையப் பரப்பி பரிமாறவும்.
சுவையான பஜ்ஜி + சூடான டீ!! மழை பெய்யும் மாலை நேரத்துக்கு சரியான ஜோடி!! :)
குறிப்பு 
பஜ்ஜி மிக்ஸ் இல்லையெனில் கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, உப்பு சேர்த்து கலக்கி உபயோகிக்கலாம். 

Friday, June 26, 2015

ராகி வடை/ ராகி பக்கோடா/ ராய் வடை

தேவையான பொருட்கள்
ராகி மாவு-1கப்
வேர்க்கடலை பொடித்தது-1/4 கப் 
முருங்கைக் கீரை -1 கைப்பிடி
பொடியாக நறுக்கிய வெங்காயம்-3டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
உப்பு
தண்ணீர் - சுமார் 1/2கப் 
எண்ணெய்- பொரிக்க 

செய்முறை 
வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து ராகி மாவுடன் சேர்க்கவும்.
 மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்த முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து..
 நன்றாக கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். நான் சுமார் அரைக்கப் தண்ணீர் சேர்த்தேன்.
 எண்ணெய் காயவைத்து ராகி மாவை சிறு வடைகளாகப் போட்டுப்  பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் வடியவைத்து சூடாக காப்பி அல்லது டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
 ராகி மாவு மட்டும் சேர்த்தும் செய்கையில் கொஞ்சம் கடுகடுப்பாக வரும்.  அதற்காகத்தான் வேர்க்கடலைப் பொடித்து சேர்ப்பது..வேர்க்கடலைக்குப் பதிலாக பொட்டுக்கடலையும் சேர்க்கலாம். கீரை சேர்க்காமலும் செய்யலாம்.
 செய்து சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்க. நன்றி!

Tuesday, April 7, 2015

வெண்ணை முறுக்கு / Butter Murukku

எங்க வீட்டுப்பக்கம் முறுக்கு என்றால் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அரைத்து, பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்வதுதான் வழக்கம். இங்கே கடையில் கிடைக்கும் அரிசிமாவை உபயோகித்தும் எப்பொழுதாவது செய்வேன். இந்த முறையில் பொ.கடலை மாவுடன் வெண்ணெயும், கூடவே காய்ச்சிய எண்ணெயும் சேர்ப்பதால் முறுக்கு சும்மா வாயில போட்டா கரைஞ்சு வயித்துக்குள்ள நழுவிரும்! :) ;) செய்து பார்த்து சொல்லுங்க! 
செய்முறை
அரிசிமாவு-2 கப் 
பொட்டுக்கடலை-சுமார் 3/4கப் (மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்)
மிளகாய்த்தூள்-2டீஸ்பூன் (விரும்பினால்)
எள்ளு-1டேபிள்ஸ்பூன்
ஓமம்-1டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4டீஸ்பூன்
வெண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
உப்பு 
எண்ணெய்

செய்முறை
வெண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.  எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் அகலமான பாத்திரத்தில் எடுத்து கைகளால் நன்றாக கலந்துகொள்ளவும்.
 ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடாக்கி மாவில் ஊற்றவும்.
 கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். [2 கப் அரிசிமாவுக்கு ஒரு கப்பிற்கும் கொஞ்சம் அதிகமாகத் தண்ணீர் பிடித்தது.]
 பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்துவிடவும்.
 எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் முறுக்கை எடுத்து பேப்பர் டவலில் எண்ணெய் வடிய விடவும்.
 சுவையான முறுக்கு தயார். 

Friday, November 1, 2013

மல்டிக்ரெய்ன் முறுக்கு & தீபாவளி வாழ்த்துக்கள்

கடலைபருப்பு-உளுந்துபருப்பு-பொட்டுக்கடலை முறுக்கு 
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி(அ) புழுங்கல் அரிசி-3 டம்ளர்
கடலைப்பருப்பு-1/2டம்ளர்
உளுந்துப்பருப்பு-1/2டம்ளர்
பொட்டுக்கடலை-1/2டம்ளர்
வெள்ளை எள்-2டேபிள்ஸ்பூன்
ஓமம்-2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்
சூடான எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா-2 சிட்டிகை
உப்பு
எண்ணெய்-பொரிக்க  
செய்முறை
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பை வெறும் வாணலியில் வாசம் வர வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடித்து சலிக்கவும்.
பொட்டுக்கடலையையும் பொடித்து சலித்துக் கொள்ளவும். 
இட்லி அரிசியை 2-3 முறை களைந்து இரண்டு மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூளையும் அரிசிமாவுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரிசி மாவுடன் பொடித்த பருப்பு வகைகள், பொட்டுக்கடலை மாவு, எள்ளு, ஓமம், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சமாகத் தெளித்து முறுக்கு மாவைப் பிசையவும்.
2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை நன்றாக சூடாக்கி மாவுடன் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

முறுக்கு பொரிக்கத் தேவையான எண்ணெயைக் காயவைக்கவும்.
முறுக்கு மாவை முறுக்குப் பிடியில் எடுத்து வட்டமாகப் பிழிந்து, காய்ந்த எண்ணெயில் கவனமாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான மணமான கரகர மொறுமொறு முறுக்குகள் தயார். 
அரிசியை ஊறவைத்து, பருப்புக்கள் வறுத்து, பொடித்து சலிக்க நேரமில்லையா? இதோ, சுலபமாகச் செய்யக்கூடிய மைதா முறுக்கு...
~~~
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்! 

Thursday, October 31, 2013

அவல் மிக்ஸர் (டயட் வர்ஷன்)

இந்த மிக்ஸர் சுடச்சுடச் செய்து ஈவினிங் டீ-யுடன் கொறிக்க சரியான ஜோடி! இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மிகக் குறைந்த அளவில் செய்த பேஸிக்  ரெசிப்பி. இதனுடன் உங்கள் விருப்பப்படி வேர்க்கடலை-முந்திரி-திராட்சை-கறிவேப்பிலை-பூண்டு இவற்றையும் சேர்த்து செய்யலாம். மிளகுத்தூளுக்குப் பதில் மிளகாய்த்தூள்-பெருங்காயமும் சேர்க்கலாம். ஷாலோ ஃப்ரை செய்வதற்கு பதிலாக டீஃப் ஃப்ரையும் செய்துகொள்ளலாம். உங்கள் தேவை மற்றும் வசதிப்படி செய்து ருசித்துப் பாருங்க. :)
தேவையான பொருட்கள்
கெட்டி அவல்-1/2கப்
பொட்டுக் கடலை-1டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2டீஸ்பூன்
செய்முறை
மிதமான தீயில், கடாயில் எண்ணெய் காயவைத்து அவலைச் சேர்த்து வறுக்கவும்.
அவல் கருகாமல் பொரியும் வரை கவனமாக கை விடாமல் கிளறிவிட்டு வறுக்கவும்.
 அவல் மொறுமொறுப்பாக பொரிந்ததும் பொட்டுக்கடலை சேர்க்கவும். [வேர்க்கடலை-முந்திரி-கறிவேப்பிலை சேர்ப்பதாக இருந்தால் இந்நிலையில் சேர்த்துக்கொள்ளவும்]
 மிளகுத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும். [மிளகாய்த்தூள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்க்கலாம்.]
எல்லாப் பொருட்களும் நன்றாக கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
நிறையச் செய்து காற்று புகாத டப்பாக்களில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். நினைத்த நேரம் குற்ற உணர்ச்சி இல்லாமல் கொறிக்க ஒரு கறுக் மொறுக் ஸ்னாக்ஸ் இது. ரெசிப்பி கர்ட்டஸி என் மாமியார். படமெடுத்தது மட்டுமே நான்! :) 

Tuesday, July 30, 2013

Dahi-Papdi Chaat/ தஹி-பப்டி சாட்

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி "அடி பின்னீட்டீங்க, நன்றி!" என நன்றி சொன்னேன், இப்போது ஐந்தே மாதங்களில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லும் தருணம் வந்துவிட்டது. ஆமாம், ஞாயிறு இரவு ப்ளாக் ஹிட்ஸ் நான்கு லட்சத்தை கடந்துவிட்டது! :))) கவனமாக உட்கார்ந்து கவனித்தும் அந்த "4,00,000" என்ற எண்ணைக் கேமராவில் பதிக்க முடியவில்லை! ஹிஹ்ஹிஹி...
தினசரியோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ என் வலைப்பூவுக்கு வந்து என் மொக்கையை, சமையல் குறிப்புகளை, புகைப்படங்களை ரசித்துச் செல்லும் அனைவருக்கும் என் இனிய நன்றிகள்! 2 லட்சம், 3 லட்சம் என்பதெல்லாம் வெறும் எண்களே என்றாலும், ஆர்வம் குறையாமல் வலைப்பூவை நான் ஆக்டிவ்-ஆக வைத்திருக்க உதவும் கிரியா ஊக்கிகள் அவை என்றால் அது மிகையாகாது. இதனை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி அனைவருக்கும்! தஹி-பப்டி சாட் எடுத்துக்கோங்க! :) 
வட இந்திய "சாட் ஐட்டங்கள்" செய்து பல நாட்கள், இல்லையில்லை, வருஷங்களே ஆகிவிட்டது. அவ்வப்போது வெளியே உணவகங்களுக்குச் செல்கையில் சாப்பிடுவதோடு நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வீட்டில் செய்யவேண்டும் என நினைத்து நினைத்து ஒருவழியாக செய்தும் ஆச்சு!  இந்த முறை (சிறு)பூரி (கோல் கப்பா) செய்வதற்கு பதிலாக பப்டி செய்தேன். செய்முறையைப் பார்க்கலாம் வாங்க. 

பப்டி- தேவையான பொருட்கள்
மைதா-11/2கப்
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
ஓமம்-1/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் +1 டேபிள்ஸ்பூன்
உப்பு 

செய்முறை
மாவு, உப்பு, ஓமம் இவற்றுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து விரல்களால் நன்றாக கலந்துகொள்ளவும். 
தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். 
பிசைந்த மாவை அரைமணி நேரம் காற்று புகாமல் மூடி வைக்கவும்.
நான்கு சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
முள்கரண்டியால் சப்பாத்தியின் எல்லா இடங்களிலும் குத்திவிட்டு, பிஸ்ஸா கட்டர் அல்லது கத்தியால் துண்டுகள் போடவும்.
[துண்டுகள் போடுவதற்கு பதில்,  குக்கீ கட்டர்/பாட்டில் மூடியால் வட்டமாக வெட்டியும் எடுக்கலாம், ஆனால் அப்படி செய்கையில், வட்டம் தவிர மீதி சப்பாத்தி மீதியாகும், அதை மறுபடி எடுத்து தேய்த்து மறுபடி சிறு வட்டம் வெட்டி...என வேலை கொஞ்சம் நீளும்! ;) உங்க வசதிப்படி செய்துக்கலாம்! :)]

மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து நறுக்கிய பப்டி-களைப் பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் வடியவிட்டு காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். இவை வாரம் -பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

ஸ்வீட் சட்னி- க்ரீன் சட்னிகளும் மொத்தமாகச் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், அவையும் வாரம் -பத்துநாட்கள் தாங்கும்.
ஸ்வீட் சட்னி - தேவையான பொருட்கள்
பேரீட்சை பழம் - 6
உலர் திராட்சை-10
கெட்டியான புளிக்கரைசல்-1/4கப்
வெல்லத்தூள் அல்லது சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள்-1/2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு 

செய்முறை
அனைத்துப் பொருட்களுடன் 11/2 அல்லது 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரெஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும். 
ப்ரெஷ்ஷர் அடங்கி, ஆறியதும் குக்கரைத் திறந்து சட்னியை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். 
ஸ்வீட் சட்னி தயார்.
~~~
க்ரீன் சட்னி - தேவையான பொருட்கள் 
புதினா-1/2கப்
கொத்துமல்லி இலைகள் -1/2கப்
பச்சைமிளகாய்-3 [அல்லது காரத்துக்கேற்ப]
சீரகம்-1/2டீஸ்பூன்
புளி - சிறிது
உப்பு
எலுமிச்சை சாறு- அரைப் பழத்தில் இருந்து 

செய்முறை
எலுமிச்சைச் சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் மைய அரைக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும். 
க்ரீன் சட்னி தயார்.
~~~
தஹி-பப்டி சாட் - தேவையான பொருட்கள் 
பப்டி - தேவையான அளவு [ஒரு ப்ளேட்டுக்கு 6 அல்லது 7 பப்டி சரியாக இருக்கும்.]
தயிர்-1/2கப் 
வேகவைத்த கொண்டைக்கடலை 
வேகவைத்த உருளைக் கிழங்கு [இங்கே சேர்க்கப்படவில்லை! ;)]
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய தக்காளி
நறுக்கிய கொத்துமல்லித் தழை
ஸ்வீட் சட்னி
க்ரீன் சட்னி  

செய்முறை
தயிருடன் கொஞ்சம் தண்ணீர், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்துகொண்டு, மேலாக ஒரு சிட்டிகை மிளகாய்ப்பொடி தூவி வைக்கவும். 

சாட்-ஐட்டங்களில் தட்டில் இந்த ஆர்டரில்தான் பொருட்களை வைத்து சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை எல்லாம் இல்லை. அவரவர் விருப்பப்படி தேவையான பொருட்களை தட்டில் வைத்து வெளுத்துக் கட்டலாம்! ;) 
இங்கே நாங்கள் தட்டில் முதலில் பப்டி-ஐ வைத்து, வெங்காயம்-தக்காளி தூவி, கொண்டைக் கடலை நாலைந்து தூவி, இனிப்பு-பச்சை சட்னிகளைக் கொஞ்சம் தெளித்து,  மேலாக தயிர் விட்டு,  கடைசியாக கொத்துமல்லி இலை தூவி இருக்கிறோம். [ஆமாங்க, பேஸிக் ப்ரிப்பரேஷன் பை மீ, ப்ரசென்டேஷன் பை என்னவர்! ;) ]
நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருட்களை வைத்து சாப்பிடலாம். முதலில் தட்டில் வைக்க வேண்டியது பப்டி-யை! அதை மட்டும் மாத்திராதீங்க, தட்ஸ் ஆல்! :)

நம்ம இப்படி கலர் கலரா காரசாரமாச் சாப்பிடுறோம். ஆர்வமாகப் பார்க்கும் எங்க வீட்டுக் குட்டிப்பையனுக்கும் எதாவது குடுக்கணுமில்ல?! 

சட்னிகள் இல்லாமல், கொஞ்சம் பப்டி, தயிர், கொண்டைக்கடலை, தக்காளி -- இது ஜீனோவுக்கு! அவருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு தஹி-பப்டி! ;)

உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பா செய்து சுவைத்துப் பாருங்க.
அனைவருக்கும் மீண்டுமொருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!

LinkWithin

Related Posts with Thumbnails