Tuesday, September 25, 2012

பல்லாங்குழி..தாயம்..பரமபதம்! :)

 இவை எல்லாமே நாம் சிறு வயதில் விளையாடி இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்துவரும் விளையாட்டுக்கள்! சிலநாட்கள் முன் என் தோழி வீட்டிற்குச் சென்றபோது அங்கே இருந்த பல்லாங்குழியும், தாயக் கட்டையும், குட்டீஸ்-களிடம் இருந்து கடன் வாங்கிய பரமபத-கட்டமும் ஒரு ஞாயிற்று கிழமையை மனப் பேழையில் சேமித்துக் கொள்ளும் வகையில் இனிய நினைவுகளாக ஆக்கிவிட்டன.  விளையாடிக் கொண்டே கொறிக்க வேக வைத்த கடலைக் காயும், சோளக் கருதுகளும் சூப்பராக ஜோடி சேர்ந்து கொண்டது கட்டாயம் நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! ஹாஹா!

எங்க வீட்டில் இருந்த பல்லாங்குழி மீன் வடிவில் இருக்கும், அழகாக வளைந்த இரு மீன்கள். [இப்போது எங்கயோ..ஓ..ஓ ஒரு பெட்டிக்குள் பத்திரமா இருக்குன்னு அம்மா சொல்றாங்க. ;)]
இங்கே படத்தில்  இருப்பதும் மீன் வடிவ பல்லாங்குழிகள்தான். ஆனால் இவை straight -ஆன மீன்கள். நாங்கள் புளியங் கொட்டைகளை வைத்துத்தான் விளையாடுவோம், தோழி வீட்டில் திருச்செந்தூரில் வாங்கிய வெள்ளைச் சோழிகள் வைத்திருந்தாங்க.

இது ஈரோடு ஸ்டைல் விளையாட்டு...எல்லாக் குழிகளிலும் ஆறு-ஆறு சோழிகளாகப் போட்டு ஆன்டி -க்ளாக்வைஸ் டைரக்ஷனில் விளையாடுவது. :) ஆட்டத்தின் விதிமுறைகள் எனக்கே சரியாக விளங்கவில்லை..அதனால், இதுக்கு மேல எதுவும் டவுட்டு கேட்டுராதீங்க என்று அட்வான்சா சொல்லிக்கறேன்! :)




எங்க வீட்டுப் பக்கம் விளையாடுவது ஒவ்வொரு புறமும், நடுவில் ஒரு குழியை விட்டுவிட்டு, மற்ற  குழிகள்ல   பன்னிரண்டு காய்கள் போட்டு கிளாக்-வைஸ் டைரக்ஷனில் விளையாடுவது. காலியாக இருக்கும் குழியின் பெயர் "காசிக் குழி"...அதில் பொதுவாக காய்கள் சேர்ந்து கொண்டே இருக்கும், ஆட்டத்தில் இடையில் யாரவது ஒரு ஆள் "காசி அடித்தால்" (விளையாடிக் கொண்டே வருகையில் காசிக் குழியின் இடப்பக்க குழி காலியாக இருக்கும் போது விளையாடுபவரின் கையிலும் காய் இல்லை என்றால், காலிக் குழியைத் தொடச்சு, காசிக் குழி-யை அடிச்சுக்கலாம்! :) ) அந்த ஆட்டம் முடிந்தால் காசிக் குழி அவருக்குச் சொந்தம் ஆகி விடும்.


இந்த இடத்தில் நீங்க ஒரு டவுட்டு கேக்கோணும், கேக்கலைன்னா, நான் சொல்றது உங்களுக்குப் புரிலைன்னு அர்த்தம்! :) விளையாடும் ஆட்கள் ரெண்டு பேரும் ஒரே காசி அடிச்சிட்டா என்ன பண்ணுவது -அப்படின்னு நீங்க கேக்கலை..அதுக்காக நான் சொல்லாம இருக்க முடியுமா? ;)
குழியில் இருக்கும் மொத்த சோழிகளையும் ரெண்டா பங்கிக்க வேண்டியதுதேன்! ;) அப்புறம்,காலியான  குழிகளில் ஆறு சோழிகள் சேர்ந்தா அதன் பெயர் "பசு", அதை நாமே எடுத்துக்கலாம்!....சரி,சரி..இந்தாங்க, பஞ்சு..dual பர்ப்பஸ்!! காதில் வடியும் ரத்தத்தை துடைச்சுக்கலாம்,அல்லது காதையே அடைச்சுக்கலாம்..சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! ;)

பல்லாங்குழி-யை நாங்க பேச்சு வழக்கில் "பாண்டிங்குழி"-ன்னு சொல்லுவோம். கோடை விடுமுறையில் ஆட்கள் நிறைய பேர் இருந்தா நாலு பேர் சேர்ந்து விளையாடுவதும் உண்டு. ஆளுக்கு மூணு-மூணு குழிகள்..ஆட்டம் விறுவிறுப்பா போகும். :) தனியே ஒரு ஆள் மட்டும் விளையாடும் ஆட்டமும் உண்டு. அதன் பெயர் "சீதைப் பாண்டி". அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை தனியே விளையாடிய விளையாட்டு, அதனால் இந்தப் பெயர் என்று சொல்வாங்க.

ஒகே...ரொம்ப மொக்கை போட்டாச்சு இன்னிக்கு, இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்! தாயம் விளையாட தாயக்கட்டம் ரெடியாகிட்டே இருக்கு...,


அதையும் பரபதம் ஆடுவதையும் அடுத்த பதிவில் பார்ப்போம். டென்ஷன் ஆகாம இந்த இனிப்பை சாப்பிட்டுக்கோங்க..
 

Tuesday, September 18, 2012

கிக் கிக் கீ...கிக்கீ...கீ!

இன்று நீங்கள் சந்திக்கப் போகும் நபர் - கோயமுத்தூரில் வசிக்கும் ஒரு அழகான கிளி!!
..
...
..... வெயிட்
...வெயிட், "மகி-யைத் தான் எங்களுக்கு பலநாளாத் தெரியுமே"ன்னு நீங்க சொல்வது எனக்கு கேட்குது, நன்றி, நன்றி! ஹிஹி!! ;) ;) :) ஆனா இன்று வந்திருப்பவர் நிஜமாலுமே அழகான ஒரு பச்சைக் கிளிங்க. கொய்யாப் பழம் சாப்பிடுவது எப்படின்னு உங்க எல்லாருக்கும் சொல்லித் தரப் போறாராம்.

வீட்டுக் கொல்லையில் இருக்கும் கொய்யா மரத்தில் பழங்களை ருசிக்க கிளிகள் வரும் என்று அம்மா சொல்லியிருந்தார்கள். மொட்டை மாடியில் காற்று வாங்கப்போனபோது எதிர்பாராத ஒரு நாளின் காலையில் "கிக் கிக் கீ.." கேட்டது. எட்டிப் பார்த்தால் கொய்யாக் கிளையில் ஊஞ்சல் ஆடியவாறு அமர்ந்திருந்தார் இந்தக் கிளியார்.

சட்டென்று கீழே வந்து காமெராவுடன் மாடிக்குச் சென்று ஆசை தீருமட்டும் போட்டோவும் வீடியோவும் எடுத்த பின்னர் கிளியார் பறந்துவிட்டார்.

ஹலோ, எக்ஸ்கியூஸ்மீ கிளி, கொஞ்சம் முகத்தைக் காட்டுங்க... :)

கழுத்தில் மாலை( அந்த வட்ட வடிவக் கோடாம்!) இருந்தால் அது மாலைக் கிளி, மாலையில்லாமல் ப்ளெய்ன் ஆக இருந்தால் அது தென்னங் கிளி என்று ஒரு நட்பூ புதுத் தகவலும் தந்தார். ஆனால் நான் பார்த்தவரை கிளிகள் எல்லாம் கழுத்தில் மாலையுடன் இருந்ததாகத்தான் நினைவு. இந்தக் கிளியாரும் மாலைக் கிளியார்தான். ஆசை ஆசையாக அவர் கொய்யாவை ருசித்ததைக் கண்டதும், நானும் எட்டிப் பார்த்தேன், இன்னுமொரு பழம் கண்ணில் பட்டது..

சட்டென்று இறங்கி வந்து...
ஒன்றுக்கு நான்காக கொய்யாப் பழங்கள் பறிச்சாச்சு. :)
.கிளி ரேஞ்சுக்கு, கொய்யாக் கிளையில் ஒற்றைக் காலில் அமர்ந்து ஒய்யார ஊஞ்சல் ஆடியபடியே பாதிப் பழத்தை ருசித்து, மீதிப் பழத்தை கீழே துப்பியபடி ஸ்டைலாக சாப்பிட்டீங்கன்னாலும் சரி, அல்லது சாதாரணமாச் சாப்டீங்கன்னாலும் சரி, என்ஜாய்!



~~

ஹேப்பி பர்த்டே டு ஆனைமுகன்..அவர் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் அன்பான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


Thursday, September 13, 2012

அஞ்சறைப் பெட்டி..

விஜயலட்சுமி என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.."உங்களைப் பற்றிய ஏழு விஷயங்கள் சொல்லவும் / கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் பதில் அளிக்கவும்" - இந்த ரீதியில் தொடர் பதிவு இருந்திருந்தால் நைசா எஸ்கேப் ஆகியிருப்பேன், ஆனால் இந்தத் தொடர்பதிவு "உங்க அஞ்சறைப் பெட்டியை படமெடுத்து போடுங்க" என்று சொன்னதாலும், அதிர்ஷ்ட வசமாக கோவை கிளம்பும் முன் என் அஞ்சறைப் பெட்டியை தோழி ஒருவருக்கு காட்டுவதற்காக எடுத்த படங்கள் கைவசம் இருந்ததாலும் தொடர்ந்துவிட்டேன்! :)

பேரென்னவோ அஞ்சு அறை பெட்டி என்றாலும், இதில் பெரும்பாலும் ஏழு அறைகள்தான் இருக்கும்.(அது ஏன் என்று தெரிந்தவர்கள் அரைப் பக்கத்துக்கு மிகாமல் கமெண்ட்டவும். ;)) எங்கூருப் பக்கம் இதனை "செலவுப் பொட்டி" என்று சொல்வது வழக்கம். இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் செலவுப் பொட்டிகள், கண்ணாடி போட்ட செலவுப் பொட்டிகள் என்று பலவிதமாகப் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

முன்பொருமுறை ஊருக்கு வந்தபொழுது, பாத்திரக் கடைக்கு குக்கர் வாங்க போயிருந்தோம். அப்போது என்னவர்தான் அஞ்சறைப் பெட்டி வாங்கிக்கோ- என்று சொல்லி வாங்கி தந்தார், எனக்கு வாங்க வேண்டும் என்று ஸ்ட்ரைக் ஆகவே இல்லை.ஹிஹி!

ஸோ...இதாங்க ஏன் அஞ்சறைப் பெட்டி..நடுநாயகமா கடுகு, சுற்றியுள்ள 6 கிண்ணங்களிலும் .பருப்பு, .பருப்பு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் இவ்வளவுதான் வைச்சிருக்கேன். உங்க வசதிப்படி விரும்பிய சாமான்கள் வைச்சுக்கலாம். :)

~~~~
ஆப்பிளில் வந்த ஆப்பிள்!!!
கொஞ்ச நாள் முன்பு ஒரு ஆப்பிள் கட்டர் வாங்கினேன். அதை வைச்சு ஆப்பிள் கட் செய்ய முயன்ற பொழுது ஏமாற்றமே கிடைத்தது. ஒரு ஆப்பிள் கூட என்னால் நறுக்க முடியவில்லை. கிச்சனில் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தேன். அதனைத் தேடித் பிடித்த என்னவர் என்னுடன் டெலிபோனில் "என்னதிது?" என்று கேட்டவாறே அசால்ட்டா ஆப்பிளை கட் பண்ணிவிட்டார். அவ்வ்வ்வ்!

கட் பண்ணியதும் பூ மாதிரியே கட் பண்ணியிருக்கு என்று ஆப்பிள் கட்டருக்கு ஒரு புகழாரம் வேறு சூட்டினார். என்னால் நம்பவே முடியாமல், அதை போட்டோ எடுத்து அனுப்புங்க என்றேன், "நீ கேட்பாய் என்று எனக்கு தெரியும், அதான் -போன்- படமெடுத்து அனுப்பியிருக்கிறேன் என்றார். நீங்களும் பார்க்கட்டுமே என்று அந்தப் படங்கள்..

~~~
வாக்கிங் போகையில் ஒரு நாள் அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார்கள். தைரியமா:) போய், "ஒரு கரும்பு குடுங்களேன்?" என்று ரிக்வஸ்ட் பண்ணினேன், தோட்டத்துக்கார் பாத்தா டேஞ்சர் என்று சொன்னாலும் ஒரு கரும்பை ரெண்டா வெட்டி தந்தாங்க. ;) ஆசை தீர கரும்பு தின்னாச்சு! :) :)
~~~
கோவை ஏர்போர்ட்-லிருந்து வீட்டுக்கு வரும் வழியிலேயே அங்கங்கே ப்ப்ப்ப்பளீர் வண்ணங்களில் வீடுகள் கண்ணில் அடித்தன. வாஸ்து கலர் என்ற பெயரில் இதுவரை நான் கற்பனை கூட செய்திருக்காத வர்ணங்களில் வீடுகளுக்கு பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.
ஒருவேளை, விற்காத கலர்களை எல்லாம் வாஸ்து பேரைச் சொல்லி இப்படி வித்துடராங்களோ?! இப்புடித்தான நம்ம யோசிப்போம்? ...அவ்வ்வ்வ்! ;) ;)
ஆனால் படத்தில் இருக்க ப்ளூ கலர் சூரியனுக்கு உகந்த வண்ணம் என்ற தகவல் கிடைத்தது. அப்ப பக்கத்தால இருக்க பீட்ரூட் கலர் எந்த "கிரகத்துக்கு" உகந்தது?! தெரிந்த ஆட்கள் சொல்லுங்களேன்! ;)

~~~
அஞ்சறைப் பெட்டியில் அஞ்சாவது ஒரு விஷயம் சொல்லணும்னு பக்கத்து வீட்டு கத்தரிக்காய் செடி.. :)

கிடைக்கும் நேரத்தில் அட்ஜஸ்ட் செய்து பதிவுகள் போடுகிறேன், மற்றபடி நண்பர்கள் வலைப்பூக்களுக்கு வர முடியவில்லை, அதை மனதில் கொள்ளாது கருத்துக்கள் தரும் நட்புக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)

Tuesday, September 4, 2012

எங்க ஊர் சந்தை..

சந்தைக்கு போலாம் வாங்க- என்று சிலமாதங்களின் முன்பு ஒரு பதிவு வெளியிட்டபொழுது, கோவை சந்தையை எதிர்பார்த்து ஏமாந்து போன நட்புக்களுக்காக எங்களூரின் இந்த வார சந்தையின் சில காட்சிகள், இந்தப் பதிவில்!

கோவை வந்து இரண்டு திங்கட் கிழமைகளை தவறவிட்டு, இந்த வாரமும் இருள் கவியும் மாலை நேரத்தில்தான் சந்தைக்குச் செல்ல நேரம் கூடி வந்தது. சூரியன் மேற்கில் இறங்கும் வரை கிடைத்த வெளிச்சத்தில் எடுத்த சில படங்கள் இவை.

ப்ளாஷ் அடிக்கும்போது ஒரு நொடி பக்கென்று பயந்து, பிறகு காமராவை கவனித்து கண்டுக்காம:) சென்ற பொது ஜனங்கள் பல பேர்!

எதுக்கு போட்டோ எடுக்கறீங்க? என்று என்னிடமும், உடன் வந்த அக்காவிடமும் கேட்டு தெளிவு:) பெற்று, இதழில் நெளியும் புன்னகையுடன்
சென்ற பொதுஜனங்கள் சிலபேர்!

சந்தையில் பல கடைகளில் காய்கள் சிறு சிறு பகுதிகளாக பிரித்து விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. இப்படி விற்பதற்கு "கூறு" கட்டி விற்பது என்று சொல்வார்கள்.
ஒரு கூறு ஐந்து ரூபாய், சில காய்கள் ஒரு கூறு பத்து ரூபாய். இதையெல்லாம் நன்றாக பாத்து வாங்கவேண்டும். சொத்தை காய்களை நைசாக உள்ளே வைத்து, மேலாக நல்லா காய்களை வைத்து நம் தலையில் கட்டப் பார்ப்பார்கள்! :)

விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கும் தக்காளிகள்..

பொழுது சாயும் வேளை என்பதால் சந்தையில் அலைமோதும் கூட்டம், கீரை வகைகள், கறிவேப்பிலை-கொத்துமல்லி-புதினா விற்கும் கடைகள், ஊசி பாசிக் காரர்களின் கடைகள், மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகள் என்று ஜே-ஜே ன்னு இருந்த சந்தையை என் திருப்திக்கு படமெடுக்க இயலாமல் வானம் இருள் கம்பளம் கவிழ்த்து மறைத்துக் கொண்டது.

சந்தைன்னா முதலில் நினைவு வருவது பொரிதான். பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல, பொரிக்கடையில் மனிதக் கூட்டம்! பொரி போட்டு தரும் பிளாஸ்டிக் கவர் தரம் குறைவாக இருப்பது காரணமாக எதோ சர்ச்சை இருக்கிறது போலும். போட்டோ எடுத்ததும் ஜெர்க் ஆன பொரிக்கடைக்காரர் அப்புறமா "போட்டோ எடுத்து என்னை போலீஸ்-ல பிடிச்சு குடுக்கப் போறீங்களா மேடம்?" - என்று காமெடி பண்ண ஆரம்பித்தார்.ஹாஹா! :)

பொரியுடன் கலந்து சாப்பிட நிலக் கடலை, பொட்டுக் கடலை, பூந்தி, மிக்சர் என்று ஒரு மினி ஸ்நாக் பார் வைத்திருந்தார் பொரிக்கடையில்.

கீழே உள்ள படத்தில் பொரிக்கு இந்தப் பக்கம் இருப்பது "வர்க்கி". கர கர மொறு மொறு என்று ஜூப்பரா இருக்கும். பல்லில்லாத பாட்டிகள் கூட டீயில் நனைத்து வாயில் போட்டால் நழுவிக் கொண்டு வயித்துக்குள்ள போயிரும்! :)

சந்தையில் சுத்தியடிச்ச களைப்புத் தீர பொரியும் வர்க்கியும் சாப்பிடுங்க. இந்த வர்க்கிக்கு ரெசிப்பி பல நாட்களாக இணையத்தில் தேடுகிறேன், கிடைக்கவில்லை. யாருக்கும் கிடைத்தால் சொல்லுங்களேன், நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails