உலகம் சுருங்குதே..உனக்குள் அடங்குதே..!
நாளென்ன கோளென்ன தெரியவில்லை..
தேதியென்ன கிழமையென்ன கவனமில்லை!
தொட்டித்தோட்டம் என்னானது? யார் கண்டார்?
என் நாலுகால்பிள்ளை சாப்பிட்டானா..வாக் போனானா? எவர் கண்டார்? .
வலைப்பூவில் தினசரி வருகையெப்படி?
தினந்தோறும் உலவும் வலையுலகம்
வழக்கப்படிதான் சுற்றுகிறதா? நினைக்கவும் நேரமில்லை!
பால் வாங்கணுமா..கறிகாய் வேணுமா..நீங்களே பாருங்க.
இரவெது பகலெது புரியவில்லை..
நீ உறங்கும் நேரமெல்லாம் பகலானாலும்,
நீ விழித்திருக்கும் இரவுமெனக்குப் பகலே!
ஆகமொத்தம், என் உலகம் சுருங்கி,
உன் சின்ன உருவத்துள் அடங்கிவிட்டதடி!
முகையான நீ மெல்ல மெல்ல மொட்டாகி,
மலருகையில் நம்முலகும் மலருமடி!
அப்போது உன் விரல் பற்றியபடி வலையில்
உலா வருவோம் பழையபடி!
இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாங்கள் நன்றி கூற ஒரு மிகப்பெரிய பரிசு கிடைத்து இரண்டு வாரமாகிறது! சின்னப் பெண்ணின் சின்னச் சின்னச் சிரிப்புகளிலும், செல்ல அழுகையிலும், ஏன் ஒவ்வொரு அசைவிலும் என் இதயம் கசிந்து நன்றி நவில்கிறேன் ஆண்டவனுக்கு!
ஹேப்பி தேங்க்ஸ்கிவிங் எவ்ரிபடி!
முன்போல என் பதிவுக்கு வரும் கருத்துக்களுக்கு நன்றி கூறவோ, மற்ற வலைப்பூக்களுக்கு வந்து கருத்துச் சொல்லவோ நேரமில்லை, இயலவில்லை! ஆனால் நட்பூக்களின் வலைப்பூக்களை கையிலிருக்கும் தொலைபேசி மூலம் பார்த்துக்கொண்டும் படித்துக்கொண்டும்தானிருக்கிறேன். மகியின் கருத்துக்களைக் காணோம் என யாரும் மனம் வருந்த வேண்டாம்!(கொஞ்சம் ஓஓஓஒவரா இருக்கோ? ;) அடக்கி வாசிக்கிறேன் இனி! ;) :))
எங்களை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய இனிய நன்றிகள்!