சிலபல மாதங்கள் முன் கடையில் வாங்கிவந்த ஸ்ப்ரிங் ஆனியனின் வேர்களைத் தொட்டியில் நட்டு வளர்ப்பதைப் பற்றி இங்கே எழுதியிருந்தேன். அந்த வெங்காயத்தாள்களை ஒரு முறை (வேரை விட்டுவிட்டு) நறுக்கி சமைத்தேன். பிறகு நேரமில்லாமல் அப்படியே விட்டிருந்தேன்.
இப்போது ஊருக்குப் போய்விட்டு வந்த போது ஒரு தொட்டியில் இருந்த வெ.தாள்கள் ரொம்பவே போஷாக்காக:) வளரத்துவங்கின.
பறித்து சமைப்போம் என பசுமையான தாள்களை மட்டிலும் (வேரை விட்டுவிட்டு) நறுக்கி எடுத்தேன்..
நறுக்கும்போது தெரியவில்லை, உள்ளே கொணர்ந்து கழுவி எடுத்ததும் ஒரே முறையில் சமைத்து தீர்க்க முடியாது எனத்தோன்றியதால் இரண்டு ரெசிப்பிகள் உருவெடுத்து உங்களைக் காண வருகின்றன.வெங்காயத்தாள் பருப்பு ( step-by-step படங்களுடன் ஆங்கிலத்தில் ரெசிப்பி இங்கே)
தேவையான பொருட்கள்
வேகவைத்த பாசிப்பருப்பு (1/4 கப் பாசிப்பருப்பை தேவையான தண்ணீர் விட்டு குழைய வேகவைத்துக்கொள்ளவும்)
நறுக்கிய வெங்காயத்தாள்-1/2கப்
சீரகம்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
வர மிளகாய்-3
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
உப்பு
நெய்-1டீஸ்பூன்
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து, பச்சைமிளகாய்-வரமிளகாய் சேர்க்கவும். சில விநாடிகளின் பின்னர் நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குறைந்த தீயில் ஓரிரு நிமிடம் வதக்கவும்.
வெந்து மசித்த பருப்பினைச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி நெய்யை மேலாகச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
~~~
வெ.தாள்-முட்டை பொரியல் (இந்தப் பொரியலில் முட்டைக்கு பதிலாக தேங்காய்த் துருவல் சேர்த்தும் செய்யலாம். அதற்கான குறிப்பு ஆங்கிலத்தில் இங்கே)தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் -1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்-4 (காரத்துக்கேற்ப)
சுத்தம் செய்து நறுக்கிய வெ.தாள்-1கப்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு- தலா 1/2டீஸ்பூன்
முட்டை -1
உப்பு
எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.