Thursday, November 19, 2015

கோயா குலாப் ஜாமூன்(Khoya Gulaab Jamoon)

தேவையான பொருட்கள் 
இனிப்பில்லாத பால்கோவா/கோயா/மாவா - 200கிராம் 
மைதா மாவு -1/4கப் 
ஆப்ப சோடா/ பேக்கிங் சோடா - 2சிட்டிகை 
பால் -1/4கப்
சர்க்கரை - 11/4கப்
தண்ணீர் - 11/4கப் 
ஏலக்காய்-2 
எண்ணெய் - பொரிக்க 

செய்முறை 
கோயா-வை 3-4 மணி நேரங்கள் முன்பாகவே ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும். அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் அதனை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். 
நான் காய்துருவியால் கோயாவை துருவி இருக்கிறேன். 

துருவிய கோயாவுடன் பேக்கிங் சோடா, மைதா மாவு சேர்க்கவும்.
கைகளால் நன்றாக பொடித்துவிட்டுக் கொண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் தெளித்து பிசையவும்.
அழுத்திப் பிசையத் தேவையில்லை.. விரல்களால் மென்மையாக பிசிறி விட்டு மாவு ஒன்றாக சேர்த்து வந்ததும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்-ஆக இருக்கும்படி உருட்டிவைக்கவும்.
மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து குலாப் ஜாமூன்களை பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சர்க்கரைப் பாகுக்கு :-
11/4 கப் சர்க்கையுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..பாகு கொதி வர ஆரம்பித்த 5 நிமிடங்களில் இறக்கி வைக்கவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

பாகும் சற்று சூடாக இருக்கவேண்டும், ஜாமூன்களும் சற்றே சூடாக இருக்கவேண்டும். ஜாமூன்களை சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவிடவும்.
இரண்டு மூன்று மணி நேரங்கள் ஊறியதும் சுவையான குலாப்ஜாமூன் ரெடி.

Wednesday, November 4, 2015

ஆப்பம் - தேங்காய்ப்பால்

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1கப்
புழுங்கலரிசி -1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பழைய சாதம் - 1/4 கப்
தேங்காய்த் தண்ணீர் 

செய்முறை
மறுநாள் ஆப்பத்துக்கு அரைக்க சில முன்னேற்பாடுகள் : 
அரிசிகள், வெந்தயம், உளுந்து இவற்றை நன்றாக 2-3 முறை அலசி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
தேங்காய் வாங்கி வைத்துக்கொள்ளவும். :)

1.காலையில் அரிசிகளை தண்ணீர் வடித்துவைக்கவும். 
2.பழைய சாதத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கவும்.
3.தேங்காயை உடைத்து கவனமாக தண்ணீரை எடுக்கவும்.அதனை வடித்து வைத்துக்கொள்ளவும்.
4.அரிசி, பழைய சாதம் இவற்றை கிரைண்டரில் போட்டு தேங்காய்த்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். [சில தேங்காய்களில் தண்ணீர் குறைவாக இருக்கும், அப்படியாயின், தேங்காய்த்தண்ணீருக்குப் பிறகு தேவையான தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். நான் வாங்கிய தேங்காயில் நிறையத் தண்ணீர் இருந்தது. மாவரைத்தது போகவும் மீதமானது! :)]
5. மாவு நைஸாக அரைபட்டதும் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
6. சுமார் 8-10 மணி நேரங்கள் புளித்ததும் மாவு நன்றாக பொங்கி மேலே வந்திருக்கும்.

தேவையான அளவு மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும். தோசை மாவை விடவும் கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும்.
ஆப்பச்சட்டி அல்லது குழிவான தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றி, ஆப்பச்சட்டி/தோசைக்கல்லை சுழற்றி மாவு வட்டமாக பரவச் செய்யவும். மூடி போட்டு வேக விடவும்.
ஆப்பம் வெந்ததும் கல்லை விட்டு எழும்பி வரும். சூடான ஆப்பத்தை தேங்காய்ப்பால் மற்றும் விருப்பமான சட்னி- குருமா- ஸ்டூவுடன் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் (ஷார்ட் கட்)
தேவையான பொருட்கள்
பசும்பால் - 1 கப்
தேங்காய்ப்பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் 
சர்க்கரை - சுமார் 1/4கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய் - 2 
செய்முறை
பாலை காய்ச்சவும்.
பால் பொங்கி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து சர்க்கரை மற்றும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும்.
சர்க்கரை கரைந்து சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, பொடித்த ஏலக்காயைச் சேர்க்கவும். 

குறிப்பு 
தேங்காய்த் தண்ணீர் சேர்த்து அரைத்தால் அருமையாக இருக்கும், கிடைக்காத பட்சத்தில் டெஸிகேடட் தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தும் அரைக்கலாம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை! :) 
நேரமும் வசதியும் பொறுமையுமிருப்பவர்கள் தேங்காயை அரைத்தே பால் எடுத்து சர்க்கரை ஏலக்காய் சேர்க்கலாம். :) 
பழைய சாதம் சேர்க்காமல் செய்தால் ஆப்பம் வறண்டு போன மாதிரி இருக்கும், அதனால் கண்டிப்பாக சோறு சேர்க்கவேண்டும். 

Friday, October 30, 2015

முளைகட்டிய பச்சைப்பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்
முளை கட்டிய பச்சைப்பயறு -1/4கப்
உருளை கிழங்கு (சிறியது) -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
பூண்டு - 5 பற்கள்
புளிக்கரைசல் -1/4கப்
வத்தக்குழம்பு பொடி - 11/2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்துமல்லித் தழை -கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க 
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
தக்காளி (சிறியதாக) -2

செய்முறை 
1.பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மூடி வைக்கவும். 8 -10 மணி நேரங்களில் பயிறு முளைத்துவிடும்.
2.முளைத்த பயறை தேவையான தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3. பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். 
4.வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய உருளைக் கிழங்கு, வத்தக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

5.சிறிது தண்ணீர் சேர்த்து கிழங்கை வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
6. தேங்காய் தக்காளியை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.  
7.  குழம்பு நன்கு கொதித்து புளியின் பச்சை வாடை போனதும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
8. வேகவைத்த பயிறை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும் 1டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து,  கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான முளைப்பயிறு குழம்பு ரெடி. சாதம், இட்லி தோசை எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.

குறிப்பு
தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள்(6-வது ஸ்டெப்பில் உள்ள) தேங்காய்க்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த முளைப்பயிறை தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
உருளைக்கிழங்குடன் கத்தரிக்காயும் சேர்க்கலாம். கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
வத்தக்குழம்பு பொடி இல்லையென்றால் மிளகாய்த்தூள்+மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம். 

Sunday, October 25, 2015

நரி முகத்தில முழிச்சிருக்கீங்களா? :)


என்னங்க...ஏடா கூடமா டைட்டில் வச்சிருக்கனே பாக்கிறீங்களா? வேற என்னத்தச் செய்ய?! சும்மா கம்பு தோசையும், சட்னியும் , குழம்புமாவே ப்ளாகில எழுத போரடிக்குதுல்ல? அதனால என்னைய அடிச்ச போர உங்களுக்கும் அடிக்க வைக்கலாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில தலைப்ப வச்சுப்புட்டேன். ஹிஹிஹி...

தலைப்புக்கேத்த மாதிரி என்ன செய்யலாம்னு சோஃபால உட்கார்ந்து யோசிச்சதில சமீப காலமா எங்க ஏரியாவுக்கு வருகை தரும் விசிட்டர்ஸை உங்களுக்கும் அறிமுகப்படுதலாம்னு பல்பு எரிஞ்சுது.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஊரின் ஓரம் என்பதால், வீட்டிற்கடுத்த படியாக மலைச்சரிவுகளும், ஒரு அவகாடோ தோட்டமும், காட்டுப்பகுதியுமாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது  "கயோட்டி" என்னும் மிருகம் எட்டிப்பார்ப்பதும்,  காட்டிற்குள் இருந்து இரவு நேரங்களில் சத்தமிடுவதுமாக இருக்கும். இங்கிருந்த 5 வருடங்களில், பலமுறை அவற்றின் சிரிப்பை (ஆமாங்க..அவை சத்தமிடுவது மனிதர் சிரிப்பதைப் போலவே இருக்கும்...அவ்வ்வ்வ்வ்)  நான் ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாகவே வீட்டெதிரே இருக்கும் சிறு குன்றின் சரிவிற்கப்பாலிருந்து ஒரு சில "கயோட்டி"-கள் குன்றின் மேலே ஏறி நடை பழக ஆரம்பித்திருக்கின்றன.

தனியாகவும், ஜோடியாவும், குடும்பத்தினருடனும் என்று மாலை மயங்கும் நேரங்களில் இவர்களது வருகை இருக்கும். ஜீனோ அவற்றை கண்டுகொண்டு "வள்..வள்..வள்ள்ள்ள்ள்" என்று வரவேற்பு கொடுப்பார். அவர்களுக்கு மனிதர் மற்ற விலங்குகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நிதானமாக நின்று ஒரு லுக்கு விடுவார்கள். அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று "எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ! :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான்? " என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.

இப்படியாக இருந்தது..ஒரு வார இறுதியில் மாலை 3.30-4 மணி இருக்கும், காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருக்கையில் வெளியே வந்த என்னவர், "ஏய்..அங்கே பார்" என எக்ஸைட்டட் ஆக சின்னக் குரலில் கத்த...எட்டிப் பார்த்தால்...

வீட்டெதிரே இருக்கும் பார்க்கிங் லாட்டில் கார்களுக்கப்பால் ஹாயாக ஒருவர் மேய்ந்து(!!?) கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல "யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்?" என்று அசால்டாக சிறிது நேரம் பார்த்துவிட்டு, நிதானமாக ரோட்டில் இறங்கி நடந்து சென்று மறைந்தார்.
யார்ரா அது...நம்மளை போட்டோ புடிக்கிறது??
போட்டோ தான? புடிச்சாப் புடிக்கட்டும்...நமக்கென்ன? 
சரி..அப்படியே மேலே ஏறிப் போயிரலாமா?
இல்ல...கீழ இறங்கலாம்...
ஆச ஆசையாப் படம் புடிக்கறாங்க...அயகா:) ஒரு போஸ் குடுப்பம்..!!
ஓகே..கிளம்புறன்!
என்னய்யா இது? நடக்குறதையும் விடாமப் படம் புடிக்கிறாய்ங்க? நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க? ஹ்ம்ம்ம்ம்....
ஸ்பீட் லிமிட்டு 5 மைலாம்..கி கி கி!! நாங்கள்லாம் ஆரு? எங்களுக்கெல்லாம் நோ லிமிட்!! 
வந்ததுக்கு சாப்புட ஏதும் கிடைக்கலன்னாலும் நல்லாப் போஸ் குடுத்தாச்சு...வர்ட்டா?? பய்..பய்ய்ய்ய்ய்!! 
:))) 

பி.கு. இந்த கயோட்டிகள் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகுந்து குப்பைத்தொட்டிகளை ஆராய்ந்து உணவைத்தேடும் நிலைமைக்கு வந்துவிட்டன. மனிதர்கள்,  வளர்ப்புப் பிராணிகளையும் தாக்க வாய்ப்புண்டு..நாய்கள், பூனைகளை அடித்துத் தின்னும் என்றும் சொல்கிறார்கள். மேலதிக தகவலுக்கு விக்கிபீடியா லிங்க் இங்கே...(Coyote)

Friday, October 16, 2015

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை - 1 கொத்து 
சோம்பு - 1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2 (அ) பெரிய வெங்காயம் - சிறு துண்டு
புளி 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
எண்ணெய் காயவைத்து வரமிளகாய், கறிவேப்பிலை, சோம்பை வதக்கி எடுத்துக்கொள்ளவும். மிளகாயும் சோம்பும் விரைவில் பொரிந்துவிடும், கருகாமல் வறுக்கவேண்டும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாக பொரியும் வரை வதக்கி எடுத்து ஆறவைக்கவும். 
ஆறியதும் அவற்றுடன் வெங்காயம் , புளி, உப்பு  சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.
எல்லாம் நன்றாக இடிபட்டதும்,
தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
ஸ்பூனால் நன்றாக கிளறி கலக்கிவிடவும்.
எல்லாம் ஒன்றாக கலக்கும் வரை இடித்து எடுத்தால்,
இடி சம்பல் அல்லது இடிச்ச சம்பல் தயார். தேங்காய்ப் பூ சேர்த்த பிறகு நிறைய நேரம் இடிக்கக் கூடாது, தேங்காய் எண்ணெய் விட்டுவிடும். அதனால் கவனமாக இடிக்கவும்.

இலங்கை ரெசிப்பியான இது இட்லி, புட்டு, தோசை, தேங்காய்ப்பூ ரொட்டி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் வகைகளுடனும் நன்றாக இருந்தது. சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த ரெசிப்பியைக் கொடுத்த அம்முலு மற்றும் அதிராவுக்கு என் நன்றிகள்!

Wednesday, October 7, 2015

கம்பு தோசை

தேவையான பொருட்கள்
கம்பு மாவு -2 கப்
உளுந்து - 1/2கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக
உப்பு

செய்முறை
ரெடிமேட் கம்பு மாவு(தான்) இங்கே கிடைக்கிறது. அதனை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

உளுந்துப் பருப்பை நன்கு அலசி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். கடைசி அரை மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நலம். :)  
ஊறிய உளுந்தை மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் கம்பு மாவு மற்றும் தேவையான உப்புச் சேர்த்து அரைக்கவும்.
கம்பு மாவு சேர்த்ததும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் மிக்ஸியை ஓடவிட்டால் கட்டிகளில்லாமல் மாவு கலந்துவிடும்.
வேறு பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
நான் கொஞ்சம் லேட்டா பாத்ததால மாவு பொங்ங்ங்ங்ங்....கி கீழ வழியட்டுமா? என்ற நிலையில் இருந்தது. கரெக்ட்டாப் புடிச்சட்டமுல்ல...ஹிஹி..ஃபோட்டோவத்தான்!! ;) :)
கம்பு தோசை மாவுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைக்கல்லை மூடி வைத்து...
எடுத்தால் தோசைகள் சூப்பராக வரும். காரசாரமான சட்னியுடன் பரிமாறவும்.  படத்திலிருக்கும் சட்னியின் லிங்க் இங்கே.  
பி.கு. இந்த கம்பு தோசையின் முன்னோடி ராகி தோசை..ஆமாங்க!! அறுசுவை.காம் -தளத்தில் பகிரப்பட்டிருந்த ராகி தோசையை முயற்சித்து பார்த்ததில் நன்றாக இருந்தது. அடுத்த முறை கடைக்குப் போயிருக்கையில் கம்பு மாவு கண்ணில் படவும் வாங்கிவந்து கம்பு தோசை சுட்டுப் பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்ததால் கம்புதோசை முதலில் கடைக்கு வந்துருச்சு...சாப்புட்டுப் பார்த்து எப்புடி இருந்துச்சுன்னு சொல்லீட்டுப் போங்க...நன்றி!  

Wednesday, September 30, 2015

கொசுறு..


என்னதான் நூத்துக்கணக்கில பணத்தைக் கொடுத்து கறிகாய் வாங்கினாலும், கடேசியா கொசுறு-ன்னு ஒரு கொத்து கறிவேப்பிலை-கொத்துமல்லித் தழை வாங்கறது ஒரு தனி சந்தோஷம்தான்..நீங்க என்ன சொல்றீங்க?? "...க்க்க்கும், இதெல்லாம் ஒரு சந்தோஷம்..இதப்பத்தி படிக்க வேற வேணுமா?" என்று கேட்பவர்கள், அப்படியே இந்த ப்ரவுஸர் விண்டோவை சாத்திவிட்டு உருப்படியான வேறு வேலைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ;) 
.........
-------------
***************
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
############
@@@@@@@@@@@
~~~~~~~~
--------------------
.........................................................................
......................................
................
...---
+++++++++++++
--------
..........
..
..
.......
..
என்னது...இன்னும் படிச்சிட்டிருக்கீங்களா?? அப்பச்சரி..ஸ்டார்ட் மீசிக்!!! :))))) 


திடீருன்னு ஒரு ஞாயித்துக்கிழம காலங்காத்தால எந்திரிச்சு காப்பி குடிச்சவுடனே மண்டைக்குள்ள ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பளீஈஈஈர்-நு ஒரு பல்ப் எரியும்..இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? இல்லன்னா பரவால்ல, இன்னும் நிறைய ஞாயித்துக்கிழம வரும். நல்ல காப்பியாக் குடிச்சுப்போட்டு வெயிட் பண்ணுங்க. இப்படியான ஒரு ஞாயித்துக்கிழமயில்  "ஃபார்மர்ஸ் மார்க்கட்" போலாம் என்று பல்ப் எரிய, உடனே குட்டீஸை எல்லாம் தூக்கி காரில போட்டுகிட்டு எட்டேகால் மணிக்கெல்லாம் மார்க்கெட் போயிட்டோம். அங்கே போனா இத விட இன்னுங்கொஞ்சம் பெரிய பல்பு எங்களுக்குக் காத்திருந்தது.
;)

மார்க்கட் ஆல்மோஸ்ட் காலி...சிலர் அப்பத்தான் வந்து கடைகளுக்குப் பந்தக்கால் நட்டுகிட்டு இருந்தாங்க..என்னங்க டைமிங்? அப்படின்னு ஒரு கடைக்காரர் கிட்ட கேட்டா இப்படியும் சில தூங்காமாறிகள்-ங்கற லுக்கை குடுத்துப்புட்டு 10-2 அப்படின்னு பதிலச் சொன்னாரு.   வந்தது வந்தாச்சு...சும்மா (காலியாக் கிடக்கிற இடத்தை) ஒரு ரவுண்டு வரலாமேன்னு போனம். ஒரு காய்கறிக்கடை ஆல்மோஸ்ட் எல்லாக் காயும் எடுத்து வைச்சிருந்தாங்க..எல்லாம் நமக்கு வேண்டிய காய்கள்..அள்ளிகிட்டாச்சு..
கோங்குரா கீரை, வெண்டைக்கா, பச்சைக் கடலைக்காய், பச்சைக் கத்தரி, ரெகுலர் கத்தரி, பேபி ஆனியன் (அதென்ன பேபின்னு தெரீலைங்க..பேரு ஃபேன்ஸியா இருந்ததால 5 எடுத்துகிட்டேன்...ஹிஹி..), சுரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் இப்படி நமக்குத் தேவையான காய்கள் எல்லாமே ஒரே கடைல கிடைச்சது. கூடவே தர்பூசணி, கேண்டலூப் பழங்களும் அங்கயே வாங்கிகிட்டோம். மொத போணிங்கறதால தர்பூசணி கட் பண்ணி எங்க 3 பேருக்கும் (ஜீனோ டஸிண்ட் ஆல்வேஸ் ஈட் வாட்டர்மெலன் யு ஸி...சில அரிய சந்தர்ப்பங்களில அய்யா அதுவும் சாப்பிடுவாராக்கும்!!) குடுத்தாங்க. :)  மற்ற பழ வகைகளும் பக்கத்துக் கடைல வாங்கிட்டு கம்பி நீட்டிட்டோம். 
வெகுநாட்கள் கழிச்சு கிடைச்ச பச்சைக் கடலய கழுவி, உப்பு சேர்த்து,
குக்கரில வேகவைத்து....ஆவலோடு சாப்பிட உரிச்சா...
கடலை ஒண்ணொண்ணும் சும்மா காம்ப்ளான் குடிச்ச மாதிரி புஷ்டியா, பெருசா இருந்தது. சுவையும் நம்ம ஊர் கடலை மாதிரி அவ்ளோ சுவை இல்லை..பட் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி மனசைத் தேத்திகிட்டுச் சாப்பிட்டாச்சு.
அடுத்த முறை போனபோது பூசணிக்காய் வாங்கியாந்தேன்..நல்ல சுவை! இந்தியன் ஸ்டோரில் வாங்கும் காயை விட சீக்கிரமா வெந்துவிட்டது, சுவையும் அருமை!
இவை சந்தை அருகே எடுத்த படங்கள்..வானமும் மலைத்தொடரும் புல்வெளியுமாக கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களாக இருந்ததால் இங்கே சேர்த்துட்டேன்.
இப்படியாக சிலபல வாரங்கள் போனோம்..அந்தக் காய்க்கடைக்காரங்க நல்ல நட்பாகிட்டாங்க. "பாப்பா தூங்கிட்டு இருக்காளா? நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க....
உங்க பப்பி(!!) இன்னிக்கு வரலியா?
எப்ப ஸ்பினாச் கீரை கொண்டுவருவீங்க?
பாகற்காய் கொடிய பிஞ்சோட கட் பண்ணி வைச்சிருக்கீங்களே..இதை என்ன செய்து சாப்பிடுவாங்க? இது என்ன இலைதழை? ..."
அப்படினெல்லாம் அரட்டையடிச்சுகிட்டே காய்-கனிகள் வாங்கி வருவது வழக்கமானது.

கடந்த வாரம் போனபோது 2 அடி வளர்ந்த கொத்துமல்லி மரத்தை(!?!) கட்டுக்கட்டா விற்பனைக்கு வைச்சிருந்தாங்க..இது ஏன் இவ்ளோ பெரிசு இருக்கு? நல்ல மணம் இருக்குமா என்றெல்லாம் கேட்டாலும் அதை வாங்க என்னவோ தயக்கம். மத்த காய்கள் எல்லாம் வாங்கிட்டு, எடை போடப் போட அவர் குத்துமதிப்பாக கணக்குப் போட்டு $14 என்றார். [நிச்சயம் அதை விட அதிக மதிப்பில்தான் காய்கள் எடுத்திருந்தேன்] காயெல்லாம் பையில் போடப்போட, டக்கென்று ரெண்டு துண்டு இஞ்சியையும் ஒரு கட்டு கொத்துமல்லியையும் பையில் போட்டுவிட்டார். கொசுறுங்கோ...கொசுறு!! :)))
வீட்டுக்கு வந்து மரக்கட்டை எடுத்து படமும் எடுத்துவிட்டு, ஒரு சந்தேகத்துடனே இலைகளை எடுத்தேன்..ஆச்சரியமூட்டும் வகையில் நல்ல மணமாகவும் சுவையுடனும் இருந்தது. சும்மா கொடுத்தது சுவையாகவும் இருக்கவும்..கேட்கவும் வேண்டுமா? பலநாள் கழித்து இங்ஙன ஒரு மொக்கையத் தேத்தியாச்சு. ;)

பி.கு. வரும் அக்டோபர் மாதம் ஃபார்மர்ஸ் மார்க்கட் லேது...கால்பந்து விலையாட்டுக்காக மைதானத்தை உபயோகிக்கப் போறாங்களாம்..இனி நவம்பர்ல மறுபடியும் சந்தைக்குப் போலாம். நீங்களும் வாறீங்களா? :)


LinkWithin

Related Posts with Thumbnails