Thursday, November 19, 2015

கோயா குலாப் ஜாமூன்(Khoya Gulaab Jamoon)

தேவையான பொருட்கள் 
இனிப்பில்லாத பால்கோவா/கோயா/மாவா - 200கிராம் 
மைதா மாவு -1/4கப் 
ஆப்ப சோடா/ பேக்கிங் சோடா - 2சிட்டிகை 
பால் -1/4கப்
சர்க்கரை - 11/4கப்
தண்ணீர் - 11/4கப் 
ஏலக்காய்-2 
எண்ணெய் - பொரிக்க 

செய்முறை 
கோயா-வை 3-4 மணி நேரங்கள் முன்பாகவே ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும். அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் அதனை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். 
நான் காய்துருவியால் கோயாவை துருவி இருக்கிறேன். 

துருவிய கோயாவுடன் பேக்கிங் சோடா, மைதா மாவு சேர்க்கவும்.
கைகளால் நன்றாக பொடித்துவிட்டுக் கொண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் தெளித்து பிசையவும்.
அழுத்திப் பிசையத் தேவையில்லை.. விரல்களால் மென்மையாக பிசிறி விட்டு மாவு ஒன்றாக சேர்த்து வந்ததும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்-ஆக இருக்கும்படி உருட்டிவைக்கவும்.
மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து குலாப் ஜாமூன்களை பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சர்க்கரைப் பாகுக்கு :-
11/4 கப் சர்க்கையுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..பாகு கொதி வர ஆரம்பித்த 5 நிமிடங்களில் இறக்கி வைக்கவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

பாகும் சற்று சூடாக இருக்கவேண்டும், ஜாமூன்களும் சற்றே சூடாக இருக்கவேண்டும். ஜாமூன்களை சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவிடவும்.
இரண்டு மூன்று மணி நேரங்கள் ஊறியதும் சுவையான குலாப்ஜாமூன் ரெடி.

Wednesday, November 4, 2015

ஆப்பம் - தேங்காய்ப்பால்

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1கப்
புழுங்கலரிசி -1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பழைய சாதம் - 1/4 கப்
தேங்காய்த் தண்ணீர் 

செய்முறை
மறுநாள் ஆப்பத்துக்கு அரைக்க சில முன்னேற்பாடுகள் : 
அரிசிகள், வெந்தயம், உளுந்து இவற்றை நன்றாக 2-3 முறை அலசி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
தேங்காய் வாங்கி வைத்துக்கொள்ளவும். :)

1.காலையில் அரிசிகளை தண்ணீர் வடித்துவைக்கவும். 
2.பழைய சாதத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கவும்.
3.தேங்காயை உடைத்து கவனமாக தண்ணீரை எடுக்கவும்.அதனை வடித்து வைத்துக்கொள்ளவும்.
4.அரிசி, பழைய சாதம் இவற்றை கிரைண்டரில் போட்டு தேங்காய்த்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். [சில தேங்காய்களில் தண்ணீர் குறைவாக இருக்கும், அப்படியாயின், தேங்காய்த்தண்ணீருக்குப் பிறகு தேவையான தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். நான் வாங்கிய தேங்காயில் நிறையத் தண்ணீர் இருந்தது. மாவரைத்தது போகவும் மீதமானது! :)]
5. மாவு நைஸாக அரைபட்டதும் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
6. சுமார் 8-10 மணி நேரங்கள் புளித்ததும் மாவு நன்றாக பொங்கி மேலே வந்திருக்கும்.

தேவையான அளவு மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும். தோசை மாவை விடவும் கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும்.
ஆப்பச்சட்டி அல்லது குழிவான தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றி, ஆப்பச்சட்டி/தோசைக்கல்லை சுழற்றி மாவு வட்டமாக பரவச் செய்யவும். மூடி போட்டு வேக விடவும்.
ஆப்பம் வெந்ததும் கல்லை விட்டு எழும்பி வரும். சூடான ஆப்பத்தை தேங்காய்ப்பால் மற்றும் விருப்பமான சட்னி- குருமா- ஸ்டூவுடன் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் (ஷார்ட் கட்)
தேவையான பொருட்கள்
பசும்பால் - 1 கப்
தேங்காய்ப்பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் 
சர்க்கரை - சுமார் 1/4கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய் - 2 
செய்முறை
பாலை காய்ச்சவும்.
பால் பொங்கி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து சர்க்கரை மற்றும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும்.
சர்க்கரை கரைந்து சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, பொடித்த ஏலக்காயைச் சேர்க்கவும். 

குறிப்பு 
தேங்காய்த் தண்ணீர் சேர்த்து அரைத்தால் அருமையாக இருக்கும், கிடைக்காத பட்சத்தில் டெஸிகேடட் தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தும் அரைக்கலாம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை! :) 
நேரமும் வசதியும் பொறுமையுமிருப்பவர்கள் தேங்காயை அரைத்தே பால் எடுத்து சர்க்கரை ஏலக்காய் சேர்க்கலாம். :) 
பழைய சாதம் சேர்க்காமல் செய்தால் ஆப்பம் வறண்டு போன மாதிரி இருக்கும், அதனால் கண்டிப்பாக சோறு சேர்க்கவேண்டும். 

LinkWithin

Related Posts with Thumbnails