Sunday, March 27, 2016

ஈஸ்டர் 2016

ஈஸ்டர் - ஏசு பிரான் உயிர்தெழுந்த திருநாள். இங்கே ஈஸ்டருக்கு "எக் ஹண்ட்" மிக பிரபலம். "முட்டை" உயிர்த்தெழுதலின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. ப்ளாஸ்டிக் முட்டைகளுக்குள் குழந்தைகளுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள், சிறு பொம்மைகளை வைத்து ஆங்காங்கே ஒளித்து வைக்கப்படுகிறது. குழந்தைகள் கூடைகளுடன் சென்று முட்டைகளைச் சேகரிப்பார்கள். பொதுவாக சாக்லேட் அதிகளவு உபயோகிக்கப்படுகிறது. முட்டைவடிவிலேயே சாக்லெட்ஸ் தயாரித்து விற்கிறார்கள், அல்லது ப்ளாஸ்டிக் முட்டைகளுக்குள் அவை வைக்கப்படுகின்றன.  மேலும் தகவலறிய இங்கே கைய வைங்க! :) 

எங்க வீட்டு குட்டிப்பெண்ணுக்கு இந்த சர்ப்ரைஸ் எக்'ஸ் மிகப் பிடிக்கும் என்பதால், இந்த வருஷம் ஈஸ்டர் எக் ஹண்ட்-க்கு போகலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், பக்கத்தில் ஒரு எக் ஹண்ட் நடப்பது தெரியவர, நாங்களும் முட்டைகளைத் தயார் செய்துகொண்டு, முட்டை வேட்டைக்கு போய்வந்தோம்.  குழந்தைகளுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் உணவுப்பொருட்கள் பிரச்சனையாகும் என்பதால் உணவுப்பொருட்களை ஸ்டஃப் செய்யவேண்டாம் என சொல்லியிருந்தார்கள். இணையத்தை நாடியதில், உணவுப்பொருட்கள் அல்லாத சிறு பொருட்கள் பற்றி ஒரு ஐடியா கிடைத்தது. 

கலர்ஃபுல் ப்ளாஸ்டிக் முட்டைகள், உள்ளே வைக்க பலூன்கள், குட்டி பந்துகள், டைனோஸர்கள், ஸ்டிக்கர், க்ளோ ஸ்டிக், எரேஸர் என எனக்குப் பிடித்த (!!) குட்டிப் பொருட்களை வாங்கிவந்தேன்..அடுத்து ஒவ்வொரு முட்டையிலும் குட்டீஸுக்கு ஆச்சரியங்களை ஸ்டஃப் செய்யும் வேலை...
ஒவ்வொரு முட்டையினுள்ளும் 2-3 குட்டிப் பொருட்களை நிறைத்து முட்டைகள் தயார். 
அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றோம். ஏழெட்டு குழந்தைகள், அனைவர் வீட்டிலிருந்தும் இப்படியான சர்ப்ரைஸ் முட்டைகளைக் கொணர்ந்து பூங்காவினுள்ளே ஒளித்து வைத்தாயிற்று. [ஒளிப்பதுன்னா, ரொம்பவெல்லாம் ஒளிக்கிறதில்லைங்க, குழந்தைங்க கண்டுபுடிக்கிற மாதிரி சும்மானாச்சுக்கு ஒளிச்சு வைச்சாச்சு.] எல்லாக் குட்டீஸும் வந்து, முட்டைகள் ஒளிக்கப்பட்டதும் துவங்கியது முட்டை வேட்டை!! :))) 
சற்றே பெரிய குழந்தைகள் சுறுசுறுப்பாக முட்டைகளைப் பொறுக்கி சேர்த்துவிட்டனர். ஒரு குட்டியர் வேட்டையாடிய முட்டைகள்..
லயாவும் நானுமாகச் சேர்ந்து கொஞ்சம் முட்டைகள் சேகரித்தோம். அதிலொன்று "தங்க முட்டை" :))) அது என்ன ஸ்பெஷல்னு கடைசில சொல்றேன். 

முட்டை வேட்டை முடிந்ததும் ஒரு சிறப்பு விருந்தினர் வந்தார். பெயர் Mr. Muffin !! நாலே மாதங்களான குட்டி முயலார்!!
கூட்டத்தைக் கண்டதும் மிஸ்டர் மஃபின் கொஞ்சம் பயக்க, அவரைக் கண்ட குட்டீஸ் கொஞ்சம் பயக்க என சற்று நேரம் கடந்தது. ஃபோட்டோஷூட் எல்லாம் ஓரளவு முடிந்ததும், முயலார் பூங்காவினுள் சற்று நேரம் உலாவினார். மஃபினும், அவரது உரிமையாளரும் அடுத்து வரும் படத்தில்.
இவைதான் லயா சேகரித்த முட்டைகள். தங்க முட்டையை திருப்பி வாங்கிகொண்டார்கள்! ;) :)

அந்த தங்க முட்டை விவகாரம்...!! :) ஸ்பெஷலாக 3 தங்க முட்டைகளை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஒளித்திருந்தார்கள். அதைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு கிஃப்ட் கார்ட் கிடைத்தது. வரும் வழியில் காப்பியை வாங்கி குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். 

வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் எக்ஸ்-ஐ திறந்து பார்த்த போது...

பலூன்கள், சிறிய ரப்பர் முயல், டாட்டூ, ஜெல்லி பீன்ஸ் என இருந்தன. :))) மொத்தத்தில் நல்லதொரு அனுபவம்.  ;) :) 

Tuesday, March 22, 2016

ராகி சேமியா

ராகி சேவை, கோதுமை சேவை, தக்காளி சேவை, கம்பு சேவை என தமிழகத்தில் விதவிதமாக கிடைத்தாலும், இங்கே ராகி "சேமியா" கிடைத்தது இதுவே முதல் முறை.  மேகி நூடுல்ஸ் இருக்கும் பக்கம் இந்த "அணிலாரை"ப் பார்ததும் வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டேன். இப்படியான சேமியாவை நான் (மட்டுமே) செய்வது முதல்முறை. ஊரில் அம்மாவோ அக்காவோ செய்வார்கள், பக்கத்தில் நின்று பார்த்ததோடு சரி. கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், ஆனா அவ்வளவு கடினமில்லை..சூப்பரா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 2கப் 
வெங்காயம்- பாதி
பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய் -1 
தக்காளி -1
கடுகு -1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
உளுந்து பருப்பு -1டீஸ்பூன் 
எண்ணெய்
உப்பு 

செய்முறை
2 கப் சேமியாவுக்கு சுமார் 4 கப் தண்ணீர் (சூடாக்க தேவையில்லை, பச்சைத்தண்ணீரே போதும்) எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 

உப்பு கரைந்ததும் ராகி சேமியாவை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும். 

*மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவைக்கவும். 

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஊறிய ராகி சேமியாவை வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
 சேமியா வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய், கிள்ளிய வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் **உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் ஆறிய ராகி சேமியாவை உதிர்த்துப் போட்டு கிளறவும்.
 சேமியா வெங்காயத்துடன் நன்கு கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
* தண்ணீரில் ஊறப்போடும் சேமியாவை 3 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்கவேண்டாம்..அதிக நேரம் ஊறினால் கூழ் போல் ஆகிவிடும், கரெக்டா 3 மினிட்ஸ் மட்டும் வைங்க. (இது அந்த சேமியா பாக்கட்டிலயே போட்டிருக்காங்க..நான் பயமுறுத்தலை!! ஹிஹி...)
** சேமியாவை ஊறவைக்கும்போதே உப்பு கலந்த தண்ணில தானே ஊறவைக்கிறோம் என தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அந்த 3 நிமிட ஊறவைத்தலில் உப்பு சேமியாவில் பிடிக்கிற மாதிரி தெரியவில்லை. நீங்க பாத்து போட்டுகுங்க. :)

Tuesday, March 15, 2016

அவசர சாம்பார் / இன்ஸ்டண்ட் சாம்பார்

பருப்பு இல்லாமல்,  தேங்காயும் தேவைப்படாத சாம்பார் இது. சும்மா இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த ரெசிப்பி கண்ணில் பட சட்டென்று செய்து சாப்பிட்டாயிற்று. நீங்களும் செய்து பாருங்க..ஈஸி & டேஸ்ட்டி! 

தேவையான பொருட்கள்
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - நாலைந்து 
பச்சைமிளகாய்-1
நறுக்கிய காய் - 1/2கப் [விருப்பமான காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நான் மஞ்சள்பூசணி/அரசாணிக்காய் சேர்த்திருக்கிறேன்]
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை -கொஞ்சம் 
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
பொட்டுக்கடலை -1டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி -2 
புளி - சிறுதுண்டு
சாம்பார்பொடி -2டீஸ்பூன் 
சீரகம்-1/2டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் எடுத்து,
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தக்காளி இருப்பதால் அதுவே போதும்.
காயை சற்றே பெரிய துண்டுகளாகவும், வெங்காயம் பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி, கடுகைப் பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காயைச் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து,
தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். நான் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்தேன், உங்களுக்கேற்ற கன்ஸிஸ்டன்சி-க்கு தண்ணீரை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பதிவின் முதல் படத்தில் இருப்பது ஓட்ஸ் பொங்கல் & சாம்பார்...இறுதிப் படத்தில் இருப்பது இட்லி & சாம்பார்.
குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது, ஹிஹி...ஆனால் சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Recipe Link : HERE

Tuesday, March 8, 2016

வானவில்

காலையில் கண் விழிக்கும்போதே இடியின் தாளத்துடனும் மழையின் ஜதியுடனும் மின்னலின் நடனத்துடனும் விடிந்த ஒரு நாள்..
மப்பும் மந்தாரமுமாய், சில நிமிஷம் வெயிலும் சில நேரம் கருக்கலுமாய்க் கழிந்து..
சூரியன் தன் வேலையை முடித்துக்கொண்டு கடல்மடியில் உறங்கச் செல்லுமுன் இந்த மனிதர்களுக்குச் சிலநிமிடங்கள் இன்னுமொரு அழகான சந்தோஷத்தைக் கொடுப்போமென 
கருமேகங்களுடன் கூட்டணி சேர்ந்து வானவில் தரிசனத்தைக் கொடுத்துச் சென்றது, நேற்று மாலை!

வயது வித்யாசமில்லாமல் அனைவரையும் அட்டாக் செய்து, தன் வண்ணவில்லால் சிரிப்பைச் சிதறவிட்டு, கையில் இருந்த கருவிகளால் புகைப்படமும் எடுக்கச் செய்து, பூமியில் நமது இருப்பை "Kid in a candy store"- ஆகக் கொண்டாடச் செய்யும் இயற்கைக்கு என்ன சொல்லி நன்றி சொல்ல??!!
மழைத்துளி மண்ணில் வந்து சிந்தச் சிந்த 
எழுகிறதே ஒரு வாசம்...
அது எனை வானவில்லில் கொண்டு
 சேர்த்து விடுகிறதே சில நேரம்!! 



அனைவரும் நலமாய் இருக்கிறீர்கள்தானே? சில நாள் வலைப்பூ பக்கம் வர இயலாது என்று நினைத்தது சிலமாதங்களாய் நீண்டுவிட்டது. இதற்கு மேலும் விட்டால் சரிவராது என்று கஷ்டப்பட்டு அப்படி இப்படீன்னு ஒரு நாலு ஃபோட்டோவை வச்சு ஒரு பதிவு தேத்தி அட்டனன்ஸ் போட்டாச்சு. இனி வழக்கம்போல அடிக்கடி சந்திக்கலாம்..என்ன சொல்றீங்க?
...
.......
..
..........அச்சச்சோ, பின்னங்கால் பிடரியில் பட ஓடாதீங்க..எப்பவும்போல, நிதானமாப் படிச்சுட்டு, படங்களைப் பாத்துட்டு, பாட்டும் கேட்டுட்டு, டைமிருந்தா ஒரு கமெண்ட்டும் போட்டுட்டு மறுபடி மறுபடி வாங்க! :)))) நன்றி, வணக்கம்! 

LinkWithin

Related Posts with Thumbnails