Wednesday, June 15, 2016

கோவைக்காய் வறுவல் / Tindora fry/ Ivy gourd fry

கோவையில் இருக்கும்வரை, "கோவைக் கொடி" எங்கேனும் வேலிகளில் படர்ந்திருக்கும், அவ்வளவு சீக்கிரம் கண்ணுக்கு சிக்காது. அதன் கீரையப் பறித்து சமைப்பார்கள், கோவைப்பழம் சாப்பிடுவார்கள் என்பது மட்டுமே பரிச்சயம். கோவைக்காயைச் சமைப்பார்கள் என்பதே இங்கே வந்த பிறகுதான் தெரியவந்தது. :) இப்போதெல்லாம் கோவையிலும் கோவைக்காய்கள் விற்க ஆரம்பித்துவிட்டார்களாம்! சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு பாயிண்டை வைத்தே கோவைக்காய் வி.ஐ.பி. ஆகியிருக்கக்கூடும்! ;) 

தேவையான பொருட்கள்
கோவைக்காய் - 150கிராம்
மிளகாய்த்தூள்- 11/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு 
உளுந்துப்பருப்பு 

செய்முறை
கோவைக்காயை கழுவி, ஓரங்களை நறுக்கிவிட்டு நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும். 

கடாயில் எண்ணெய் காயவைத்து கடு-உளுந்து தாளித்து,நறுக்கிய கோவைக்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
 காய் ஓரளவு வதங்கியதும் உப்பு சேர்த்து வதக்கவும்.
 முக்கால் பாகம் வெந்ததும் மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்கு வெந்து லேசாக முறுவலானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர் சாதம் எல்லாவற்றுடனும் ஜோடி சேரும் சிம்பிள் அண்ட் யம்மி கோவைக்காய் வறுவல் தயார்!  

Friday, June 3, 2016

பீட்ரூட் குருமா

ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ச்...இந்த முறை "படம் பார்த்து பொருளறிக" முறையில் ஒரு பதிவு!! :) 


விளக்கம் தேவைப்பட்டால் கருத்துப்பெட்டியில் தாராளமாகக் கேட்கலாம். இந்த பீட்ரூட் குருமா சாதம், சப்பாத்தி இரண்டுக்குமே நன்றாக இருக்கும்.
~~~
1. வெங்காயம், ப.மிளகாய்,  தக்காளி அரிந்து வைக்கவும். 
2. பீட்ரூட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
4. நறுக்கிய பீட்ரூட்டையும் சேர்த்து வதக்கவும்.
5. இதற்கிடையில் மிக்ஸியில் 3 வரமிளகாய், 1 டீஸ்பூன் கொத்துமல்லி விதை, 1 டீஸ்பூன் சீரகம்,  ஏழெட்டு மிளகு, கொஞ்சம் தேங்காய், 1 டேபிள்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைக்கவும். 
6. அரைத்த மசாலாவை குக்கரில் உள்ள காயுடன் சேர்த்து கலக்கவும். 

7. தேவைக்கு தண்ணீர் விட்டு (சுமார் 1, ஒன்றேகால் கப்) சுவைக்கு உப்பும் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை சமைக்கவும். 
8. ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும். 

LinkWithin

Related Posts with Thumbnails