Thursday, September 22, 2016

கீரை வாங்கலையோ...கீரை!!

அமரந்த் சீட்ஸ்/ ராஜ்கிரா சீட்ஸ் (Amaranth seeds/Rajgira seeds) என்ற பெயரில் இங்கே இந்தியன் மளிகைக்கடைகளில் கிடைக்கும் விதைகளை வாங்கி விதைத்து கீரை வளர்க்கலாம் என்ற தகவல் தெரிந்ததால் முயற்சித்து பார்க்கலாம் என ஆரம்பித்த கீரை வளர்ப்பு பற்றிய பதிவு இது. 
பக்கத்து வீட்டுத் தோழியிடம் இருந்து கிடைத்த அமரந்த் சீட்ஸ்...கீரை விதைகள்.. 
என் பெண்ணின் குட்டிக்கைகள் உதவிசெய்ய,
இரண்டு சிறிய தொட்டிகளில் விதைத்தாயிற்று...கீரைகள் முளைவிட்டு வளரலாயின.
குட்டிக்கால்களுடன் குட்டிக்கீரைகள்!! :) கீரைகள் வளர்வதைக் கண்டு சற்றே பெரிய தொட்டிகளிலும் கொஞ்சம் விதைகள் தூவி வளர்ந்த கீரைகள். 
பறித்து, பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாயிற்று. கீரைகளைப் பறிக்கையில் வேருடன் பறிக்காமல், தண்டுகளை மட்டும் நறுக்கிக் கொண்டால், மீண்டும் அதே தண்டிலிருந்து கீரைகள் துளிர்க்கின்றன. அப்படி இரண்டாவது முறை பறித்த கீரை..பருப்புடன் சேர்த்து கடைந்த கோவை ஸ்பெஷல்!! 
இரண்டாவது முறை நறுக்கிய பின் இப்படி இருந்த கீரைத்தொட்டி,
சில நாட்களில் இப்போது...
இப்படி இருக்கிறது.  
:) 
வீட்டிலேயே கீரை வளர்த்து சாப்பிட விரும்பும் வெளிநாட்டு வாசிகள் சிறிய தொட்டிகளில் இந்தக் கீரையை வளர்க்கலாம். எளிதில் முளைத்து வளர்கிறது. நாமே வளர்க்கும் காய்-கனி-கீரைகளின் ருசி அறிந்தவர்கள் கண்டிப்பாக முயற்சிக்கலாம்!! :D 

Friday, September 2, 2016

காலிஃப்ளவர் ஃப்ரை

தேவையான பொருட்கள் 
காலிஃப்ளவர் - 11/4கப் 
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம், சோம்பு - தலா1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/8டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணை 
உப்பு 

செய்முறை 
காலிஃப்ளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
காடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் சோம்பு தாளித்து காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். 
காய் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும். 
காலிஃப்ளவர் முக்கால்பாகம் வெந்ததும் மசாலாபொடி மற்றும் கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.
காய் நன்றாக வெந்து மசாலாவாடை அடங்கியதும் பரிமாறவும்.
விரைவில் செய்யக்கூடிய காரசாரமான பொரியல் இது. சில்லி சிக்கன் மசாலா விரும்பாதவர்கள் மிளகாய்ப்பொடி-கரம் மசாலா பொடி சேர்க்கலாம். அல்லது சாம்பார் பொடியும் சேர்க்கலாம். காய் வேக தண்ணீர் சேர்க்கவேண்டியதில்லை, மூடி போட்டு வைக்கையில் அதுவே நீர் விட்டு வெந்துவிடும். சுவைக்கேற்ப காரப்பொடியை சேர்த்துக்கொள்ளவும். சாதம் வகைகளுடன் சுவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails