Saturday, December 31, 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2016-ன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மறக்க முடியாத ஒவ்வொரு நிகழ்வை வழங்கி விடைபெற்று கொண்டிருக்கின்றன.  இன்னும் சில மணி நேரங்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது.

இறுதி மாதம் குளிர்-மழையுடன் உடல்நலக் குறைவையும் துணைக்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டதால், வலைப்பக்கம் வந்து பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய இருந்தாலும் வர முடியவில்லை.

ஆக மொத்தத்தில் 2016 ஒரு மறக்க முடியாத வருடமாக, சந்தோஷங்கள் - ஏமாற்றங்கள் - ஆச்சரியங்கள், புது வரவுகள், விருந்தினர்கள், தவிப்புகள், கோபங்கள் என்று எல்லாம் நிறைந்த  ஆண்டாகக் கழிந்து நிறைவு பெற இருக்கின்ற இவ்வேளையில் வருகின்ற ஆண்டு அனைவருக்கும் அளவில்லா நன்மைகளையும், உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 

Wednesday, December 28, 2016

பனீர் குடைமிளகாய் மசாலா / Paneer Capsicum Do Pyazaa


தேவையான பொருட்கள் 
வெங்காயம் -2
பச்சைமிளகாய் -2
தக்காளி - 3
கேப்ஸிகம்/குடைமிளகாய் -1
பனீர் - 11/2 கப் (1" துண்டுகளாக நறுக்கியது) 
ஹாஃப் & ஹாஃப் / ஃபுல் க்ரீம் - 1/2கப் 
இஞ்சி பூண்டு விழுது -2டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன் 
கசூரி மேத்தி - 1டீஸ்பூன் 
வெண்ணெய் - 1டீஸ்பூன்
எண்ணெய் 
உப்பு 
தண்ணீர் 

செய்முறை 
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிவைக்கவும்.
மற்றொரு வெங்காயத்தையும், குடைமிளகாயையும் பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். 
1.கடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
2.வெங்காயம் ஓரளவு வதங்கியதும் , இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசம் போக வதக்கி, 
3. நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி குழைய வதங்கியதும், மிளகாய்த்தூள்-மல்லித்தூள்-மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். 
5. பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கிய இரண்டாவது வெங்காயம் - குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். 
6. ஒரு டீஸ்பூன் வெண்ணையையும் சேர்த்து வதக்கிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து சுமார் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
7. மிதமான தீயில் மசாலா 3-4 நிமிடங்கள் கொதிவந்ததும், 
8. அடுப்பில் தணலை குறைத்து ஹாஃப் & ஹாஃப் பாலைச் சேர்க்கவும். 
9. பால் மசாலாவுடன் கலந்து சூடானவுடன் நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்க்கவும்.
10. இரண்டு மூன்று நிமிடங்கள் அடுப்பிலேயே வைத்து, பனீர் மசாலாவுடன் சேர்ந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
11. கசூரி மேத்தியை மசாலாவில் சேர்க்கவும். 
சுவையான பனீர் கேப்ஸிகம் மசாலா / பனீர் கேப்ஸிகம் (D)தோ ப்யாஸா ரெடி. சப்பாத்தி, பரோட்டா, மற்றும் புலாவ்-பிரியாணி-ஜீரா ரைஸ் வகைகளுடன் பரிமாறலாம்.

குறிப்பு
இந்த பதிவில் படங்களை இணைத்ததும், ரெசிப்பியை டைப் செய்ததும், குறிப்பாக பனீர் மசாலா & சப்பாத்தியை வெளுத்துக் கட்டியதும் மட்டிலுமே என் பங்கு. மற்றபடி முழுச் சமையலும் லயா அப்பாவின் கைவண்ணம்!! :) :D ;)  Holiday Special!! B-)

Thursday, December 1, 2016

கடாய் மஷ்ரூம் க்ரேவி

தேவையான பொருட்கள் 
வெங்காயம் -1
பூண்டு 5 பற்கள்
பச்சை மிளகாய் -1
மஷ்ரூம் - 220கிராம்
மிளகாய்த்தூள் -11/2டீஸ்பூன்
மல்லித்தூள்- 11/2டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2டீஸ்பூன் 
கசூரி மேத்தி - 1/2டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 
சர்க்கரை - 1/2டீஸ்பூன் (விரும்பினால்) 
அரைக்க 
தக்காளி-2
இஞ்சி- சிறுதுண்டு
முந்திரி - 4
தேங்காய் - கொஞ்சம் 

செய்முறை
வெங்காயம், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 
கடாயில் எண்ணெய் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் ஓரளவு பிங்க் நிறத்திற்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்-மல்லித்தூள்-சீரகத்தூள்-கரம் மசாலா போட்டு வதக்கவும். (மசாலாக்கள் கருகாமல் மிதமான தீயில் வதக்கவும்.)
வெங்காயம் வதங்கும் நேரத்தில் தக்காளி -இஞ்சி -முந்திரி-தேங்காய இவற்றை மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். 
பொடிகள் மசாலா வாடை அடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கவும்.

பிறகு நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து வதக்கி, ஒரு கப் கொதிநீரை சேர்க்கவும். ( விருப்பத்திற்கேற்ப தண்ணீர் அளவை கூடவோ குறைத்தோ சேர்க்கலாம்.) 
க்ரேவி 4-5 நிமிடங்கள் கொதித்து, காளான் வெந்ததும் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கடாய் மஷ்ரூம் க்ரேவி தயார். புலாவ், சப்பாத்தி, நாண், சீரகசாதம், வெறும் சாதம் எல்லாவற்றுடனும் நன்றாக இருக்கும்.
டிவியில் ரேவதி ஷண்முகம் அவர்கள் செய்த ரெசிப்பியை பார்த்து செய்தேன்...அவர் தேங்காய் சேர்க்கவில்லை, கசகசா-வை ஊறவைத்து சேர்த்தாங்க. என்னிடம் கசகசா கைவசம் இல்லாததால் தேங்காய் சேர்த்துக்கொண்டேன். இஞ்சியையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து சேர்க்காமல் இப்படி பூண்டை நறுக்கியும், இஞ்சியை தக்காளியுடன் அரைத்தும் சேர்ப்பதால் சுவை நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க. எனக்கு அவ்வளவு டெக்னிகல் டீடெயில் எல்லாம் தெரியாதுங்க..ஆக மொத்தம் சுவையா இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி! :) 

LinkWithin

Related Posts with Thumbnails