தேவையான பொருட்கள்
பஃப் பேஸ்ட்ரி ஷீட் - 1
உருளைக்கிழங்கு -1
கேரட் -1
பீன்ஸ் - 7
பச்சைப்பட்டாணி - 1கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
இஞ்சி-பூண்டு விழுது -1டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - கொஞ்சம்
சீரகம் - 1/2டீஸ்பூன்
தக்காளி, சிறியதாக -1
மிளகாய்ப்பொடி - 1/2டீஸ்பூன்
கறிமசாலா பொடி - 1டீஸ்பூன்
கரம் மசாலா பொடி -1/4டீஸ்பூன்
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு மணி நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
கேரட்-பீன்ஸ் இவற்றை கழுவி, பொடியாக நறுக்கி, மைக்ரோவேவ்-ல் வேகவைத்து வைக்கவும். (நான் பச்சைப்பட்டாணி சேர்க்கவில்லை, சேர்ப்பதாக இருந்தால் கேரட் பீன்ஸ் முக்கால் பதம் வெந்ததும் பட்டாணியையும் சேர்த்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ்-ல் வைத்து எடுத்துக்கொள்ளவும்)
வெங்காயம்- பச்சைமிளகாய் -தக்காளியை பொடியாக நறுக்கிவைக்கவும். இஞ்சி பூண்டை தட்டிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், கறி மசாலாதூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
பொடிகள் பச்சை வாசம் போனதும், மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த காய்கறிகள் (நீரை வடித்துவிட்டு) சேர்த்து கிளறவும். மசாலாவுடன் காய்கள் கலந்ததும் கரம் மசாலா பொடி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
அவன்(oven) - ஐ 400F அளவுக்கு ப்ரீஹீட் செய்யவும். அறை வெப்பநிலைக்கு வந்திருக்கும் பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை மாவு தூவி இன்னும் கொஞ்சம் பெரியதாக தேய்த்துக்கொண்டு 9 துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். [இங்கே நான் யூஸ் செய்திருப்பது Pepperidge form puff pastry sheet ].
நறுக்கிய சதுரங்களில் கொஞ்சமாக மசாலா வைத்து, ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டவும். அலுமினியம் ஃபாயில் விரித்த பேக்கிங் டிரேயில் ஒட்டிய பஃப்ஸ்களை அடுக்கவும். இதற்குள்ளாக அவன் ப்ரீஹீட் ஆகி தயாராக இருக்கும். தட்டில் அடுக்கிய பஃப்ஸ்கள் மீது சிறிது பால் அல்லது தண்ணீரை (முட்டை சாப்பிடுவீங்கனா ஒரு முட்டைய உடைத்து சிறிது நீர் கலந்து நன்றாக கலக்கி அதை..) சீராகப் பூசிவிட்டு அவன் - ல் வைக்கவும்.
சுமார் 20 நிமிடங்கள் பேக் செய்து பஃப்ஸ்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். 16 நிமிடங்களுக்குப் பிறகு அவன் -ஐ கவனித்து தேவைப்பட்டால் பேக்கிங் டிரே-யை திருப்பி வைக்கவும். பஃப்ஸ்கள் எல்லாம் ஒரே நிறமாக வெந்ததும் அவன் -ல் இருந்து வெளியே எடுத்து சூடான டீ அல்லது காஃபியுடன் பரிமாறவும்.
குறிப்பு
பஃப்ஸ்-களை இன்ன வடிவில்தான் ஒட்ட வேண்டும் என்ற வரையறை இல்லை...விருப்பமான வடிவத்தில் ஒட்டுங்க..கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம், மசாலா வைத்து பஃப்ஸ்கள ஒட்டும்போது மசாலா வெளியே வராதபடி ஒட்டவேண்டும். இல்லையெனில் பஃப்ஸ் பேக் ஆகும்போது மசாலா வெளியே எட்டிப்பார்த்து கருகிவிடும். :)
அதே போல, மசாலா கொஞ்சம் காரமாக செய்தால் நன்றாக இருக்கும், பஃப்ஸ் பேக் ஆகி, அந்த லேயர்களுடன் சாப்பிடுகையில் காரம் சரியாகிவிடும்!! ;)