தேவையான பொருட்கள்
வரகு - 1/2கப்
துவரம்பருப்பு - 1/4கப்பிற்கு கொஞ்சம் அதிகம்
காய்கறிகள் - 1 முதல் 1.5கப் (கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், கொத்தவரங்காய், உருளைகிழங்கு, பட்டாணி)
குடைமிளகாய் - பாதி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - கொஞ்சம்
தக்காளி -2
புளிக்கரைசல் - 1/4கப்
சாம்பார் பொடி - 1.5 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்
வெல்லம் (பொடித்தது) - 1டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
நெய்
செய்முறை
வரகு மற்றும் பருப்பை நன்றாக களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, குக்கரில் போட்டு 3கப் தண்ணீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நாலைந்து விசில் வரும்வரை வேகவைத்து கொள்ளவும்.
காய்கறிகளை கழுவி, பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும். வெங்காயத்தில் பாதியை பெரிய துண்டுகளாவும், மீதியை நீளவாக்கிலும் நறுக்கிவைக்கவும். குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியையும் நறுக்கிகொள்ளவும்.
குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பெரிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நறுக்கிய காய்கறிகள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, வெல்லப்பொடி சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் லேசாக வதங்கியதும் குக்கரில் வேகவைத்த காய்களை சேர்க்கவும்.
காய்கறிகள் சேர்த்தவுடன், குக்கரில் வேகவைத்த வரகரிசி-பருப்பு கலவையையும் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி கலந்து விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். தேவையானால் அரைக்கப் சுடுநீர் சேர்த்து தளர கலந்துவிடலாம். சாம்பார்சாதம் கொதிவர ஆரம்பித்ததும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
கடைசியாக சாம்பார் சாதத்தின் மேல் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடாக பரிமாறவும்..சிப்ஸ், பூந்தி, வறுவல் வகைகளுடன் நன்றாக இருக்கும்.
குறிப்பு
இதில் நான் மறந்துபோன விஷயங்கள் - நீங்கள் மறக்காமல் இருக்க... :)
முருங்கைக்காய் சேர்க்க மறந்தேன், பச்சைக் கடலைக்காய் சேர்க்க மறந்தேன்..இரண்டுமே சாம்பார்சாதத்தில் நன்றாக இருக்கும்.
சின்ன வெங்காயம் சேர்த்தாலும் சுவை அதிகரிக்கும்.
சாம்பார்பொடிக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, கொஞ்சம் கொத்துமல்லி விதை, சீரகம், வரமிளகாய், தேங்காய் வதக்கி அரைத்து சேர்த்தால் ஃப்ரெஷ் சாம்பார்பொடி சுவை வித்யாசம் தெரியும்.
தாளிக்கும்போது பட்டை கிராம்பு சேர்த்து தாளித்தால் கர்நாடகா பிஸிபேளேபாத் சுவையும் வித்யாசமாக இருக்கும்.