Friday, September 14, 2018

உளுத்தம் பூரண கொழுக்கட்டை /Urad dal spicy kozhukkattai

தேவையான பொருட்கள்  
உளுந்து பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் 
பாசிப்பருப்பு - 1டேபிள்ஸ்பூன் 
பச்சை மிளகாய் -1
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது 
கறிவேப்பிலை - ஒரு கொத்து 
தேங்காய்த்துருவல் -2 டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 
கடுகு -1/2டீஸ்பூன் 
உளுந்துபருப்பு -1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன் 

கொழுக்கட்டைக்கு மேல் மாவு 

செய்முறை 
உளுந்து மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். 
அதனை வடித்து எடுத்து, பச்சை மிளகாய், வரமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை சிறிய இட்லிகளாக இட்லித்தட்டில் (10 முதல் 15 நிமிடங்கள்) வேகவைத்து எடுக்கவும். 

வெந்த மாவை மிக்ஸியில் இட்டு பல்ஸ்-ல் அரைத்து உதிர்த்துக்கொள்ளவும்.
கடாயில் கடுகு, உளுந்துபருப்பு, மஞ்சள் தூள் தாளித்து உதிர்த்த பருப்பை சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும். 
தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

கொழுக்கட்டை மாவை சிறு உருண்டைகளாக்கி, வட்டமாகத் தட்டி ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து விருப்பமான வடிவில் மடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

 சுவையான காரக்கொழுக்கட்டை தயார்.  நான் சிலவற்றை மோதகமாகவும், சிலதை தட்டையாகவும் மடித்திருக்கிறேன்.

கொழுக்கட்டை மேல்மாவுக்கு,  அரிசியை 2-3 மணி நேரம் ஊறவைத்து, கொஞ்சமாக உப்பு சேர்த்து, க்ரைண்டரில் நைஸாக அரைத்து, கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு இந்த மாவையும் சேர்த்து கிளறவேண்டும். கடாயில் ஒட்டாமல் திரண்டுவந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டை பிடிக்கலாம். அரிசியுடன் கொஞ்சம் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.

அல்லது ரெடிமேட் அரிசி மாவுக்கு ஒரு கப் மாவுக்கு ஒரு கப் அளவு தண்ணீர்+ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து  நன்றாக கொதிக்கவைத்து, மாவைக் கொட்டி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டு கொழுக்கட்டை பிடிக்கலாம்.

அடுத்த படத்தில் இருப்பது இனிப்பு கொழுக்கட்டை...வெல்லம், தேங்காய்த்துருவல், எள்ளு, ஏலப்பொடி சேர்த்த பூரணம் கொழுக்கட்டை மாவில் வைத்து செய்தது.
 இந்த வருடம், பிள்ளையாருக்கு இனிப்பு கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை, பச்சைப்பயறு சுண்டல் எல்லாம் பிறந்தநாள் சிறப்பு  உணவுகளாகப் படைத்து சாமி கும்பிட்டாயிற்று.
ஹேப்பி பர்த்டே டு யூ ஆனைசாமி... 
இப்படிதான் எங்க வீட்டு சின்ன வாண்டு சொல்றாங்க..அதனால விநாயகரை ஆனைசாமி, ஆஞ்சநேயரை மங்க்கி சாமி (மன்னிச்சுக்கோ ஆஞ்சநேயா!!) ன்னு சொல்றோம். ;) :) :D

LinkWithin

Related Posts with Thumbnails