Monday, August 30, 2010

ரசித்து ருசித்தவை-2

உலவும் வலைப்பூக்களில் ரசித்து, நான் செய்து ருசித்த சில குறிப்புகள்,மீண்டும்!
இனிப்புடன் ஆரம்பிப்போம்னு முதல்ல கேசரி..(போட்டோ கலர்புல்லாவும் இருக்கில்ல? எல்லாருடைய டாஷ்போர்டுலயும் பளிச்சுன்னு தெரியுமேன்னு..ஹிஹி)

விஜிசத்யா-வின் ரெசிப்பி பார்த்து செய்த பீன்ஸ்உசிலி

தெய்வசுகந்தி-யின் சமையலறையிலிருந்து அவகாடோ சப்பாத்தி

மஞ்சுவின் லாங்பீன்ஸ் பொரியல்

ப்ரேமாவின் கொண்டைக்கடலை பிரியாணி

நித்துபாலா-வின் மிளகு குழம்பு


ராக்ஸ் கிச்சன்-ல் பாத்து இம்ப்ரெஸ் ஆகி செய்த கேசரி.எப்பவும் கேசரியை கிளறி வைப்பதோடு,அப்படியே சாப்ட்டுடுவோம் கட் செய்வது இதுவே முதல் முறை!
ராக்ஸ் கிச்சன்-முறுக்கு

அருமையான குறிப்புகளைப் பகிர்ந்த தோழமைகளுக்கு நன்றி!

நிறைய போட்டோஸ்-ஐ பார்த்து களைச்சிருப்பீங்க.(நான் காபிய போட்டோ எடுத்து போட்டா,டீ-ன்னு சொல்லறீங்க,டீ-யை போட்டோ எடுத்துப்போட்டா கரெக்ட்டா காப்பி சூப்பர்ங்கறீங்க.அதனால இந்தமுறை நானே சொல்லிடறேன்.)

சூடா டீ&பஜ்ஜி சாப்பிடுங்க.:)

Wednesday, August 25, 2010

கொள்ளுப் பருப்பு

தேவையான பொருட்கள்
கொள்ளு-1/4கப்
சின்னவெங்காயம்-7
தக்காளி-2
பச்சைமிளகாய்-3(காரத்துக்கேற்ப)
தனியா-1ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
உப்பு

செய்முறை
சின்னவெங்காயத்தை உரித்துக்கொள்ளவும்.தக்காளி,மிளகாயை நறுக்கவும்.

குக்கரில் உப்பு தவிர அனைத்துப்பொருட்களையும் சேர்த்து தேவையான நீர் சேர்த்து, 5 விசில்கள் வேகவைக்கவும்.
குக்கரில் ப்ரெஷர் அடங்கியதும் உப்பு சேர்த்து, நன்றாக கடையவும்.

ஆரோக்கியமான,சுவையான கொள்ளுப்பருப்பு தயார். சுடுசாதத்துடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

எங்க வீட்டுப்பக்கம் இது ரொம்ப சாதாரணமா அடிக்கடி செய்யும் ரெசிப்பி இது.இன்னும் தெரிந்துகொள்ள இங்கே வாங்க..

Thursday, August 19, 2010

சந்தகை

சுகந்திக்கா சந்தகை போஸ்டிங் போட்டதில இருந்தே சந்தகை ஞாபகம் வந்துவிட்டது..வீகெண்டில் இடியப்பம் செய்திருந்தேன். அப்பவே என்னவருக்கும் சந்தகை நினைவு வந்துவிட்டது. "எங்கம்மா அடிக்கடி செய்வாங்க..நாங்கள்லாம்(இவர்&2 தம்பிகள்)தான் சந்தகை மெஷின்ல சந்தகை பிழிஞ்சு தருவோம்"னு மலரும் நினைவுகளுக்குப் போய்விட்டார்.

இடியாப்பமும் கிட்டத்தட்ட அப்படியேதானே இருக்கு,அப்புறம் என்ன?ன்னு கேட்டா,"இடியப்பம் குட்டிக்குட்டியா இருக்கு..சந்தகை நீள-நீளமா புழு(!!?) மாதிரியே இருக்கும்..தேங்காயும்,சர்க்கரையும் போட்டு சாப்பிடுவோம்..லெமன் சேவை/தேங்காய்சேவை/தக்காளிசேவையா தாளிச்சு தருவாங்க.."ன்னு விளக்கம். சரி,நாமும் ஒரு நாள் செய்துபார்ப்போம்னு ஆரம்பித்தேன்.

11/2 டம்ளர் புழுங்கல்அரிசியை 2மணிநேரம் ஊறவைச்சு, நைஸா மாவா அரைச்சு எடுத்து,இட்லிதட்டுகளில் ஊற்றி வேகவைத்தேன்.


சந்தகை பிழிய என்று ஸ்பெஷலா ஒரு மெஷின் இருக்கு(படம் இங்கே&இங்கே).அதிலே பிழிவது கொஞ்சம் ஈஸியா இருக்கும்.ஆனால் என்னிடம் இருப்பதோ இந்த குட்டியூண்டு முறுக்கு அச்சுதான்..
இட்லி வெந்தாச்சு..எடுத்து முறுக்கு அச்சில் போட்டு பிழிய ஆரம்பிச்சேன்..

என் மாமியார் புத்திசாலித்தனமா பசங்க வீட்டிலிருக்கையில் சந்தகை செய்திருக்காங்க..நான் இவர் ஆபீஸ்ல இருந்து வரும் முன்பே இந்த வேலைய ஆரம்பிச்சு ஒரு அனுபவப்பாடம் கத்துகிட்டேன்.முதல்முறை சூடா இருந்த இட்லிய கொஞ்சம் கஷ்டப்பட்டு பிழியமுடிஞ்சுது.

அடுத்த ஈடு போட்டதும்தான் வம்பு ஆரம்பம்!இட்லி ஆறிப்போனா கல்லு மாதிரியே ஆகிடும்..இந்த முறை அச்சிலே இட்லிய திணிச்சாச்சு.ஆனா அசைக்ககூட முடியல! :-| :-|
எப்படியோ ஒரு வழியா பிழிஞ்சு முடிச்சேன்.அதுக்கும் மேல தெம்பு இல்ல. மீதிஇருந்த மாவை, கடாய்ல ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவச்சு, கொழுக்கட்டைக்கு வதக்கற மாதிரி வதக்கி, இட்லிதட்டிலே பிழிஞ்சு வேகவைத்தேன்.அது சுலபமா இருந்தது.

சந்தகை ரெடியாகிவிட்டது(அப்பாடீ..பெண்டு நிமிர்ந்துபோச்சு போங்க:))..இதிலே இருந்து நான் கண்டுபிடிச்ச உண்மை, சரியான உபகரணங்கள் இல்லாம சந்தகை செய்கையில் மாவை வேகவச்சு பிழியறத விட....பிழிஞ்சு வேக வைப்பதுதான் ஈஸி!!! :)))))

இடியப்பத்துக்கும்,சந்தகைக்கும் கண்டிப்பா வித்யாசம் உண்டு..எங்க வீடுகளில் பச்சரிசி அவ்வளவா சாப்பிட மாட்டோம். இடியப்பத்துக்கு மாதிரியே தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிடலாம்..அல்லது தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.தாளிச்சும் சாப்பிடலாம். இந்த முறை எலுமிச்சம்பழம் பிழிஞ்சு லெமன் சேவையா தாளிச்சுட்டேன்.

ஆக மொத்தம் இனி எங்க வீட்டில் அடிக்கடி சந்தகை உண்டு..சாப்பிட வரீங்களா?

நன்றி:என் சமையலறையில்-தெய்வசுகந்தி& கிருஷ்ணவேணி'ஸ் கிச்சன்-கிருஷ்ணவேணி

Tuesday, August 17, 2010

கடவுளும் நானும்..


இது அப்பாவி தங்கமணி அழைத்த தொடர்பதிவுக்காக...

அனேகமா புவனா கூப்பிட்ட லிஸ்ட்ல கடைசியா எழுதுவது நானாகத்தான் இருக்கணும்..மற்றவங்க எல்லாரும் எழுதிட்டாங்க.:)
~~~
கடவுளும் நானும்...
எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே உண்டு.பெண்தெய்வங்கள் அனைவரும் எனக்கு மிகப்பிடித்தமானவர்கள்.காமாட்சி,மீனாட்சி,சமயபுரத்தம்மன்,கோனியம்மன்,எல்லைமாகாளி,பத்ரகாளி,தண்டுமாரி,கருணாம்பிகை,விஸ்வநாயகி,பகவதி,அங்காளபரமேஸ்வரி இப்படி நீண்டுகொண்டே போகும் லிஸ்ட் உண்டு என்னிடம்.கோவையில் இருந்தவரை வெள்ளிக்கிழமை தவறாமல் கோனியம்மனைப் பார்க்கச்செல்வது வழக்கம்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கு மற்ற மதத்தோழிகள் யாருமே இல்லை.அதன்பின்னர் கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததால் ஜீஸஸ் கொஞ்சம் பரிச்சயமானார். முஸ்லிம் தோழிகள் கடந்த ஒருவருடமாகத்தான் தெரியும்,அதனால் அல்லா-வை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.என்ன பெயர் சொன்னால் என்ன? நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது..அதற்கு அவரவர் விருப்பப்படி உருவங்களும் பெயர்களும் கொடுத்து, வசதிப்படி வணங்குகிறோம்.அவ்வளவுதான்.

எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்று கடவுளைக் கேட்டது ஒரு காலம்..இப்பொழுதெல்லாம், "என்னை சரியான வழியில் வழிநடத்து..வரும் பிரச்சனைகளைத் தாங்கும் சக்தியை,அவற்றை கடந்து செல்லும் வலிமையைக் கொடு" என்று கேட்பதோடு என் ப்ரார்த்தனைகள் முடிவடைந்துவிடுகிறது.

இந்தப்பதிவில் என் மனதில் உறைந்த சில நினைவுகளை பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.(மொக்கை ஆரம்பம். விரும்புவோர் தொடரலாம்.:))
~~~
நான் இளங்கலை படித்தது ஒரு கிறிஸ்தவக்கல்லூரி..அதன்பின்னர் அந்த மூன்று வருஷங்களும் கல்லூரியிரிலிருக்கும் chaple-க்கு போவது, அருகிலிருக்கும் புலியகுளம் அந்தோணியார் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செல்வது என்று ஆனது.நீளமான க்யூவில் நின்று கடவுளர்களைத் தொட்டு ப்ரேயர் செய்தது..அந்தோணியார் பாதத்திலிருந்த உப்பு-மிளகு பிரசாதத்தை ருசித்தது, அங்கே தரும் தேங்காயெண்ணெய் பிரசாதம் வாங்கியது என்று பழைய நினைவுகள் அலைமோதுகிறது. கோவிலிலிருக்கும் ஜீஸஸை இன்றும் என் மனக்கண்ணில் காணமுடிகிறது.நான் செல்லும் மற்ற கோயில்களுக்கும் அந்தோணியார் கோயிலுக்கும் பெரிய வித்யாசம் தோன்றவில்லை.

அப்பொழுது புலியகுளத்தில் ஒரு பெரீய்ய பிள்ளையார் சிலை வைத்து ஒரு கோயில் கட்டினார்கள்.ஈச்சனாரி விநாயகர்தான் அதுவரை கோவையிலேயே பெரிய ஆளாய் இருந்தார். ஆனால் புலியகுளம் விநாயகர் அவரை விடப் பெரியவர். பிரம்மாண்டமான உருவம்..மிகவும் லட்சணமாக இருப்பார். விவரிப்பதற்கு வார்த்தைகள் வரவில்லை..அது ஒரு அனுபவம். கோவை செல்கையில் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் பார்த்துவாருங்கள்.

கூகுள் இமேஜஸில்ல் தேடினேன்..ஒரு படம் கிடைத்தது.

(பிள்ளையாருடன் படத்திலிருக்கும் பெரியவர் யார்னு தெரியாதுங்கோ.)
~~~
பிரதோஷம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்தது முதுநிலை படிக்கையில்தான். அப்பொழுதிருந்து, ஒரு பீரியட் ஆஃப் டைம்..ஒரு சில வருஷங்கள் ரொம்பவுமே பக்திமானாய்:) இருந்திருக்கிறேன்.ஒரு தோழி மூலம் சஷ்டி விரதம்-பிரதோஷ விரதம் இதெல்லாம் தெரியவந்தது.அதுவரை அமாவாசை-கிருத்திகை மட்டும்தான் தெரியுமெனக்கு. பிரதோஷ விரதம் இருந்து, அருகிலிருக்கும் விருந்தீஸ்வரர் கோவிலுக்குப் போய்வருவோம். உடன் பணிபுரிந்த மேடம், 'இவங்க துள்ளி-துள்ளிதான் வருவாங்க,ஏன் தெரியுமா? அவங்க ஒரு பக்திமான்" என்று கிண்டல் செய்தது நினைவு வருகிறது!:)).

ம்ம்..அது ஒரு அழகிய கனாக்காலம். பிரதோஷம் விடுமுறை நாட்களில் வந்தால் பூமார்க்கட்டில் இருந்து அரளிப்பூக்கள் வாங்கிவந்து மாலையாகக் கோர்த்து கொண்டுசெல்வோம்..ஒரு சிலநாட்களில் அருகம்புல் பறித்து மாலைகட்டி கொண்டுசெல்வோம். நந்தி தேவருக்கு அபிஷேகம் நடப்பதைப் பார்ப்பதற்கே அவ்வளவு நன்றாய் இருக்கும். கரும்பு சர்க்கரையில் ஆரம்பிக்கும் அபிஷேகம், பால்-தயிர்-இளநீர்-பழங்கள்-தேன்-மஞ்சள்-விபூதி இப்படி ஒவ்வொன்றாய் அபிஷேகம் செய்வார்கள்..கருங்கற் சிலைக்கு மஞ்சளில் அபிஷேகம் செய்கையில் அருமையாக இருக்கும்.பூஜை முடிந்ததும், விருந்தீஸ்வரரை பூரண அலங்காரத்தில் பார்க்கையில் எனக்கு அவரிடம் கேட்க நினைத்ததெல்லாம் மறந்து போய்விடும்.கேட்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது போல இருக்கும். அமைதியா அவரை கண்கொள்ளும் மட்டும் பார்த்துவிட்டு வந்துடுவேன்.

பிரதோஷ பிரசாதம்..யம்ம்ம்ம்!! அபிஷேகமான பால் தீர்த்தம்,வெண்பொங்கல்,காப்பரிசி,பஞ்சாமிர்தம்,சுண்டல்,தயிர்சாதம்..ஆஹா,அப்படி ஒரு ருசியா இருக்கும்.
~~~
மார்கழி மாதத்தில் எல்லா நாட்களும் எங்க அக்காக்கள்,பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லாம் தினமும் காலையில் பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டுவருவாங்க..வீட்டில் பெரிய கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, எல்லாப் பிள்ளையார்களுக்கும் திருநீறு-குங்குமம்-பூ வைத்து கோலத்தில் அடுக்கி வைப்பாங்க. மார்கழி முதல்நாள் ஒரு பிள்ளையார்-(அருகம்புல் மட்டுமே வைக்கவேண்டும்,மற்ற பூக்கள் அன்று வைக்கக்கூடாது.) என்று ஆரம்பிக்கும் எண்ணிக்கை 3,5 என்று ஒற்றைப்படையில் அதிகரித்துக்கொண்டே போகும். கிட்டத்தட்ட போட்டி போட்டுக்கொண்டு பிள்ளையார்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போவார்கள். அதிகபட்சம் 101-க்கும் மேலே போயிருக்கும்.

திருமணத்துக்கு முன்பு வரை நானும் ஒரு மார்கழி விடாமல் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்.(அந்தப் புண்ணியம்தான்,உனக்கு நான் கிடைத்திருக்கேன்என்று என்னவர் காலரைத் தூக்கி விட்டுக்கிறார்:)..100% உண்மைதாங்க அது!) காலை நாலரை மணிக்கு எழுந்து குளித்துவிட்டு,தண்ணீர் குடத்துடன் கோயிலுக்குப் போய், கோயிலை கூட்டி,வாசல் தெளித்து,கோலம் போட்டு, பிள்ளையாருக்கு 3 குடம்,5 குடம்,7 குடம்னு தண்ணீராய் சுமந்து அபிஷேகம் செய்திருக்கிறோம்.அப்புறம் வீட்டுக்கு வந்து கோலம் போட்டு, பிள்ளையாரை வைத்து,பூஜையும் முடித்து எல்லைமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்.அங்கே அம்மனுக்கு முப்பது நாளும் அருமையாக அலங்காரம் செய்வார்கள். இட்லி-சாம்பார்,எள்ளுசாதம்,சர்க்கரைப்பொங்கல்,கேசரி இப்படி தினமும் ஒரு பிரசாதம்.(சாப்பிடுவது மட்டும்தான் வழக்கமான்னு கேக்காதீங்க. நாங்களும் சமைத்து கொண்டுபோவோம்.)
~~~
தை மாதம்..தைப்பூசம். என் அண்ணா ஒவ்வொரு வருஷமும் பழனி-க்கு காவடி எடுத்துக்கொண்டு நடந்து போவார்.இன்னமும் போய்க்கொண்டு இருக்கிறார்.வீட்டிலிருந்து ஒரு மூன்று மைல் இருக்கும் ஒரு தோட்டத்தில்தான் காவடிகள் கட்டுவார்கள்.அங்கிருந்து நடைப்பயணம் ஆரம்பிக்கும். கூட்டமாக சேர்ந்து போவாங்க.மூன்று நாட்களாகும் பழனி போய்ச்சேர.மலையேறி, காவடியை செலுத்திவிட்டு, ஒரு கலயம் சர்க்கரையை எடுத்துக்கொண்டு வருவாங்க. அடிவாரத்தில் ஒவ்வொரு கூட்டத்தாரும் ஒரொரு மடம் வாடகைக்கு எடுத்திருப்பாங்க.. எல்லாரும் கொண்டுவந்த கலயங்களிலிருந்து சர்க்கரைய,மற்ற பொருட்கள் சேர்த்து பஞ்சாமிர்தமா செய்து, காவடி எண்ணிக்கைக்கு ஏற்ப பஞ்சாமிர்தத்தை பிரித்து தருவாங்க. அங்கேயே எல்லாருக்கும் உணவு..ஓய்வெடுத்துவிட்டு, பழனியில் தங்கத்தேரோட்டம் பார்த்துவிட்டு,கடைவீதில விற்கும் பொம்மைகள்,கம்மல்,வளையல் இப்படி ஒரு ஷாப்பிங்கும் செய்துட்டு வீட்டுக்கு வருவாங்க.

பாதயாத்திரையில், மடத்துக்குளத்தில் இரண்டாவது இரவு தங்கி, அடுத்த நாள் சண்முகநதியில் குளித்து பழனி போய்ச் சேருவாங்க.எட்டாவது படிக்கையில் ஒருமுறை நானும் என் கஸின் ஒருவரும், பக்கத்துவீட்டு அண்ணாவுடன் மடத்துக்குளம் வரை பஸ்ல போயி காவடி கூட்டத்துடன் இணைந்து கொண்டோம்.அந்ததூரத்தை நடந்ததே ஒருபெரிய விஷயமா இருந்தது. அந்தமுறை கோயிலில் படிபூஜை(ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றுவது) செய்தோம்.
~~~
இன்னும் இதுபோல நினைவுகள் நிறைய இருக்கு. ஆனா,இதுக்கும் மேல மொக்கை போட்டா படிப்பவர்கள் நொந்து போயிடுவீங்க.
(இனி யாரும் என்ன தொடர்பதிவுக்கு கூப்புடுவீங்க?? மகி-யா?அவங்க ஆரம்பிச்சா நிறுத்தாம டைப் பண்ணுவாங்களே?-ன்னு தெறிச்சு ஓடிருவீங்கள்ல?? ஹிஹிஹி)
~~~
ஜோக்ஸ் அபார்ட், நாக்கடியில் கற்கண்டாக(நன்றி:வைரமுத்து) இனிக்கும் இந்த நினைவுகளை தட்டி எழுப்ப உதவிய புவனாவுக்கு நன்றி!!!விருப்பமிருக்கும் தோழமைகள் தொடருங்களேன்!!

Saturday, August 14, 2010

கோக்கனட் மக்ரூன்ஸ் & விருதுகள்


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~

சமீபத்தில் ஒருநாள் எதேச்சையாக "yum-yum donuts"ல் கோக்கனட் மக்ரூன் சுவைக்க நேர்ந்தது. நான் கண்டெண்ஸ்ட் மில்க் சேர்த்து கோக்கனட் மக்ரூன் செய்திருக்கிறேன்.(இங்கே பாருங்கள்)
இந்த முறை சுவைத்தது,கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருந்தது.மிகவும் ருசியாக இருந்தது.வீட்டில் இதை செய்துபார்க்கவேண்டும் என்று அப்பொழுதே முடிவு செய்து..முயற்சியும் செய்துவிட்டேன். கிட்டத்தட்ட அதே சுவை வந்தது.அடுத்த முறை கடைக்குச் செல்லநேர்ந்தால், அந்த மக்ரூனையும் படமெடுத்து இணைக்கிறேன்.:) இப்போ, ரெசிப்பிக்கு போலாமா?

தேவையான பொருட்கள்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ்-1கப்

(இந்த ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் அமெரிக்கன் சூப்பர்மார்க்கெட்டுகளில் பேக்கிங் செக்ஷ்னில் கிடைக்கிறது)
ஆல் பர்ப்பஸ் மாவு-1/4கப்
பேக்கிங் பவுடர்-1/2ஸ்பூன்
சர்க்கரை-1/4கப்
வெனிலா எஸ்ஸன்ஸ்-2டீஸ்பூன்
வெண்ணெய்-1ஸ்பூன்
முட்டையின் வெள்ளைக்கரு-2

செய்முறை
மாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலித்துவைக்கவும்.
உருக்கிய வெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக்கரு,சர்க்கரை,வெனிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்றாக கலந்துகொள்ளவும்.
அத்துடன் மாவு+பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து, கோக்கனட் ஃப்ளேக்ஸையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.


ஒரு பேக்கிங் ட்ரேயில் கோக்கனட் கலவையை 2ஸ்பூன் அளவுக்கு எடுத்து சற்று இடைவெளி விட்டு வைக்கவும்.

350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 20நிமிடம்(அ) மக்ரூன்கள் பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும்.

கோக்கனட் மக்ரூன் ரெடி! :)

இனிப்பான மக்ரூன்களுடன் எனக்கு கிடைத்த அவார்டுகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.
என் இனிய இல்லத்தின் அன்புதோழி ஃபாயிஸா வழங்கிய விருதுகள்..

நன்றி ஃபாயிஸா!

சமைத்து அசத்தலாம் -ஆசியாக்கா எனக்குத்தரும் மூன்றாவது விருது இது!

மிக்க நன்றி ஆசியாக்கா!

Tuesday, August 10, 2010

பழத்தோட்டம்..

திராட்சைத்தோட்டம்..
ஆரஞ்சுத்தோட்டம்..
ப்ளம்ஸ் தோட்டம்...

இங்கிருந்து ப்ரெஷ்ஷாகப் பறித்த பழங்கள்!
பி.கு. பழம் பறிக்கப்போனதாலதான் ப்ளாக் பக்கம் வரமுடியல..சீக்கிரமா வரேன்.

Thursday, August 5, 2010

அப்பம்

தேவையானபொருட்கள்
பச்சரிசிமாவு-2கப்
வெல்லம்-11/2 கப்(சுவைக்கேற்ப)
ஏலக்காய்-3
கனிந்த வாழைப்பழம்-1
பேக்கிங் சோடா-1சிட்டிகை
பால்-1/4கப்

செய்முறை
வெல்லத்தை கால்கப் தண்ணீர் விட்டு பாகாக காய்ச்சிக்கொள்ளவும்.

மாவுடன் பேக்கிங் சோடா கலந்து,ஏலக்காயைத் தட்டிப்போட்டு, இளம்சூடான பாகையும் சிறிது,சிறிதாக ஊற்றி கலந்து வைக்கவும்.

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்றாக கலந்து,அரிசிமாவுக்கலவையுடன் கலக்கவும்.
பணியாரக்கல்லில் ஒரொரு குழியிலும் கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமானசூட்டில் காயவைத்து,குழியின் முக்கால்பாகம் அளவுக்கு மாவை ஊற்றி பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

சுவையான அப்பம் ரெடி!

குறிப்பு
பொடியாக நறுக்கிய தேங்காயை, சிறிது நெய்யில் வறுத்து மாவுடன் சேர்க்கலாம்.இன்னும் சுவையாக இருக்கும்.
அப்பம் சுட்டுவைத்து மறுநாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Tuesday, August 3, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே..

சமீபத்தில், சிலநாட்களாக சட்னி அரைக்கும்போது, மிக்ஸியில் ஏதேதோ வினோத சப்தங்கள் வர,என்னகாரணம் என்று மண்டையை உடைத்து யோசித்துக்கொண்டிருந்தேன். ரசத்துக்கு புளி கரைக்கையில்தான் அந்த சத்தத்திற்கு என்ன காரணம் என்று தெரிந்தது. கடையில் வாங்கிவந்த புளியில் பாதிக்குப்பாதி புளியங்கொட்டைகள்!! அடுத்தமுறை புளி வாங்கிய உடனே பிரித்து சுத்தம் செய்தபோது...நீங்களே பாருங்களேன்!

குப்பையில் போடும் புளியங்கொட்டைகளுக்கு காசு கொடுத்து வாங்கிவருகிறோமா என்று அங்கலாய்ப்பாய் இருந்தது.(இத்தனை சிரமம் எதுக்கு? புளி பேஸ்ட் வாங்கிக்கலாமில்ல-ன்னு கேட்பீங்க.அதென்னமோ புளி பேஸ்ட்டின் கருப்பு நிறம் எனக்கு பிடிப்பதில்லை.) இந்த வேலை செய்கையில் மனம் பழையநினைவுகளை அசைபோட ஆரம்பித்துவிட்டது.
ஊரிலே எங்கள் வீட்டுப்பக்கம் புளியமரங்கள் அதிகம்..சாய்பாபா கோயிலில் துவங்கி, மேட்டுப்பாளையம் சாலையில் இருமருங்கிலும் பெரியபெரிய புளியமரங்கள் இருக்கும்.

பேருந்து நிறுத்ததில் இறங்கி எங்கள் வீடு சென்று சேரும்வரை உள்ள சாலையும் புளியமரங்களுடையதுதான். கோடைக்காலத்தில் வெயிலின் கொடுமை தெரியாமல் குளுமையான தென்றலுடன், கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சைப்பசேல் என்ற இலைகளுடன் இருக்கும் அந்த மரங்களைப் பார்க்கவே நன்றாக இருக்கும்.

ஆரப்பப்பள்ளியில் படிக்கையில், புளியம்பழம் காய்க்கும் காலங்களில் பொழுது நன்றாகப்போகும்.புளியங்காய் பொறுக்கப்போகிறோம் என்று மரத்தடியிலேயே சுற்றுவோம்..புளியை ஏலம் எடுத்தவர்கள் வந்து புளியமரங்களிலிருந்து அவற்றை பறிக்கையில், எங்க வீட்டுப்பக்கம் பெரும்பாலனவர்கள் அவர்களே நல்ல புளியங்காயா(பழந்தாங்க,ஆனா புளியாங்காய்னு சொல்லியே பழகிடுச்சு.:) ) பார்த்து பொறுக்கி ஐந்து மனு,பத்துமனு(இந்த'னு'வா, இல்ல இந்த 'ணு'வான்னு கொஞ்சம் டவுட்டா இருக்கு..இந்த அளவெல்லாம் இப்ப இருக்கான்னு கூடத் தெரில) இப்படி வாங்கிப்பாங்க.

புளியங்காய் அறுவடைக்காலங்களில் ரோட்டில் நடப்பதே கொஞ்சம் வேடிக்கையா இருக்கும். ஆட்கள் மரத்துமேலே ஏறி புளியங்கிளைகளை பெரிய கொக்கி வைத்து உலுக்குவாங்க..கீழே பெண்கள் தென்னை ஓலையின் நுனியை வைத்துக்கொண்டு, ரோட்டில் விழும் புளியங்காய்களை ஓரமா ஒதுக்குவாங்க. கவனமா பார்த்து நடக்கணும்..இல்லைன்னா மேலே இருந்து விழும் புளியங்காய்களில் அடி வாங்கவேண்டியதுதான்! :):)

ஒவ்வொரு மரத்துக்கும் குறைந்தது 70-80 வயதாவது இருக்கும்.வெயிலின் கொடுமை தெரியாமல் நிழல்குடை பிடிக்கும்..மரங்களின் பசிய இலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.மரத்தின் பட்டை,மற்றும் காய்ந்துவிழும் குச்சிகள் அடுப்பெரிக்க உதவும். புளியங்காய்கள் நமது உணவுக்கு உதவும்.புளியம்பூக்களைக்கூடப் பறித்து சட்னி அரைத்திருக்கோம்..புளியம் பிஞ்சுகளையும் பறித்து பச்சைமிளகாய்,உப்பு சேர்த்து அம்மியில் அரைத்து சுவைத்தால்..ஆஹா!! அருமையா இருக்கும்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையிலேயே மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்துகிறோம் பேர்வழி என்று சாய்பாபா கோயிலில் இருந்து புளியமரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள்.வெட்டப்படும் மரங்களைப் பார்க்கையில் ரத்தக்கண்ணீர் வராத குறைதான்.:( வெறிச்சென்று இருக்கும் சாலையைப் பார்க்கையில் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும்.

இதுமுடிந்து, சிலவருஷங்கள் அமைதியாக இருந்தாங்க..இப்ப செம்மொழி மாநாடு நடத்துகிறோம் பேர்வழி என்று ஏர்போர்ட்,அவினாசி ரோடு,கொடீசியா பக்கமிருந்த மரங்களனைத்தையும் வெட்டிட்டாங்களாம். அந்தசமயத்தில் கோவைக்கு சென்றிருந்த ஒரு சென்னைக்கார நண்பர் ஒரு சந்தோஷமான,பெருமையான குரலில் சொன்னார், "கோயமுத்தூரே மாறிப்போச்சுங்க மகி!சென்னை மாதிரியே பண்ணிருக்காங்க" என்று. எனக்கு அந்தப்பெருமையையும் சந்தோஷத்தையும் முற்றிலுமாக அனுபவிக்கவோ,பகிர்ந்துகொள்ளவோ இயலவில்லை.

மாநாடு முடிந்துவிட்டது..இப்பொழுது, மேட்டுப்பாளையம் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுகிறோம் என்று, மிச்சம் மீதியிருந்த மரங்களையும் வெட்டுகிறார்களாம். :(:(:( ஊருக்கு பேசுகையில்,நம்ம வீட்டருகில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்காங்க என்ற செய்திகள் காதில் விழுகையில் மிகவும் வலிக்கிறது..நான் சிறுவயதில் ரசித்து,அனுபவித்த காட்சிகள் எல்லாம் இனி என் மனதில் மட்டும்தானே?

சாலைகளை அகலப்படுத்துகிறோம்..நான்குவழிச்சாலை அமைக்கிறோம், புறவழிச்சாலை அமைக்கிறோம்,கோவை நகரம் டெவலப் ஆகிறது.. என்று எத்தனையோ காரணங்களிருந்தாலும், அத்தனை வயதான மரங்களை வெட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்கையில்,மொட்டையாக இருக்கும் சாலைகளைக் கடந்துதான் செல்லவேண்டும் என்ற நினைவே கசப்பாய் இருக்கிறது.:(

LinkWithin

Related Posts with Thumbnails