Friday, August 26, 2011

பிட்டர் மெலன் புளிக்குழம்பு

ஒருமுறை காய்கறி வாங்கும்போது பிட்டர்மெலன் என்ற பெயரில், பாகற்காயைப் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமான வடிவத்தில் ஒரு காய் கண்ணில் பட்டது. என் கண்ணில் மட்டும் பட்டிருந்தால் பார்த்துவிட்டு அமைதியா வந்திருப்பேன், என்னவர் கண்ணில் பட்டதால் வாங்கியே ஆகணும்னு அடம்பிடிச்சு வாங்கித் தந்துவிட்டார்! :)

பிட்டர்மெலன் என்பது வேறு எதுவுமில்லை, பாகற்காய் குடும்பத்தின் உறுப்பினரேதான், ஆனால் வடிவம் மட்டும் வேறு. அதனால் ருசி எல்லாம் பாகற்காயைப் போலவேதான் இருந்தது.

வாங்கிவந்து ரெண்டுநாளிலேயே கட் பண்ணிட்டேன்,அதுக்குள்ள விதை பழுக்க ஆரம்பித்திருந்தது, அதனால் அதையெல்லாம் எடுத்துட்டு காயை மட்டும் வில்லைகளாக நறுக்கி, கொஞ்சம் எண்ணெயில் வதக்கி எடுத்துவைச்சேன்.

புளிக்குழம்புக்கு வழக்கம்போல [அது என்ன வழக்கம்?னு புருவத்தை தூக்காம, பொறுமையாப் படிங்கோ..பின்னாலயே அதுக்கு செய்முறையும் தொடருது. :)] வறுத்து அரைச்சு, தாளிச்சு கொதிக்கவிட்டு வதக்கிய காயையையும் போட்டு வேகவிட்டா குழம்பு ரெடி! :)

வறுத்து அரைக்க
சின்ன வெங்காயம்-7
வரமிளகாய்-6
தக்காளி(மீடியம் ஸைஸ்)-2
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
க.பருப்பு-1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1/4கப்

இதையெல்லாம் கொஞ்சம் எண்ணெயில் வதக்கி,ஆறவைச்சு கொஞ்சமாத் தண்ணி ஊத்தி அரைச்சு வைச்சுக்குங்க. கெட்டியான புளிக்கரைசல் கால் கப்பும் ரெடியா வச்சுக்குங்க.

தாளிக்க
கடுகு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
சின்ன வெங்காயம்-7 (அ) பெரிய வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
மஞ்சள்த்தூள்-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு

எண்ணெய் காயவைத்து கடுகு தாளிச்சு, வெங்காயம்-மிளகாய்-கறிவேப்பிலை வதக்கி, அரைத்த மசாலா, புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீரும் ஊத்தி கொதிக்க விடுங்க. குழம்பு நல்லாக் கொதிச்சதும், வதக்கிய பிட்டர் மெலனை சேர்த்து வேகவையுங்க. காய் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிருங்க.

சுவையான பிட்டர்மெலன்(!) புளிக்குழம்பு ரெடி! சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். தோசையுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும்.

Monday, August 22, 2011

கோடைக்கொண்டாட்டம்-3

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க ஒரு முக்கியமான ஹெல்த்தி எஸ்கேப் பழங்கள்தான்! பழங்களை ஜூஸாகவோ, ஸ்மூத்தி-மில்க் ஷேக் ஆகவோ குடிக்கறதை விட நறுக்கி அப்படியே சாப்பிடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா என்னவருக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் கூட ஆரஞ்ச் ஜூஸ் இல்லைன்னா சாப்பிடவே மாட்டார். அதனால் ஒரு "ஸிம்ப்ளி ஆரஞ்ச்-ஒரிஜினல்" ஜூஸ் பாட்டில் எங்க ஃப்ரிட்ஜில் இருந்துட்டே இருக்கும்.

நான் சீஸனுக்கேத்த பழங்களா வாங்கிருவேன். ஸம்மர் ஃப்ரூட்ஸ்லிலே முக்கியமானது கேன்டலூப்(canteloupe) (நம்ம ஊர்ல கிர்ணிப்பழம்னு சொல்லுவாங்களோ இதை?) இந்தப்பழம் சூப்பரா இருக்கும். பீக் ஸீஸன்லே $0.99கெல்லாம் சூப்பர் பழம் கிடைக்கும். ஹனி டியூ மெலன் என்று ஒரு பழமும் இருக்கு,அதுவும் வாங்குவோம்.

பழத்தை வாங்கிவந்த உடனே நறுக்காம 2-3 நாள் வைச்சிடணும், நல்லா பழுத்ததும் கேன்டலூப் நல்லா மணக்கும், அப்ப நறுக்கி, தோல் சீவி சின்னத்துண்டுகளா நறுக்கி டப்பாலே போட்டு ப்ரிட்ஜ்லே வைச்சுடலாம். வெயில் நேரத்திலே சில்லுன்னு சாப்பிட நல்லா இருக்கும். எனக்கு சிலநாள் இதுவே லன்சா ஆகிடும்! ;)

NB.படத்தில் இருக்கற பூ கார்விங் நான் செய்ததிலை மக்களே..அதுவும், இன்னும் சில படங்களும் கூகுள் இமேஜஸ்லே சுட்டது! ;)
~~~~
ஊரில் பப்பாளியெல்லாம் காசு குடுத்து வாங்கியதா சரித்திரமே இல்லை, இங்கே ஒரொரு பழம் குறைந்தது $4 இருக்கும்! அம்புட்டு காஸ்ட்லீ!! பப்பாளிப் பழ(த்தையு)ம் நறுக்குவது எப்படின்னு ஒரு தனிப் பதிவு போட நினைச்சேன், ஆனா பாருங்க, உங்க நல்ல நேரம்,மனசை மாத்திகிட்டேன். ஹிஹி! சரி வாங்க, பப்பாளி நறுக்குவோம்!
பப்பாளிப் பழத்தை அதோட தலைப்பக்கம் கொஞ்சம் வட்டமா நறுக்கி தூரப்போட்டுடுங்க. அப்புறம் பீலர் அல்லது கத்தி ரெண்டுல எது உங்களுக்கு வசதியா இருக்கோ அதால பழத்தின் தோலை சீவிருங்க. பழத்தை ரெண்டாப் பிளந்து ஒரு ஸ்பூன் வச்சு விதையெல்லாம் எடுத்துருங்க.
அப்புறமா நீளநீளத்துண்டுகளா நறுக்குங்க.

அப்பவே சாப்பிடறதா இருந்தா ஒரொரு துண்டையும் ஒரொரு ஆளுக்கு குடுத்திரலாம். வைச்சு சாப்பிடறதா இருந்தா இப்படி bite size துண்டுகளா நறுக்கி டப்பாலே போட்டு ப்ரிட்ஜ்லே வைச்சு வைச்சு சாப்பிடலாம்! :)

இந்தப்பழம் பார்க்கறதுக்கு சூப்பர் கலரா இருந்தது, ஆனா இனிப்பு இல்லை. :-| ஆனா எனக்கு பப்பாளின்னு பேப்பர்ல எழுதிகுடுத்தாக்கூட சாப்பிடுவேன், அதனால நோ ப்ராப்ளேம்! :)
~~~
சில பழங்கள் அவருக்கு புடிக்காது,நானே வாங்கிவந்து, நானே கட்பண்ணி, நானே சாப்பிட்டு முடிப்பேன். :) அந்த லிஸ்ட்லே இருப்பது இந்தப் படத்தில் இருக்கும் பழங்கள். ஆப்பிள், பியர்,ஸ்ட்ராபெரி,திராட்சை ,தர்பூசணி. இதெல்லாம் அவர் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார். எனக்கு தர்பூசணியைத் தவிர மற்ற பழங்களை நறுக்கக்கூட வேண்டாம், கழுவி அப்புடியே :) சாப்பிடுவேன்.
ஆப்பிள்ள Gala ஆப்பிள்தான் கொஞ்சம் நம்ம ஊர் ஆப்பிள் போல ருசி இருக்கும். அதனால் மத்த வெரைட்டி ஆப்பிள் வாங்க மாட்டேன். பியர் பழத்தில் bosc pear-தான் வாங்குவேன். ஸ்ட்ரா பெரி-திராட்சைல எந்த கட்டுப்பாடும் இல்ல! ;) தர்பூசணியை வழக்கம்போல கட் பண்ணி, சின்னத்துண்டுகளா நறுக்கி வைச்சிருவேன். அது புண்ணியம் செஞ்சிருந்தா எப்பவாவது ஒரு முறை என்னவரின் கருணைப்பார்வை அதுமேலே விழும்! ;)
~~~
இந்தப் படத்தில் ப்ளூ பெரி, ராஸ் பெரி, ப்ளாக் பெரி பழங்கள் இருக்கு. மூணு பழங்களுமே (என்னைப் பொறுத்தவரை) போட்டோஜெனிக் பழங்கள்! ;) பார்க்க அழகா இருக்கும், ஆனா ருசி ஆஹா-ஓஹோன்னு சொல்ல முடில! ப்ளூ பெரி ஓக்கே. மத்த ரெண்டு பழங்களும் புளிப்ப்ப்ப்ப்ப்ப்பூ!!

தெரியாம வாங்கிட்டு வந்துட்டேன், சாப்பிடவே முடில. வேற என்ன செய்யலாம்னு தேடினா..பான்கேக், கேக், மஃபின் ரெசிப்பிகள்தான் கண்ணில் பட்டுது. ஹெல்த்தியா சாப்பிடணும்னு பழம் வாங்கிட்டு வந்து கேக் பண்ணுவியான்னு என் மனசாட்சி கேட்டதால் அந்த ஆப்ஷனையும் விட்டுட்டேன். ;) நான் வாங்கிய நேரம் இதெல்லாம் புளிக்குதோ, இல்ல ருசியே இப்புடித்தானோ தெரில, எல்லாம் ஒரு அனுபவம்தான்! இனிமேல் வாங்கமாட்டம்ல?! ;)

கோடைக் காலம் கிட்டத்தட்ட முடிஞ்சு இலையுதிர்காலம் தொடங்கப்போகுது. மூணு பகுதியா நான் போட்ட மொக்கையை சகித்து, பொறுமையாப் படிச்சு கமென்ட் போட்டு என்னுடன் கோடையைக் கொண்டாடிய அன்புள்ளங்களுக்கு நன்றி! :)

Thursday, August 18, 2011

வெண்டைக்காய் தயிர்ப் பச்சடி


வெண்டைக்காய் சாப்பிட்டா ஞாபகசக்தி அதிகரிக்கும்னு சொல்லுவாங்க. சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!;) ;) உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு சுவையான ரெசிப்பி இது. பொதுவா வெண்டைக்காயை வதக்கறதுதான் கொஞ்சம் நச்சுப் புடிச்ச வேலை. இந்த ரெசிப்பியில் அதுக்கு ஒரு ஈஸி டெக்னிக் சொல்லிருக்கேன், ட்ரை பண்ணிப் பாருங்க!

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய்-10
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-1கொத்து
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு-1 டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
வெண்டைக்காய்-வெங்காயம்-பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் நறுக்கிய வெண்டைக்காய்த் துண்டுகளை (ஒவ்வொன்றாக இருக்கும்படி) பரப்பி, 300F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 10 நிமிடங்கள் bake செய்யவும். ட்ரேயை வெளியே எடுத்து வெண்டைக்காய்த் துண்டுகளை திருப்பிவிட்டு மீண்டும் 6-7 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். காய் மொறுமொறுப்பாய் வெந்திருக்கும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பேக் செய்த வெண்டைக்காய்களை சேர்த்து,தேவையான உப்பும் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி ஆறவிடவும்.

தயிருடன் கொஞ்சமாக(காயில் உப்பு சேர்த்திருக்கோம்,கவனமாப் போடுங்க) உப்பு சேர்த்து கடைந்துவைக்கவும். சாப்பிடும் முன்பு தயிருடன் வெண்டைக்காய்க் கலவையைக் கொட்டி கலந்து விடவும்.

சுவையான வெண்டைக்காய் தயிர்ப்பச்சடி ரெடி. வெண்டைக்காயை தயிருடன் கலந்தவுடன் பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தாளிதம் செய்த பருப்புகள்-வெண்டைக்காய் எல்லாம் தயிரில் ஊறிப்போய்விடும். அதனால் பரிமாறுமுன் கலந்து பரிமாறுங்க.

******
வெண்டைக்காய் சாப்பிட்டா ஞாபகசக்தி அதிகரிக்கும்னு சொல்லுவாங்க. சிலருக்கு தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு போன பிறவி நினைவெல்லாம் வந்துட்டதா கேள்வி!:) இப்ப எதுக்கு இத மறுபடி சொல்றேன்னு பாக்கறீங்களா?! நீங்க எல்லாரும் என்னைய மறக்காம இருக்கோணும்ங்கறதுக்காகத்தான்! :)

நாம்பாட்டுக்கு ஒரு மாசம் வெகேஷன்ல போயிட்டு, வழக்கமா அடிக்கிற கமென்ட் கும்மிக்கெல்லாம் வரமுடியாம ஜாலியா ஊர்சுத்திட்டு வர, நீங்க எல்லாரும் "யாரிது??"ன்னு கேட்டுரக்கூடாதில்ல?! அதுக்குத்தான் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒரு ரெசிப்பியா போஸ்ட் பண்ணிட்டுப் போறேன்.

விட்டது தொல்லைன்னு பெருமூச்சு விடற சத்தம் புயல் காத்து மாதிரி வருது, எதுக்கு இம்பூட்டு சந்தோஷம்?!! நேரம் கெடைக்கறப்பவெல்லாம் அங்கங்கே எட்டிப் பார்ப்பேன், ஜாக்கிரதை! செப்டம்பர் கடைசில மறுபடியும் வழக்கம்போல உங்க எல்லாரையும் தொந்தரவு பண்ண வந்துருவேன்! :)

டாட்டா,பை பை!!

Monday, August 15, 2011

Chaat பாட்லக் பார்ட்டி

பார்ட்டி-கெட் டு கெதர் வைத்து கொஞ்ச நாட்களாகிவிட்டதால் நண்பர் ஒருவரின் அபார்ட்மென்ட் க்ளப் ஹவுஸில் இந்த வாரம் ஒரு "chaat" பார்ட்டி அரேஞ்ச் செய்திருந்தோம். என்னவரின் ப்ராஜெக்ட்டில் எங்களையும்,இன்னொருவரையும் தவிர எல்லாருமே வட இந்தியர்கள். எல்லாரும் சாட் ஐட்டங்களில் தூள் கிளப்பிருந்தாங்க.

பார்ட்டியை முடிவு செய்து எனக்கு வந்த மெய்லிலேயே மெனு கார்டில் என் பேருக்கு நேரா இருந்த ஐட்டம்...கான்ட்வி! :) :) :) பார்ட்டி டிஸ்கஷன்ம்போது என்னவர் நான் செய்த கான்ட்வியின் புகழைப் பாடி(!), ப்ளாகில் இருக்கும் கான்ட்வியையும் காட்டியிருக்கார். [சந்தேகம் கேட்ட பார்ட்டிங்க(இது வேற பார்ட்டி;)) எல்லாரும்...."நோட் திஸ் பாயின்ட்!"]. அப்புறம் என்ன..எங்க வீட்டிலிருந்து கான்ட்வி-ன்னு முடிவு பண்ணிட்டாங்க. :)

5 மணிக்குப் பார்ட்டின்னு டைம் ஃபிக்ஸ் பண்ணிருந்தாலும், அடிச்ச வெயில்ல ஆடிப்பாடி(!) எல்லாரும் போய்ச் சேரவே 7 மணி ஆகிடுச்சு. ஈவினிங் ஸ்னாக் பார்ட்டியாக இருந்திருக்க வேண்டியது டின்னர் பார்ட்டியா ஆகிட்டது. லஸ்ஸி-நீர்மோருடன் முதலில் சாப்பிட்ட ஐட்டம் புனே ஸ்பெஷல்.."கட் வடா". பவுல்ல ரெண்டு கரண்டி க்ரேவிய ஊத்தி ரெண்டு வடைய வைச்சு, பச்சைவெங்காயம் தூவி கொஞ்சம் லெமன் ஜூஸ் புழிஞ்சு... ஸ்ஸ்ஸ்ஆஆஆ! சூப்பரா இருந்தது போங்க! :P :P

கட் வடா-ல இருந்த க்ரேவி ரசம் மாதிரி ரொம்ப தண்ணியா இருந்தது. ஆனா சூப்பர் டேஸ்ட்டு. வடா வேற ஒண்ணுமில்ல, நம்ம ஊரு உருளைக்கிழங்கு போண்டா!! அடுத்தது பனீர் கபாப்..அது காலியான வேகமே தெரியாம ட்ரே எம்ட்டி!! :)

அத்தோட சாப்பாட்டுக்கடைய டெம்ப்ரவரியா மூடிட்டு கொஞ்சம் கேம்ஸ் விளையாடினோம். மொத்த ஆட்களும் ரெண்டு டீமாப் பிரிச்சு, ஒவ்வொரு டீமுக்கும் ஒரு ரெப்ரஸென்டேட்டிவ் செலக்ட் பண்ணிக்கணும். விளையாட்டை நடத்துறவங்க சீட்டு குலுக்கி போடுவாங்க, ஒவ்வொரு முறையும் ஒரொரு டீமின் ரெப்ரஸென்டேட்டிவ் சீட்டை எடுக்கணும். அந்த சீட்டில் ஹால்ல இருக்க பொருட்களில் ஏதாவதொன்றின் பெயர் இருக்கும். உதாரணத்துக்கு "ப்ளாக் லேடீஸ் ஹேண்ட் பேக், மூவி டிக்கட், தங்க வளையல், பச்சைக்கலர் பலூன், ப்ளூ பால்பாய்ன்ட் பென் இப்படி. ரெண்டு டீமும் "பெக், பாரோ ஆர் ஸ்டீல்" எதுவேணாலும் செய்து அந்தப் பொருளை எடுத்து டீமின் ரெப்ரஸென்டேட்டிவ் அதைக் கொண்டு போய் கேமை நடத்துபவர் கிட்ட கொடுக்கணும். இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது கேம்.

இங்கே இன்னொரு ஸீக்ரட் சொல்லறேன் உங்களுக்கு. டீம்ஸ் பிரிக்கறதுக்கு எல்லாரையும் லைனா 1 -2-1-2-1-2ன்னு சொல்லச்சொல்லுவாங்க. 1 சொன்னவங்க எல்லாம் ஒரு டீம், 2 சொன்னவங்க எல்லாம் அடுத்த டீம். நானும் என்னவரும் நம்பர் சொல்லும்போது கரெக்ட்டா எங்களுக்கு நடுவில் ஒரு ஆள் மட்டும் இருக்கறமாதிரி பார்த்துக்குவோம். எதுக்குன்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்குப் பரிசு கடேசிப் படத்தில் இருக்கு! ;) ;)

அடுத்த கேம் இன்னும் கொஞ்சம் காமெடியா இருக்கும். ரெண்டு டீம் ஆட்களும் ரெண்டு வரிசைல கைகளைக் கோர்த்து லைனா நின்னுக்கணும். லைனோட எண்ட் பாயின்ட்டுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு டேபிள்ல ஒரு ப்ளாஸ்டிக் கப்பை வைச்சிரணும். லைனோட அடுத்த முனைல கேம் நடத்துபவர் நிற்பார். ஒவ்வொரு டீமிலும் அவர் பக்கத்தில் இருக்கும் ஒரு ஆள் மட்டும் கண்ணைத் திறந்துட்டு, மற்றவங்க எல்லாரும் கண்ணை மூடிக்கணும்.

கேம் நடத்துபவர் ஒரு காயினை டாஸ் பண்ணுவார், தலை விழுந்தா வரிசையின் முதலில் கண்ணைத் திறந்து பார்த்துட்டு இருப்பவர் அடுத்த ஆளின் கைவிரலை அழுத்தணும், அப்படியே அந்த ஸிக்னல் அடுத்தடுத்த ஆட்களுக்கு பாஸ் பண்ணனும். கடைசி ஆளுக்கு ஸிக்னல் கிடைத்ததும் அவர் ஓடிப்போய்(அஃப்கோர்ஸ் கண்ணைத்திறந்துட்டுதான்!:) ) டேபிள்ல இருக்க கப்பை எடுக்கணும். எந்த டீம் முதல்ல கப்பை எடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு பாயின்ட்! ஸப்போஸ் காயினை டாஸ் பண்ணும்போது பூ விழுந்தா ஸிக்னல் தரக்கூடாது. அவசரப்பட்டு ஸிக்னல் குடுத்து கப்பை எடுத்துட்டா அந்த டீமுக்கு நெகடிவ் பாயின்ட்! இதிலே எங்க டீம்தான் வின் பண்ணிச்சு! :)

சரி,ரொம்ப விளையாடிட்டோம்னு அடுத்த ரவுண்டு சாப்டப் போனோம். Ragada patty-ன்னு ஒரு டிஷ். உருளைக்கிழங்கு கட்லட் மாதிரி செய்திருந்தாங்க. அது மேலே பட்டாணி க்ரேவி ஊத்தி, ஸ்வீட்-க்ரீன் சட்னி, ஆனியன் ஸ்ப்ரிங்கிள் பண்ணி, லெமன் ஜூஸ் சேர்த்து சாப்பிடணும். அப்புறம் சமோஸா, டோக்ளா,பானி பூரி,கான்ட்வி, Chole-chaat இப்படி நிறைய இருந்தது. உங்க எல்லாருக்காகவும் ஒரு(!) பானிபூரி, டைட் க்ளோஸப்புல....என்சொய்!!! ;) ;)

மேலே சொல்லி இருக்க உணவுவகைகளை எல்லாம் சாப்பிட்டு முடிக்கைலயே லேட்டாகிடுச்சு. Bhel pooriக்கும் ரஸமலாய்க்கும் டைம் இல்ல, பூரிய கான்ஸல் பண்ணிட்டு, ரஸமலாயை pack பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம். பார்ட்டி டைம் ஃபிக்ஸ் பண்ணும்போது தெரில, ஆனா கரெக்ட்டா சுதந்திர தினத்தன்னிக்கு ஒரு கெட் டு கெதர் நடந்தது ஒரு ஸ்வீட் கோ-இன்ஸிடென்ஸ்! :):) எல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சரி, நம்பர் சொல்லும்போது எங்களுக்கு இடைல எதுக்கு கரெக்ட்டா ஒரு ஆளை நிக்கவச்சிக்கிறோம்னு கண்டு புடிச்சிட்டீங்களா? நீங்கல்லாம் கற்பூரம்ல? கட்டாயம் கண்டுபுடிச்சிருப்பீங்க, ரஸமலாய் எடுத்துக்குங்க! ;)

படிக்கறவங்களை ரொம்ப போர் அடிக்கலைன்ற நம்பிக்கையோட(?!) இந்தப் போஸ்ட்டை இத்தோட முடிச்சிக்கறேன்,நன்றி வணக்கம்!

Thursday, August 11, 2011

காண்ட்வி ரெசிப்பி & முன்கதை

தேவையான பொருட்கள்
கடலைமாவு -1/4கப்
தயிர்-1/4கப்
தண்ணீர்-1/2கப்
மஞ்சள்த்தூள்-1/8டீஸ்பூன்
பச்சைமிளகாய்-இஞ்சி பேஸ்ட்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
மேலே தூவ
தேங்காய்த்துருவல்-11/2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி இலை -11/2டேபிள்ஸ்பூன்

செய்முறை
அகலமான எவர்சில்வர் தட்டு (அ) அலுமினியம் ஃபாயில் பேப்பரில் எண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நன்றாக கடைந்த தயிர், கடலைமாவு, தண்ணீர், மஞ்சள்தூள்,பச்சைமிளகாய்-இஞ்சி பேஸ்ட்,உப்பு,சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைமாவுக் கலவையை கை விடாமல் கிளறவும். மாவு கட்டி தட்டிவிடாமல் கிளறிட்டேஏஏஏ இருக்கணும். :)

சுமார் 10-15 நிமிடங்களில் கடலைமாவு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். அப்பொழுது மாவை எடுத்து எண்ணெய் தடவிய தட்டின் ஒரு ஓரத்தில் வைத்து, தோசை திருப்பி(அ) flat-ஆன கரண்டியால் மெல்லியதாக ஒரே சீராகத்தடவி விடவும்.

2-3 நிமிடங்களில் மாவுக்கலவை ஆறிவிடும். கத்தியால் 11/2" அகலமுள்ள துண்டுகளாக நறுக்கிவிடவும்.

நறுக்கிய துண்டின் ஓரத்தை எடுத்து பாய் சுருட்டுவது போல சுருட்டவும்.

கீழுள்ள படத்தில் இருப்பது அலுமினியம் ஃபாயில் பேப்பரில் தடவிய கடலைமாவு கலவை. எவர்சில்வர் தட்டுகளில் தடவி சுருட்டுவதுதான் ட்ரெடிஷனல் முறையாம். ஆனா நம்ம கிட்ட அவ்வளோ பெரிய தட்டுக்கள் இல்லாததால் இப்படி எண்ணெய் தடவிய ஃபாயில் பேப்பர் (அ) எண்ணெய் தடவிய கிச்சன் டேபிள் டாப்லயும் தடவி கட் செய்து எடுக்கலாம்.

சுருட்டிய காண்ட்விகளை பரிமாறும் தட்டில் அடுக்கவும்.

எண்ணெய் காயவைத்து கடுகு-எள் தாளித்து காண்ட்வி மீது ஊற்றிவிட்டு, தேங்காய்த்துருவல்-கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சுவையான காந்த்வி/கான்ட்வி/காண்ட்வி :))) ரெடி!

குறிப்பு
  • கடலைமாவை கட்டியில்லாமல் கரைப்பது முக்கியம். மாவை சலித்து உபயோகிக்கலாம்.
  • மாவு வேகும்போது ஒரு செக்கன்ட் அங்கே இங்கே திரும்பினீங்கன்னாலும் கட்டி விழுந்திரும், ஜாக்கிரதையாக் கிண்டுங்க! இதான் கொஞ்சம் கஷ்டமான பார்ட்டு! (மைசூர்பாவே கிண்டறவங்க, இதைக் கிண்டமாட்டோமா என்ன? ;) )
  • அதே போல கடலைமாவு நன்கு வந்திருந்தால்தான் ஃபாயில் பேப்பரில் இருந்து சுருட்ட முடியும். வேகாம இருந்தா மாவு பேப்பரைவிட்டு வராது! ஆல் த பெஸ்ட்டூஊஊஊ!
/செஞ்சது சரி...!!!! அது நல்லா இருந்துச்சுன்னு சொன்னாறா அதான் கேள்வியே ஹி...ஹி..!!/ என்று டவுட்டு கேட்ட ஜெய் அண்ணாவுக்காக சுடச்சுட இப்ப பத்து நிமிஷம் முந்தி செய்த காண்ட்வி! ருசி நல்லா இல்லைன்னா அடுத்தவாரமே மறுபடி செய்திருக்கமாட்டேன்! கர்ர்ர்ர்ர்ர்! அடுத்தமுறை செய்யும்போது காலியான தட்டையும் போட்டு எல்லாரையும் கடுப்பேத்தறேன், இப்போ டவுட்டு கேட்டு டைமை வேஸ்ட் பண்ணாம,இங்க இருக்கிறத கண்ணால சாப்பிட்டுட்டு, சட்டுபுட்டுன்னு கிச்சனுக்குப் போயி காண்ட்விய செய்து சாப்பிடுங்க! ;)


***************
கடந்த பதிவில் சொல்லியிருந்த கோயிலுக்கும் எங்க வீட்டுக்கும் இடையில் சின்னதாக(!) ஒரு லிட்டில் இண்டியா ஏரியா இருக்கிறது. நகைக்கடை-துணிக்கடை-பாத்திரக்கடை-மளிகைக்கடை-உணவகங்கள் என்று எல்லாக் கடைகளும் இருக்கு அங்கே. முதல்முறை போனபோது ஆஹா,இந்தியாவுக்கே போயிட்டோமோ என்று தோன்றியது! :)

கோயிலுக்குப் போகையில் பெரும்பாலும் இந்த லிட்டில் இண்டியாவுக்கும் போய் (ஷாப்பிங் செய்தது ஒரு காலம், இப்பல்லாம் பக்கத்திலிருக்கும் இண்டியன் ஸ்டோர்லயே தன்னிறைவு அடைந்தாச்சு.ஹிஹி) உணவை முடித்துக்கொண்டு வருவோம்.

நாங்கள் பெரும்பாலும் செல்வது "ராஜ்தானி" என்ற ரெஸ்டாரன்டுக்கு. ராஜ்தானி ரெஸ்டாரன்ட் செய்ன் டெல்லி, மும்பை,பெங்களூர்லயும் இருப்பதா கேள்விப்பட்டேன். இது குஜராத்தி உணவகம். வெங்காயம்-பூண்டு இல்லாத சமையல், ப்ரேக்ஃபாஸ்ட்-லன்ச்-டின்னர் என்று இல்லாமல் நாள் முழுவதும் ஒரே மாதிரியான சிஸ்டம் அங்கே. ஜெனரலாக ஒரு thali, ரீசனபிள் விலை,சூடான உணவுகள், நல்லகவனிப்பு! ஹைவேயின் ட்ராஃபிக்கில் நொந்து நூடுல்ஸாகி பசியோடு அங்கே போய் உட்கார்ந்தம்னா...உணவு ஐட்டங்கள் இந்த ஆர்டர்லே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்!
1. தண்ணீர் + நீர்மோர்
2. சுட்ட அப்பளம் + தக்காளி-வெங்காயப் பச்சடி ,ஸ்வீட் சட்னி,க்ரீன் சட்னி, ஊறுகாய்
3.டோக்ளா (அ) காந்த்வி
4. வடை(அ) பஜ்ஜி (அ) கச்சோரி இப்படி ஏதாவதொரு ப்ரைட் ஐட்டம்
5.ஐந்து வித சைட் டிஷஸ்
i).khadi (வட இந்திய மோர்க்குழம்பு)
ii).தால்(அ) சாம்பார்
iii).பீன்ஸ்
iv).எதாவது ஒரு காய்கறி
v).பனீர் (அ) ஏதாவதொரு ரிச் க்ரேவி
6.ஆம் ரஸ் (இனிப்பூட்டப்பட்ட மாம்பழக்கூழ்)
7.சூடான சப்பாத்தி-பூரி
8.சூடான சோறு-கிச்சடி
9.உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிய பச்சைவெங்காயம், பொரித்த பச்சைமிளகாய்
10. இனிப்பு
i).கேரட் ஹல்வா
ii).சுரைக்காய் ஹல்வா
iii).மோகன்தால்(கடலைமாவு ஹல்வா)
iv).ஸ்ரீகண்ட் (அ) பால் ஹல்வா
v).குலாப்ஜாமூன்
இதுதாங்க ராஜ்தானியின் 24/7 மெனு! சைட் டிஷ் வகைகள் அவ்வப்பொழுது மாறும்,ப்ரைட் ஐட்டங்களும் அவ்வப்பொழுது மாறும். இனிப்பு வகைகள் தவிர எல்ல்ல்ல்ல்ல்ல்லாமே அன்லிமிட்டட்!! ;) விலையும் ரொம்பவுமே ரீசனபிள்தான். பஃபே எல்லாம் இல்லை, நம்ம பாட்டுக்கு போனதும் டேபிள்ள உக்காந்திரலாம், தட்டு + 5 பவுல் வச்சிருப்பாங்க. எல்லா ஐட்டங்களும் சுடச்சுட கொண்டுவந்து பரிமாறுவாங்க. நீங்க போதும்னு சொல்லறவரை பரிமாறுவதை நிறுத்த மாட்டாங்க.

இன்டர்நெட்டிலிருந்து கிடைத்த சிலபடங்கள் உங்கள் பார்வைக்கு..

என்ன ஐட்டம் பரிமாறுகிறோம் என்று பெயரைச் சொல்லிச்சொல்லித்தான் பரிமாறுவாங்க. சர்வர்ஸ்ல நிறையப் பேர் மெக்ஸிகன்ஸ் இருப்பதால், அவங்க கஷ்டப்பட்டு உணவுவகைகளின் பேரைச் சொல்வது பாராட்டப்படவேண்டிய ஒன்று!

ருசி பற்றி சொல்லணும்னா டோக்ளா,காந்த்வி, சப்பாத்தி இந்த மூணும் ரொம்ப ரொம்ப ஸாஃப்ட் அன்ட் டேஸ்ட்டியா இருக்கும். சப்பாத்தி பூ மாதிரியே இருக்கும், சுடச்சுட வரும் வடை/பஜ்ஜி/பகோடாவும் நல்லா இருக்கும். நாலைந்து பேர் உணவுத்தட்டுக்களுடன் ஒவ்வொரு டேபிளா கவனித்தபடியே ரெஸ்டாரண்டினுள் சுத்திட்டே இருப்பாங்க. திருப்தியா சாப்ட்டுட்டு வரலாம்.

சைட்டிஷஸ்ல ரிச் க்ரேவி நல்லா இருக்கும்,Dry காய்கறி டிஷ்-ம் நல்லா இருக்கும்.,பீன்ஸ்கறி (பச்சைக்கலர் பீன்ஸ் இல்லீங்க..ட்ரை பீன்ஸ்..கொ.கடலை, வெள்ளை காராமணி, இப்படி!) ஓக்கேவா இருக்கும். தால்(சாம்பார்)- khadi (நார்த் இண்டியன் மோர்க்குழம்பு) இரண்டும் ரெம்ப சுமார்தான்! மே பி வட இந்தியர்களுக்கு பிடிக்குமா இருக்கலாம். ;)
பலமுறைகள் போனதால் எல்லா இனிப்புவகையும் ருசி பாத்தாச்சு. ;) அங்கிருக்கும் இனிப்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது ஃபலூடாதான்! :P :P ராஜ்தானி பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துக்க ஆர்வமா இருந்தீங்கன்னா இங்கே மற்றும் இங்கே க்ளிக் செய்து பாருங்க. ரசிச்சு ரசிச்சு எழுதிருக்காங்க. :)

நாங்க அங்கே சாப்பிடப்போன நேரங்களில் எல்லாம் அபெடைஸராக டோக்ளாதான் இருந்திருக்கிறது. கடைசி முறை இந்த khandvi பரிமாறினாங்க. என்னவருக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிச்சிருச்சு. "நீ ஏன் இதெல்லாம் செய்யறதில்ல?"ன்னு கேட்டார். கிடைச்சது சான்ஸுன்னு ரெசிப்பிய தேடிப்பிடிச்சு செய்தாச்சு! :))))

Tuesday, August 9, 2011

கோயிலும் சில சுவாரஸ்யங்களும்...

இந்தக் கோயில் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு-மூன்று மணிநேரப் பயணத்தில் இருக்கிறது. மூலவர் பெருமாள், அருகிலேயே சிவபெருமானுக்கும் தனிக்கோயில். பாலாஜி கோயிலினுள் ராமபிரான், பத்மாவதித் தாயார்,ஆண்டாள், ராதாகிருஷ்ணர், ஆஞ்சனேயர் சந்நிதிகள் இருக்கின்றன.

மேலே உள்ள படத்தில் வலது ஓரத்தில் இருப்பது சிவன் கோயில். சிவபெருமானுடன் விநாயகர்,முருகர், மீனாட்சி, நடராஜர், நவக்கிரஹ சந்நிதிகள் இங்கே இருக்கு. உள்ளே நுழைந்துட்டா யு.எஸ்.ஸில் இருக்கிறோம் என்பதே மறந்துடும், அப்படியே நம்ம ஊர்க் கோயில்கள் போல உணர்வு வந்துவிடும். :)

இந்தப் படத்தில் பாலாஜி கோயிலின் நுழைவு வாயில் கோபுரம். சிவன் கோயிலில் ஒருவர் மும்முரமாகப் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தார். எங்க ஊரில் கோயில் கோபுரங்கள் பலவண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு இருக்கும், இங்கே வெள்ளை நிறமாகவே பெயின்ட் அடிக்கிறீங்களே ஏன்னு கேட்டோம்.

கலர்ஃபுல்லாக பெயின்ட் அடித்தால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து விபத்துக்கள் நேர்ந்துவிடும் என்ற காரணத்தால் எல்லாக் கோயில்களும் பெரும்பாலும் வெள்ளைநிறத்தில்தான் இருக்குமாம். அந்த பெயின்ட்டருக்கு கோபுரங்களில் இருக்கும் சிலைகளைப் பார்த்து மிகவும் ஆச்சரியம். அழகான சிற்பங்களை ரசித்தவாறே பெயின்ட் செய்துகொண்டிருக்கிறேன், சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை உங்க ஊருக்கு வந்து மற்ற கோயில்களையும் பார்க்கணும் என்றார்.

கோயிலின் உட்புறத் தோற்றம்..வெயில் காலங்களில் பிரகாரத்தை சுற்றிவரும் பாதையில் பச்சைநிறத்தில் கார்ப்பெட் விரித்திருக்கிறார்கள். சிலசமயங்களில் கூரையும் போடுவார்கள் போலும்..அந்த அலுமினியக் கம்பங்கள் அதற்குத்தான் என்று நினைக்கிறேன். இந்தக்கோயில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிறதாம். மிகவும் அழகான கோயில். என்ன ஒன்றே ஒன்று, கோயிலுக்குப் போய்விட்டு வீடு வந்து சேரும்போது ஒரு பெரீஈஈஈய்ய ட்ரிப் போய்விட்டு வந்தது போல இருக்கும்..அந்த அளவுக்கு ட்ராஃபிக்! ;)

சரி, கோயிலுக்குப் போயாச்சு, சாமியும் கும்பிட்டாச்சு, இனி நம்ம வேலையைக் கவனிப்போமா? ஒரு முறை கோயிலுக்குப் போயிருந்தபோது, ஆஞ்சநேயர் சந்நிதிக்கருகில் குருவிகளின் குரல் பலமாக ஒலித்தது! அண்ணாந்து பார்த்தால்...

இங்கே எங்க வீட்டருகே கூடுகட்டியிருந்த அதே குருவிக்கூட்டம்..கோயில் கோபுரத்தையும் விட்டுவைக்காமல் கூடு கட்டி சந்தோஷமா இருந்தாங்க! :)
அத்திப்பழம்(figs) நான் இதுவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. சமீபத்தில் மார்க்கெட் போயிருந்தபோது உலர்ந்த அத்திப்பழங்கள் வைத்திருந்தார்கள். சூப்பராக இருந்தது.

இந்தமுறை கோயிலுக்குச் சென்றபோதுதான் அங்கிருந்த அத்திமரத்தைப் பார்த்தேன். ஏதோ காய் என்று கடந்து செல்கையில் அணில் கடித்த காய் ஒன்று கண்ணில் பட்டதால் "அடடா,அத்திக்காய்!"னு மண்டைக்குள் பல்பு எரிஞ்சு படமெடுத்துட்டேன். :) அத்திப்பூதான் ஒன்றையும் காணவில்லை. அதெல்லாம் அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாது, சும்மாவா பழமொழி சொன்னாங்க, அத்தி பூத்தமாதிரி-ன்னு? என்று என்னவர் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார், இல்லைன்னா இன்னும் மரத்தடியில்தான் நின்னுட்டு இருந்திருப்பேன்.ஹிஹி!

அடுத்த படத்தில் இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான ஆள்! அணிலா இல்லை வேறு ஏதும் பிராணியா என்று தெரியவில்லை, பூச்செடிகளின் அருகே வங்கு தோண்டி குடியிருக்கு..அப்பப்ப மேலே வந்து சாப்புட ஏதாச்சும் கிடைக்குதான்னு பாத்துட்டே இருந்தது. கையிலிருந்த தேங்கா மூடியிலிருந்து கொஞ்சம் தேங்காயப் பிச்சுக் குடுத்துப் பார்த்தோம்.(கேமரா என் கையில் இருந்ததால் என்னவர் குடுத்தார், எனக்கு பயமெல்லாம் இல்லைங்க! கர்ர்ர்ர்ர்ர்! நம்பிக்கை இல்லைன்னா பஸிஃபிக் கடலோரம் போய்ப் பார்த்துட்டு வாங்க. ;) )
கையிலயே குடுப்போம்னு பார்த்தா அந்த ஆள் உஷாரா வங்கில் இருந்து வெளியே வரவே இல்ல. ரெண்டு பல்லு தேங்காயை அவரின் மூக்குக்கு(!) எட்டும் தொலைவில் வைச்சோம், ஓடிவந்து கடகடன்னு சாப்ட்டார். நாங்க எதுவும் செய்யமாட்டோம்னு தைரியம் வந்துடுச்சு போல, அதுக்கப்புறம் கையிலிருந்தே வாங்கி சாப்பிட்டார். :) :))))))

நாங்க பார்த்தது எலியா இல்ல அணிலான்னு ஒரு நலம்விரும்பி விக்கிபீடியாவில் தேடி லிங்க் அனுப்பியிருந்தார், அதிலிருந்த ஜந்துவைப் பார்க்கவே பயம்ம்ம்ம்மா இருந்தது. நாங்க பார்த்தவர் ஆல்வின் சிப்மங்க்-ஐ கொஞ்சம் நினைவு படுத்தினார். ஆனா அணிலும் இல்ல,எலியும் இல்ல,சிப்மங்க்-ம் இல்லை..எதுவா இருந்தாலும் லட்சணமா,அழகா இருந்தது! :)

அணிலுக்குத் தேங்கா குடுத்தாச்சு, உங்களுக்கு எதுவும் குடுக்கலைன்னா நல்லாருக்குமா? இவ்வளவு நேரம் பொறுமையாப் படிச்சிருக்கீங்க, இதோ உங்களுக்காக..
கலர்ஃபுல் "khandvi"!

குஜாராத்தி டோக்ளா வகைகளில் ஒன்று இந்த khandvi. இதைப் பற்றிய முன்குறிப்பும், ரெசிப்பியும் அடுத்த பதிவில்.

Thursday, August 4, 2011

கோடைக்கொண்டாட்டம்-2

வெங்காய வடகம்
கோடைக்கொண்டாட்டத்தில் கருவடாம்,தக்காளி வடாமுக்கு அடுத்தபடியாக வெங்காய வடாம்! இரண்டு முறைகளில் செய்தேன்,இரண்டுமே சூப்பராக இருக்கிறது. முதல் முறை(1ஸ்ட் டைம் இல்லைங்க,ஹிஹி) நம்ம ஸாதிகா அக்கா ரெசிப்பி..அதிராக்கா கொடுத்திருந்த போட்டோ டுட்டோரியலும் யூஸ்ஃபுல்லா இருந்தது. இரண்டாவது முறை ஜவ்வரிசியில் செய்தேன்..தக்காளி வடாம் செய்முறை போலவேதான். இந்தமுறை எச்சரிக்கையா இந்த முறை எலிமிச்சம்பழம், ச்சீ,ச்சீ எலுமிச்சம்பழமெல்லாம் போடாம செய்தேன்..சூப்பரா வந்தது.

நான் போட்ட வடாமை காக்காய் கிட்ட இருந்து காப்பாத்தினேனோ இல்லையோ, வீட்டில் ஒருவரிடமிர்ந்து கஷ்டப்பட்டு காப்பாத்தினேன்!! [உடனே கற்பனைக் குதிரைய நாப்பது மைல் வேகத்தில் பறக்கவிடாதீங்க!! கர்ர்ர்ர்...] நடந்தது என்னன்னா, ஒரு வீகெண்டில் வடாம் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது..வெயிலின் கொடுமையப் பொறுக்க முடியாத என்னவர் [வீட்டுக்குள்ளயே இருக்கலாம்ல? ஹாயா patio-ல உட்கார்ந்து (அனல்)காத்து வாங்கறாராம்!] செடிக்கு தண்ணீர் ஊற்றும் hose-l மிஸ்ட் ஆப்ஷனில் நாஸிலை செட் பண்ணி ஒரு பூந்தொட்டி மேலே நிக்கவைச்சுட்டார்.காய்ந்து கொண்டிருந்த வடாமும் சேர்ந்து நனைஞ்சு கூலாகிட்டது!!

ஒரு அப்பாவி கஷ்டப்பட்டு வடகம் போட்டு வைச்சா எப்படி எப்படியெல்லாம் ஆபத்து வருது பாருங்க?!! நானும் சாயந்திரம் வரை கவனிக்கலை..அப்புறமா வெளியே வந்து பார்த்தா...அவ்வ்வ்வ்வ்வ்! மறுக்கா எல்லாத்தையும் எடுத்து வேற ப்ளேட்ல வச்சு காயவைச்சு எடுத்தேன். சரி, ரெசிப்பியப் பாக்கப் போவோமா? சீட் பெல்ட்டெல்லாம் தேவையில்ல, ஸ்மூத் ride தான், தைரியமாப் படியுங்க! :)

வெங்காய வடகம்-செய்முறை 1
தேவையான பொருட்கள்
சாதம்-1கப்
சின்ன வெங்காயம்-200கிராம்
வரமிளகாய்-10 (காரத்துக்கேற்ப)
மிளகு,சீரகம்,சோம்பு -தலா 1 டீஸ்பூன்
உப்பு

செய்முறை
சாதத்தை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

மிளகாய்-சோம்பு-சீரகம்-மிளகு இவற்றை பொடித்துக்கொள்ளவும்.

சின்னவெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.

அரைத்த சாதம், நறுக்கிய வெங்காயம், பொடித்த பொடி,தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

வடாம் இடும் தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட்டை விரித்து,தண்ணீரால் துடைத்துவிட்டு சிறிய வடகங்களாக கிள்ளி வைக்கவும். (உங்க ஆசைதீரக் கிள்ளுங்க,வடகத்துக்கு வலிக்காதாம்! ஹிஹி)

வெயிலில் ஒரு நாள் காயவிட்டு, மறுநாள் வடகங்களைத் திருப்பி விட்டு நன்றாக காயவிட்டு எடுத்துவைக்கவும்.

குறிப்பு
  • நான் சுடு சோற்றில் வடாம் போடலை. தண்ணீர் ஊற்றிவைத்த பழைய சாதத்தில் நீரை சுத்தமாகப் பிழிந்துவிட்டு அரைத்திருக்கிறேன்.
  • இன்னொரு விஷயத்தையும் நானே சொல்லிடறேன், இல்லன்னாக் கண்டிப்பா ஆராச்சும் வந்து ஏன் வெங்காயத்தை தோலோட போட்டிருக்கீங்கம்பீங்க!! வெங்காயத்தை 100% உரிக்கலை,கொஞ்சம் சருகோட போட்டா ருசி நல்லா இருக்கும்,போட்டுப் பாருங்க!:)
  • இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்கா ரெசிப்பியைப் பார்த்து பூஸார் போட்டிருக்கும் வடகத்தைப் பார்க்கலாம். ;) இங்கே க்ளிக் பண்ணினா ஸாதிகாக்காவின் செய்முறை இருக்கிறது. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
~~

வெங்காயவடகம்- செய்முறை 2
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி-1/2கப்
தண்ணீர்-4கப்
சின்ன வெங்காயம்-250கிராம்
பச்சைமிளகாய்- 6 (காரத்துக்கேற்ப)
food colour -4 துளிகள் (விரும்பினால்)
உப்பு

செய்முறை
ஜவ்வரிசியைக் களைந்து 8 மணி நேரங்கள் ஊறவிடவும்.

வெங்காயத்தை உரித்து, பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துவைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். கொதி வந்ததும் ஊறிய ஜவ்வரிசியின் நீரை வடித்துவிட்டு சேர்க்கவும்.

ஜவ்வரிசி வேகும்வரை அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.(10 -12 நிமிடங்கள்) வெந்ததும் வெங்காயமிளகாய் அரைத்ததை சேர்த்து கலக்கவும்.

வடாம் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

நான்கு துளிகள் மஞ்சள் நிற food colour-ஐச் சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும்.

கலவை கொஞ்சம் சூடு ஆறியதும், தண்ணீரால் துடைத்த ப்ளாஸ்டிக் ஷீட்டுகளில் சிறுவட்டங்களாக ஊற்றி காயவிடவும்.

ஜவ்வரிசி வடாம் ஒரு நாள் காய்ந்ததும் ப்ளாஸ்டிக் ஷீட்டில் இருந்து ஈஸியாக உரிக்க வரும். உரித்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். படத்தில் தட்டில் இருப்பது செய்முறை-1ல் சொல்லியிருக்கும் வடாம்.

காய்ந்த வடகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.

வெங்காய வடகத்தை எண்ணெய் மிதமான சூட்டில் காயவைத்து கவனமாகப் பொரிக்கவேண்டும். சாதத்தில் செய்த வடாம் சீக்கிரம் சிவந்துவிடும், ஜவ்வரிசி வடாமில் எண்னெய் தெறிக்கும் அபாயம் உண்டு. [இதெல்லாம் எனக்கு நடந்துதான்னு உங்களுக்கு டவுட்டு வந்திருக்கும், ஆனா அப்படில்லாம் நடக்கலையே! :) இருந்தாலும் முன்னோர்கள் (ஸா... அக்கா, அ... அக்கா, கா... அம்மா) எல்லாரும் சொல்லிருந்தாங்க,அதனால் நானும் சொல்லி வைக்கிறேன்!

அவ்வளோதாங்க நான் வடாம் போட்ட கதை..சொல்ல மறந்துட்டேனே, வெங்காய வடகம் எலுமிச்சை சாதத்துடன் சாப்பிட்டோம். வழக்கம் போல என்னவர் வெங்காய பகோடா மாதிரி இருக்குதுன்னு ஒரு குபீர்(!) கருத்து சொன்னார். :) அதனால் அடுத்தநாள் டீயுடன் சாப்பிடலாம்னு ட்ரை பண்ணினேன் சூப்பரா இருக்குது!! :P :P

Tuesday, August 2, 2011

எம்ப்ராய்டரி

வண்ணவண்ணப்பூக்களை கேமராவில் பார்த்தாலும் அழகு, எம்ப்ராய்டரியில் தைத்தாலும் அழகு! :) ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் வாங்கிவந்த பலவண்ண எம்ப்ராய்டரி நூல்களை தீர்க்க இந்த டிஸைன் ரொம்ப வசதியாய்ப் பட்டது.

ட்யூலிப்,பாப்பி மற்றும் அந்த குட்டிக்குட்டிப் பூக்களின் அழகு என்னை மயக்கிவிட்டது. :) விருப்பப்படி கையில் கிடைத்த வண்ணங்களில் பூக்களையும் இலைகளையும் தைக்க ஆரம்பித்தேன்.

டிஸைனை ட்ரேஸ் பண்ணிக்கொண்டிருக்கையில்..
கிட்டத்தட்ட டிஸைனின் அவுட்லைன் தயாராகிவிட்டது. மலர்களில் எல்லாம் பெரும்பாலும் சங்கிலித்தையலால் அவுட்லைன், இதழ்களில் ரன்னிங் ஸ்டிச்சால் கோடுகள் தைத்திருக்கிறேன்.

வெள்ளைப்பூவில் இதழ்களில் lattice work, நடுவில் ஸாடின் ஸ்டிச் , மீடியம் ஸைஸ் பூக்களுக்கு ஸ்ப்ளிட் ஸ்டிச் உபயோகப்படுத்தியிருக்கிறேன்.

மைக்கேல்ஸ்-ல் seed beads வாங்கிவந்திருந்தேன், வால்மார்ட்டிலும் கொஞ்சம் beads வாங்கிவந்தேன். சின்னப் பூக்களின் நடுவில் ஒரொரு seed beads-ம், மூன்று மீடியம் சைஸ் பூக்களில் ஒன்றின் மகரந்தத்துக்கு seed beads வைத்து தைத்துவிட்டு, இன்னொன்றில் ஆரஞ்ச் நிற beads வைத்து தைத்தேன், இன்னொன்றில் French knots போட்டேன்.

பூந்தொட்டிதான் கொஞ்சம் காமெடி ஆகிவிட்டது. புதுசுபுதுசா ஏதேதோ தையல்கள் ட்ரை செய்தேன், ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை, கடைசியில் அவுட்லைனுடன் விட்டுவிட்டேன். [இந்த பாயின்ட்டை நான் சொல்லலைன்னா நீங்க கவனிச்சிருக்கவே மாட்டீங்க! ;)... கரெக்ட்தானே? :) ]

இது பூக்கூடையின் க்ளோஸ் அப் வியூ! தையல்களில் பலவிதம் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சங்கிலித்தையல்தான். தையலை நம் விருப்பப்படி வளைக்கலாம், நெளிக்கலாம், நீட்டலாம்,குறுக்கலாம்!! இந்த டிஸைனில் கிட்டத்தட்ட 70% சங்கிலித்தையல்தான் தைத்திருக்கிறேன். எப்படி இருக்கு பூக்கூடை? :)

இது இணையத்தில் கிடைத்த டிஸைன்..இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தையல்களின் வீடியோக்கள் எல்லாமே இங்கே இருக்கின்றன. நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்க. நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails