~~~
பொதுவாக தாயம் பரமபதம் இவற்றில், தாயக் கட்டையில் அல்லது பகடையில் ஒன்று (தாயம்) விழுந்ததும்தான் ஆட்டம் ஆரம்பிக்கும். தாயம் விழும் முன் என்ன நம்பர் விழுந்தாலும் கணக்கில்லை. 2-3-4 இவற்றில் ஏதாவதொன்று விழுந்தால் நம்ம டர்ன் முடிந்துபோகும். எதிராளி தாயக்கட்டை உருட்ட ஆரம்பிப்பார்.முன்பெல்லாம் பரமபதம் பெரீய்ய பேப்பரில் பெரிய ஏணிகள் மற்றும் பாம்புகளோடு இருக்கும். இப்பொழுது மாடர்னைஸ் ஆகி, "snakes and ladder" என்ற பெயரோடு, சிரிக்கும் பாம்புகள்:) மற்றும் ஏணிகளுடன் வருகிறது. தாயக்கட்டைக்குப் பதிலாக பகடை ஒன்று தருகிறார்கள், கூடவே கலர் கலராக ப்ளாஸ்டிக் காய்களும் தருகிறார்கள்.
மொத்தம் நூறு கட்டங்கள் இருக்கும் இந்த விளையாட்டில், கூடவே ஆங்காங்கே பாம்புகளும் ஏணிகளும் பரவிக் கிடக்கும். பகடை/தாயக்கட்டையை உருட்டி, தாயம் விழுந்ததும் விளையாட்டு ஆரம்பிக்கும். பகடையில் விழும் எண்ணிக்கைக்கேற்ப நமது காயை நகர்த்தி வைக்கணும். பாம்பின் தலை இருக்கும் இடத்தில் சென்று சேர்ந்தா அம்புட்டுதான், கடி வாங்கி, இறங்கி பாம்பின் வால் இருக்கும் கட்டத்துக்கு வந்துவிடுவோம், அது போல நாம் சேரும் இடத்தில் ஏணி இருந்தால் ஜாலியா ஏறி, மேலேஏஏஏஏயும் போகலாம். முதலாம் கட்டத்தில் ஆரம்பிச்சு, இறுதியில் இருக்கும் நூறாவது கட்டத்தை வெற்றிகரமா சென்று சேரும் முதலாவது ஆளே ஜெயிப்பாங்க.
கூட விளையாடிய ஆட்கள் இருவரும் பாம்புகளிடம் கடி வாங்கி சர்ரென்று பலகட்டங்கள் கீழ இறங்குவதும் குட்டி ஏணிகள் மூலம் கொஞ்சமாய் படியேறி சிலகட்டங்கள் மேலே வருவதுமாய் இருக்கவும், மடமடன்னு மேலே ஏறிகிட்டு இருந்த எனக்கு நல்லா உற்சாகமா இருந்தது. கிட்டத்தட்ட 50 கட்டங்கள் தாண்டியதும்தான் கெட்ட நேரம் ஆரம்பிச்சது, அதோ, படத்தில பச்சைக்கலரா ஒரு பெரீஈஈஈய்ய ஆள் இருக்காரு பாருங்க, அவர்கிட்ட கிட்ட கடி வாங்கினேன், அதுக்குப் பொறகு தட்டுத் தடுமாறி ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்னு வைங்க. [அதாரது, "எத்தனாவது ஆளா செஞ்சுரி அடிச்சீங்க?"ன்னு கேக்கறது?? கர்ர்ர்ர்ர்ர்ர்!! அந்த ப.பா-- என்ற ஃப்ரெண்டுதான், சொல்லிக் குடுத்துருவேன், போட்டோலேருந்து நேரா உங்க மானிட்டர்-ல வந்து சீறும், ஜாக்கிரத! ;) ;) :)))]
சிம்பிள் கேமா இருந்தாலும், நிறைய ஆட்கள் சேர்ந்து விளையாடுகையில் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நம்ம ஏணில ஏறலைன்னாலும், மத்தவங்க கடி வாங்கறதைப் பார்க்கையில் ஒரு ஆனந்தம்! :)))) அப்படியே சோளக் கருது, வேவிச்ச கள்ள தின்னுட்டே ஒரு ஞாயித்துக் கெழம சாவகாசமா வெளயாடிப் பாருங்க, அப்பத்தான் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியும், ஹாஹ்ஹா! :)
~~~
தாயக்கரம் ரெடிமேடா கிடைக்குதா என்று தெரியலை, ஒரு பேப்பர்(மாத காலண்டரின் ஒரு ஷீட் சரியா இருக்கும்! :)) ஒரு ஸ்கேல், பென்ஸில் இருந்தா நீங்களே போட்டுரலாம்ல? அப்புறம் எதுக்கு கடைல தேடணும்? கரகரன்னு தாயக்கரம் வரைஞ்சாச்சு. விளையாட 4 பேர் ரெண்டு டீமாவும் உட்கார்ந்தாச்சு. ஒரு டீமுக்கு சோழி, ஒரு டீமுக்கு கல்லு-ன்னு ஆறாறு:) உருப்படி எடுத்து வைச்சு விளையாட ஆரம்பிச்சோம்.
இந்த விளையாட்டு நிறையப் பேருக்குத் தெரியும்னு நினைக்கிறேன்..இருந்தாலும் என்னோட மனதிருப்திக்காக கொஞ்சூண்டு சொல்லிடறேன். பொறுக்காத ஆட்கள் கமென்ட் பாக்ஸுக்கு தாவிருங்கோ! :)
நடுவில் ஒரு சதுரம், அதை மையமா வைச்சு, நாலு புறமும் நாலு செவ்வகங்கள். செவ்வகங்களை நீளவாட்டில் 3 கட்டமாகவும், அகலவாட்டில் ஆறு கட்டங்களாகவும் பிரிச்சுக்கணும். பெருக்கல் குறி போடப்பட்டிருப்பதெல்லாம் மலை-ன்னு சொல்லுவோம். இரு டீம் ஆட்களுக்கும் பொதுவான ஏரியா அது. அங்கே ஒருவர் இன்னொருவரை வெட்ட:) முடியாது. வெட்டறதுன்னா??! அப்படின்னு அவசரப் படக்குடாது யுவர் ஹானர், ஸ்டெப்-பை-ஸ்டெப்பாத்தான சொல்ல முடியும்?
மேற்கண்ட படத்தில அம்புக் குறி போட்டிருக்கும் டைரக்ஷன்ல விளையாட ஆரம்பிச்சு, எல்லாக் கட்டங்களையும் சுற்றி வந்து உள்ளே போகணுங்க. அப்படி சுத்தி வரும்போதே எதிராளியை அட்லீஸ்ட் ஒரு முறையாவது வெட்டிரணும், அப்பத்தான் பழமெடுக்கப் போலாம், இல்லன்னா சுத்தி சுத்தி வந்தீக-ன்னு சுத்திகிட்டே இருக்கவேண்டியதுதேன்! :)
இந்த வெட்டறது-வெட்டறதுன்னதும் ஏதோ திருப்பாச்சி அருவாள எடுத்துட்டு வெட்டறதுன்னு சில பேர் வெடவெடக்கறீங்க, டோன்ட் வொர்ரி யா! இது ஜஸ்ட் வெளாட்டுதான? பயப்புடக் குடாது, என்ன? ;)
அது ஒண்ணுமில்லீங்க, for example, நம்ம கல்லு வைச்சு வெளாடற டீம்னு வைச்சுக்கலாம். நம்ம ஆப்போஸிட் சைட் மலைல இருந்து, தாயம் போட்டு வெளியே வந்து, இறங்கி சுத்தி சோழி வைச்சிருக்க மலைப்பக்கமா வந்துடறோம். அந்நேரம் சோழி டீமும் தாயம் போட்டு வெளியே வராங்க, கரெக்ட்டா அவங்க சோழி வைச்சிருக்க இடத்தில நம்ம காய் போய் நிக்கற அளவுக்கு உங்களுக்கு தாயக்கட்டையில் நம்பர் விழுந்தா அம்புட்டுதான், கல்லு சோழிய வெட்டீரும், ஸேம் கதை வித் சோழி டீம்! வெட்டுப் பட்ட ஆட்கள் மறுபடி அவங்க ஆரிஜின் மலைக்குள்ள போய் உட்கார்ந்து, தாயம் போட்டு வெளியே வந்து மறுபடி சுத்தணும்! :)
எதிராளியை முடிந்த அளவு வெட்டி, நம்ம காயை வெட்டுக்குடுக்காம புத்திசாலித்தனமாச் சுத்தி நம்ம ஆரிஜின் மலைக்கு வந்து உள்ளே போகணும். உள்ளே போய் பழம் எடுத்துட்டா, ஆறில் ஒரு காய் குறையும். அதேபோல மீதி எல்லாக் காய்களையும் பழமாக்கணும்.
இந்த பழம் எடுக்கும் போது இன்னொரு இன்ட்ரஸ்டிங் ஈவன்ட் வரும். படத்தில வட்டம் போட்டு காட்டிருக்கேன் பாருங்க, அங்க வந்து காய் மாட்டிரும்! அதுக்குப் பேரு "டொக்கு"!!! :D :) அதாவது இனி ஒரு தாயம் போட்டாத்தான் பழம் ஆகும் என்ற நிலை! அந்நேரம் பார்த்து தாயமே விழுகாது...அவ்வ்வ்வ்வ்வ்வ்! :) ஆறு-அஞ்சு-பன்னண்டுன்னு விருத்தமா விழுகும், ஆனா ஒரே ஒரு தாயம் மட்டும் விழாது! நம்ம தாயத்துக்காக வெயிட் பண்ணிண்டே இருப்போம், எதிர் டீம் சுத்தி வந்து உள்ளே போய் பழம் எடுக்கற அளவு கூட டைமெடுக்கும் பார்த்துக்குங்க.
பரமபதத்தில் வந்து சேராத அதிர்ஷ்டம் தாயக்கரத்தில் வந்து சேர்ந்தது. சோழி டீமை வெட்டிச் சாச்சுப்புட்டு நாங்க ஜெயிச்சுப்புட்டோம்! :) விளையாட்டு விளையாட்டா இருக்கோணும், அடிதடில எல்லாம் இறங்கீரக் கூடாது. கையில கிடைச்சதை எடுத்து கம்பியூட்டர் மேல வீசாதீங்க!!...பரமபதம்-தாயம் பத்தி இவ்வளவு விரிவா எழுதியிருக்கேன், படிச்சுட்டு கமென்ட்
போடாமப் போனா தாயக் கட்டை உங்களோட 12 வருஷம் கோவிச்சுக்கும், அதனால
புடிச்சுதோ புடிக்கலயோ, ஒரு கமென்ட்டப் போட்டுட்டே கிளம்புங்க! எதுக்கும்
எச்சரிக்கையா இருக்கறது நல்லதில்லையா, என்ன நாஞ்சொல்றது? :))))))
~~~~
தாயக்கட்டை பற்றிய விளக்கத்துக்காக இந்தப் படம் பதிவோடு இணைக்கப்படுகிறது. :) தாயக்கட்டை வெண்கலம், மரம் அல்லது இரும்பு இதில் ஏதாவதொன்றால் செய்யப்பட்டிருக்கும். நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் ப்ளெய்னாகவும், ஒரு புறம் ஒரு புள்ளி, அடுத்த பக்கம் 2 புள்ளி மற்றும் மூன்றாவது பக்கம் 3 புள்ளிகள் இருக்கும்படி இருக்கும். இரண்டு தாயக்கட்டைகளை உருட்டும்போது பர்முடேஷன்-காம்பினேஷன் படி எண்கள் விழும்.
~~~~