Monday, April 29, 2013

பர்ஃபெக்ட் ஊத்தாப்பம்

 
...செய்வது எப்படி? - என்பது பற்றித்தான் இன்றைய பதிவுங்க. :)))) ஹல்லோ...வெய்ட்..பின்னங்கால் பிடறியில் பட, பல பேர் ஓட்டம் பிடிச்சாலும், எனக்கு என்றென்றும் ஆதரவு தரும் ஒரு சில நல்ல உள்ளங்கள் கண்டிப்பாஆஆஆஆஆ இந்தப் பதிவைப் படிப்பீங்க என்ற நம்பிக்கையில், கன்டினியூ!! இஸ்டார்ட் மீசிக்! :))))) டன் டனக்கா..ஆ...டமுக்கு டக்கா!! :)))) 
தோசை சுடுவது எப்படி -- நூறு வகை, ச்சே,ச்சே..ஆறு வகை தோசை  என்று ஏற்கனவே எழுதிருந்தாலும் ஊத்தாப்பம் பத்தி இன்னும் நான் எழுதலங்க. அதான்! ஒரு நாள்...வீகென்ட்..காலை..தோசை  சுடலாம்னு சட்னி அரைச்சாச்சு. திடீர்னு மொறு-மொறு தோசைக்குப் பதிலா மெத்-மெத் ஊத்தப்பம் சுடலாமேன்னு தோணுச்சு. மெத் மெத் ஊத்தப்பம் ஒண்ணு வயித்துக்குள்ள போன அதே (பொன்)நேரம்(??!!!)  ஊத்தப்பம் சுடுவது எப்படினு ஒரு டுட்டோரியல் குடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்குமேன்னு ஒரு ஞானோதயம் உருவாச்சு. 

ஸோ..இப்ப ஒருவழியா (நிஜமாவே) ஊத்தப்பம் செய்யப் போறோம். இட்லி மாவரைச்சா, முதல்நாள் இட்லி- அப்புறம் தோசை, இதான் நம்ம கான்சப்ட். ஸோ, தேவையான அளவுக்கு இட்லி மாவ கப்ல எடுத்து.. தோசைன்னா கொஞ்சம் தண்ணி தாராளமாவே விட்டு கரைக்கலாம், ஆனா ஊத்தப்பத்துக்கு அப்படி இல்ல, கொஞ்சமா தண்ணி விட்டு கரைச்சுக்குங்க. தோசைக்கல்ல மீடியம் சூட்டில காயவைங்க. பக்கத்தில ஒரு வெங்காயம்/கத்தரிக்காய்/உருளைக்கிழங்கு/வாழக்காய் ...குழம்பக்குடாது, இதெல்லாம் வச்சு சாம்பார் செய்யப் போறதில்ல, அப்பப்ப தோசைக்கல்ல மசாஜ் பண்ணிக்கறதுக்கு!! ஹிஹிஹ்ஹி! இல்லன்னா ஒரு பேப்பர் டவல்ல எண்ணெய் தொட்டு மசாஜ் பண்ணிக்கலாம், அல்லது ஸிலிகன் பேஸ்ட்ரி ப்ரஷ்ல மசாஜ் பண்ணிக்கலாம், அது உங்க வசதி! [ஊரில டீக்கடைகள்ல தென்னங்குச்சி துடைப்பம் வைச்சு மசாஜ் பண்ணுவாங்க, அது நமக்கு உபயோகப்படாது, விட்டுரலாம். ;)]

தோசைக்கல்லு ரெடியானதும் ஒரு கரண்டி மாவை ஊத்துங்க. லேசா, பட்டும் படாம, தொட்டும் தொடாம, அந்த வட்டத்தை கொஞ்சமே கொஞ்சம் பெரிசு பண்ணிவுடுங்க, போதும்! அரை ஸ்பூன் எண்ணெய எடுத்து ஊத்தப்பத்தை சுத்திவர ஊத்திருங்க. இப்ப சிலநொடிகள் காத்திருங்க...
ஊத்தப்பத்தில மேஜிக் ஆரம்பிக்கும்! :o) அதாவது, ஊத்தப்பத்தில அங்கங்க சின்னச் சின்ன துவாரங்கள்:) உருவாகும். அப்ப, ஸ்பூனை மறுபடி எண்ணெய்க் கிண்ணத்தில ஒரு dip பண்ணிட்டு எடுத்து, ஊத்தப்பத் துளைகள்ல ஓரொரு சொட்டா எண்ணெய் விடுங்க. இன்ட்ரஸ்டிங்கா இருக்கும், செய்து பார்த்தா உங்களுக்கே புரியும்!  :))) 
100% எல்லா துவாரங்களையும் கவர் பண்ணனும்னு இல்லை..முடிஞ்சளவு கவர் பண்ணுங்க. அதுக்குள்ள, ஊத்தப்பம் ஒரு பக்கம் பொன்னிறம் ஆகியிருக்கும். திருப்பிப் போடுங்க..
 ஒரு சிலர், திருப்பிப் போட்டதும் ஆர்வம் தாங்காம,  ஊத்தப்பதை தோசை திருப்பியால அழுத்துவீங்க...நோ!! தட் இஸ் நாட் எ குட் ப்ராக்டீஸ்! ஊத்தப்பம் மொறுமொறுன்னு ஆகிரும், ஸோ..தொந்தரவு பண்ணாம விட்டிருங்க. சில நொடிகள்ல இருபுறமும் பொன்னிறமான ஊத்தப்பம் ரெடியாகிரும். ஊத்தாப்பத்த மூடி வச்சு சுடுவதா இருந்தா இந்த "திருப்பி போடற" ஸ்டெப் ஆப்ஷனல்தான். மூடி வைப்பதால் ஊத்தப்பத்தின் 2 பக்கமுமே கரெக்ட்டா வந்துரும், ச்சே,ச்சே, வெந்துரும்! ;) எடுத்து தட்டில வைச்சு, விருப்பமான சைட் டிஷ்களுடன் வெளுத்து வாங்கலாம். மெத் மெத் ஊத்தாப்பம் சூப்பரா இருக்கும்.
தமிழ் கூறும் நல்லுலகத்தில் யாரும் இப்படி ஒரு மொக்கை பதிவ எழுதியிருக்க மாட்டாங்க என்ற பெருமிதத்துடன்..
நன்றி, வணக்கம்!
:) 

Tuesday, April 23, 2013

மதுரை சட்னி

 தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிக்கு இட்லி-தோசை வகைகளே பிரசன்னமாகும். என்னதான் ரவா உப்புமா- சேமியா உப்புமா-பொங்கல்-பூரி-சப்பாத்தி என்று வேறு ஆப்ஷன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கும் தேவைப்படுவது ஒரு சட்னி!!  அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம்! :))

தமிழ்-ஆங்கிலம் இரண்டு வலைப்பூக்களிலும் சேர்த்து ஒரு 25 வகை சட்னி ரெசிப்பிய நானே போஸ்ட் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்ன சட்னி செய்வது என மண்டையப் பிச்சுக்கிற மாதிரிதான் இருக்கும். நான் ஒரு டீஃபால்ட் சோம்பேறி என்பதால் இந்த சட்னி அரைப்பதில் எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். நிறைய சட்னி ரெசிப்பிகள் வெங்காயம்-தக்காளி நறுக்கி, வதக்கி, ஆறவைச்சு, அரைச்சு, தாளிச்சுக் கொட்டுவதா இருக்கும். இம்ம்ம்ம்மாஆஆஆம் பெரிய ப்ராஸஸா என மலைப்பா இருக்கும் எனக்கு!! அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும்! :))

தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது  ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ்! இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே! அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க கேக்காட்டியும் நானே சொல்லுவேன். வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள்! வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட்? கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி! ரெசிப்பிய ஆங்கிலத்தில பார்க்க இங்கே க்ளிக்குங்க.

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காய்ச்சது..இனி இன்றைய ரெசிப்பிக்கு போகலாம். ஒரு சனிக்கிழம காலைல ப்ரெஷ்ஷா எந்திரிச்சு, ஃபுல் ஆஃப் எனர்ஜியோட என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சுகிட்டே ப்ரவுஸ் பண்ணினப்ப "ஜிங்ங்ங்ங்ங்ங்"- ன்னு "குக்கிங் ஜிங்கலாலா"-ல இருந்து வந்து குதிச்சுச்சு இந்த மதுரை சட்னி. என்னதான் நான் சோம்பேறின்னாலும், இப்படி புதுசா முயற்சிப்பதில ஆர்வம் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால செய்து பார்த்தேன், சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் வேலை அதிகம்னாலும், இட்ஸ் வொர்த் அ ட்ரை! நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் 
வதக்கி அரைக்க 
வெங்காயம் - பாதி
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)
புளி- சிறிது
எண்ணெய்
தாளிக்க
வெங்காயம்- மீதி! :) [அதான் பாதிய நறுக்கி வதக்கீட்டீங்கள்ல..அதில மீதியிருக்கும் அடுத்த பாதி]
தக்காளி-1
கடுகு -1/2டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும். 
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

5நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும். காரசாரமான மதுரை சட்னி ரெடீஈஈஈ! இட்லி-தோசை-பணியாரம் இவற்றுக்கு பொறுத்தமான சட்னி இது. 

இந்தச் சட்னி செய்த அன்று பணியாரம்தான் செய்திருந்தேன். சட்னி ரெசிப்பி குடுத்த ஆளுக்கு அது எப்படியோ தெரிந்திருக்கு போல!  // Adutha murai kuzhi paniyaram kudunga.//  என்று கேட்டிருந்தாங்க..அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. மங்கள மீனாக்ஷி, என்ஜாய் குழிப்பணியாரம் அண்ட் மதுரை சட்னி!
படம்தான் கொஞ்சம் சரியில்லை, பசியில எடுத்தேனா, பொறுமையா க்ளிக்க முடில, அஜீஸ்;) பண்ணிக்குங்க!
~~~
இலவச இணைப்பு! :))) 
குரங்கு பொம்மையால முகத்த மறைச்சுகிட்டு ஒத்தக் கண்ண மட்டும் காட்டும் எங்க வீட்டுக் க்யூட் குட்டிப் பிசாசு! :))))

Friday, April 19, 2013

பட்டாணி குருமா


தேவையான பொருட்கள் 
அரைக்க
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள் -5
மிளகு-5
ஊறவைத்த பாதாம்-5
மல்லித்தூள்-11/2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்(காரத்துக்கேற்ப)
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-1
சோம்பு-1/2டீஸ்பூன்
பிரியாணி இலை-1

குருமாவுக்கு
வெங்காயம்-1
தக்காளி-1
மஞ்சள் பட்டாணி/Dried Yellow Peas-1/4கப்
உப்பு
எண்ணெய் 
சீரகம்-1/2டீஸ்பூன்

செய்முறை
பட்டாணியை அலசி முதல்நாளிரவே (அல்லது 8 மணி நேரம்) ஊறவைக்கவும். தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து குழையாமல் வேகவைத்தெடுக்கவும்.
பாதாமை அரை மணி ஊறவைத்து தோலுரிக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். 
11/2கப் தண்ணீர் விட்டு, கொஞ்சமாக உப்பு சேர்த்து (பட்டாணியிலும் உப்பு இருக்கிறது, கவனம்!) நன்கு கொதிக்கவிடவும்.
மசாலா வாடை அடங்கி கொதிக்கத் துவங்கியதும் வேகவைத்த பட்டாணியைச் சேர்க்கவும், உப்பைச் சரிபார்த்து, தண்ணீர் அளவையும் சரிபார்த்துக்கொள்ளவும். 
குறைந்த தீயில் ஏழெட்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு, எண்ணெய் குருமாவின் மேலே மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான பட்டாணி குருமா ரெடி. சப்பாத்தி-பரோட்டா-பூரிக்கு பொருத்தமான குருமா இது. வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
பட்டாணி குழையாமல் வேகவைக்க டிப்ஸ் : பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பட்டாணி வேகத் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஹைஹீட்டில் சூடாக்கவும். தண்ணீர் கொதி வந்ததும் பட்டாணியைச் சேர்த்து குக்கரை மூடவும். நீராவி வேகமாக வெளியேற ஆரம்பிக்கையில் குக்கர் விசிலை போட்டு, அடுப்பை மீடியம் சூட்டுக்கு குறைக்கவும். கரெக்ட்டாக ஒரு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்தால் பதமாக வெந்த குழையாத பட்டாணி  தயார். :) 

Thursday, April 18, 2013

பூவே, பூச்சூடவா..

வசந்தம் வந்தாச்சு! வாங்க, எங்க வீட்டு பால்கனித் தோட்டத்தைப் பார்க்கலாம். ஒவ்வொரு வருஷமும் தவறாம 2 தக்காளி 2 பச்சமிளகாச்செடி வாங்கி நடுவேன், இந்த வசந்தத்துக்கு காய்கறி பக்கம் போகவேண்டாம் என நானே ஒரு முடிவெடுத்துகிட்டு அவை எதுவும் வாங்கலை. கொஞ்சமா வாங்கினாலும் பெரிய பூச்செடிகளா வாங்கியாச்சு! :) 

கீழிருக்கும் பூக்களில் மூன்று,  சிறப்பு  விற்பனைகளில் ஐம்பது பைசா - ஒரு ரூபாய்க்கு வாங்கியவை. அந்த வெள்ளைப் பூக்கள் (செவ்வந்திக்கு அருகில் இருப்பவை) மட்டும் கொஞ்சமே கொஞ்சம் காஸ்ட்லி! நல்ல நறுமணத்துடன் இருந்ததால் வாங்கிவந்துவிட்டோம்.  
அடுத்ததாக, இங்கே பக்கத்தில் இருக்கும் தோழி ஒருவர் காஸ்ட்கோ-வில் டேலியா bulbs வாங்கிவந்து நட்டிருப்பதாகக் கூற, நாங்களும் காஸ்ட்கோ போனபோது பார்த்து வாங்கிவந்தோம். எல்லாருக்கும் டேலியா பூக்கள் தெரியும் என நம்புகிறேன், இருந்தாலும் அது என்ன பூ என தெரியாதவங்க இங்கே போய் படம் பார்த்துட்டு வந்துருங்க. ஏன் இதை பர்ட்டிகுலரா சொல்றேன்னா, இங்கே சில தோழிகளிடம் சொன்னபோது, டேலியா-வா? அது என்னது? எப்படி இருக்கும் என்று ஆச்சரியமாக் கேட்டுப்புட்டாங்க...அவ்வ்வ்வ்வ்!

ஊட்டி-க்கு பக்கத்தில் இருப்பதாலோ என்னமோ..கோவையில் டேலியா பூக்கள் சாதாரணமா விற்பனைக்கு வரும். சீஸன் டைமில் காலை நேரங்களில் பூக்காரங்க சைக்கிளில் அகலமான தட்டக்கூடைகளில் பூக்களை கொண்டுவந்து ஒண்ணு ஒரு ரூபாய் என விற்பாங்க.  வீடுகளிலும்  டேலியா வளர்ப்பதுண்டு. பல நிறங்களில் அழகழகா இருக்கும் பூக்களை வீட்டிலேயே செடி வளர்த்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு பலநாளா உண்டு. அந்த நாட்களில் எங்க சித்தி வீட்டில் டேலியா இருக்கும், அங்கிருந்து கிழங்கு கொண்டுவந்து நட்டு நட்டு பார்த்து ஏமாந்து போயிருக்கிறேன். ;) ..ஹ்ம்ம்! கொசுவர்த்தி பலமாச்  சுத்துது, அப்படியே அசந்து தூங்கிராதீங்க! கமான், வேக் அப்! :)

நாங்க வாங்கிய பேக்கட்டில் இரு வண்ணங்களில் டேலியா கிழங்குகள் இருந்தன, முதலே வாங்கிய தோழியிடம் வேறு இரு நிறங்கள்! அப்புறமென்ன?  எங்க வீட்டு கிழங்க அவங்களுக்கு கொஞ்சம் குடுத்து, அவங்க கலர் கிழங்க நாங்க கொஞ்சம் வாங்கி, நட்டாச்சு! ரெண்டு வீட்டிலும் செடிகளும் துளிர்த்து வளர ஆரம்பித்துவிட்டன, ஆனா எந்தத் தொட்டியில் எந்த நிறப் பூக்கள் வரும் என்பது  இப்ப பெரிய சஸ்பென்ஸா இருக்குதுங்க! :)
மீண்டுமொருமுறை கடைக்குப்  போனபோது " விண்டர் ஜாஸ்மின்" என்று ஒரு வகை செடி... அல்ல, கொடி! :) விற்பனைக்கு இருந்தது. எனக்கு அந்த செடி மேல பலகாலமா ஒரு கண்ணா இருந்துச்சா, அதையும் வாங்கிவந்துட்டோம். நம்ம ஜாதிமல்லிப் பூ போல நல்ல வாசனை!  முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போல எங்க கொடிக்கும் தேர் கொடுக்க யாரும் வருவாங்களா என காத்திருக்கிறேன். ஹாஹ்ஹா! ;)  விரைவில் கொடியைப் படரவிட ஆவன செய்யணும்.
Patio Garden..ஒரு முழுத்தோற்றம்..ஒவ்வொரு படத்திலும் முகம் காட்ட மறுக்கும் ஜீனோ-வை திரும்பி நிக்க வைக்க முடிந்தளவு போராடிப் பார்த்துட்டேன், ஒர்க் ஆகலை, அதனால அட்ஜஸ்ட் பண்ணிகுங்க.

பின்குறிப்பா, முதல் படத்தில் இருக்கும் ரோஜா பூ ஜாடியில் வாங்கி வைத்து அழகுபார்த்தது, வீட்டில் வளர்ந்தது என ஏமாந்துவிடவேண்டாம்! ;) :)
Also, For a change, இந்த முறை டிஃபன் - டீ- காபி- ஸ்னான்ஸ் எதுவும் இல்லாம வெறுமனே ஒரு பதிவு. வெறுத்துப் போய் ஓடீராம கமெண்ட் போடுவீங்க என்ற நம்பிக்கையில்! ;) 

Friday, April 12, 2013

ஸ்ட்ராபெரி பெண்ணே!..

நீங்க மார்கெட் போகாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரை தனியாக அனுப்பினால் என்ன ஆகும்?  நீங்க அனுப்பிய தேவையான பொருட்கள் லிஸ்ட்டை சுத்தமாக மறந்துபோயி, அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு, பச்சைமிளகாய்-இஞ்சி-கொத்துமல்லித் தழை போன்ற கொசுறுகளை ஒரு கணமும் நினைக்காமல், ஒரு மினி ஃப்ரூட்-வெஜிடபிள் மார்க்கட்டையே காரில் நிறைத்துக்கொண்டு வருவார்கள். :) அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ப்ளாகில் போட நமக்கு ஒரு பதிவு தேறும், ஹிஹி! :)

மினி மார்க்கெட்டைப் பார்த்து மயக்கம் போட்டுவிடாமல், எல்லாத்தையும் பத்திரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு உபயோகிப்பது உங்க பொறுப்பு! எங்க வீட்டில் நடந்த இப்படியாகப்பட்ட  நிகழ்வொன்றில் ஒய்யாரமாக கண்ணாடிப் பெட்டியில் செக்கச்செவேர் என்று வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் புளிப்புன்னா புளிப்பு, வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு!! அதற்காக தூக்கி குப்பையில் போட  மனசு வருமா? இப்படி ஒரு ஸ்மூத்தியை மிக்ஸியில் அடிச்சு, ஒரு டால் க்ளாஸ் நிறைய ஊற்றி, ஸ்டைலா ஒரு பழத்தையும் கட் பண்ணி வைச்சு போட்டோ புடிச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ந்து குடிச்சும் முடிச்சுட்டேன்!
தேவையான பொருட்கள் 
ஸ்ட்ராபெரி பழங்கள் -5 (பெரிய பழங்கள்)
தயிர்-கால்கப்
தண்ணீர்-1/2கப்
சர்க்கரை(விரும்பினல்)-2டீஸ்பூன்

செய்முறை
ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக கழுவி, அவற்றின் தலையில் இருக்கும் இலை மற்றும் தண்டுப் பகுதியை நீக்கவும்.
பழங்களை துண்டாக்கி மிக்ஸியில் போட்டு சிலநிமிடங்கள் அரைக்கவும்.
பிறகு அத்துடன் தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் அரைக்கவும்.
ஜில் ஜில் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி தயார். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி சில்லென்று பருகவும்.
பி.கு. புளிப்பான பழம் என்பதால் போட்டோவில் இருக்கும் ஒரு ஒய்யாரக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா :) போட்டோ செஷன் முடிந்ததும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கே குடியேறிவிட்டார். புளிப்பில்லாத பழம் என்றால், ஸ்மூத்தி பருகும்போது இடையிடையே அந்தப் பழத்தையும் ஒவ்வொரு கடி கடிச்சு சாப்பிடலாம். :)

இது டயட்(!) வர்ஷன்..இதிலேயே கொஞ்சம் வேரியேஷன் வேணும்னா...ஸ்ட்ராபெரி பழங்கள், குளிர்ந்த பால், சர்க்கரை, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து அரைத்தா..
ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் ப்ரேக்ஃபாஸ்ட்-டுக்கு ரெடி!  

இலவச இணைப்பு : மின்சாரக் கனவிலிருந்து ஒரு பாட்டு.. :) :)))



~~~
அனைவருக்கும் இனிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
~~~

Tuesday, April 9, 2013

புளிப் பொங்கல்

தேவையான பொருட்கள் 
பச்சரிசி (சோனா மசூரி அரிசி) -1 கப்
புளி - பெரிய நெல்லிக்காயளவு
வெங்காயம்-1
பூண்டு - 3 பற்கள்
வரமிளகாய்-8 (காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஏழெட்டு 
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம் 
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1 டீஸ்பூன் (அ) சிறுதுண்டு வெல்லம்
உப்பு
நல்லெண்ணெய்-2டேபிள்ஸ்பூன் 

செய்முறை
அரிசியை அலசி, தண்ணீர் வடித்து அரைமணி நேரம் வைத்து, ஈரப்பதம் இருக்கையிலேயே மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 
புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். நான் உபயோகித்த அரிசிக்கு ஒரு கப் அரிசிக்கு 21/2 கப் தண்ணீர் தேவைப்படும். புளிக்கரைசலுடன் மீதிக்கு  தேவையான தண்ணீரையும் ஊற்றி தயாராக வைக்கவும். 
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். வரமிளகாயை கிள்ளிவைக்கவும். குக்கரில் எண்ணெய் காயவைத்து, கடுகு-பெருங்காயம் தாளித்து, வெந்தயம்-க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை-வரமிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம்-பூண்டையும் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புளித்தண்ணீரை குக்கரில் ஊற்றி கொதிக்கவிடவும்.
புளித்தண்ணீர் கொதி வந்ததும், தேவையான உப்பு-சர்க்கரை (அல்லது வெல்லம்) சேர்த்து அரிசி உடைசலையும் சேர்க்கவும்.
நன்கு கலந்துவிட்டு, குக்கரை மூடி 3 விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும். ஆவி அடங்கியதும்  குக்கரைத் திறந்து பொங்கலை கிளறிவிட்டு சூடாகப்  பரிமாறவும்.
நல்லெண்ணெய்-பெருங்காயம்-வெந்தய வாசனையுடன் புளிப்பொங்கல் தயார்.  இதனுடன் சிப்ஸ்-வடாம் வகைகள், தயிர் போன்றவை பக்க உணவாக பரிமாற பொருத்தமாக இருக்கும். அல்லது, தேங்காய ஒடச்சு, சின்னத் துண்டுகளா தோண்டி எடுத்து கடிச்சுக்குங்க! :) [ஜோக் இல்ல, சீரியஸ்! சூப்பரா இருக்கும்.]

அவசரமாக செய்ததால் இந்தமுறை அரிசியை தண்ணீர் தெளித்து அரைமணி வைத்தெல்லாம் பொடிக்கவில்லை, அப்படியே மிக்ஸில போட்டு  பொடிச்சுட்டேன்! ;) நீங்க நிதானமாச் செய்து பார்த்து சொல்லுங்க, நன்றி!

அரிசி பொடிக்க டிப்ஸும், ரெசிப்பி உதவியும் : காமாட்சி அம்மாவின் "சொல்லுகிறேன்" வலைப்பூவில் இருந்து. 

Tuesday, April 2, 2013

அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை

...இவற்றை சுலபமாக நறுக்குவது எப்படி என்று இன்றைய பதிவில் பார்க்கலாம். :)

ஊரில் அன்னாசியை முழுதாக வாங்கிவந்து வீட்டில் நறுக்குவது ரொம்பவே சிரமம். ஏனென்றால் அப்போது எங்க சமையலறைகளில் கத்தி புழக்கத்தில் வரவில்லை. அரிவாள்மனைதான் உண்டு. கத்தியால் காய் நறுக்குவோர் எல்லாம் அல்ட்ரா மாடர்ன் யுவதிகள் என்ற மாயை இருந்தது அப்போது! ;) வீட்டில் எங்காவதோர் மூலையில் ஒரு மொண்ணை கத்தி கிடக்கும், அந்தக் கத்தியால் பைனாப்பிளை நறுக்குவது என்பது மலையைக் குடைந்து எலி பிடிப்பது போல! :) ;)  அத்தனை பிரச்சனைகள் இல்லாமல் சுலபமாக ருசிக்க தள்ளுவண்டிகளில் அன்னாசிப் பழம் விற்பார்கள். பழத்தை நறுக்கி, துண்டுகளாக்கி, உப்பு-மிளகாய்ப்பொடி கலவையைத் தூவி தருவார்கள், முழுப்பழமுமே வேணும் என்றாலும் வண்டிக்காரரே தோல் சீவித் தந்துவிடுவார்.

அதுவும் இல்லாமல் பயணங்களில் ரயில்வே க்ராஸிங்-ல்  பேருந்து மாட்டும்போதும் வெள்ளரி-அன்னாசி இவை உப்பு-மொளகாப்பொடி அவதாரத்துடன் சுறுசுறுப்பாக விற்பனை நடக்கும். புகைவண்டிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. [இந்நேரம் உங்களுக்கு "வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா..என்னப் பாக்காமப் போறாளே சந்திரிகா"--காதல்கோட்டை படப்பாடல் நினைவு வரணுமே, வந்துச்சா? :)))]

கடந்தமுறை ஊருக்குப் போயிருந்தபோது பெங்களூர் சென்றுவிட்டு கோவை  திரும்புகையில் ட்ரெய்ன் தமிழகத்தை தொட்ட இடத்தில் இருந்து இப்படி பைனாப்பிள் துண்டுகள் கிடைத்தன. ஆனா  துரதிர்ஷ்டவசமாக என் மூக்கு நான்ஸ்டாப்பாக ஓவர்டைம் வொர்க் செய்து அருவியாக கொட்டிக்கொண்டிருந்ததால் என்னால் இவற்றை ருசிக்க முடியவில்லை. வழக்கம் போல சொல்லவந்ததை விட்டுப்புட்டு ஊர் சுத்தறேன் பாருங்க. ஹிஹ்ஹி!:) சரி, பேக் டு த ட்ராக்!

பைனாப்பிள்/அன்னாசி பழம் நறுக்குவது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலருக்கு ஒவ்வாமை கூட வந்துவிடுமாம், இந்தத் தகவலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவ்வப்போது எடுத்துவைக்கும் படங்கள் கைகொடுக்க ஒரு பதிவும் உதயமாகிவிட்டது. :)

ஒருமுறை பைனாப்பிள் வாங்கிவந்தேன். நறுக்கலாம் என்று எடுத்தபோது அதன் தலைப்பகுதியில் தொங்கிட்டு இருந்த tag-ல் பழம் நறுக்குவது எப்படி? என டெமோ குடுத்திருந்தாங்க. ரொம்ப சுலபமா நறுக்கிரலாம் இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ  செய்தால்!
1.பழத்தின் தலையில் இருக்கும் தோகையை  நறுக்கிருங்க.
2. பழத்தை (தோலுடனே) இரண்டாக நறுக்குங்க.
3. பாதிப் பழத்தை நீளவாட்டில் துண்டுகள் போடுங்க.
4. இப்போ ஒவ்வொரு துண்டையும்  செங்குத்தா நிறுத்தி, பழத்தில்  நடுவில் இருக்கும் தண்டுப் பகுதியை நறுக்கிப் போட்டுருங்க.
5. பழத்துண்டை இடது கையில் வைத்துக்கொண்டு பழத்தின் சதைப்பகுதியை மட்டும் கத்தியால் நறுக்கி எடுங்க.
தட்ஸ் இட்..கையக் கடிக்காம பைனாப்பிள் நறுக்கிட்டோம். :)

சரி..பைனாப்பிள் எப்படி நறுக்க - என்று பார்த்தாச்சு, ஆனா வாங்கும் பழம் பழுத்திருக்கா, வாங்கிய உடனே நறுக்கி சாப்பிடலாமா அல்லது ஒரு சிலநாட்கள் பழுக்க வைக்கணுமா?  இவற்றை கண்டுபுடிக்க ஒரு ஈஸி ட்ரிக்..பைனாப்பிள் மேலே இருக்கும் தோகைப் பகுதியில் நடுவில் இருக்கும் ஒரு இலையைப் பிடித்து இழுங்க. (கடைக்காரன் பாத்துராம, பத்திரமா இழுக்கோணும், ரைட்?!;) ) ஈஸியா அந்த இலை கையோடு வந்தால் பழம் பழுத்திருக்கு, உடனே நறுக்கிச் சாப்புடலாம்!  அப்படி வராம அடம் புடிச்சா, பைனாப்பிள் இன்னும் பழுக்கலை. ஈஸின்ட் இட் சிம்பிள்?!!
~~~~~~~~~
ஆரஞ்சு
ஆரஞ்சை  தோலுரித்துச் சாப்பிடுவதை விட ஈஸி டெக்னிக் இது..இங்கே டிவி விளம்பரங்களில் பார்த்து இப்படி நறுக்க கற்றுகொண்டேன். :)
வட்டமாக நறுக்கிய ஆரஞ்ச் வில்லைகளின் ஒரு ஓரத்தில் கட் செய்துவிட்டு...
அழகாப் பிரிச்சா..டடா! ஆரஞ்சுப்பழம் சுவைக்கத் தயார்!
~~~
மாதுளை
 மாதுளையின் மீது கத்தியால் ஒரு கூட்டல் குறி கீறுங்க..அதை  அப்படியே பிடிச்சு இழுத்தா..
 பழம் நான்காகப் பிளந்துவிடும். அப்புறம் என்ன? மாதுளை முத்துக்களைப் பிரித்து எடுத்து..
ஸ்பூன் போட்டு சுவைக்கவேண்டியதுதான்!
~~~
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்தால் மகிழ்ச்சி! :)

LinkWithin

Related Posts with Thumbnails