ஜூன் 21 முதல் வட அமெரிக்காவில் அஃபிஷியலாக கோடைக்காலம் துவங்கிவிட்டதால் பகல் நேரம் 14 மணி நேரங்களுக்குக் குறையாமல் இருக்கிறது. காலை 5 மணிக்கே விடியத்துவங்கி இரவு 8 மணிக்கு மேலேதான் சூரியனார் தன் வேலையை முடித்துக்கொண்டு பஸிஃபிக் கடலுக்குள் இறங்குகிறார். இந்த மாதத்தில் 23ஆம் தேதி சூப்பர் மூன் வேறு வந்ததால் இந்த முறை நிலாப்பெண்ணுக்கு ஒரே கொண்டாட்டம்! பகல் ஷிஃப்ட் காரர் வேலை முடித்துக்கொண்டு கிளம்புமுன் இரவு ஷிஃப்ட் ஆள் ஆஜர்!! :) அவர் மேற்கே இறங்க இறங்க, இந்த அம்மணி கிழக்கே ஏறிக் கொண்டிருந்தார்.
ஜூன் 21ஆம் தேதி மாலை(!) ஏழரை மணிக்கு வழக்கம் போல ஜீனோவும் நானும் வாக் போக கிளம்பினோம். வெளியே வந்து வானத்தைப் பார்த்ததும் அப்படியே ஷாக் அடித்து நின்றுவிட்டேன். பின்னே?! அந்நேரத்துக்கே முழுவட்ட நிலா என்னைப் பார்த்து கண் சிமிட்டியது! உடனடியாக செல்ஃபோன் கேமராவில் சில பல க்ளிக்ஸ்...
இந்தக் கேமராவில் நிலவின் பிரம்மாண்டம் புலப்படவில்லை. நேரில் பார்த்தபோது அற்புதமாக இருந்தது. மேல்வானில் இன்னும் சூரியனின் தாக்கம் குறையாமல் மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருக்க, கிழக்கே நிலா..இந்தச் சாலை எங்கள் வீட்டருகே முடிவடைந்துவிடும். அடுத்து இருப்பது சிறு மலைக்குன்றுகள் அடங்கிய அவகாடோ தோட்டம். சாலையின் முடிவருகே ஃப்ரெஷ்ஷாகப் பெயிண்ட் அடித்திருந்தார்கள், என்னவென்று பார்த்தால்...
முதலிலேயே இருந்த தகவல்தான், இப்போது மறுபடி புதிதாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் நான் இவ்வளவு தெளிவாகக் கவனித்தது இப்போதுதான். இங்கிருந்து பஸிஃபிக் கடல் சுமார் 20 மைல் தூரம்தான்!! அதுவரை செல்கிறதாம் இந்தக் கழிவு நீர்க் கால்வாய்!! அவ்வ்வ்....
சரி அதை விடுங்க, நம்ம பகலில் பௌர்ணமிக்கு வருவோம். சூப்பர் மூன் வரப்போகிறது என்று அதற்கு சிலநாட்கள் முன்பாகவே பல்வேறு தகவல்கள்..எப்படி போட்டோ எடுத்தால் நிலா அழகாய் வரும், கேமராவில் என்னென்ன செட்டிங்க்ஸ் வைக்க வேண்டும் என்று யாஹூ-வில் ஒரு ஆர்ட்டிகிள் வந்திருந்தது. என் கை சும்மா இருக்காமல் என்னவருக்கு அந்த லிங்க்-ஐ அனுப்பிவிட்டேன். இனி வரும் படங்கள் ஜூன் 22 இரவு 9 மணி சுமாருக்கு எடுத்தவை.
இந்தப் படத்தைப் பார்த்தால் ஏதோ திரைப்பட செட் போல தெரிந்தது எனக்கு!..உங்களுக்கு எப்படி இருக்கு?! :) 23ஆம் தேதி காலை 4 மணிக்கு நிலா முழுபிரம்மாண்டமாய் இருக்கும் என சொல்லியிருந்தாங்க, ஆனா மிட்நைட் நாலுமணிக்கு எந்திரிக்கறதெல்லாம் நடக்கிற காரியமாங்க?! ;) அதனால் இந்தப் படங்களுடன் நிலவின் தேடலை முடித்துக் கொண்டோம்! :)
~~~
இந்த வருஷக் கேலண்டரில் ஜூன் மாதத்தில் இருக்கும் இந்த கிருஷ்ணர் படம் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே "இஸ்கான்" கோயிலில் தந்த மாத நாள்காட்டி இது! படத்திலிருக்கும் கோபாலனும், கோபாலன் மடியில் இருக்கும் கன்றுக்குட்டியும் என்ன ஒரு ஆனந்தமாய் இருக்காங்க! இந்தப் படத்தைத்தான் போன்ல வால்பேப்பரா வைச்சிருக்கேன்! ;)அடுத்தபடியாக வாசகர்களுக்கொரு கேள்வி...நீலவண்ணக் கண்ணனின் நிறத்திலேயே இந்தப் படத்தில் இருக்கும் பூ என்ன பூ?!
ஒரு க்ளூ கொடுத்துடறேன், இந்தப் பூவில் இருந்து எந்தக் காயும்-கனியும் கிடைக்காது, அழகுக்கு வளர்க்கப் படும் பூவும் கிடையாது! கண்டுபுடிங்க பார்ப்போம்! :)
சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு..சுவையான நெய் மைசூர்பா!!
**************
Updated, July 2, 2013
மேலே படத்திலுள்ள வயலட் பூக்கள் பற்றித் தெரிந்த ஆட்கள் யாரும் இப்பதிவினைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். //இந்தப் பூவில் இருந்து எந்தக் காயும்-கனியும் கிடைக்காது, அழகுக்கு வளர்க்கப் படும் பூவும் கிடையாது!// என்று சொல்லியிருந்தேன், ஆக மொத்தம் இது விவசாயப் பயிர்தான் என்று அதிலிருந்தே தெரிந்திருக்கும். இது ஒரு கிழங்குவகைங்க!....
....
கரெக்ட்!! உருளைக் கிழங்கேதான்! சரியாக் கண்டுபுடிச்சிட்டீங்க! :))))
**************
தோழி ஒருவரின் வீட்டில் முளை வந்த உருளைக் கிழங்குகளை சும்மா விளையாட்டாய் மண்ணில் புதைத்திருக்கிறாங்க, அப்படியே தழைந்துவிட்டது. இலைகள் பார்க்க தக்காளிச் செடியைப் போலிருக்கின்றன. செடியில் அழகான பூக்களும் வந்திருக்கின்றன. முன்னப் பின்ன உருளைக் கிழங்குச் செடிய பக்கத்தில (ஏன், தூரத்தில கூட.. ;)) பார்த்திராத எனக்கு இந்தப் பூக்கள் ஆச்சரியத்தைத் தந்தன. அதான் படமெடுத்துட்டு வந்து இங்கே பதிவும் போட்டேன். அவர்கள் இன்னும் கிழங்கைப் பறிக்கவில்லை, எப்பப் பறிப்பது என தெரியவும் இல்லை என சொன்னாங்க, அதனால் இணையத்தை துருவியதில் அகப்பட்ட இணைப்பு இது! உருளைக் கிழங்கு வளர்க்க ஆர்வமுள்ளோர் தவறாமப் போய்ப் பாருங்க. நன்றி!!