ஒரு சில வருடங்கள் முன்பாகத்தான் "எடிபிள் கம் / சாப்பிடக்கூடிய கோந்து" பற்றி கேள்விப்பட்டேன், அதுவரை கோந்து என்றால் வேப்பமரத்தில் கத்தி கொண்டு கஷ்தப்பட்டு சுரண்டி எடுத்துவந்து நீர் ஊற்றி ஊறவைத்து 'கோந்து வாசனை'யுடன் உபயோகிக்கும் கோந்தும், பிறகு வந்த 'கேமல்' கம்-மும்தான் தெரியும்! :)
மராட்டி நண்பர்கள் வாயிலாகப் பெயர் அறிமுகமானாலும் இதனைப் பார்த்ததோ, சுவைத்ததோ கிடையாது. உடலுக்கு மிகவும் நல்லது, குளிர்காலத்தில் சாப்பிட உகந்தது (உடலுக்கு சூட்டைத் தரும் குணமுடையது இந்த கோந்து), இளம் தாய்மார்களுக்கு முதல் 40 நாட்கள் கட்டாயம் தருவோம். இடுப்பெலும்பு பலமாகவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் வல்லது இந்த கோந்து என்ற தகவல்களெல்லாம் தோழிகள் மூலம் அறிந்து கொண்டேன். என்னவரிடம் கோந்து வாங்கி வாங்க வாங்க வாங்க வாங்க என்று சொல்லி, ஒரு வழியாக எடிபிள் கம்மை கண்ணால பார்த்து, லட்டும் செய்து சுவைத்துவிட்டேன்! :))))
உலர் பழங்கள், முந்திரி, பாதாம், வால்நட் மற்ற நட்ஸ் வகைகள், மக்கானா- என்ற பாப்கார்ன் போன்ற ஒரு பண்டம், ஏலக்காய், வெந்தயம் இப்படி ஊட்டச்சத்து மிக்க பொருட்கள், கூடவே தாராளமாக..ஏராளமாக நெய் இவற்றுடன் கடலைமாவு அல்லது கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதே இந்த லட்டு. கடலைமாவு ஜீரணிக்க கடினம் என்பதால் கோதுமை மாவு உபயோகித்து தோழியொருவர் லட்டு செய்துதந்தார் எனக்கு. [அதற்கு முன்பாக ரெசிப்பி கேட்கிறேன் பேர்வழி என்று முக்காமணி நேரம் நான் கேட்ட கேள்விகளில் நொந்து நூடில்ஸ்;) ஆகி அவராகவே லட்டைப் பிடித்துக் கொண்டுவந்து என் வாயை அடைத்தாரா என்பது அந்த "ஊப்பர்வாலா"-வுக்கே வெளிச்சம்! ஹிஹ்ஹிஹி..]
நேரடியாகக் கிடைத்த மீனைச் சாப்பிட்டுப் பசியாறிவிட்டே இருந்தால் எப்படி? நானும் மீன்பிடிக்கப் பழகவேண்டுமே? :) அதனால் வீட்டிலிருந்த பொருட்களோடு களமிறங்கினேன். அங்கங்கே ஷார்ட்கட்ஸ் போட்டு டெஸ்டினேஷனை ஒரு வழியாக ரீச் பண்ணினேன், ஆனால் ஏலக்காய், வெந்தயமெல்லாம் போட மறந்தாச்சு, அதனாலென்ன "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று மனசைத் தேத்திகிட்டு வாங்க லட்டு செய்யப்போலாம்..
தேவையான பொருட்கள்
எடிபிள் கம் - 2 டேபிள்ஸ்பூன்
உலர் பழங்கள், நட்ஸ் வகைகள் -3/4கப்
கோதுமை மாவு-11/4கப்
சர்க்கரை-3/4கப்
நெய்-1/2கப்
செய்முறை
மிதமான சூட்டில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை காயவைத்து கோந்தைப் பொரித்து எடுக்கவும். [கோந்து பார்க்க பனங்கல்கண்டு போல இருக்கிறது, (வேப்ப மர கோந்தைப் போலவும்தான் இருக்கிறது, ஹிஹி..)பெருங்காயம் பொரிவது போல, பாப்கார்ன் பொரிவது போல பொரிகிறது இந்த கோந்து..கவனமாக எல்லாப் பக்கமும் பொரிந்து வரும்படி பொரித்தெடுக்கணும்! ]
பாதாம்-வால்நட் இவற்றையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
திராட்சையையும் வறுத்து எடுக்கவும்.
பேரீட்சையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பொரித்த பண்டங்கள் ஆறியதும், அவற்றுடன் நறுக்கிய பேரீட்சையையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துவைக்கவும்.கடாயில் இன்னுமிரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கோதுமைமாவைச் சேர்த்து வாசனை வர வறுக்கவும்.
[இதுக்கப்புறம்தான் நம்ம ஷார்ட்கட் போறோம்..யூஷுவலாக அடுப்பிலேயே வெகுநேரம் மாவை வறுத்துதான் லட்டு செய்வாங்க. நாம மைக்ரோவேவ் யூஸ் பண்ணிக்கலாம்! ;)]
மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் வறுத்த மாவு, சர்க்கரை சேர்த்து கலந்து மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து 4 நிமிடங்கள் சமைக்கவும். உடனே மைக்ரோவேவ்-ஐத் திறக்காமல் 3-4 நிமிடங்கள் விட்டு பிறகு திறந்து லட்டு கலவையை வெளியே எடுத்து நன்றாக கலந்து விடவும்.
பொடித்த நட்ஸ்-உலர் பழ கலவையைச் சேர்த்து கலந்து மீண்டும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து மைக்ரோவேவ்-லிருந்து லட்டு கலவையை எடுத்து ஆறவிடவும்.
கலவை கை பொறுக்கும் சூட்டுக்கு ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துவைக்கவும்.
[குறிப்பு: இரண்டு கைகளிலும் நெய் தடவிக்கொண்டு லட்டுக்கள் பிடித்தால் அழகாக வரும். என்னைப் போல அவசரக் குடுக்கை + நளினமாக ஒரே கையில் பிடித்தால் படத்திலிருப்பது போல கோக்குமாக்கான உருண்டைகள் கிடைக்கும்! ;) அது உங்க வசதி!! :)]