Friday, June 26, 2015

ராகி வடை/ ராகி பக்கோடா/ ராய் வடை

தேவையான பொருட்கள்
ராகி மாவு-1கப்
வேர்க்கடலை பொடித்தது-1/4 கப் 
முருங்கைக் கீரை -1 கைப்பிடி
பொடியாக நறுக்கிய வெங்காயம்-3டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
உப்பு
தண்ணீர் - சுமார் 1/2கப் 
எண்ணெய்- பொரிக்க 

செய்முறை 
வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து ராகி மாவுடன் சேர்க்கவும்.
 மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்த முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து..
 நன்றாக கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். நான் சுமார் அரைக்கப் தண்ணீர் சேர்த்தேன்.
 எண்ணெய் காயவைத்து ராகி மாவை சிறு வடைகளாகப் போட்டுப்  பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் வடியவைத்து சூடாக காப்பி அல்லது டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
 ராகி மாவு மட்டும் சேர்த்தும் செய்கையில் கொஞ்சம் கடுகடுப்பாக வரும்.  அதற்காகத்தான் வேர்க்கடலைப் பொடித்து சேர்ப்பது..வேர்க்கடலைக்குப் பதிலாக பொட்டுக்கடலையும் சேர்க்கலாம். கீரை சேர்க்காமலும் செய்யலாம்.
 செய்து சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்க. நன்றி!

Monday, June 15, 2015

மலரும் நினைவுகள் - சிறுவர், சிறுமியர் பாடல்கள்


வெகுநாட்கள் முன் டைப் செய்து வைத்திருந்த பதிவு..வெளியிடும் நேரம் இன்றுதான் வாய்த்திருக்கிறது. படித்துப்பார்த்து உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்! :) 
~~~
ஆனை  ஆனையாம்
அழகர் ஆனையாம்
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனையாம்
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனையாம்
காவிரித் தண்ணிய கலக்கும் ஆனையாம்
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்
~~~
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டா
காடைக்குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக்கிளியே பழம் கொண்டா
உத்தமராஜா என் கண்ணே
பத்தரை மாற்று பசும்பொன்னே
இன்னும் பாட்டுப் பாடிடுவேன்
கேட்டுக்கொண்டே உறங்கிடுவாய்!
~~~
காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயாம்
ஏண்டியக்கா அழுகறே..
காஞ்சீபுரம் போகலாம்..
கட்டு முட்டாய் வாங்கலாம்..
பிட்டுப் பிட்டுத் தின்னலாம்..
~~~
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு..
சாயக்கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு..
மயிலே குயிலே சாந்தாடு...
மாடப்புறாவே சாய்ந்தாடு...
மணிப்புறாவே சாய்ந்தாடு! 
~~~
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு..
~~~
************* இதுவரை உள்ள பாடல்கள் சிறு குழந்தைகளுக்கு (ஐ மீன்  லயா வயதுக் குழந்தைகளுக்குப் பாடுவது! :)) பிறந்தது முதல் பாடும் பாடல்கள் நிறைய உண்டு. இப்போதைக்கு நினைவில் உள்ளவை இவை மட்டுமே..சிறுகச் சிறுக கிடைக்கும் பாடல்களை எல்லாம் பதிந்து வைக்கும் ஆசையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.***********
அடுத்து வரும் பாடல்கள் பள்ளிப்பருவத்துப் பாடல்கள்! :) 
~~~
அடடா அடடா அண்ணாமல
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்ல
போகப் போக ஜவுளிக்கட
போயிப் பாத்தா இட்லிக்கட
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை  வந்துச்சாம் 
ஈரோட்டு மாமனுக்கு கொண்டை வந்துச்சாம்! 
~~~~
கதை  கதையாம்
காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு தொக்கடவாம்
தொக்கடவில் ஒரு வைக்கப்புல்லாம்
வைக்கப்புல்லைக் கொண்டு போய் மாட்டுக்குப் போட
மாடு ஒரு படி பால் குடுத்துதாம்
பாலைக் கொண்டுபோய் பால்காரனுக்கு ஊத்த
பால்காரன் ஒரு பணம் குடுத்தானாம்
பணத்தைக் கொண்டுபோய்க் கடைக்காரனுக்குக் குடுக்க
கடைக்காரன் ஒரு தேங்காய் குடுத்தானாம்
தேங்காயைக் கொண்டுபோய் சாமிக்கு உடைக்க
சாமி ஒரு பூ குடுத்ததாம் 
பூவைக் கொண்டு போய் ஆத்துல விட
ஆறு ஒரு மீன் குடுத்ததாம்
மீனைக் கொண்டுபோய் பொண்டாட்டிகிட்ட  குடுக்க
அவ ஆக்கத்தெரியாதுன்னாளாம்
ஆக்கத்தெரியாதவ அப்படிப்போனாளாம்.
திங்கத் தெரியாதவன் இப்படிப் போனானாம்.. 
~~~~
எங்கம்மா உங்கம்மா
டீச்சரம்மா

எங்கப்பா உங்கப்பா
தகர டப்பா

எங்கண்ணன் உங்கண்ணன் 
வெளக்கெண்ணை

எங்கக்கா உங்கக்கா
முருங்கைக்கா

எந்தம்பி உந்தம்பி 
கரன்ட் கம்பி 
~~~~
கொக்கே கொக்கே பூப்போடு
கோயிலைச் சுத்தி 
பூப்போடு 
... இந்தப் பாடலை ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் பாடுவோம். வானத்தில்   கருடன் (அ) பருந்து பறப்பதைக் கண்டால் இந்தப் பாட்டைப் பாடுவது ( கோவையில் ஊருக்குள்ள கொக்கு பறந்து நான் பார்த்ததில்லீங்க! :)) ..பாடினால் கை நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் வருமாம், அதாவது கொக்கு வானத்திலிருந்து பூ போடுவது அதுதான்! என்னவெல்லாம் கற்பனைகள்!!
~~~~
மொட்டைப் பாப்பாத்தி
ரொட்டி சுட்டாளாம்
உப்புப் பத்தலையாம்
கடைக்குப் போனாளாம்
காசு பத்தலையாம்
கடைக்காரனைப் பார்த்து கண்ணடிச்சாளாம்!
~~~~
ஐஸ் ஐஸ் ஐஸ்
அஞ்சு பைசா ஐஸ்
ஆப்பிள் ஜூஸ்
நீ ஒரு லூஸ்! 
~~~~~
பருப்பாம் பருப்பாம்
பன்னன்டு பருப்பாம்
சுக்கைத் தட்டி
சோத்துல போட்டு
உங்கப்பன் பேர் என்ன? 
முருங்கைப் பூ
முருங்கைப்பூ தின்னவனே 
முள்ளாங்கஞ்சி குடிச்சவனே
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்
மாட்டேன்னா மாட்டேன்
மாதுளங்கா கோட்டை
கோழி குடலைத் தின்னு
குப்பைத்தொட்டி மண்ணைத் தின்னு 
தார் தார் மல்லாண்ட
தாமரப் பூ மல்லாண்ட
பூப்பறிக்கிற நோம்பிக்கு 
பூமா தேவி கையெடு! 
..இந்தப் பாடல் நான்கைந்து பேர் வட்டமாக உட்கார்ந்து, கைகளைத் தரையில் வைத்துக்கொள்ள ஒருவர் ஒவ்வொரு கையாய்த் தொட்டவாறே இந்தப் பாட்டைப் பாடுவது. கடைசி வரி "கையெடு" வருகையில் யார் கையில் பாடுபவர் விரல் இருக்கிறதோ அவர் அந்தக் கையை எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொருவராக கைய எடுத்துவிட்டு வரிசையாக நிற்க, பாட்டு பாடி விளையாடியவர் ஏதோ சில கேள்விகள் கேட்பார். அவையெல்லாம் மறந்துபோய்விட்டது. வீட்டில் யாராவதிடம் கேட்டு அப்டேட் செய்ய முயல்கிறேன். 
~~~
மழ வருது மழ வருது 
நெல்லு குத்துங்க..
முக்காப் படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க..
ஏரோட்டற மாமனுக்கு எடுத்து வையுங்க..
சும்மா வாற மாமனுக்குச் சூடு வையுங்க..
~~~ 
குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சு குத்தடி ஜைலக்கா..
பந்தலிலே பாவக்கா..
தொங்குதடி லோலாக்கு..
பையன் வருவான் பாத்துக்கோ..
பணங்குடுப்பான் வாங்கிக்கோ..
சுருக்குப்பையில போட்டுக்கோ
சும்மா சும்மா நடந்துக்கோ!
~~~
 ...இப்படியாப்பட்ட பாட்டுகளைப் படிச்சு ஆரும் டென்ஷன் ஆகக்கூடாது..அர்த்தம் கேட்கப்படாது...அமைதியா படிச்சு ரசிச்சு(!) விட்டுப் போகோணும் என கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பாடிய சின்ன வயசுப்பாடல்களைக் கருத்துப் பெட்டியில் பகிருங்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி, வணக்கம்!

Thursday, June 4, 2015

மாங்காய் தொக்கு / Mango Thokku

தேவையான பொருட்கள்
மாங்காய்-1
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
வெல்லம் - சிறிது
உப்பு
நல்லெண்ணெய்-1/4கப் 

செய்முறை
மாங்காயைக் கழுவித் துடைத்து தோல் சீவிக்கொள்ளவும்.
காய் துருவியில் மாங்காயைத் துருவவும்..
வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,
ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து, கடுகு பெருங்காயம் தாளித்து துருவிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும்.
மாங்காய் வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தீயைக் குறைத்து வைத்து தொக்கில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். வெல்லத்தூளும், வெந்தயப்பொடியும் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுவையான மாங்காய்த் தொக்கு சுவைக்கத் தயார்.
சுத்தமான கண்ணாடிப் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் நாள்படவும் இருக்கும்.

இந்தத் தொக்கு கோவை டு டெல்லி டு ஶ்ரீரங்கம் - ஆதி வெங்கட்-டின் வலைப்பூவைப்பார்த்துச் செய்தது. இங்கே உபயோகித்த மாங்காயை மாங்காய் என்பதை விடவும் கெட்டியாக இருக்கும் மாம்பழம் என்றே சொல்லலாம், அப்படி இனிப்புச் சுவையுடன் இருந்தது. ஆனாலும் ருசி அபாரம். சுவையான குறிப்புக்கு நன்றி ஆதி!


LinkWithin

Related Posts with Thumbnails