Saturday, December 31, 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2016-ன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மறக்க முடியாத ஒவ்வொரு நிகழ்வை வழங்கி விடைபெற்று கொண்டிருக்கின்றன.  இன்னும் சில மணி நேரங்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது.

இறுதி மாதம் குளிர்-மழையுடன் உடல்நலக் குறைவையும் துணைக்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டதால், வலைப்பக்கம் வந்து பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய இருந்தாலும் வர முடியவில்லை.

ஆக மொத்தத்தில் 2016 ஒரு மறக்க முடியாத வருடமாக, சந்தோஷங்கள் - ஏமாற்றங்கள் - ஆச்சரியங்கள், புது வரவுகள், விருந்தினர்கள், தவிப்புகள், கோபங்கள் என்று எல்லாம் நிறைந்த  ஆண்டாகக் கழிந்து நிறைவு பெற இருக்கின்ற இவ்வேளையில் வருகின்ற ஆண்டு அனைவருக்கும் அளவில்லா நன்மைகளையும், உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 

Wednesday, December 28, 2016

பனீர் குடைமிளகாய் மசாலா / Paneer Capsicum Do Pyazaa


தேவையான பொருட்கள் 
வெங்காயம் -2
பச்சைமிளகாய் -2
தக்காளி - 3
கேப்ஸிகம்/குடைமிளகாய் -1
பனீர் - 11/2 கப் (1" துண்டுகளாக நறுக்கியது) 
ஹாஃப் & ஹாஃப் / ஃபுல் க்ரீம் - 1/2கப் 
இஞ்சி பூண்டு விழுது -2டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன் 
கசூரி மேத்தி - 1டீஸ்பூன் 
வெண்ணெய் - 1டீஸ்பூன்
எண்ணெய் 
உப்பு 
தண்ணீர் 

செய்முறை 
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிவைக்கவும்.
மற்றொரு வெங்காயத்தையும், குடைமிளகாயையும் பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். 
1.கடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 
2.வெங்காயம் ஓரளவு வதங்கியதும் , இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசம் போக வதக்கி, 
3. நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி குழைய வதங்கியதும், மிளகாய்த்தூள்-மல்லித்தூள்-மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். 
5. பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கிய இரண்டாவது வெங்காயம் - குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். 
6. ஒரு டீஸ்பூன் வெண்ணையையும் சேர்த்து வதக்கிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து சுமார் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
7. மிதமான தீயில் மசாலா 3-4 நிமிடங்கள் கொதிவந்ததும், 
8. அடுப்பில் தணலை குறைத்து ஹாஃப் & ஹாஃப் பாலைச் சேர்க்கவும். 
9. பால் மசாலாவுடன் கலந்து சூடானவுடன் நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்க்கவும்.
10. இரண்டு மூன்று நிமிடங்கள் அடுப்பிலேயே வைத்து, பனீர் மசாலாவுடன் சேர்ந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
11. கசூரி மேத்தியை மசாலாவில் சேர்க்கவும். 
சுவையான பனீர் கேப்ஸிகம் மசாலா / பனீர் கேப்ஸிகம் (D)தோ ப்யாஸா ரெடி. சப்பாத்தி, பரோட்டா, மற்றும் புலாவ்-பிரியாணி-ஜீரா ரைஸ் வகைகளுடன் பரிமாறலாம்.

குறிப்பு
இந்த பதிவில் படங்களை இணைத்ததும், ரெசிப்பியை டைப் செய்ததும், குறிப்பாக பனீர் மசாலா & சப்பாத்தியை வெளுத்துக் கட்டியதும் மட்டிலுமே என் பங்கு. மற்றபடி முழுச் சமையலும் லயா அப்பாவின் கைவண்ணம்!! :) :D ;)  Holiday Special!! B-)

Thursday, December 1, 2016

கடாய் மஷ்ரூம் க்ரேவி

தேவையான பொருட்கள் 
வெங்காயம் -1
பூண்டு 5 பற்கள்
பச்சை மிளகாய் -1
மஷ்ரூம் - 220கிராம்
மிளகாய்த்தூள் -11/2டீஸ்பூன்
மல்லித்தூள்- 11/2டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2டீஸ்பூன் 
கசூரி மேத்தி - 1/2டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 
சர்க்கரை - 1/2டீஸ்பூன் (விரும்பினால்) 
அரைக்க 
தக்காளி-2
இஞ்சி- சிறுதுண்டு
முந்திரி - 4
தேங்காய் - கொஞ்சம் 

செய்முறை
வெங்காயம், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 
கடாயில் எண்ணெய் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் ஓரளவு பிங்க் நிறத்திற்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்-மல்லித்தூள்-சீரகத்தூள்-கரம் மசாலா போட்டு வதக்கவும். (மசாலாக்கள் கருகாமல் மிதமான தீயில் வதக்கவும்.)
வெங்காயம் வதங்கும் நேரத்தில் தக்காளி -இஞ்சி -முந்திரி-தேங்காய இவற்றை மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். 
பொடிகள் மசாலா வாடை அடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கவும்.

பிறகு நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து வதக்கி, ஒரு கப் கொதிநீரை சேர்க்கவும். ( விருப்பத்திற்கேற்ப தண்ணீர் அளவை கூடவோ குறைத்தோ சேர்க்கலாம்.) 
க்ரேவி 4-5 நிமிடங்கள் கொதித்து, காளான் வெந்ததும் கசூரி மேத்தி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கடாய் மஷ்ரூம் க்ரேவி தயார். புலாவ், சப்பாத்தி, நாண், சீரகசாதம், வெறும் சாதம் எல்லாவற்றுடனும் நன்றாக இருக்கும்.
டிவியில் ரேவதி ஷண்முகம் அவர்கள் செய்த ரெசிப்பியை பார்த்து செய்தேன்...அவர் தேங்காய் சேர்க்கவில்லை, கசகசா-வை ஊறவைத்து சேர்த்தாங்க. என்னிடம் கசகசா கைவசம் இல்லாததால் தேங்காய் சேர்த்துக்கொண்டேன். இஞ்சியையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து சேர்க்காமல் இப்படி பூண்டை நறுக்கியும், இஞ்சியை தக்காளியுடன் அரைத்தும் சேர்ப்பதால் சுவை நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க. எனக்கு அவ்வளவு டெக்னிகல் டீடெயில் எல்லாம் தெரியாதுங்க..ஆக மொத்தம் சுவையா இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி! :) 

Wednesday, November 16, 2016

கத்தரிக்காய் கூட்டு / Brinjal koottu

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 6
சாம்பார் பொடி - 3/4டேபிள்ஸ்பூன் 
பாசிப்பருப்பு - 1/4கப் 
உப்பு 
சர்க்கரை - 1/2டீஸ்பூன் (விரும்பினால்) 
அரைக்க
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
மிளகு -5
சீரகம் - 1டீஸ்பூன் 
தாளிக்க
எண்ணெய்
கடுகு -1/2டீஸ்பூன் 
உளுந்து பருப்பு -1/2டீஸ்பூன் 
கறிவேப்பிலை -கொஞ்சம்
வரமிளகாய் -1 

செய்முறை 
கத்தரிக்காயை சிறூ துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
பாசிப்பருப்பை குழையாமல் வேகவத்துக்கொள்ளவும். 
அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் கத்தரிக்காய், சாம்பார் பொடி, உப்பு, தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
 கத்தரிக்காய்  முக்கால்வாசி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வெந்த பருப்பைச் சேர்க்கவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி, (விரும்பினால்) அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்.
 தேங்காயின் பச்சைவாசம் அடங்க, கூட்டை நன்கு கொதிக்கவைக்கவும்.
தனியாக சிறு தாளிப்பு கரண்டியில் கடுகு - உளுந்து தாளித்து , கறிவேப்பிலை -வரமிளகாய் கிள்ளிப் போட்டு வதக்கி கூட்டில் சேர்க்கவும்.
சுவையான கூட்டு ரெடி. சாதம், பொரியலுடன் பரிமாறவும்.

ABCD EFG..!!!

ABCD EFG..!!
SOMEONE SWEET HAS TURNED 3!!
:) :D B-)
36 மாதங்கள் ஓடிய வேகம் தெரியவில்லை... 2013, நவம்பர் 15-ல்  பட்டு வண்ண ரோசாவாய்ப் படுத்திருந்த என் "நச்சரிக்கும் சிட்டுக் குருவிக்கு" 3 வயது முழுமையடைந்துவிட்டது.  :)))

சில வசந்தங்கள் காத்திருந்து நான் பெற்ற பொன்வசந்தம் இன்று என் வாழ்க்கையை முழுவதுமாய்க் குத்தகைக்கு எடுத்து விரல் நுனியில் ஆட்டுவிக்கிறாள்.

என் கைக்குள் அடங்கிக் கிடந்த குட்டி மனுஷி இப்போது றெக்கை கட்டிப் பறக்கும் அருவியாய் துள்ளித் திரிகிறாள்.  சில நாட்களாய், பேனாவைக் கொடுத்து அவள் கையில் ஒரு ஸ்மைலியும் என் கையில் ஒரு ஸ்மைலியுமாய் வரைந்து கொண்டு அவ்வப்பொழுது வந்து ஸ்மைலி பத்திரமாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறாள். :)))

வாழ்க்கை நதியில் புதிதாய் உதித்த இன்பச்சுழலொன்று நதியின் போக்கையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்களும் சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். :) 

எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த எங்கள் பூமகளே...உலாவும் வானம்பாடியாய் வாழ்க கண்ணே!! பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ வாழ்த்துக்கள்! :)) 

Thursday, November 10, 2016

பத்லா கடி (மோர்க்குழம்பு) / Pathla Kadhi

ஜெயின் கிச்சடி ரெசிப்பி பகிர்ந்திருந்த பொழுது, பக்கத்திலிருந்த பத்லா கடி / வட இந்திய மோர்க்குழம்பு ரெசிப்பி இது. புளித்த மோர் இருந்தால் சுலபமாகச் செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள் 
புளித்த மோர்/ தயிர் - 1 கப் 
கடலை மாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன் 
உப்பு 
தாளிக்க 
எண்ணெய் 
கடுகு-1/2டீஸ்பூன்
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -கொஞ்சம்
வெந்தயம் - 7
மிளகு -5 
கிராம்பு/லவங்கம் -1

செய்முறை 
புளித்த மோருடன் ஒரு கப் தண்ணீர், கடலை மாவு, மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல்  கலக்கிக்கொள்ளவும். (நான் மிக்ஸியில் பெரிய ஜாரில் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக்கொண்டேன், ஈஸி!! ;)) தயிர் உபயோகிப்பதானால் தேவையான தண்ணீரையும் சேர்த்து மிக்ஸியில் கலந்துகொள்ளவும்.) 

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து கிராம்பு -மிளகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவும். நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

அடுப்பில் தணலை குறைத்துக்கொண்டு மோர்க்கலவை + தேவையான உப்பைச் சேர்க்கவும்.  குறைந்த தீயில் மோர் சூடாகி லேசாக நுரைத்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கடி தயார். 
கிச்சடி-யுடன் கடி, இதனுடன் சுட்ட மிளகு அப்பளாம் பெஸ்ட் காம்பினேஷன் என்று காமாட்சி அம்மா சொல்லிருந்தாங்க. என்னிடம் அப்பளம் இல்லாததால் படத்திலும் இல்லை. நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க. நன்றி! 


Thursday, November 3, 2016

ஆம்லெட்

ஆம்லெட் செய்வது என்ன பெரிய கம்ப சூத்திரமா? இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா?? என்று பெரும்பாலானவர்கள் எண்ணினாலும்....அப்படி என்னதான் இருக்குன்னு படிச்சுப்பார்க்க ஒரு க்யூரியாஸிட்டியோட எட்டிப்பார்க்கிறதுக்கு பெரிய டாங்க்ஸூ!! :)))))) 

அது பாருங்க, இந்த ஆம்லெட் செய்யறது ஈஸியான வேலைதான், தோசைக்கல்ல காயவச்சோமா, அதுக்குள்ள வெங்காயத்தை நறுக்கினோமா, முட்டைய ஒடச்சு கலக்கினோமா..சுட்டு சாப்ட்டோமானு அஞ்சு நிமிஷத்தில முடியற வேலைதான். ஆனா இன்னிக்கு அதில ஒரு ஷார்ட்கட் மெதட் உங்களுக்கெல்லாம் சொல்லித்தரப்போறேன்(!!!??!! )..ஓகே ரெடி, ஸ்டார்ட் மீசிக்!! 

ஆம்லெட் செய்யற வேலை ஈஸியா இருந்தாலும் அதில மீ ஃபேஸ் பண்ணற ஒரு சில டிஃபிகல்டீஸ் ஃபார் யுவர் ரெஃபரன்ஸ் : 
1. எவர் சில்வர் கிண்ணத்தில்  முட்டைய உடைச்சு ஊத்தி ஸ்பூன் , ஃபோர்க் அல்லது விஸ்க்-ஆல முட்டைய கலக்கினா என்னோட அழகான கிண்ணங்கள் எல்லாம் காயமாகிருது யுவர் ஹானர்!! 
...சரின்னு இல்லாத மூளைய கசக்கி உலுக்கி, கண்ணாடி கிண்ணங்கள்லதான் முட்டைய உடைச்சு கலக்கணும்னு வீட்டுல ஒரு ரூல் போட்டாச்சுன்னு வைங்க. 
2. இப்ப அடுத்த பிரச்சனை..முட்டை கலக்கின கிண்ணத்தை கழுவி வைக்கிறது. என்னதான் ஆம்லெட்ட ருசிச்சு சாப்ட்டாலும் இந்த முட்டைக்கிண்ணத்தை கழுவுறது மீ-க்கு புடிக்காத வேலை...அந்த சுமெல் (!!??@@) ரொம்ப கஷ்டமா இருக்கும் கழுவி வைக்கிறதுக்குள்ள...!! 

சரி, வெங்காயமிளகாயே போடாம செய்யலாம்னா நல்லா நாலு முழம் வளத்தி வைச்சிருக்க நாக்கு அது போதாது, போதாதுன்னு மல்லுக்கட்டுது. அவசரத்துக்கு எப்பவாவது அப்படியே சாப்பிடலாம், ஆனா ஒவ்வொருக்காவும் ப்ளெயின் ஆம்லெட்டே சாப்பிட போரடிக்குதுல்ல? நீங்க என்ன சொல்றீங்க? 

இப்படியான தலையாய பிரச்சனைகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த சோம்பேறி டெக்னிக் ஃபார் ஆம்லெட். ஓகே, போதுமான முன்னுரை குடுத்தாச்சு, வாங்க ஆம்லெட் போட போலாம்!! 


அடுப்ப ஆன் பண்ணி, தோசைக்கல்ல வைச்சுட்டு கொஞ்சம் வெங்காயம், ஒரு பச்சைமிளகாயை பொடியா கட் பண்ணிக்குங்க. அதுக்குள்ள கல்லு காய்ஞ்சிருக்கும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டைரக்ட்டா தோசைக்கல்லயே நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாயைப் போடுங்க...
கொஞ்சம் உப்பையும் தூவி நல்லா வதக்குங்க.  வெங்காயம் வதங்கினதும் முட்டைய டமால்னு உடைச்சு வெங்காயத்து மேல ஊத்துங்க...
கையோட சட்டுவத்தில முட்டைய கலக்கி, வெங்காயமிளகாயோட சேர்ர மாதிரி கலந்துடுங்க..
அப்புறம், இன்னுங்கொஞ்சம் எண்ணெய் ஊத்திட்டு, மிளகுத்தூளையும் தூவிருங்க..
ஒரு புறம் வெந்ததும், திருப்பிப்போட்டு அடுப்பை ஆஃப் பண்ணிருங்க. கல்லு சூட்டிலயே அடுத்த பக்கம் பதமா வெந்துரும். (ஆம்லெட்டோட மறுபக்கத்தை பாக்கறதுக்குள்ள, "பார்க்க அப்பெடைஸிங்-ஆவே இல்லையே!!" அப்புடின்னெல்லாம் யோசிக்கக்குடாது..கர்ர்ர்ர்ர்ர்!!)
சில விநாடிகளில் ஆம்லெட் ரெடி...தட்டில வச்சு சுடச்சுட சாப்பிடுங்க.
எப்புடி நம்ம ஷார்ட்கட்டு?? இதை விட வேற எதாச்சும் குறுக்கு வழி உங்க கைவசமிருந்தா அதையும் சொல்லுங்க!! ;) 

Monday, October 24, 2016

ஜெயின் கிச்சடி

மதிய உணவுக்கு அவசரமாக ஏதாவது சுவையாகச் சமைத்து சாப்பிடலாமே என்று தோன்றுகையில், குக்கரில் ஒரே சாதமாக தாளிச்சு விட்டு 3 விசில் விட்டு இறக்கினால் போதும் என்ற உணவுவகைகள்தான் என் சாய்ஸ்..அஃப்கோர்ஸ், வீட்டில் ஒரு பிரியாணி பிரியர் இருப்பதால் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, கொண்டைகடலை பிரியாணி, தக்காளி பிரியாணி, மீல்மேக்கர் பிரியாணி என போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும், அதிக காரம்-மசாலா இல்லாத இந்த கிச்சடி இப்ப அடிக்கடி எங்க வீட்டில் இடம்பிடிக்கிறது. பிரியாணி பிரியரே விரும்பி சாப்பிடுகிறார்னா பாத்துக்கோங்க..!! ;) :)

அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p

இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...

அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))

தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு

பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை  - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))

செய்முறை 
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு காய்களை சேர்க்கவும்.  சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, ஊறிய அரிசி-பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ருசிக்கு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விடவும். (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்..கொஞ்சம் குழைவாக இருக்கும் இந்த கிச்சடி) 
குக்கரை மூடி , மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். 
இதனுடன் ஜோடியாக பத்லா கடியும் செய்தேன், ஆனால் அது திரும்பி கூட பார்க்கப்படாமல் தங்கிவிட்டது.  ;)

ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)
குறிப்பு
டைட்டில்-ல "ஜெயின் கிச்சடி" என இருந்தாலும், இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி அல்ல, இஞ்சி-பூண்டு, வெங்காயம் இவையெல்லாம் சேர்க்காமல் செய்தால் அதுவே ஜெயின் கிச்சடி. விருப்பமுள்ளோர் அப்படியும் செய்து பார்க்கலாம். :) நேரமிருந்தா இங்கேயும் எட்டிப் பாருங்க. இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி - கடி ஜோடி!

Thursday, October 6, 2016

அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் 
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - கொஞ்சம் 
உளுந்து அப்பளாம்/அப்பளம் - 2 (அ) 3 
நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் (அ) சின்னவெங்காயம் - 7 
புளி - எலுமிச்சை அளவு 
நசுக்கிய பூண்டு - 4 பற்கள் 
கறிவேப்பிலை கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் 
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 1டீஸ்பூன் 
பருப்பு பொடி -1 டீஸ்பூன் (நான் சேர்க்கவில்லை) 
அரிசிமாவு -1டீஸ்பூன் 
உப்பு 
சர்க்கரை அல்லது வெல்லம் - கொஞ்சம் 
நல்லெண்ணெய் 

செய்முறை 
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்தயம் சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்ததும் க.பருப்பு -உ.பருப்பு சேர்க்கவும். 
அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,  உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி - ரசப்பொடி - மல்லிப்பொடியை சேர்த்து, தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம், கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும், பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் (அ) சர்க்கரையையும் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு தயார். பருப்பு உசிலி அல்லது பருப்புத் தொகையல் காம்பினேஷனுடன் சுவையாக இருக்கும்.
படத்தில்-- சோறு, வத்தக்குழம்பு, பீன்ஸ் பருப்புசிலி, பைனாப்பிள்-மேங்கோ சாலட். ரசமும் தயிரும் படத்தில் வரவில்லை. :)

குறிப்பு 
இந்த குறிப்பு காமாட்சி அம்மாவின் ப்ளாகைப் பார்த்துச் செய்தது. அவர்கள் மணத்தக்காளி வற்றல் சேர்த்து செய்திருந்தாங்க..என்னிடம் கைவசம் அந்த வத்தல் இல்லாததால் சுண்டவத்தல் சேர்த்தேன்.  அம்மா செய்த அளவு கலர் வரவில்லை..அடுத்த முறை மீண்டும் முயற்சித்துப்பார்க்கவேண்டும், மணத்தக்காளி வற்றலுடன். ;) நாமள்ளாம் ஆரு..கஜினி முகம்மது பரம்பரையில்ல? சீக்கிரமா செய்து அந்தப் படத்தையும் போடறேன் பாருங்க!! :D

Thursday, September 22, 2016

கீரை வாங்கலையோ...கீரை!!

அமரந்த் சீட்ஸ்/ ராஜ்கிரா சீட்ஸ் (Amaranth seeds/Rajgira seeds) என்ற பெயரில் இங்கே இந்தியன் மளிகைக்கடைகளில் கிடைக்கும் விதைகளை வாங்கி விதைத்து கீரை வளர்க்கலாம் என்ற தகவல் தெரிந்ததால் முயற்சித்து பார்க்கலாம் என ஆரம்பித்த கீரை வளர்ப்பு பற்றிய பதிவு இது. 
பக்கத்து வீட்டுத் தோழியிடம் இருந்து கிடைத்த அமரந்த் சீட்ஸ்...கீரை விதைகள்.. 
என் பெண்ணின் குட்டிக்கைகள் உதவிசெய்ய,
இரண்டு சிறிய தொட்டிகளில் விதைத்தாயிற்று...கீரைகள் முளைவிட்டு வளரலாயின.
குட்டிக்கால்களுடன் குட்டிக்கீரைகள்!! :) கீரைகள் வளர்வதைக் கண்டு சற்றே பெரிய தொட்டிகளிலும் கொஞ்சம் விதைகள் தூவி வளர்ந்த கீரைகள். 
பறித்து, பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாயிற்று. கீரைகளைப் பறிக்கையில் வேருடன் பறிக்காமல், தண்டுகளை மட்டும் நறுக்கிக் கொண்டால், மீண்டும் அதே தண்டிலிருந்து கீரைகள் துளிர்க்கின்றன. அப்படி இரண்டாவது முறை பறித்த கீரை..பருப்புடன் சேர்த்து கடைந்த கோவை ஸ்பெஷல்!! 
இரண்டாவது முறை நறுக்கிய பின் இப்படி இருந்த கீரைத்தொட்டி,
சில நாட்களில் இப்போது...
இப்படி இருக்கிறது.  
:) 
வீட்டிலேயே கீரை வளர்த்து சாப்பிட விரும்பும் வெளிநாட்டு வாசிகள் சிறிய தொட்டிகளில் இந்தக் கீரையை வளர்க்கலாம். எளிதில் முளைத்து வளர்கிறது. நாமே வளர்க்கும் காய்-கனி-கீரைகளின் ருசி அறிந்தவர்கள் கண்டிப்பாக முயற்சிக்கலாம்!! :D 

Friday, September 2, 2016

காலிஃப்ளவர் ஃப்ரை

தேவையான பொருட்கள் 
காலிஃப்ளவர் - 11/4கப் 
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம், சோம்பு - தலா1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/8டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணை 
உப்பு 

செய்முறை 
காலிஃப்ளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
காடாயில் எண்ணெய் காயவைத்து சீரகம் சோம்பு தாளித்து காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். 
காய் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும். 
காலிஃப்ளவர் முக்கால்பாகம் வெந்ததும் மசாலாபொடி மற்றும் கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.
காய் நன்றாக வெந்து மசாலாவாடை அடங்கியதும் பரிமாறவும்.
விரைவில் செய்யக்கூடிய காரசாரமான பொரியல் இது. சில்லி சிக்கன் மசாலா விரும்பாதவர்கள் மிளகாய்ப்பொடி-கரம் மசாலா பொடி சேர்க்கலாம். அல்லது சாம்பார் பொடியும் சேர்க்கலாம். காய் வேக தண்ணீர் சேர்க்கவேண்டியதில்லை, மூடி போட்டு வைக்கையில் அதுவே நீர் விட்டு வெந்துவிடும். சுவைக்கேற்ப காரப்பொடியை சேர்த்துக்கொள்ளவும். சாதம் வகைகளுடன் சுவையாக இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails