Tuesday, November 20, 2018

என் இனிய தேவதை..

நேற்றுதான் எங்க வீட்டு குட்டி தேவதையின் வரவை உங்களுடன் பகிர்ந்த மாதிரி இருக்கிறது, ஆனால் அதற்குள் முழுதாக ஐந்து ஆண்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிட்டன!! 
இப்ப்பொபொழுது அந்த குட்டி தேவதை அக்கா தேவதையாகவும் மாறிவிட்டாள்..தன் பிறந்தநாளுக்கு என்னென்ன வேண்டும் என தெளிவாக அறிவிக்கவும் ஆரம்பித்துவிட்டாள். 
:) :) :)
 15ஆம் தேதி வியாழக்கிழமையானதால், சிம்பிளாக ஒரு குக்கீ கேக் வாங்கி நாங்க 5 பேர் மட்டும் 5வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு பள்ளி சென்றாயிற்று.
வாரக்கடைசியில் ஒரு ப்ரின்ஸஸ் கேஸல் வாடகைக்கு எடுத்து, 
"ஸ்கை" நாய்க்குட்டி படம் போட்ட கேக் வாங்கி, அவளின் நண்பர்களை எல்லாம் அழைத்து விளையாடி, உண்டு  மகிழ்ந்து கொண்டாடியாயிற்று.

சின்னக் குட்டி தேவதை கேக் வெட்ட ஆர்வமாக இருந்தார்..ஆனால் நித்திராதேவி கேக் வெட்டும் நேரத்தில் அவரை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள..பின்மாலையில் எழுந்து கேக்கை சுவைத்தார். ;) :) 
அப்புறம், முதல் படத்தில் இருக்கும் அந்த டெடி இதோ இந்தப்படத்தில் இருப்பதேதான்..லயா பிறந்தபொழுது இதே படத்துடன் தான் பதிவிட்டிருந்தேன்..அதனால் இப்பவும் அதே டெடி..பலூன் வேற!! B-) :-) 

Tuesday, November 6, 2018

தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 

முறுக்கு, ரிப்பன் பக்கோடா, காலா ஜாமூன் & மைசூர்பாகுடன் எங்க வீட்டு தீபாவளி! :) 

Wednesday, October 3, 2018

கத்தரிக்காய் வறுவல் / Brinjal fry

தேவையான பொருட்கள் 
பெரிய கத்தரிக்காய் 
மிளகாய்ப்பொடி -1டீஸ்பூன்
மஞ்சள்பொடி-1/4டீஸ்பூன்
மல்லிப்பொடி -2டீஸ்பூன்
சாம்பார்ப்பொடி - 1டீஸ்பூன்
எள்ளு - 1டீஸ்பூன் 
கடலைமாவு -2டேபிள்ஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை
கத்தரிக்காயை கழுவித்துடைத்து பெரிய வில்லைகளாக நறுக்கவும். 
மசாலாபொருட்களை ஒன்றாக கலக்கவும். 
நறுக்கிய கத்தரி வில்லைகளை மசாலாவில் புரட்டி ஒரு அகன்ற தட்டில் அடுக்கவும். 
மசாலா தடவிய கத்தரிக்காயை சிறிது நேரம் (சுமார் 45 நிமிஷம் முதல் ஒரு மணி நேரம்) வரை வைக்கவும்.

இப்போது கத்தரிக்காய் தண்ணீர் விட்டு படத்திலிருப்பது போல ஆகியிருக்கும்.
தவாவில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கத்தரித் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும். ஒரு புறம் பொன்னிறமாக வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும். கத்தரிக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.  தேவைப்பட்டால் இடையில் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டுக்கொண்டு எல்லாக் கத்தரி துண்டுகளையும் பொரித்து எடுக்கவும்.

மொறுமொறுப்பான சுவையான கத்தரிக்காய் ஃபிரை ரெடி..சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சூப்பராக மேட்ச் ஆகும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அலாதி..ஆறிய பிறகு சாப்பிட்டால் மொறுமொறுப்பு குறைந்திருக்கும், சுவை நன்றாகவே இருக்கும். ;) :)

ரெசிப்பி இன்ஸ்பிரேஷன் - இங்கே....நன்றி முல்லை!

Friday, September 14, 2018

உளுத்தம் பூரண கொழுக்கட்டை /Urad dal spicy kozhukkattai

தேவையான பொருட்கள்  
உளுந்து பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் 
பாசிப்பருப்பு - 1டேபிள்ஸ்பூன் 
பச்சை மிளகாய் -1
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது 
கறிவேப்பிலை - ஒரு கொத்து 
தேங்காய்த்துருவல் -2 டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 
கடுகு -1/2டீஸ்பூன் 
உளுந்துபருப்பு -1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன் 

கொழுக்கட்டைக்கு மேல் மாவு 

செய்முறை 
உளுந்து மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். 
அதனை வடித்து எடுத்து, பச்சை மிளகாய், வரமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை சிறிய இட்லிகளாக இட்லித்தட்டில் (10 முதல் 15 நிமிடங்கள்) வேகவைத்து எடுக்கவும். 

வெந்த மாவை மிக்ஸியில் இட்டு பல்ஸ்-ல் அரைத்து உதிர்த்துக்கொள்ளவும்.
கடாயில் கடுகு, உளுந்துபருப்பு, மஞ்சள் தூள் தாளித்து உதிர்த்த பருப்பை சேர்த்து வாசனை வரும்வரை வதக்கவும். 
தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

கொழுக்கட்டை மாவை சிறு உருண்டைகளாக்கி, வட்டமாகத் தட்டி ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து விருப்பமான வடிவில் மடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

 சுவையான காரக்கொழுக்கட்டை தயார்.  நான் சிலவற்றை மோதகமாகவும், சிலதை தட்டையாகவும் மடித்திருக்கிறேன்.

கொழுக்கட்டை மேல்மாவுக்கு,  அரிசியை 2-3 மணி நேரம் ஊறவைத்து, கொஞ்சமாக உப்பு சேர்த்து, க்ரைண்டரில் நைஸாக அரைத்து, கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு இந்த மாவையும் சேர்த்து கிளறவேண்டும். கடாயில் ஒட்டாமல் திரண்டுவந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டை பிடிக்கலாம். அரிசியுடன் கொஞ்சம் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.

அல்லது ரெடிமேட் அரிசி மாவுக்கு ஒரு கப் மாவுக்கு ஒரு கப் அளவு தண்ணீர்+ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து  நன்றாக கொதிக்கவைத்து, மாவைக் கொட்டி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டு கொழுக்கட்டை பிடிக்கலாம்.

அடுத்த படத்தில் இருப்பது இனிப்பு கொழுக்கட்டை...வெல்லம், தேங்காய்த்துருவல், எள்ளு, ஏலப்பொடி சேர்த்த பூரணம் கொழுக்கட்டை மாவில் வைத்து செய்தது.
 இந்த வருடம், பிள்ளையாருக்கு இனிப்பு கொழுக்கட்டை, காரக்கொழுக்கட்டை, பச்சைப்பயறு சுண்டல் எல்லாம் பிறந்தநாள் சிறப்பு  உணவுகளாகப் படைத்து சாமி கும்பிட்டாயிற்று.
ஹேப்பி பர்த்டே டு யூ ஆனைசாமி... 
இப்படிதான் எங்க வீட்டு சின்ன வாண்டு சொல்றாங்க..அதனால விநாயகரை ஆனைசாமி, ஆஞ்சநேயரை மங்க்கி சாமி (மன்னிச்சுக்கோ ஆஞ்சநேயா!!) ன்னு சொல்றோம். ;) :) :D

Saturday, August 18, 2018

உருளைக்கிழங்கு, பனீர் பராத்தா / Paneer, potato Paratha

தேவையான பொருட்கள் 
கோதுமைமாவு - 2கப் 
வேகவைத்த உருளைக்கிழங்கு(மீடியம் சைஸ்) -1 
துருவிய பனீர் - 1/2கப் 
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் 
கரம்மசாலத்தூள் - 1/2டீஸ்பூன் 
சீரகப்பொடி -1/2டீஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன் 
தயிர்- 2டேபிள்ஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை 
வெந்த உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் உதிர்த்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், தயிர், பொடிவகைகள், உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 
அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ளவும்.
பிசைந்த மாவின்மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி, அரைமணி முதல் ஒரு மணி நேரம்  ஈரத்துணியால் மூடி வைக்கவும். 


மாவு ஒரு மணி நேரம் ஊறியதும், சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்திகளாக தேய்த்து சுட்டெடுக்கவும்.  குழந்தைகளுக்கு என்பதால், சப்பாத்தி தேய்த்து கொஞ்சம் நெய் தடவி, மீண்டும் அதை உருட்டி சுட்டிருக்கிறேன். :)
 சுவையான ஆலூ பனீர் பராத்தா, தயிருடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு 
  ஸ்டஃபிங்கை மாவினுள் வைத்து செய்யும் முறை ஏற்கனவே செய்திருந்தாலும், இந்த முறை குழந்தைகளுக்கு கொடுக்க சுலபமாக இருக்கிறது. மசாலா பொடிகளும் அதற்கேற்ப குறைவாகவே சேர்த்திருக்கிறேன். உங்கள் விருப்பப்படி நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை அல்லது கசூரி மேத்தி, மற்றும் விருப்பமான மசாலாக்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

Saturday, August 4, 2018

வரகரிசி சாம்பார் சாதம் / Kodo millet sambar sachem

தேவையான பொருட்கள் 
வரகு - 1/2கப் 
துவரம்பருப்பு - 1/4கப்பிற்கு கொஞ்சம் அதிகம் 
காய்கறிகள் - 1 முதல் 1.5கப் (கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், கொத்தவரங்காய், உருளைகிழங்கு, பட்டாணி) 
குடைமிளகாய் - பாதி 
வெங்காயம் -1 
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - கொஞ்சம் 
தக்காளி -2
புளிக்கரைசல் - 1/4கப் 
சாம்பார் பொடி - 1.5 டேபிள்ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்
வெல்லம் (பொடித்தது) - 1டேபிள்ஸ்பூன் 
கடுகு -1/2டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 
நெய் 

செய்முறை 
வரகு மற்றும் பருப்பை நன்றாக களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, குக்கரில் போட்டு 3கப் தண்ணீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நாலைந்து விசில் வரும்வரை வேகவைத்து கொள்ளவும். 

காய்கறிகளை கழுவி, பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும். வெங்காயத்தில் பாதியை பெரிய துண்டுகளாவும், மீதியை நீளவாக்கிலும் நறுக்கிவைக்கவும். குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியையும் நறுக்கிகொள்ளவும்.

குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பெரிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நறுக்கிய காய்கறிகள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, வெல்லப்பொடி சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவைக்கவும்.  

ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் லேசாக வதங்கியதும் குக்கரில் வேகவைத்த காய்களை சேர்க்கவும். 
காய்கறிகள் சேர்த்தவுடன், குக்கரில் வேகவைத்த வரகரிசி-பருப்பு கலவையையும் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி கலந்து விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். தேவையானால் அரைக்கப் சுடுநீர் சேர்த்து தளர கலந்துவிடலாம். சாம்பார்சாதம் கொதிவர ஆரம்பித்ததும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். 
கடைசியாக  சாம்பார் சாதத்தின் மேல்  ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடாக பரிமாறவும்..சிப்ஸ், பூந்தி, வறுவல் வகைகளுடன் நன்றாக இருக்கும்.
குறிப்பு
இதில் நான் மறந்துபோன விஷயங்கள் - நீங்கள் மறக்காமல் இருக்க...  :)
முருங்கைக்காய் சேர்க்க மறந்தேன், பச்சைக் கடலைக்காய் சேர்க்க மறந்தேன்..இரண்டுமே சாம்பார்சாதத்தில் நன்றாக இருக்கும்.
சின்ன வெங்காயம் சேர்த்தாலும் சுவை அதிகரிக்கும்.
சாம்பார்பொடிக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, கொஞ்சம் கொத்துமல்லி விதை, சீரகம், வரமிளகாய், தேங்காய் வதக்கி அரைத்து சேர்த்தால் ஃப்ரெஷ் சாம்பார்பொடி சுவை வித்யாசம் தெரியும்.
தாளிக்கும்போது பட்டை கிராம்பு சேர்த்து தாளித்தால் கர்நாடகா பிஸிபேளேபாத் சுவையும் வித்யாசமாக இருக்கும்.

Thursday, July 26, 2018

மீண்டும் தொடங்கலாமா? :)

சரியாக ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவில் பதிவிட்டது..ஓராண்டு காலம் ஓடியது தெரியாமல் ஓடிப்போய்விட்டது..இதற்கு மேலும் இங்கே வராமல் இருந்தால் அப்படியே விட்டுவிடுவேனோ என்ற பயம் உந்தித் தள்ளி, ஒருவழியாய் வந்துவிட்டேன்!! :) 

நாட்களும் வாரங்களும் மாதங்களும் நிற்க நேரமில்லாமல் கடக்கின்றன..ஒரு நொடியும்  யோசிக்க நேரமில்லாமல் என் நேரத்தை பங்குபோட்டுக்கொள்ள என் குட்டிப்பெண்களும் நாலுகால் பையனும் இருப்பதால் அவர்களோடு நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்..இன்னும் சில ஆண்டுகள் இந்த ஓட்டம் தொடரும்! அதனூடே இங்கேயும் அவ்வப்போது எதாவது செய்யலாம் (கவனிச்சு படிங்க..என்ன செய்வேன்னு நான் சொல்லவேயில்ல...அது சமையலா இருக்கலாம்..என் மனங்கவர்ந்த பூக்களா இருக்கலாம்..உங்களை கலங்கடிக்கும் மொக்கையா இருக்கலாம்...எதுவா வேணாலும் இருக்கலாம்...ஹிஹி...)

 இந்த குருவிக்கூட்டம் இந்த மே மாதம் சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து வாங்கி வந்தது..குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும் ஆளுக்கொரு குருவி. ;) பார்க்க நிஜ குருவிகள் போலவே தத்ரூபமாக இருக்கின்றன..அதனால அவங்களுக்கு தானியங்கள் வச்சுக் குடுத்து உட்கார வைச்சிருக்கோம்.

சம்பந்தமே இல்லாம மாம்பழம், ரோசாப்பூ, குருவி அப்புறம் ஒரு பொங்கல்-சட்னி-கொத்சு படம்ன்னு கலந்துகட்டி ஏதோ போட்டிருக்கேன்...அஜீஸ் ;) பண்ணிக்கோங்க. முதல் படம் இந்தக் கோடையின் மாம்பழம்..இரண்டாவது எங்க வீட்டு அழகு ராணி..மூணாவது குருவிக்கூட்டம், நாலாவது சாமை பொங்கல், சுரைக்காய் கொத்சு, தேங்காய்ச் சட்னி.

நன்றி, வணக்கம்!! விரைவில் மீண்டும் பார்க்கலாம்!! :) :))) 

LinkWithin

Related Posts with Thumbnails