Sunday, June 30, 2019

ஜூன் 2019

நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.43க்கு ஒரு பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். :) :) :) 

இங்கே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை ஜூன் 13ஆம் தேதி முதல் துவங்கியதால் ஸ்கூல் கிளம்(ப்)பும் அவசரம் இல்லை..ஆனால் நாள் முழுதும் 2 குட்டீஸை கட்டி மேய்க்கும் வேலை தூள் பறக்கிறது. கூடவே மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி-யும் சேர்ந்துகொள்ள ஜூன் மாதம் வெகுவேகமாகப் பறந்துவிட்டது, ஜூலை இப்பவே எட்டிப்பார்க்கிறது. ;) 

சரி, இந்தப் பதிவில் மீண்டும் தோட்டத்தில் விளைந்த காய்களைக் காண்போமா?? 
 கேரட்..ஷார்ட் & ஸ்வீட் வகை விதைகள், டிசம்பர் 2018 கடைசியில் நட்டது. ஜூன் மாதம் அறுவடைக்கு தயாரானது. கேரட் கிழங்குகள் குட்டிக்குட்டியாக, கொழுகொழுவென்று இருந்தன. ஷார்ட் வெரைட்டி என்பதால் நீளமில்லை..சுவை நல்ல இனிப்பாக இருந்தது. ஒரு பேக்கட் விதைகள், முதல் அறுவடையில் சுமார் இரண்டரைக்கிலோ கேரட் கிடைத்தது. அதன் பின்னர் தேவைக்கேற்ப பறிக்கிறேன். லயாவின் ஆசிரியைக்கு ஒரு முறை, பக்கத்திலிருக்கும் நண்பிக்கு ஒரு முறை என பறித்திருக்கிறேன். இன்னும் மீதமிருக்கின்றன. நாளைக்கு மீண்டும் கொஞ்சம் பறிக்கலாம் என்று எண்ணம்.

முதன்முறையாக இத்தனை கேரட்டுகள் விளைந்தது, நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமளவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இயற்கையன்னைக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!! :)


 அடுத்து ஃபாவா பீன்ஸ்/ ப்ராட் பீன்ஸ்..ஒரு செடி வாடிப்போயாகிவிட்டது. மீதமுள்ள ஒரு செடியில் பறித்த காய்கள். சுத்தம் செய்வது ஒரு வேலை என்றாலும், சுவை அமோகம். வெண்ணெய் போல வாயில் கரைகிறது.
பீன்ஸ் குழம்பு, சுடச்சுட இட்லியுடன்!! :) 
~~~
இந்த வருடம் என் பிறந்தநாள், திருமணநாளை மிகவும் ஸ்பெஷலாக்கியது கடல் தாண்டி, கண்டங்களையும் தாண்டி, ஆகாயவிமானத்தில் அழகாகப் பறந்து வந்த வாழ்த்து மடல்கள்!! 

இத்தனை சிரத்தையெடுத்து, வெட்டி, ஒட்டி, அழகாக உருவாக்கி, வாழ்த்துகளை தன் அழகுக்கையெழுத்தால் மேலும் அழகாக்கி அனுப்பிய என் அன்புத்தோழிக்கு..நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. I am so blessed to have you as a friend Aunty..Love you!!

இந்த வருடம் கோயில் தரிசனம் மிக நன்றாக இருந்தது. கூட்டமில்லை, குட்டிகள் இருவரும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு சாமி கும்பிட்டார்கள். திரும்பி வரும் வழியில் இன்னொரு நண்பர் தம்பதி (அவர்களது திருமணநாளும் அதே ஜூன் 25)-யை உணவகத்தில் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. நல்லதொரு நாளாக அமைந்தது. முகப்புத்தகத்தில் வாழ்த்திய அன்புநட்பூக்கள் இதையும் படிப்பீர்களென்ற நம்பிக்கையில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரிங்க, மணி 11 ஆகிருச்சு..நான் தூங்கப் போறேன்..மீண்டும் ஜூலையில் சந்திப்போம். நன்றி!

3 comments:

  1. சூப்பரா இருக்கு காரட். நாம் பயிரிட்டு, பார்த்து பார்த்து வளர்த்து ,அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்கும்போது ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது மகி. எங்களுக்கு காலநிலை இம்முறை சரியில்லை. நான் சிறு கீரைகளோடு நிறுத்திவிட்டேன்.(புதினா,மல்லி,வெந்தயம்). இட்லி ப்ளேட்டை அனுப்புங்க இங்கு .அன்பு நட்பின் அழகான வாழ்த்து அட்டை..
    இனி வரும் நாட்களும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அட, இந்த வாழ்த்து அட்டைகள் வந்து சேர்ந்த இடம் இதுதானா? தாமதமானாலும் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துகள் மகி.

    உங்கள் தோட்டம் வழக்கம்போலவே எனக்கு பெரும் இன்ஸ்பிரேஷன் தருகிறது. கேரட் எனக்கு வரவே இல்லை. இலைகள் நிறைய வந்தன. ஆனால் கேரட் எல்லாம் சூம்பிப்போயிருந்தன. அடுத்த முறை முயற்சி செய்யவேண்டும்.

    குட்டீஸை மேய்ப்பது சிரமமாக இருந்தாலும் இந்த சமயத்தில்தான் அவர்களோடு நிறைய நேரம் செலவிட முடியும். வளர்ந்துவிட்டால் அப்புறம் நம்மைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. :))

    ReplyDelete
  3. விளைசல்கள் மிக அருமை ....கேரட் மற்றும் ப்ராட் பீன்ஸ் கள் கொழு கொழுவென்று உள்ளன

    வாழ்த்து கடிதங்கள் வெகு அழகு ..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails