
கீரைப் பொரியலுக்கு ஒரு போஸ்டிங்கான்னு பார்க்காதீங்க..:) ஒரு முன்கதையோட சொல்லப்போறேன்.
இந்த வாரம் கடைக்கு போயிருந்தப்போ இந்தக் கீரையைப் பார்த்தேன்.முருங்கை கீரை மாதிரியே இருந்தது.ஊர்ல இருந்து வந்த இந்த ரெண்டரை வருஷமா முருங்கைக் கீரைய கண்ணால கூட பார்க்கலை! கொஞ்சநாள் முந்தி பார்த்தப்ப எல்லாம் (அதாவதுங்க, நாங்க ரெண்டு வருஷம் முன்பு சில காலம் இருந்த இடத்துக்கே இப்ப மீண்டும் வந்திருக்கோம். :) ) இதை வாங்கலாமா,வேணாமான்னு டைலமா-லயே வாங்காம வந்திடுவேன்..இந்த முறை சுரிதார் போட்ட ஒரு அக்கா ( நாங்க இருந்தது இண்டியன் ஸ்டோர் இல்லை) இதை எடுத்துட்டு போனாங்க.அப்பவே வாங்கிடலாம்னு ஒரு தைரியம் வந்துடுச்சு.
"அங்கேயே நின்னு என்ன ஆராய்ச்சி பண்ணறே?"-ன்னு கேட்டுட்டே வந்த இவரிடம் கீரையைக் காட்டினேன்.இவருக்கும் தெரில...முருங்கை கீரை நல்லா வாசனையா இருக்குமேன்னு,இலைய எடுத்து முகர்ந்து பார்த்தால் ஒரு வாசமும் இல்லை. நாங்க இந்த ஆராய்ச்சி பண்ணும்போது, கூட வந்த நண்பர்கள் பில் போட்டுட்டு எங்களுக்காக வெயிட்டிங்! சரி, எப்படின்னாலும் சாப்பிடறமாதிரி:) இலையாத்தானே இருக்கும்னு தைரியமா வாங்கிட்டு வந்தாச்சு.
முருங்கைக் கீரை மாதிரியே இலைகளை மட்டும் எடுத்து செய்தேன்...சுவை அருமையா இருந்தது..அகத்திக் கீரை & முருங்கை கீரை ரெண்டோட டேஸ்ட்டும்தெரிஞ்சது. டேஸ்ட் சூப்பரா இருந்ததால சப்பாத்திக்கே வைச்சு சாப்ட்டுட்டோம்.
முருங்கை வாசம் இல்லாததால் இது 'முருங்கை'கீரை பொரியல் இல்ல..'ஏதோ ஒரு'கீரை பொரியல்-னுதான் பேர் வைச்சிருக்கேன். :)
தேவையான பொருட்கள்
கீரை -1 கட்டு
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் -4அல்லது காரத்துக்கேற்ப
தேங்காய்த் துருவல்-1 1/2ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு,உளுந்துப் பருப்பு-தலா 1/2ஸ்பூன்
உப்பு-சுவைக்கேற்ப
சர்க்கரை - ஒரு சிட்டிகை
செய்முறை
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயத்தை நறுக்கிகொள்ளவும்.மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து, வெங்காயம்,மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும்.

ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் தெளித்து வேக விடவும்.
கீரை வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

இது சப்பாத்திக்கும் நன்றாக மேட்ச் ஆகும்..சாதத்துடனும் சாப்பிடலாம்.

சர்க்கரை சேர்ப்பதால் கீரையின் பசுமை மாறாம இருக்கும்னு ஒரு புத்தகத்தில படித்திருக்கேன்.கீரை வகைகள்னு இல்லை, பச்சை நிறத்தில இருக்கற காய்கறிகள் எல்லாத்துக்கும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து சமைத்தால் நிறம் மாறாமல் இருக்குமாம்.
நான் வாங்கிய கீரையில் Malunggay -என்று எழுதிருந்தாங்க..அதுவும் இமா சொன்னமாதிரி முருங்கை குடும்பம்தான்..பிலிப்பைன்ஸ்ல இந்தப் பெயர்.(நான் வாங்கியது சைனீஸ் மார்க்கட்ல..:)) இமா,உங்கள் தகவலுக்கு நன்றி!