Friday, October 29, 2010

கோதுமை ரவை உப்மா

உப்மா...இது உப்மாவா,உப்புமா-வா? உப்புமா,உப்பாதா? ரவா உப்புமாவா? பாம்பே ரவா உப்புமாவா? சம்பா ரவை உப்புமாவா? வெள்ளை ரவை உப்புமாவா??
அப்பாடி 7 கேள்விக்குறி(கவனிங்க,கேள்வி இல்ல,கேள்விக்குறி) ஆகிடுச்சு. இதுக்கும் மேல கேள்வி கேட்டா,எல்லாரும் அப்பூடியே அடுத்த ப்ளாகுக்கு தாவிடுவீங்க,அதனால கேள்விகளை நிறுத்திட்டு அடுத்த ஸ்டெப்புக்கு போவோம்.:)

என்னோட சிற்றறிவுக்கு தெரிந்தவரை ரவைல இரண்டே வகைதான்..வெள்ளைரவை-கோதுமை ரவை. கல்யாணமாகி, பெங்களூர் வந்தப்ப அங்கே கோதுமை ரவை கிடைக்காது,இங்கருந்தே வாங்கிட்டுப்போயிருங்கன்னு அறிவுரை கிடைத்தது. அதே மாதிரி பெங்களூர்ல வெள்ளை ரவை மட்டுமேதான் கிடைத்தது.

ஒரொரு முறையும் ஊருக்கு போயிட்டு வரும்போது கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்,ஹோம் மேஜிக் [கண்ணன் அம்மா வீட்டு மளிகை,ஹோம் மேஜிக் மாமியார் வீட்டு மளிகைக்கடைங்க. :) கடை எங்களுதல்லாம் இல்ல,மாசாமாசம் அங்கேதான் மொத்தமா சாமான் வாங்கறது...ப்ரீ ஹோம் டெலிவரியும் இருக்கறதால நல்ல வசதியா இருக்கும்.] இப்படி கடைகள்ல ரவை, சின்ன வெங்காயம்,பெரியவெங்காயம்(சிரிக்கக்கூடாது, அப்ப வெங்காயம் யானைவிலை-குதிரை விலை வித்துட்டு இருந்த காலம்) இதெல்லாம் வாங்கிட்டு போவோம்.

ரவைல ஆரம்பிச்சு கதை எங்கேயோ போயிடுச்சு. அகெய்ன்,ரிடர்ன் பேக் டு ரவை..சம்பா ரவைன்னு ஒண்ணு சொல்லுவாங்க,அது என்னன்னு ஒரு சந்தேகமும் இருக்குது..அதை கொஞ்சம் ஒத்திவச்சுட்டு மேலே போலாம். இங்கே வந்தப்புறம் எனக்கு தெரிந்தது,புரிந்தது அமேரிக்கால கோதுமை ரவை கிடைக்காது..ஒன்லி ஒயிட் ரவா-சூஜி-செமோலினா(என்னல்லாம் பேரு பாருங்க!!)தான் கிடைக்கும் என்று. அம்மா வீட்டுலல்லாம் உப்மா-ன்னா..என்னது?உப்ப்ப்ப்ப்ப்புமாவா??ன்னு கேட்டதெல்லாம் போயி, ஒரு நாளாவது கோதுமை ரவை உப்மா சாப்பிடமாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். அப்பல்லாம், பல்கர்னு ஒண்ணு இருப்பது..ஏஷியன் மார்க்கெட்-பெர்ஷியன் மார்க்கட் இங்கேயும் நம்ம சமையல் பொருட்கள் எல்லாம் கிடைக்கும்ங்கறதெல்லாம் எனக்கு தெரியாதுங்க.

அப்புறம் மெது-மெதுவே டயட் சமையல் ப்ளாக்ல எல்லாம் பாத்து,அவிங்ககிட்ட டவுட்டு கேட்டுகேட்டு பல்கர்-னா க்ராக்ட் வீட் என்று புரிந்துகிட்டேன். புரிந்தாலும், நான் சாமான் வாங்கற கடைலல்லாம் அது கிடைக்கவேஇல்ல. கோதுமை குருணைதான் இருந்தது.அது கோதுமை சாதம் வைக்கதான் நல்லாருக்கும்..உப்மாவா செய்தா...கொழ-கொழன்னு நல்லாவே இருக்காது.(அதையும் விடாம வாங்கி செய்து பார்த்த அனுபவம்,ஹிஹி)

ஒருவழியா இப்ப இருக்க ஊருக்கு வந்ததும், இங்கே கடைகள்ல பர்கர்..ச்சீ,ச்சீ,பல்கர் கிடைத்தது. நல்லா நைஸா நம்ம ஊர் கோதுமை ரவை மாதிரியே இருந்தது. கோவைல "மயில்"மார்க் ரவைன்னு ஒண்ணு எங்க மாமியார் வாங்குவாங்க, சூப்பரா இருக்கும். அந்த உப்மா சாப்ட்டமாதிரியே ஒரு பீலிங் இருந்தது. இப்பல்லாம் வெள்ளைரவை வாங்கறதே அபூர்வமாகிடுச்சு. :)

உப்மால உங்க கற்பனைத்திறன யூஸ் பண்ணி பலவிதமா செய்யலாம்..அதாவது தக்காளி சேர்த்து/சேர்க்காம செய்யறது, தேங்காய்த்துருவல் சேர்த்து/சேர்க்காம செய்யறது...பைனல் டச்சா, ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய்/நெய் ஊற்றி கிளறுவது..இப்படி. சரி,நான் செய்வது எப்படின்னா...
{அப்பாடி,மொக்கை ஓவர்..ஓவர் டு தி ரெசிப்பி!! :) ---ன்னு நினைச்சா...நீங்க ரொம்ப பாவம்!!}

தேவையான பொருட்கள்
கோதுமை ரவை-1டம்ளர்
தண்ணீர்-2டம்ளர்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
வரமிளகாய்-2
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு-1ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
எண்ணெய்
உப்பு

செய்முறை
வெங்காயம்-மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். (இது முக்கியமான ஸ்டெப்..வெங்காயம் நீளமான துண்டுகளா இருந்தாதான் நல்லாருக்கும்.இதுக்கு பேரு உப்மா கட்..ப்ரியாணி கட்,சாம்பார் கட் இப்படி வெங்காயம் வெட்டறதுல பலவகைகள் இருக்குது,அதெல்லாம் மெதுவா சொல்லறேன்.)

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம்-மிளகாய்-இஞ்சி-வரமிளகாய்-கறிவேப்பிலை-உப்பு-சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவந்ததும்,ரவையை கொட்டி கிளறவும்.(டோன்ட் வொரி..இது கட்டி தட்டாது,டென்ஷன் இல்லாம கிளறலாம்.;))

அடுப்பினை சிறுதணலில் வைத்து 3 நிமிடங்கள் வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை,தேங்காயெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்மா ரெடி!
கடைசியா தேங்காயெண்ணெய் சேர்க்கிறோம் பாருங்க,அது உப்மாவை இறக்கி மேலால ஒரு ஸ்பூன் எண்ணெய ஊத்தி 2 நிமிஷம் மூடி வச்சுட்டு,அப்புறமா கிளறிவிட்டு பரிமாறணும். நல்லா வாசனையா இருக்கும். ஒருமுறை,கைவசம் தேங்காயெண்ணெய் இல்ல,அதனால வெங்காயம் வதக்கும்போதே ட்ரை தேங்காய் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து வதக்கினேன்.டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது.

உப்மா செய்தப்புறம் ஒரு இம்பார்டன்ட் பார்ட் இருக்கே..சாப்பிடறது!! :P :P இது தக்காளி சேர்த்து செய்த உப்மாங்க. தேங்காசட்னி வச்சு சாப்பிடலாம்.

கூட சர்க்கரை தொட்டும் சாப்பிடலாம்.
உப்மா-சாம்பாரும் நல்லா இருக்கும். உப்மாவும்-வாழைப்பழமும் சாப்ட்டிருக்கீங்களா? இல்லன்னா அடுத்தமுறை கட்டாயம் ட்ரை பண்ணுங்க..செம காம்பினேஷன்!!
ஒரு சில நேரங்கள்ல வீட்டுல ரவை-சேமியா ரெண்டுமே கொஞ்சம்-கொஞ்சமா இருக்கும்..அப்ப ரெண்டையும் கம்பைன் பண்ணி உப்புமா செய்யலாம். வெள்ளைரவை-கோதுமை ரவை எதுனாலும், சேமியா நல்லா மேட்ச் ஆகும். இந்த போட்டோவை பாருங்க,பார்த்தாலே சாப்பிடணும் போல இல்ல? :) உப்மாவுக்கு வெங்காயம்-க.பருப்பு-உ.பருப்பு-எண்ணெய் இது எவ்வளவு போடறீங்கறதுலதான் டேஸ்ட்டே இருக்குது. இவையெல்லாம் தாராளமா போட்டா சுவை ஏராளமா இருக்கும். :)
ஓக்கே..மொக்கை கம் ரெசிப்பி இத்தோட முடிஞ்சது. அடுத்த வாரம் பாக்கலாம். ஹேவ் எ நைஸ் வீக்எண்ட் எவ்ரிபடி!

Tuesday, October 26, 2010

சேனைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு-340கிராம்
வெங்காயம்(சிறியது)-1
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை-சிறிது
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு-1/2ஸ்பூன்
உளுந்துபருப்பு-1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
உப்பு

செய்முறை
சேனைக்கிழங்கை ப்ரீஸரில் இருந்து எடுத்து டீஃப்ராஸ்ட் செய்யவும்.(இங்கே சேனைக்கிழங்கு ப்ரோஸனில்தான் கிடைக்கிறது)
பின்னர் கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்-மிளகாய்,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

கிழங்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சிம்பிளான சேனைக்கிழங்கு பொரியல் ரெடி. சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.(வேறு எதனுடனும் சாப்பிடக்கூடாதான்னு கேக்காதீங்க..விருப்பப்படி சாப்பிடுங்க.:))
சேனைக்கிழங்கை பொறுத்தவரை ஊரிலே, இப்படி முழு கிழங்காக அல்லது துண்டுகளாக நறுக்கி விற்பார்கள்.
அதனை தோல் சீவி நறுக்குவதுக்குள் கை அரிப்பு தாங்கமுடியாது. கைக்கு தேங்காய்எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் அரிப்பு இருக்காது என்று சொல்வார்கள்.இந்த பொரியலுக்கு கிழங்கை நறுக்கி, உப்பு-மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடித்து தாளிப்பார்கள்.

சேனையிலே 2 வகை உண்டு..ஒரு வகை கிழங்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இன்னொன்று பாலக்காட்டு சேனை. அது கிழங்கு கொஞ்சம் சிவப்பு நிறமாக இருக்கும்,டேஸ்ட்டும் மிகவும் நன்றாக இருக்கும்.இந்த கிழங்கை பாருங்க,கலர் டிபரன்ஸ் தெரியுதா?
இங்கே கிடைப்பது இதிலே எந்தவகைன்னு நான் யோசிக்கறதே இல்லை..ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி,something is better than nothing!! என்ன சொல்றீங்க?? :)

கடைசி 2 படங்கள் உதவி:கூகுள் இமேஜஸ்

Friday, October 22, 2010

ஒரு காலை, இளவெயில் நேரம்..

ஒரு
காலை
இளவெயில் நேரம்..


காலை இளவெயில் நேரம்னு தவறா எழுதிருக்கேன்னு நினைக்காதீங்க,எல்லாப் படங்களும் ஒரு காலைப்பொழுதில் எடுத்ததுதான்..மாலை நேரம் இல்ல.:)

அழகான
இலையுதிர்
காலம்..
உதிரும் இலைகளைப் பார்க்கையில் என் மனதில் ஒரு இனப் புரியாத வெறுமை ஏற்படும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் துளிர்களைப் பார்க்கையில் அந்த வெறுமை அகன்று இதயத்தில் நம்பிக்கை துளிர்க்கும்..:)

கடைசி மூன்று படங்களும் சமீபத்தில் ஒரு மழைநாளின் காலைப்பொழுதில் காமெராவில் சிறைபிடித்தது. கடந்தவருட இலையுதிர்காலத்தை காண, இங்கே க்ளிக் பண்ணுங்க.:)

பி.கு.
நேரத்தை எப்படி வெட்டியா செலவு பண்ணலாம்னு யோசிச்சு(ரூம் போட்டு யோசிக்கறது அந்தக்காலம்,நாங்க ஒரு வீடெடுத்தே யோசிக்கிறோம் :))இப்படி ஒரு போஸ்ட்டை போட்டுட்டு, வெறுமை-நம்பிக்கை-துளிர்னு தத்துவம் வேற பேசறியா?ன்னு நீங்க அடிக்க வருமுன்னே மீ த எஸ்கேப்ப்ப்ப்பூ! ஹிஹி!

இங்கு வந்து,படங்களை ரசித்ததுக்கு நன்றி&இனிய வார இறுதி!

Tuesday, October 19, 2010

வெந்தய இட்லி/வெந்தய தோசை

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி/புழுங்கலரிசி-2டம்ளர்(~1/2kg)
வெந்தயம்-11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெந்தயம்-அரிசியை களைந்து தனித்தனியாக 6மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் வெந்தயத்தை க்ரைண்டர்/மிக்ஸியில் போட்டு,கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.அரைபட்டதும், வெந்தயம் உளுந்து மாவு போல பொங்கி வரும்.

அத்துடன் அரிசியையும் போட்டு,தேவையான அளவு நீர் விட்டு அரைத்துவைக்கவும்.
அரைத்தமாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 12மணிநேரம் வைக்கவும். (இது உங்க ஊர் க்ளைமேட்டுக்கு ஏற்ப கூடக்குறைய ஆகும்.:))

நன்றாக பொங்கிய மாவைக் கரண்டியால் கலக்கினால் படத்திலிருப்பதுபோல காற்றுகுமிழ்கள் வரும்.அதுதான் மாவு சரியான பதம்.

மாவை இட்லித்தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.இட்லிகுக்கரில் இருந்து தட்டுகளை எடுத்து 6-7 நிமிடங்கள் ஆறவைத்து இட்லிகளை எடுத்தால் இட்லி பிய்ந்து போகாமல் முழுதாகவரும்.

குக்கர்இட்லிஇல்லாமல், இட்லித்தட்டில் துணி போட்டு ஊற்றும்போது வெந்தயஇட்லி இன்னும் அருமையாக புஸ்ஸென்று பொங்கிவரும். :)
ஸ்பாஞ்சி வெந்தய இட்லி +கடலைகுழம்பு
தோசை ஊற்றும்போது மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளலாம். தோசை ஊத்தப்பம் போல மொத்தமாக ஊற்றவேண்டும்.

முதல் படம்:வெந்தய தோசை+சாம்பார்
வழக்கமாக செய்யும் இட்லி,தோசைக்கு பதிலாக அவ்வப்பொழுது இப்படி செய்யலாம்.வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்.வெயில் காலங்களில் அடிக்கடி செய்யலாம்.

Friday, October 15, 2010

ஹைக்கிங்..

ஒரு வாரக்கடைசியை இன்ட்ரஸ்டிங்கா செலவிட நினைத்து பக்கத்தில ஒரு காட்டுக்குள்ள(!!) ஹைக் பண்ணி ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போனோம். ஒரு க்ரூப்பா எல்லாரும் ஒரு இடத்தில மீட் பண்ணி போலாம்னு பார்த்தா,நாங்க சீக்கிரமா(எர்லி மார்னிங் 8மணிக்கே!!!ஹிஹி) கிளம்பிட்டோம்.நண்பர்கள் வர லேட்டாயிடுச்சு.

ஹைக்கிங் ட்ரெய்லை கண்டுபிடிச்சு, போய்ப் பார்த்தா...ஒரு நாலஞ்சு மைலுக்கு ரோடு பூரா கல்லு,குண்டும் குழியுமா இருக்கு!! (பர்ப்பஸா அந்தமாதிரி வைச்சிருக்காங்க..4வீல் ட்ரைவ் இருக்கற வெஹிக்கிள்ஸ்-க்காகவாம்)..எங்க கார் ஹோண்டா கூப்..அதுவும் போகும்னு இவர் என்னை கன்வின்ஸ் பண்ணினார்..அங்கே வேற ஈ-காக்கா கூட இல்லை..நாங்க டெலிபரேட் பண்ணிட்டி இருக்கப்ப ஒரு கார் வந்தது.அந்த ஆள் கிட்ட கேட்டுட்டு, அவர் கார் போகிற தைரியத்தில, நாங்களும் போக ஆரம்பிச்சோம்.

மினிமம் அரைமணி நேரம் ஆகும் அந்த ஸ்ட்ரெச்சை தாண்ட..அப்பாடின்னு ஆயிடுச்சு போங்க! அந்தளவுக்கு மோசம் அந்த ரோடு. பாதி வழி போகைலயே மொபைல் சிக்னலும் போயிடுச்சு. நல்ல வேளையா சிக்னல் கட் ஆகறதுக்குள்ள ப்ரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி ரூட் சொல்லிட்டார் என்னவர்.

ட்ரெய்ல் ஹெட்-ஐ நெருங்க,நெருங்க,சின்னச்சின்ன ஓடைகள் ஆங்காங்கே ரோடை கடந்து போகுது. ஒருவழியா போய்ச்சேர்ந்தப்ப கார்ல புழுதி மட்டும் 2 இன்ச் அளவு ஒட்டிருந்தது.
கீழே அந்த ஆற்றின் அருகில் ரிசார்ட் மாதிரி நிறைய வீடுகள் இருந்தது.ஆனா யாரும் தங்கியிருக்கமாதிரி தெரியல.அமைதியான ஆறும்,பளிங்கு மாதிரி தெளிவா இருந்த நீரில் தெரிந்த மரங்களின் நிழலுமா ரொம்ப அழகா இருந்தது.

அங்கே ஒரு முக்காமணி நேரம்,பின்னால் வந்த கார்க்காரங்ககிட்ட எல்லாம், ஒரு CRV வருதா,வருதான்னு கேட்டுட்டே வெயிட் பண்ணோம். பசங்க வரமாதிரி தெரில.இவர்தான் அவங்க கட்டாயம் வருவாங்க,வந்தா நம்ம காரைப் பாத்துட்டு உள்ளே வருவாங்க என்று சொல்லி ஒரு மெசேஜ் எழுதி கார்ல வைச்சுட்டு வந்தார்.

ஹைக்-ஐ தொடங்கினோம்..சரியான காடு,ஒரு ஒத்தையடிப்பாதைதான்..பூச்சிகள் வேற எக்கச்சக்கம்..அங்கங்க காய்ஞ்ச மரங்கள் விழுந்து கிடக்கு..ஒரு சில மரங்கள்,முழுவதும் கீழே விழாம உடைந்து தொங்கி,இப்ப உன் மேலே விழப்போறேன்னு பயம் காட்டுது..

அங்கங்கே,அருவியின் குட்டி ஆறு வேற ஆறேழு இடத்தில க்ராஸ் பண்ணுது. நடக்கறதுக்கே சிரமமா இருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் மவுண்டெய்ன் பைக்கர்ஸ் வேற.

95% டிஸ்டன்ஸ் நடந்தப்புரம் வழி ரொம்ப டேஞ்சரா தெரிந்தது எனக்கு.போதும்,திரும்பிடலாம்னு இவர்கிட்ட சொன்னா,காதுலயே போட்டுக்க மாட்டேறாரு!

இவ்ளோ தூரம் வந்துட்டோம்,பாத்துட்டே போலாம்னு என்னை இழுத்துட்டுப் போனாரு..பத்தடிதான் போயிருப்போம்,ஃபால்ஸ் வந்திருச்சு.இதோ,இதுதாங்க 3மைல்(~5கி.மீ) நடந்து போய் நாங்க பார்த்த நீர்வீழ்ச்சி!!

இதையெல்லாம் நீர்வீழ்ச்சின்னு சொல்லறது ஓவர்தான் இல்ல? நயாகரா அளவுக்கு(!!) இல்லன்னாலும், ஏதோ கொஞ்சம் சுமாராவாவது இருக்கும்னு நினைத்திருந்தேன்.பொக்குன்னு போயிடுச்சு,இந்த குட்டி அருவியைப் பாத்ததும்.
ஒருவேளை நாங்க போனது கோடைக்காலமா இருப்பதால தண்ணி குறைவா இருக்குன்னு மனதைத் தேத்திகிட்டோம். வெய்யிலா இருந்தாலும், தண்ணி பயங்கர சில்லுன்னு இருந்தது.பறந்துட்டிருந்த பூச்சிகள்ல நிறைய தண்ணில மிதக்குது.வெயில்ல பூச்சிகளின் நிழல் தண்ணிக்குள்ள விழுவது ரொம்ப அழகா இருந்தது.

அரைமணி நேரம் அங்க உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு கீழே இறங்க ஆரம்பிச்சோம்..எதிர்ல வந்தவங்க,"your buddies are on the way!"ன்னாங்க. கொஞ்ச நேரத்தில நண்பர்களும் வந்துட்டாங்க. என் கணவர் எழுதி வச்சிருந்த மெஸேஜ்-ஐ பாத்துட்டு, காட்டுக்குள்ள பார்த்தவங்களிடமெல்லாம் விசாரிச்சுட்டே அவர்களும் அருவிக்கு வந்து சேர்ந்துட்டாங்க. அவர் எழுதிவைச்சதைப் பாத்து நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தேன்..ஆனா அது யூஸ்புல்லா இருந்தது.:)
இது என்ன பூ/காய் என்று தெரியல.Forbidden fruit-னு பெயர் சூட்டியது நானில்ல,எங்க வீட்டு ஐயா! :)

திரும்பி வரும்போது நிறைய போட்டோஸ் எடுக்கல.மீண்டும் அந்த குண்டும்குழியுமான ரோடைக் கடந்து, நேரா ரெஸ்டாரன்ட்ல லன்ச்-ஐ முடிச்சுட்டு நாலு மணிக்கு வீடு வந்து சேந்தோம்..களைப்புத் தீர இரண்டு நாட்களானது. ஆனால், ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ங்க!

Tuesday, October 12, 2010

Dry ஜாமூன்

கோவை அன்னபூர்ணா-கௌரிஷங்கரில் இந்த dry ஜாமூன்கள் அருமையாக இருக்கும். சில மாதங்கள் முன்பு ப்ரேமாவின் ப்ளாக்ல வந்த ரெசிப்பி பார்த்து டெம்ப்ட் ஆகி விரைவில் செய்துபார்க்க நினைத்தேன். இத்தனை நாட்களாகிவிட்டது. :) Dry குலாப் ஜாமூன் ஐடியாவுக்கு நன்றிங்க ப்ரேமா!

தேவையான பொருட்கள்

பால் பவுடர்(non-fat dry milk powder)-11/2கப்
மைதாமாவு(all purpose flour)-1/2கப்
பேக்கிங் சோடா-1/4ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1/4ஸ்பூன்
வெள்ளை ரவை-2ஸ்பூன்
பால்(half&half or 2% milk)-1/4கப்
சர்க்கரை-11/4கப்+1/4கப்
ஏலக்காய்-3
நெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-ஜாமூன்கள் பொரிக்க.

செய்முறை
ரவையை சிறிது பாலில் 10நிமிடம் ஊறவைக்கவும்.
மைதாவுடன் பேக்கிங்சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.
பால்பவுடர்,மைதா,ஊறவைத்த ரவை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பாலைத் தெளித்து பிசைந்துகொள்ளவும்.பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.


11/4கப் சர்க்கரையை மூழ்கும் அளவு நீர் சேர்த்து சூடாக்கவும். பாகு கொதிவந்து 7 நிமிடங்களில்,ஏலக்காய் தட்டிப்போட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

எண்ணெயுடன் நெய்யை கலந்து,மிதமான சூட்டில் காயவைத்து ஜாமூன்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பொரித்த ஜாமூன்கள் சற்றே சூடாக இருக்கும்போதே தயாரித்து வைத்த சர்க்கரைப்பாகில் போடவும்.பாகும் கொஞ்சம் சூடாக இருக்கவேண்டும்.எல்லா ஜாமூன்களையும் பொரித்து சர்க்கரைப்பாகில் 2மணிநேரம் ஊறவிடவும்.

சுவையான குலாப்-ஜாமூன் ரெடி!

மீதமிருக்கும் கால்கப் சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து,ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும். ஊறிய ஜாமூன்களை பொடித்த சர்க்கரையில் நன்றாக புரட்டி எடுக்கவும்.

Dry ஜாமூன் ரெடி!!

குறிப்பு
  • பால்பவுடர்+மைதா+ரவை கலவையில் பால் சேர்த்து பிசையும்போது அழுத்திப் பிசையாமல் மெதுவாக கலந்து வைத்துவிட்டு, உருண்டைகளாக உருட்டும்போது ஒவ்வொரு உருண்டையையும் நன்றாக அழுத்தி விரிசல் விழாமல் உருட்டினால் ஈஸியாக இருக்கும்.
  • Half&Half மில்க் ஊற்றினால் ஜாமூன்கள் ரிச்சாக இருக்கும். இந்த முறை அது வாங்க மறந்ததால், 2% மில்க் ஊற்றி பிசைந்தேன்.இதுவும் நன்றாக இருந்தது,சுவையில் வித்யாசம் தெரியல.மே பி,நான் குலாப்ஜாமூன் சாப்ட்டு கொஞ்சம் நாளாகிட்டதால் அந்த டேஸ்ட் மறந்துபோச்சுன்னு நினைக்கிறேன். ஹிஹி! அடுத்தமுறை ஹாப்&ஹாப் உபயோகித்து செய்துபார்த்து அப்டேட் பண்ணிடறேன்.
ஹாட் குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம்!
இது என் கணவரின் பேவரிட்!:)))))

LinkWithin

Related Posts with Thumbnails