Wednesday, September 28, 2011

எதைச் சொல்ல எதை விட?

வருஷம் ரெண்டு போனபின்னே
கோயமுத்தூர் போயி
மாசம் ஒண்ணு தங்கினதச்
சொல்ல நெனச்சா...
எதைச் சொல்லறது..எதை விடறது?

நல்லவனைப் போலிருப்பானாம்
பரம சண்டாளன்-ங்கற
பழமொழியை அனுபவிச்சு
பாம்பே ஏர்போர்ட்டில்
மொபைல் போன் பேட்டரியைத்
தொலைச்ச கதையச் சொல்லவா?

எங்கூருல ஏசி ஹாலிலிருந்து
கையேந்திபவன் வரையும்
தேடிச்சோறு நிதந்தின்ற(!) கதை சொல்லவா?

பக்கத்துவீட்டு முருங்கைமரத்தில்
கீரை பறித்து சுடச்சுட வடைசுட்டு
மழைநாளில் ருசித்ததைச் சொல்லவா?

தோல்சுருங்கியும் பாசம் சுருங்காத
பாட்டிகளுடனும்,
எங்க வீட்டு அரும்புகளுடனும்
நாங்கள் கழித்த கணங்களைச் சொல்லவா?

அத்த வீடு-சித்தி வீடு
அக்கா வீடு-மாமா வீடுன்னு
வீடுவீடாப் போய்
விடுபட்ட சொந்தங்களைப் பார்த்த கதை சொல்லவா?

காக்கா-கழுதைக்குட்டி-பழவண்டி- சொகுசுப் பேருந்து
மிதவைப் பேருந்து- கருவாட்டுப் பாட்டி
R.S.புரம், அவினாசி ரோடு, கோயில்,ஆஸ்பத்திரி,காலேஜுன்னு
கண்டதையும் படம்புடிச்சு, கேமராவில பூச்சி புடிச்சு(!)
ரெண்டு மணி நேரம் போராடி மீட்ட கதை சொல்லவா?

போர்த்திப் படுக்க அம்மா சீலைய
மறக்காம எடுத்துட்டு வரோணும்னு நினைச்சு
மறந்துபோய் இங்கே வந்து நினைச்சதைச் சொல்லவா?

கண்ணீரில் நனைந்து கனத்த
இதயத்துடனும்
காய்ந்த விழிகளுடனும்
கையசைத்து விடைபெற்றதைச் சொல்லவா?

காலநேரப் பரிமாணங்கள் கடந்து
ஊர் சேர்ந்து உடல்நலங் கெட்டு
ஜெட் லாகால் தூக்கங் கெட்டு
வாரமொண்ணு போனபின்னும்
மந்திரிச்சு விட்ட கோழியாய்
நாந்திரியும் சோகக்கதையைச் சொல்ல்ல்ல்லவா?!

~~~~~~~~~

ஆர்வமா வந்து இந்தப் பதிவைப் படித்து(வெறுத்து)ப் புண்பட்ட உங்க மனச எதோ என்னால முடிஞ்சளவு எங்கூரு ஏ1 சிப்ஸும் டீயும் குடுத்து ஆறுதல் படுத்தறேன்! சாப்பிடுங்க,நன்றி!
:)))))))))))))))))

Wednesday, September 21, 2011

எச்சரிக்கை!

~~~~~~~

|
|
|
|
V
|
|
|
|
V
|
|
|
|
V
|
|
|
|
V
|
|
|
|
V
கொங்குநாட்டில் புறப்பட்ட இளம்புயல், மும்பை அருகே அரபிக்கடலைக் கடந்து, மத்திய கிழக்கு நாடொன்றில் சற்றே இளைப்பாறி, வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் தரையிறங்கி, தற்பொழுது மேற்குக் கடற்கரையில் நிலைகொண்டுள்ளது. அதன் காரணமாக இனி இந்த வலைப்பூவில் தங்குதடையின்றிப் பொங்கிவரும் கோவைப்புதுவெள்ளமாய் பதிவுகள் வெளியாகும் என்ற அபாய எச்சரிக்கையே இந்தப் பதிவு! ;) ;) ;)
~~~~~~~~~

பி.கு. பலரின் வலைப்பூக்களைப் பார்க்க நேரமில்லாமல் நான் எஸ்கேப்பூ:) ஆனபோதும், இங்கே ஷெட்யூல் செய்திருந்த பதிவுகளைப் படித்து கருத்தும் பதித்த அன்பு நட்பூ:)க்களுக்கு என் மனமார்ந்த நன்றி! வெகேஷன் முடிஞ்சு வீடு வந்து சேர்ந்தாச்சு, be prepared மக்கள்ஸ்!

பி.கு. 2 கூகுள் இமேஜஸ்ல "i am back"-னு தேடும்போது இந்தப் பதிவில் இருக்கும் முதல் படம் கண்ணைக் கவர்ந்தது, ஒரு ஆளையும் நினைவு படுத்தியது,அதான் போட்டோவை சுட்டு யூஸ் பண்ணிட்டேன்! :)

Friday, September 16, 2011

சாம்பார் இட்லி

இட்லி-சாம்பார் தனித்தனியாச் சாப்பிட்ட காலம் போய், ஒரு கிண்ணத்தில் சாம்பாரை ஊத்தி,அதிலே மினி இட்லிய மிதக்கவிட்டு, கோவை அன்னபூர்ணாவில் சாம்பார்இட்லி-ன்னு புதுசா ஒரு டிஷ் வந்தப்ப காமெடியா இருந்து எனக்கு! நேரம் பாருங்க, இப்ப நானே வீட்டில் அதை செய்து ப்ளாக்லயும் போஸ்ட் பண்ணறேன்! ;) ;)

சாம்பார்
+
இட்லி
||

சாம்பார் இட்லி!
:)))))
ஹிஹிஹி..டென்ஷன் ஆவாதீங்க..இட்லி சாம்பார் ரெசிப்பி இங்க இருக்கு, இட்லி ரெசிப்பி இங்க இருக்கு. ஒரு பவுல்ல இட்லிய வச்சு, இட்லி மூழ்கும் அளவு சூடான சாம்பாரை ஊத்தி அஞ்சு நிமிஷம் ஊறவைச்சிருங்க. அவ்ளோதான்!

ஆபீஸ்-ஸ்கூல் கிளம்பற அவசரத்தில் இருப்பவங்களுக்கு இப்படி ரெடி பண்ணி ஒரு ஸ்பூனும் வச்சு குடுத்தா ஈஸியா சாப்ட்டுட்டுப் போவாங்க. ட்ரை பண்ணிப் பாருங்க.


Monday, September 12, 2011

மீல் மேக்கர்-மஷ்ரூம் பிரியாணி

மஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோசிச்சு மீல் மேக்கரையும் மஷ்ரூமையும் சேர்த்து பிரியாணி செய்வோம்னு செய்துபார்த்தேன். சூப்பரா இருந்துது காம்பினேஷன்! :) பிரியாணி- காளான்-சோயா எல்லாமே என்னவருக்கு மிகவும் பிடிச்சது, ஸோ, இந்தக் காம்பினேஷன் அடிக்கடி ரிபீட் ஆக ஆரம்பிச்சிடுச்சு எங்க வீட்டில்!

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி -11/4கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
தக்காளி(சிறியது)-1
தேங்காய்ப்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய் + நெய் -4டேபிள்ஸ்பூன்

பட்டன் மஷ்ரூம்-6
மீல் மேக்கர்-12 உருண்டைகள்
புதினா,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-கொஞ்சம்
பிரியாணி மசாலா-11/2டேபிள்ஸ்பூன்
தயிர்-2டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள்-1டீஸ்பூன்
உப்பு

பொடிக்க
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு-5பல்
பட்டை-3" துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1
பிரியாணி இலை-1

செய்முறை

அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.

மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.

பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கொறகொறப்பாகப் பொடித்துவைக்கவும்.

காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம்-மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

தேங்காய்ப்பால் பவுடரையும் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 11/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடவும்.

தீயின் அளவை மீடியமுக்கு அதிகரித்து ஏழு நிமிடங்களில் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கவும். (விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, ஏழு நிமிடத்தில் இறக்கி வைத்தால் ப்ரெஷர் குறைந்து குக்கரை திறக்கையில் பிரியாணி பதமாக வெந்திருக்கும்.)

கமகம பிரியாணி ரெடி! அப்புறம் என்ன..தயிர் பச்சடியோ, மிர்ச்சி கா சாலன் அல்லது எண்ணெய்க் கத்திரிக்காயோ சைட்ல வைச்சு ஒரு புடி புடிக்க வேண்டியதுதேன்! வாங்க சாப்பிடலாம்! :)

Tuesday, September 6, 2011

பார்லி-ப்ரவுன் ரைஸ் தோசை

தேவையான பொருட்கள்
பர்ல் பார்லி(pearl barley)-1/2 கப்
ப்ரவுன் ரைஸ்(brown rice)-1/2கப்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
உருட்டு உளுந்து-1/4கப்

செய்முறை
அரிசி-பார்லி-வெந்தயத்தை களைந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
உளுந்துப் பருப்பை கழுவி 11/2 மணி நேரம் (அரிசி-பார்லியுடன் சேர்த்தே)ஊறவிடவும்.
மிக்ஸி/க்ரைண்டரில் மாவாக அரைத்து 12 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசை ஊற்றும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து ஊத்தப்பம் போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
ஸாஃப்ட்டான, ஹெல்த்தியான தோசை ரெடி!
காரசாரமான குழம்பு/சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு
கொஞ்சமாக செய்ததால் பார்லி,அரிசி- உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துவிட்டேன். அதிகமாக செய்கையில் உளுந்தை தனியே ஊறவைத்தும் அரைக்கலாம்.
ஊத்தப்பமாக ஊற்றாமல் மெல்லிய தோசையாகவும் சுடலாம், பார்லி சேர்த்திருப்பதால் மிகவும் க்ரிஸ்ப்பாக சூப்பரா வரும். இந்த மாவை இட்லியாகவும் செய்யலாம்,ஆனால் தோசை வேலை சுலபமாக முடிந்துரும் என்பதால் நான் எப்பொழுதுமே தோசையாக ஊற்றிவிடுவேன். இட்லியை விட தோசை டேஸ்டும் பெட்டராக இருக்கும். ;)
அரிசி-பார்லியை அரைக்கையில் கவனமாகத் தண்ணீர் ஊற்றவும், கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தால் போதும்.

Thursday, September 1, 2011

கத்தரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்(egg plant)-1
வெங்காயம்(சிறியது)-1
தக்காளி(சிறியது)-1
புளி- சிறிய கொட்டைப்பாக்கு அளவு
பூண்டு-4பல்
வரமிளகாய்-7 (காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு-11/2டேபிள்ஸ்பூன்
தனியா-1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

தாளிக்க
கடுகு-1/2டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1கொத்து
எண்னெய்-1டீஸ்பூன்


செய்முறை

கத்தரி,வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவத்து கடலைப்பருப்பை போட்டு சிவக்க விடவும். தனியா சேர்க்கவும். தனியா வெடித்தவுடன் வெங்காயம்,பூண்டு, வரமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பின்னர் தக்காளி, புளி சேர்த்து தக்காளி குழையும்வரை வதக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்து நிறம்மாறும்வரை வதக்கி ஆறவைக்கவும்.

ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து கடுகு-உ.பருப்பு-கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

காரசாரமான கத்தரிக்காய் சட்னி ரெடி. இட்லி,தோசை,சப்பாத்தி, கலந்த சாதம் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.


LinkWithin

Related Posts with Thumbnails