ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ் வாங்கவேண்டும் என்ற நினைவு வருகையில் கடையில் இருக்கும் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் எல்லாம் வாடிவதங்கிப் போயிருக்கும். அது ப்ரெஷ்ஷாகவே இருக்கும் போது எனக்கு நினைவில்லாமல் வந்துவிடுவேன். ஒருவழியாக ப்ரெஷ் பேக் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட் வாங்கிவந்தாயிற்று. முதல் முறை என்ன சமைப்பது என்று குழப்பமாக இருந்தது. என்னவரின் ஆஃபீஸ் cafeteria- வில் இந்தக் காயை முழுதாக bake செய்து தருவார்களாம், நீயும் அப்படி ட்ரை செய்து பாரேன் என்று ஐடியா கொடுத்தார். நம்ம ருசிக்கேற்ப மசாலா பொடி சேர்த்து மாரினேட் பண்ணினேன், பசிக்க ஆரம்பித்ததால் oven-ல் bake செய்யாமல் இதோ அந்த ரெசிப்பி..
தேவையான பொருட்கள்
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்-12
ஆலிவ் ஆயில்-2 டேபிள்ஸ்பூன்
சில்லி சிக்கன் மசாலா-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை கழுவி, தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு நான்காகப் பிளந்துகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ், மசாலா பொடி, உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக குலுக்கிவிட்டு அரைமணி நேரம் வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து மசாலா கலந்த ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை சேர்த்து வதக்கவும்.
தீயைக் கூட்டி வைத்து மூடி போட்டு 3-4 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து காயை அடிபிடிக்காமல் கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் ஸ்டிர் ஃப்ரை ரெடி. சாதம்- உப்பு பருப்பு-ரசம் இவற்றுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.
பி.கு. இந்த முறையில் காய் முழுவதுமாக வெந்திருக்காது, க்ரன்ச்சியாக இருக்கும்.
~~
இரண்டாவது முறையில் நான் செய்த பொரியல் அடுத்ததாக! :)
~~
தேவையான பொருட்கள்
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்
வெங்காயம்-1
காய்ந்த மிளகாய்-3
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
வேகவைத்த பாசிப்பருப்பு-1 குழிக்கரண்டி
தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தையும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு போட்டு பொரியவிடவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம், கிள்ளிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்ததும் உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்துவிடவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாதம்-வத்தக்குழம்பு-ரசம் இவற்றுடன் பரிமாற சுவையான சுவையான (தென்னிந்திய ஸ்டைல்) ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் ரெடி!
இரண்டு பொரியலுமே சுவையாய் இருந்தது..இந்த காய் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க!
~~
மணத்தக்காளிக் கீரையை எங்க ஊர்ப்பக்கம் "சுக்குட்டிக் கீரை" என்றுதான் சொல்வது வழக்கம். :) ஆசைக்கு செடிகளை வளர்த்தாலும் ஒன்றிரண்டு செடிகள் வரைதான் எங்க வீட்டில் வளர்ந்திருக்கு. இதிலே சிவப்பு நிறப் பழம் பழுக்கும் வகையும் உண்டு.
இந்தச் செடியை வீட்டில் வளர்த்தாலும் பழம் பறித்துச் சாப்பிடலாமே தவிர கீரையாய்ப் பறித்து ஒரு குடும்பத்துக்குச் சமைப்பதுக்கு கீரைத் தோட்டம்தான் போடவேண்டும்! ;0) அதனாலோ என்னமோ கீரைக்காரர்களிடம் இந்தக்கீரைக்கு ஸ்பெஷல் விலையாக இருக்கும். மற்ற கீரையெல்லாம் 1.50ரூபாய்க்கு விற்கையில் இந்தக் கீரை 3 ரூபாயாக இருக்கும்.
கடந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது கீரைக்காரரிடம் சுக்குட்டிக் கீரையைப் பார்த்ததும் வாங்கலாம் என்று விலையைக் கேட்டால் 8 ரூபாய்கள்!! கீரையும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை! இருந்தாலும் இனி எத்தனை நாள் கழிச்சு சுக்குட்டிக் கீரையைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமோ என்று வாங்கி பொரியல் செய்தேன். பொதுவாக, பொரியல் என்பதுக்கு எங்க வீட்டில ரொம்ப சிம்பிள் ப்ராஸஸுங்க!
கீரையோ, காய்கறியோ எது மெயின் இன்கிரிடியன்ட்டோ, அதை நறுக்கி வைச்சுக்கணும். வெங்காயம்- பச்சை நிறக் காய்கள், கீரைக்கு மட்டும் வரமிளகாய், மத்த காய்களுக்கு பச்சைமிளகாய் இதையும் நறுக்கி ரெடியா வைச்சுக்கணும்.----
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-க.பருப்பு,உ.பருப்பு தாளித்து நறுக்கிய காய் சேர்த்து கொஞ்சம் தண்ணிதெளிச்சு உப்பு போட்டு வேகவிட்டு வெந்ததும் தேங்கா போட்டு இறக்கவேண்டியதுதேன்! சுக்குட்டிக் கீரைப் பொரியலும் இதுக்கு விதிவிலக்கில்லை! :)))))
என் நிலைமை இப்படியிருக்க, சுக்குட்டிக் கீரைத் தோட்டத்தையே "பர்ட் ஃபீடராக" உபயோகிக்கும், திருக்குறளில் வார்த்தைகளுக்குப் பதிலாக காயையும் கனியையும் படமெடுத்துப் போடுமளவுக்கு விளைச்சல் பார்க்கும் இமா குடுத்துவைச்சவங்கதானே? ;);)
எங்கோ ஒளிந்து கிடந்த கீரைப் படங்களைத் தேடி எடுத்து கொஞ்சம் மொக்கையும் போடவைத்த இமா வாழ்க! :)))))))
---
[முதல் படம்: நன்றி,கூகுள் இமேஜஸ்]