Thursday, March 28, 2013

கட்டிங், ட்ரிம்மிங்! :)

 
ப்ளாக்ல பதிவைப் போட்டு ஏழு நாளுக்கும் மேலாச்சு..அடுத்து எதாச்சும் எழுதணுமே..என்ன எழுத? எப்புடி எழுத? சமைக்கச் சமைக்க எடுத்துத் தள்ளின படம்லாம் இன்னும் கேமராலயே பத்திரமாத் தூங்கிட்டு இருக்குது. அதயெல்லாம் முதல்ல ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும்..அதில நல்ல படங்கள செலக்ட் பண்ணனும், அப்புறமா அதிலயெல்லாம் பேரடிக்கணும்! :) பொறவு ரெசிப்பிய டைப் பண்ணனும், அதைய புது போஸ்ட்ல காப்பி பேஸ்ட் பண்ணி, போட்டோஸை அப்லோட் பண்ணி.......அவ்வ்வ்வ்வ்வ்வ்! இம்புட்டு வேலையச் செய்யணுமா??!-ன்னு மலைப்பா இருந்ததுல ஒரு வாரம் சோம்பேறியா பொழுதைப் போக்கியாச்சு. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸப்பா!!

இதுக்கு மேலயும் எதுவும் செய்யாம இருந்தா சனமெல்லாம் மகிய மறந்துட்டாங்கன்னா என்ன ஆகறது?  அதனால இன்னிக்கு ஒரு வழியா கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்தாச்சு. கேமரா பக்கதிலதான் இருக்கு..அந்த USB கார்டுதான் எங்ஙன கெடக்கோ தெரியலையே...இருங்க, தேடிப்பார்க்கறேன்.அதுக்குள்ளாற நம்ம ஆப்புள்:) கை கொடுத்ததில ஒரு பதிவு தேறிடும் போல இருக்குது. போன் வந்ததில் இருந்து கண்ணில் படும் காட்சிகளை சட்டுசட்டுன்னு க்ளிக் பண்ணி, லேப்டாப்புக்கும் அனுப்பிரமுடியுது! ஸோ, ப்ரெய்ஸ் த லார்ட்(!!??!..எ.கொ.ச.இ.?) ஆப்பிள், அன்ட் ஸ்டார்ட் ரீடிங்! :)))))))
மனிதர்கள் அப்பப்ப பியூட்டிபார்லருக்குப் போயி, கட்டிங், டிரிம்மிங் இதெல்லாம் பண்ணிட்டு வருவது உங்க எல்லாருக்கும் தெரிந்ததே! அதே போல இங்கே ஒவ்வொரு சீஸனுக்கும் மரம் மட்டைங்களுக்கும் கட்டிங்-ஷேவிங்-ட்ரிம்மிங் எல்லாம் பண்ணி வுடுவாங்க. என்ன ஒண்ணு, நம்ம நடந்து சலூனுக்குப் போகோணும், மரங்களுக்கு இருக்கற இடத்திலயே ஃப்ரீ சர்வீஸு! குடுத்துவச்சதுங்க...ஹூம்! ;)

யு.எஸ்.ல அதிகாரபூர்வமா மார்ச் 20-ஆம் தேதி வசந்தகாலம் தொடங்கிவிட்டதால், ஸீஸனல் ட்ரிம்மிங்கிற்கு புதன் கிழமை காலை ஆட்கள் வந்திருந்தார்கள். சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும் மரங்கள் சிலநேரம் குறும்பாக, கிளைகளை சாலையை நோக்கி, விளக்குக் கம்பங்களை நோக்கி நீட்டியிருக்கும். :) ;) சிலபல மரங்கள் காய்ந்த கிளைகள், இலைகளோடு நிற்கும். இப்படியான அழுக்குப் பசங்களை எல்லாம் வெட்டி, நறுக்கி, ட்ரிம் செய்து அழகான பசங்களா, ச்சே..ச்சே, மரங்களா மாத்திவிடுவாங்க.

மரங்களை கவனிக்க 2 வண்டிகள் வரும். முதல் வண்டி மரம் வெட்ட! மடங்கி விரியும் நீண்ட rod-இன் நுனியில் ஒரு ஆள் நிற்குமளவு கூடை இருக்கும். கூடைக்குள் ஒருவர் ஏற, ட்ரைவர் ஸீட்டில் இருப்பவர் இயக்க, அந்த rod தேவையான உயரத்துக்கு போகும், இறங்கும். அவர் கையில் இருக்கும் இயந்திர ரம்பத்தால் கிளைகளை வெட்டித் தள்ளுவார்.
கீழே விழுந்த கிளைகள், இலைகளை சேகரித்து ஒரு இடமாகப் போடுவாங்க. அடுத்த வண்டி வரும். இந்த வண்டிதான் இன்ட்ரஸ்டிங் வண்டி! பலகாலமாக இதைப் படமெடுத்து ப்ளாகில் போடவேண்டுமென்ற என் ஆசை இன்றுதான் நிறைவேறியது. :) வண்டியின் பின்னால் இருக்கும் ஒரு மெஷினில், ஒரு புறம் வெட்டிய மரக்கிளைகளை போட்டால், உள்ளே போய், அரைபட்டு, மெஷினின் இன்னொரு புறமாக மரத்துகள்கள் வரும். அவை முழுக்க வண்டியின் உள்ளே போய் விழும்படியான அமைப்பில்தான் இந்த வண்டி இருக்கும்.
  
பெரிய பெரிய கிளைகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் இந்த வண்டி எங்கே என் கண்ணில் பட்டாலும் அஞ்சு  நிமிஷமாவது நின்னு, நிதானமா ரசிச்சுட்டுத்தான் போவேன். :) ஒரு லாங் ஷாட்டில் வண்டியின் மொத்த உருவம்..
நீ போடற ரம்பமே ரொம்ப கஷ்டம், இதில இந்த ரம்பம் வேறயா என்று தலையைச் சொறியும் அன்புள்ளங்களுக்கு ஒரு நற்செய்தி! USB கேபிள் கிடைச்சுருச்சு, இருங்க, பஜ்ஜி தரேன், சாப்ட்டுப் போங்க. போன முறை வாழைக்காய் பஜ்ஜி-தேங்காச் சட்னி தந்தபோது, பில்டர் காபி மிஸ்ஸிங் என்று மீரா சொல்லிருந்தாங்க. அதனால் இந்த முறை மறக்காம மசாலா டீ - கத்தரிக்காய் பஜ்ஜி- காரசட்னி! என்ஸொய்! :)

Thursday, March 21, 2013

ஹோம் மேட் or ரெடிமேட்?!

பனீர்...ஹோம் மேட் ஆர் ரெடிமேட்? எதற்கு உங்க வோட்டு? :)) இந்த கேள்வியை என்னை நானே கேட்டுக்கிட்டு, கிடைச்ச பதில்/பதில்கள் மற்றும் சுவையான பனீர் மக்கன்வாலா ரெசிப்பி எல்லாமே இந்தப் பதிவில் வருகின்றன. [என்ன செய்யறது..பனீர் மக்கன்வாலா ரெசிப்பி வேணும்னா, இலவச இணைப்பான மொக்கையையும் நீங்க படிச்சேதான் ஆகணும், எவ்ரிதிங் இன்க்ளூடட் இன் தி பேக்கேஜ், யு ஸீ?! ;) ]
சரி, வாங்க..மொக்கைய ஸ்டார்ட் பண்ணுவோம். :)))

பதில் 1:
என்னது...ரெடிமேட் பனீரா? ச்சே,ச்சே...அது நல்லாவே இருக்காதுங்க. சமைச்சம்னா ரப்பர் மாதிரி ஆகிரும். எந்தக்காலம் செய்து இன்டியன் ஸ்டோர் ப்ரீஸருக்கு வந்துச்சோ? வீட்டிலயே ஈஸியா சுவையான பனீர் செய்ய வழி இருக்கும்போது யாராவது கைக்காசைக் குடுத்து அந்த ரப்பனீரை;) வாங்குவாங்களா? வீட்டிலேயே பனீர் செய்தா காசும் மிச்சம், சப்பாத்தி மிருதுவா வரத் தேவையான whey water கிடைக்கும். தரமான பனீரும் கிடைக்கும், நம்ம கையாலயே செய்து, ஆரோக்கியமான உணவை நம்ம குடும்பத்துக்குக் குடுக்கிறோம் அப்படீன்ற ஆத்மதிருப்தியும் கிடைக்கும். கரெக்ட்டா? :)

பதில் 2:
என்னது...வீட்டிலயே பனீர் செய்யறதா??! அவ்வ்வ்வ்வ்வ்..பாலை பக்கத்திலயே நின்னு காய்ச்சி, லெமன் ஜூஸைப் புழிஞ்சு, அதை வடிகட்டி..[அதுக்கு வேற சீஸ் க்ளாத் வாங்கிவைக்கணும், இல்லன்னா காட்டன் துணி தேடணும்..கர்ர்ர்ர்ர்], அந்த whey water-ஐ வேற பத்திரமாப் புடிச்சு வைச்சு, பனீரைச்  சுத்தமாப் புழிஞ்சு, ஒரு மணி நேரம் தண்ணி வடியவிட்டு, அப்புறம் அதுமேல கனமான பொருளை[அதுக்கு ஒரு பாட்டம் மண்டையப் பிச்சுக்கணும், குக்கரில தண்ணி புடிச்சு வைக்கலாமா இல்ல க்ரைண்டர் குழவிய வைக்கலாமான்னு! ;)] ஒரு மணி நேரம் வைச்சு, இருங்கோ, இன்னும் ப்ராசஸ் முடீல! உஸ்....அப்பாடா-ன்னு 3 மணி நேரம் பாடுபட்டு பனீர் கிடைக்கும். இதுக்கிடைல, நீங்க பால் காய்ச்சின பாத்திரத்த கழுவோணும்னு நினைச்சாலே, கிச்சன விட்டு ஓடீரலாம்னு தோணும்!!  சீஸ் க்ளாத்னா தூக்கிப் போட்டுரலாம், காட்டன் துணினா, மனசு கேக்காம, அந்தத் துணியையும் அலசணும்! இத்தனை வேலை செய்யறதுக்கு, இன்டியன் ஸ்டோருக்கு போனமா, $3-க்கு ஒரு பனீர் பேக்கட்டை வாங்கிட்டு வந்தமான்னு வேலைய முடிக்கலாம்ல? ;)))))))
~~~
ஸோ..உங்க பதில் 1 ஆர் 2??!! ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :))))
~~~
இது ரெண்டு பதிலுமே முழுக்க முழுக்க என்னோடதுதாங்க. :) இன்டியன் ஸ்டோர்ல பனீர்  வாங்கலாம்னு  டெம்ப்ட் ஆகும்போது, 500கிராம் பனீர் கட்டி பயமுறுத்தும். அவ்ளோ பனீரை வாங்கி நான் என்ன்ன்ன்ன்ன்ன செய்வேன்? அதனால ஹோம் மேட் பனீருக்கான பதில்1 -ஐச் சொல்லி, மனசைத் தேத்திகிட்டு களமிறங்குவேன். :)))) அதுவும் மோஸ்ட்லி ஏதாச்சும் பார்ட்டி-கெட் டு கெதர் இப்படியான நேரங்களில், சின்ஸியர் சிகாமணியா பதில்1-ஐச் சொல்லிப்புட்டு, ஸ்பெஷலா 2%மில்க்(திக்கான பால்) வாங்கிவந்து பனீர் செய்வேன்.

கொஞ்ச நாட்கள் முந்தி வழக்கமாகப் போகும் கடைய விட்டு, வேறு ஒரு கடைக்குப் போனோம், அங்கே கோபி-என்ற ப்ராண்ட் நேமில் 250கிராம் பனீர் கிடைச்சது, வாங்கிப் பார்க்கலாமேன்னு வாங்கிவந்தேன். க்வாலிட்டி, ருசி, விலை எல்லாமே நல்லா இருந்துச்சு.  வாங்கிவந்து ஒரு முறை பனீர்-கேப்ஸிகம் கறி செய்தேன், மீதி பனீரை காலிபண்ண ஒரு இன்ட்ரஸ்டிங் ரெசிப்பி தேடினேன், மாட்டினான் மக்கன்வாலா! :))) ஏதோ மனுஷன் பேர் மாதிரி இருக்கே என்று ஆர்வத்தில ரெசிப்பியை படிச்சேன், செய்தும் பார்த்தேன்..சூப்பரா இருந்துச்சுங்க. மக்கன் - makhan என்பது ஹிந்தியில் வெண்ணையைக் குறிப்பது. வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் பனீர்- என்பதுதான் பனீர் மக்கன்வாலா என்பதன் தமிழாக்கம் என்பதறிக! :))))

ஓகே..மொக்கை  ஓவர்..நவ் ஓவர் டு ரெசிப்பி - "பனீர் மக்கன்வாலா"
________________________________________________________________________________
தேவையான பொருட்கள்
பனீர்-125கிராம்
வெங்காயம்-1
முந்திரி-5
தயிர்-1டேபிள்ஸ்பூன்
தக்காளி-2
பச்சைமிளகாய்-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1/2டீஸ்பூன்
கசூரி மேத்தி-1/2டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது-1டேபிள்ஸ்பூன்
Half & half milk (or) ஃப்ரெஷ் க்ரீம் -1/4கப்
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதை தயாராக வைக்கவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் வெண்ணெய் காயவைத்து வெங்காயம், முந்திரி இவற்றை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஆறவிடவும்.
ஆறிய வெங்காயம்-முந்திரி கலவையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளிகளையும்  மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் மீதமுள்ள வெண்ணெய், எண்ணெய் காயவைத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 பிறகு தட்டிய பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் வதங்கியதும் அரைத்த தக்காளியைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி பச்சைவாசம் போய், எண்ணெய் பிரிந்து வந்ததும் வெங்காயம்-முந்திரி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், கசூரி மேத்தி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி,
தேவையான உப்பு சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 
  
மசாலா நன்கு கொதித்ததும் தீயைக் குறைத்துக் கொண்டு ஹாஃப் &  ஹாஃப் (அ) பாலைச் சேர்க்கவும்.
 சில நிமிடங்கள் கொதித்ததும், பனீர் துண்டுகளைச் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் கொத்துமல்லி இலை, சர்க்கரை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
 
சூப்பர்-டூப்பர் பனீர் மக்கன்வாலா தயார்! சப்பாத்தி-புலாவ்-ஜீரா ரைஸ் இவற்றுடன் சரியான ஜோடிங்க இந்த மக்கன்வாலா! பார்டிகளுக்கேற்ற பர்ஃபெக்ட் டிஷ்! ட்ரை பண்ணிப் பார்த்துச் சொல்லுங்க. நன்றி!
  

Monday, March 18, 2013

தொடர்பதிவு, என் பொருட்கள்...

ஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்! இளங்கலை படிக்கையில் சைட் ட்ராக்ல தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபா-வில் ஹிந்தியும் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கான பரீட்சைகள் R.S.புரம் நேரு மகாவித்யாலயா பள்ளிக்குப் போனோம். பரீட்சை முடிந்து திரும்பி க்ராஸ்கட் பஸ் ஸ்டாப் வரும் வழியில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த பப்பியார் என் கவனத்தைக் கவர, வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டேன். :) 

அடுத்து அந்தப் குண்டுப் பெண்மணி..எப்படி வீட்டுக்கு வந்தார் என நினைவில்லை..ஆனால், பலகாலமாக எங்களுடனே இருக்கிறார். உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல, ஒரு பொம்மைக்குள் இன்னும் 5 பொம்மைகள்! :) 
 ஐந்து பேரிலும் மூத்த ஆள்தான் அழகாக, திருத்தமாக முகம், கண்கள், புல்லாக்கு, நகைகள் என க்யூட்டாக இருப்பார். அளவு குறையக் குறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் குறைந்து இருக்கும், ஆனாலும் இந்தப் பொம்மை செட் எனக்கு மிகப் பிடித்தமானது. இவை இரண்டுமே அம்மா வீட்டில் பத்திரமாக இருக்கு. ஊருக்குப் போனபோது இந்தப் பதிவு எழுதுவேன் என்ற க்ளூவே இல்லாமல், எடுத்து வந்த படங்கள் இப்படி உபயோகமாகியிருக்கின்றன. :)
எனக்கு கூந்தல் கொஞ்சம்;) நீளம்! ஈரிழைத் துண்டுகள் மற்றும் இப்படியான துண்டுகள் ஈரத்தை சீக்கிரம் உறிந்துகொள்ளும் என்ற காரணத்திற்காக,  காலகாலமாக இப்படி காட்டன் துண்டுகள் வீட்டில் இருக்கும். மேலே படத்தில் இருக்கும் துண்டு என் கல்யாணத்தின் போது கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்-ல் வாங்கியது. இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
 
ரோஜாப்பூ போட்ட இந்தப் பர்ஸ் என்னவர் எனக்காய் வாங்கித் தந்தது. ஒருமுறை என்னிடம் இருந்த லாங் பர்ஸ் பஸ்ஸில் பிக்பாக்கெட்-ஆக பறிபோய்விட்டது. அப்போது இவரிடம் போனில் சொல்லியிருக்கிறேன், பிக்பாக்கெட்டுக்குப் பலியாவது முதல் முறை என்பதால் கொஞ்சம் ஓவராகவே(!) சொல்லியிருப்பேன் போலும்! ;) அடுத்தமுறை இந்தப் பர்ஸுடன் வந்தார். 
அழகான ப்ரவுன் கலரில் குட்டி ரோஜாப்பூவுடன் இருக்கும் இந்த பர்ஸ்..இதன் கைப்பிடிகள் எனக்கு மிகவும் பிடித்த மாடல். நேரம் கிடைக்கையிலெல்லாம் கைப்பிடிகளைப் பூட்டி, திறந்து, பூட்டி திறந்து பார்ப்பது ஒரு பிடித்தமான பொழுதுபோக்கு. :)
குட்டிப் பர்ஸில் 2 அறைகள் உண்டு. அதிகமாகப் பணம் வைத்தெல்லாம் புழங்கமுடியாது. அளவாக செலவு செய்யட்டும்னு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர்! இப்போது அதில் ஒரு காலணா(Quarter cent) போட்டு பத்திரமாக எடுத்து வைச்சிருக்கேன். என் உபயோகத்திற்கு கொஞ்சம் பெரியதாக இன்னொரு பொம்மை(கள்) போட்ட பர்ஸை நானே வாங்கிட்டேன். :)))
பர்ஸ் கதை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சா மறுபடியும் பர்ஸ் போட்டோ??- என நினைக்கிறீங்க, கரெக்ட்? :) இது பர்ஸுக்கு இல்லைங்க, பர்ஸ் மேலே, என் கை  விரலில் இருக்கும் 3 கல் மோதிரத்துக்காக. இந்த மோதிரம் ஒரு பிறந்தநாள் பரிசாக என்னவர் வாங்கித்தந்தது. மூணு குட்டி வைரங்கள் வெள்ளைத் தங்கத்தில் பதிக்கப்பட்டு, வளையம் மஞ்சள் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம். மெல்லிசாய், அழகாய் இருக்கும். சர்ப்ரைஸாக எனக்கே தெரியாம என் கை அளவெடுத்துப் போய் கரெக்டாக வாங்கிவந்திருந்தார். :) 

சால்ட் லேக் சிட்டியில் இருக்கையில் ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க DMV அலுவலகம் போனபோது, அங்கே வேலைபார்க்கும் ஓர் ஆள் இந்த மோதிரத்தைக் கவனித்து ஆஹா-ஓஹோ என அஞ்சு நிமிஷம் புகழ்ந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்பதை இங்கே மீண்டும் ஒருமூறை நினைவு படுத்தலைன்னா எனக்குத் தூக்கம் வராதுங்க..ஹிஹிஹி!

இன்னும் பலப்பல பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இங்கே வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ;) அது என்னன்னா, என்னவர் கொஞ்சம் நல்லாவே படம் வரைவார். பேப்பர் பேனா கிடைத்துவிட்டால், ஏதாவது வரைந்துவிடுவார், நானும் பத்திரமா அதை எடுத்து வைச்சுப்பேன், அவற்றையெல்லாம் இங்கே போடலாம் என ரெடி பண்ணினேன், இருந்தாலும் வரைந்தவரிடம் ஒரு வார்த்தை கேட்போமே என கேட்க, கிடைச்சது ஆப்பூஊஊஊ! :)))) "நோ" என்று தடா போட்டுட்டாருங்க. எதிர்காலத்தில் வாய்ப்புக் கிடைச்சா படங்களை ரிலீஸ் பண்ணுகிறேன். 

இனி, இந்தத் தொடர்பதிவைத் தொடர "உலகம்" சுற்றிக்கொண்டிருக்கும் இமா & "ரசித்து ருசித்து"-கொண்டிருக்கும் ப்ரியா ராம், "பொழுது போக்குப் பக்கங்களை" பதித்துக் கொண்டிருக்கும் சித்ராசுந்தர், ஆகியோரை அழைக்கிறேன். தொடருங்க என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! 

குறிப்பு: இந்தப் பதிவு இந்தியநேரம் மாலை 5.53க்கு வெளியாகும்படி ஷெட்யூல் செய்திருக்கேன், அதனால வாசகர்களுக்கு ஈவினிங் டிஃபனாக பஜ்ஜி-சட்னி வழங்கப்படுகிறது. :)) 
யு.எஸ்.ல கிழக்கு கடற்கரையில் இருக்கும் மக்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் டைமா இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு சாப்ட்டுருங்க. எங்கூர்ப் பக்கமிருந்து வரும் ஆட்களும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ..அகில உலகமெங்கிலுமிருந்து வரும் அனைவரும் அவரவர் ஸ்னாக் டைமுக்கு இங்ஙன வந்து பஜ்ஜி சாப்பிடுங்க என அன்போடு சொல்லிக்கிறேன். 
இங்க இன்னொரு விஷயம்..ப்ளெய்ன் வாழக்கா பஜ்ஜிய விட, பஜ்ஜிக்கு கரைச்ச மீதமாகும் மாவில, சொச்சமான வாழக்காத் துண்டுகள், வெங்காய மொளகா எல்லாம் அரிஞ்சு  போட்டு இப்படி பக்கோடா-வா போடுவமே, அதுதான் என்னோட ஃபேவரிட்! ;) வாட் அபவுட் யூஊஊ?!! :)

Thursday, March 14, 2013

என்ன பெயரிட்டு அழைக்க?..

குறிப்பிட்டுப் பெயரிட முடியாதபடி இந்தப் பதிவில் அதுவுமிதுவாக பல இருப்பதால் என் மனதில் தோன்றிய கேள்வியே டைட்டிலாக அவதாரம் எடுத்துவிட்டது. :) கடந்த வெள்ளியன்று காலையில் எழுந்தபோதே இரவெல்லாம் மழைபெய்து கழுவிவிடப்பட்ட பூமி புதிதாகப் பளபளத்துக் கொண்டிருந்தது. சூரியனும் பளிச்சென்று வரவும், பஸிஃபிக் கடல் பக்கமாய் வானவில்லில் பாதியையும் பார்க்கமுடிந்தது. 
அன்று முழுவதுமே மழை வரும் என்ற வானிலை அறிவிப்பும் ஏற்கனவே வந்திருந்தது.  வண்ணங்கள் குழைத்த வானவில் வந்து கட்டியம் கூற ஆலங்கட்டி மழை வந்து தாலாட்டிப் போனது. :)
முன்பே ஒருமுறை இந்த Hail Stones வந்திருந்தாலும் இவ்வளவு அதிகமாக விழவில்லை, விழுந்தவையும் சில நிமிடங்களில் கரைந்தே போயின. ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட பனிப் பொழிவு போல ஆங்காங்கே  பனிக்கட்டிகள் படர்ந்துகிடந்தன. 
 அன்று மாலை வரையிலும் கூடக் கரையாமல் அப்படியே ஜவ்வரிசிகளைப் போல கொட்டிக் கிடந்த ஹெய்ல் ஸ்டோன்ஸ்...
அடுத்தநாள் காலையில் தொட்டிச் செடிகளைப் பார்க்கிறேன், ஆலங்கட்டிகள் கரைந்து போயிருந்தாலும் அவற்றின் தடம் இந்தச் செடியில் சற்று அழுத்தமாகவே படிந்திருந்தது.
  ~~~
எனக்குப் பிடித்த மஞ்சப் பூ! :) 
பூக்களைப் படமெடுக்க எனக்குச் சொல்லவே வேண்டாம், அத்தனையையும் இங்கே பதிவிட்டு உங்களைப் படுத்தியெடுக்காமல், ரெண்டே ரெண்டு படங்கள்! :)
~~~
கண்ணுக்கு உணவு வழங்கியாயிற்று, அடுத்தபடியாக வயிற்றும் சிறிது ஈந்துவிடுவோம். :)  
இது வடஇந்திய உணவு. "பனீர் மக்கன்வாலா & ரொட்டி"
இது தென்னிந்திய உணவு."செட்டிநாட்டு பக்கோடா குழம்பு, சோறு, உருளைக் கிழங்கு கறி"
இரண்டிற்கும் சமையல் குறிப்புகள் அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள். நன்றி! :)

Monday, March 11, 2013

ரசித்த பாடல்கள்..


எல்லாப் பாடல்களையும் கேட்டீங்கனா ஒரு விஷயம் கவனிச்சிருப்பீங்க..என்னன்னு கருத்துப் பெட்டில சொல்லுங்க, நன்றி!:) -----> என்று 2 நாட்களுக்கு முன்னர் எழுதினேன். ஒண்ணும் பெரீஈய்ய விஷயமெல்லாம் இல்லீங்க, பாடல்கள் எல்லாமே இளையராஜா குரலில் வந்தவை. அதிலும் நாயகன் படப் பாடல் கமல் குரலில் இருந்ததை கவனிக்காமல் சேர்த்துமிருக்கிறேன். :))
இது போன்ற பொழுதுபோக்குப் பதிவுகளையெல்லாம் வந்து பார்ப்பதே பெரிய விஷயம், அதிலே பாட்டுக் கேட்டு கருத்தும் வேறு சொல்லணுமா என்றே மேற்கண்ட படம் சொல்வதுபோல எனக்கு ஒரு பிரம்மை! ;) :)

பாடல்களை ரசித்து, கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் இளமதி, சித்ராக்கா, சங்கீதாநம்பி, ஏஞ்சல் அக்கா அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்! இங்கே வந்து, வலைப்பூவைப் பார்வையிட்டு "ரசித்த பாடல்கள்" பதிவிற்கு 170+ page views தந்த அனைவரும் நன்றிகள். இப்போதைக்கு கருத்துப் பெட்டியைப் பூட்டிவைக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதுவரை 'வழக்கம் போல' வந்து போங்க. ;) :)

Thursday, March 7, 2013

வெந்தயக் கீரை பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1/4கப்
சுத்தம் செய்த வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
சின்னவெங்காயம்-4
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

அரைக்க
தேங்காய்த்துருவல் -2டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-3
சீரகம்-1டீஸ்பூன்
தக்காளி(சிறியதாக) -1 அல்லது அரைத்தக்காளி
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்

செய்முறை
கீரையை சுத்தம் செய்து, கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிவைக்கவும்.
பருப்பை  தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துஎடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு, வெங்காயமும் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரையைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்த விழுதுடன் அரைகப் தண்ணீரும் சேர்த்து கீரை கலவையுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பச்சை  வாசம் போனதும், வெந்த பருப்பை மசித்து கூட்டுடன் சேர்க்கவும்.
பருப்பு சேர்ந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
கமகம மணத்துடன் வெந்தயக் கீரை பருப்பு கூட்டு ரெடி.
சுடுசாதம்-கூட்டு- ரசம்- ஸ்பைஸி காலிப்ளவர்-உருளை-பட்டாணி வதக்கலுடன் சிம்பிளாக ஒரு நேர உணவு வேலை முடிந்துவிடும். :)

Sunday, March 3, 2013

சின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone

 
தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு / மைதா மாவு - 11/2 கப் + 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1/4கப்+2டேபிள்ஸ்பூன்
பேக்கிங்  பவுடர்-11/4டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/4டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
Half &Half milk / கெட்டியான பால்-3/4கப்
எலுமிச்சை ஜூஸ்- அரை பழத்திலிருந்து
[மோர் இருந்தால் நேரடியாக 3/4 கப் சேர்க்கலாம், என்னிடம் இல்லாததால் பால்+ எலுமிச்சை ஜூஸ் சேர்த்தேன்]
குளிர்ந்த வெண்ணெய்- 6டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெண்ணெயை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே சிறு துண்டுகளாக நறுக்கி உபயோகிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
விரல்களால் அவற்றைக் கலந்து கொள்ளவும். வெண்ணெய்த் துண்டுகள் மிளகு அளவுக்கு வந்து, கலந்த மாவு கிட்டத்தட்ட மணல் போல crumble ஆகியிருக்க வேண்டும். 
பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை மாவுடன் கலக்கவும். 
பால் சேர்த்து மாவு ஒன்றாக சேரும் வரை கலந்தால் போதுமானது. அதிகமாகப் பிசையக் கூடாது.
பிறகு சின்னமன் பேக்கிங் சிப்ஸை மாவுடன் சேர்த்து பிரட்டவும்.
உலர்ந்த மாவு தூவிய சமமான இடத்தில் ஸ்கோன் மாவை மாற்றி, லேசாகப் பிசையவும். (அதிகபட்சம் 10 முதல் 12 முறை மாவைத் லேசாகத் திருப்பிப் போட்டாலே கையில் ஒட்டாத பதம் வந்துவிடும். சப்பாத்தி மாவு போல அடித்துப் பிசைந்தா:) ஸ்கோன் கடினமா ஆகிவிடும், அதனால் கோ ஈஸி! :))

மாவை 2 பங்காகப் பிரித்து, 1/4 இன்ச் திக்னஸ் உள்ள வட்டங்களாகத் தட்டிக் கொள்ளவும்.  [இந்நிலையில் ஒரு பகுதியை ப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையான பொழுது எடுத்து bake செய்யலாம்.]

வட்டமாகத் தட்டிய மாவை கத்தியால் ஆறு சமபகுதிகளாக வெட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.
உருக்கிய வெண்ணெயை ஸ்கோன்கள் மீது தடவி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை தூவிவிடவும்.
425F ப்ரீஹீட் செய்யப்பட்ட oven-ல் சுமார் 10-13 நிமிடங்கள் bake செய்து எடுக்கவும். 
 
டடா! சி.சி.ஸ்கோன் ரெடி!
சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், ஆறிய பிறகும் சுவையாக இருக்கும். ;) தேவையான போது oven-ஐ 200F ப்ரீஹீட் செய்து, 10 நிமிஷங்கள் oven-ல் வைத்தெடுத்தும் ருசிக்கலாம். :) 
~~
பகுதி -1 இல் சொல்லியது போல, பகுதி-2இல் மோரில் ஆரம்பிச்ச தடங்கல், பால்+லெமன் ஜூஸ் என அஜீஸ்;) ஆச்சுங்க..அப்புறமா கேமராக்கள் சதி!! இருந்த ஒரு சின்னக் கேமரால மெமரி ஸ்பேஸ் இல்லை..பெரிய கேமரால லென்ஸை மாத்தணும், எப்படி மாத்தன்னு தெரிலை, ஆத்துக்காரரும் வீட்டிலில்லை..பிறகு ஆப்பிள் ஐபோன் கை கொடுக்க ஸ்கோனை பேக் செய்த ஸ்டெப்ஸை பதிவும் செய்தேன். அதனால கொலாஜ்ல ஒவ்வொரு படமும் ஓரொரு சைஸில் இருக்கும். நீங்களும் அஜீஸ் பண்ணிக்குங்க. 
பி.கு. இப்பல்லாம் கேமரால லென்ஸ் மாத்த கத்துகிட்டாச்சு. ஹிஹி! :)
~~

Friday, March 1, 2013

ஸ்கோனும், நானும்!

என்னங்க,  தமிழ்ப்பட டைட்டில் மாதிரி இருக்குதா? :) இருக்காதா பின்னே...பல்வேறு தடங்கல்களுக்கப்புறமும் விடாமுயற்சியோட போராடி...இருங்க, ரொம்ப எமோஷனல் ஆகப்புடாது, உடம்புக்கு கெடுதி!...இப்பவே சொல்லிடறேன், இது(வும்) ஒரு மொக்க பதிவுதான். சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரப்போற கண்ணும், வலிக்கப்போற உங்க வயிறும் ஜாக்கிரதைஐஐஐஐஐ! :)))))

எதோ உலகசாதனை லெவலுக்கு பில்ட்-அப் குடுத்துட்டு நான் சொல்லப்போறது ஒரு சமையல் குறிப்பு! அதனால வானத்தில் பறந்த உங்க கற்பனைக் குதிரையக் கட்டுப்படுத்தி உங்க சமையலறைக்குள்ளாற கொணாந்து பார்க் பண்ணுங்க, பார்ப்போம்! :) [ஆஹா..மகி, நீ இப்படில்லாம் எழுதி, குதிரை கடிக்கறமாதிரி கனவெல்லாம் வரப்போகுது உனக்கு! ;) ]

பதிவப் படிச்சுப்புட்டு "ச்சீ,ச்சீ, இந்தப் பயம்:) புயிக்கும்:)" அப்படின்னு ரெசிப்பிய செய்ய தயங்கிராதீங்க. உங்களுக்கு எந்ந்ந்ந்ந்ந்ந்த இடைஞ்சலும் வரப்படாது-அப்படின்னுதான் நான் எல்லா ஆராய்ச்சிகளையும் பண்ணி விஸ்வரூப வெற்றியடைஞ்சிருக்கேன். அதனால இந்தப் பதிவு காமெடிக்கு மட்டுமே என எடுத்துக்குங்க. ரெசிப்பி விரைவில தனிப் பதிவாப் போட்டுத் தாக்கிடறேன்.[விடாஆஆஆது கருப்பு!...:)]

அடடா, குதிரையப் பார்க் பண்ணீட்டு ரெம்ப நேரமா நிக்கிறீங்களே, வாங்க! வந்து டைனிங் டேபிள்ல வசதியா உக்காருங்க..களைப்புத் தீர ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுங்க..பயமில்லாம சாப்புடலாம்[நான் செய்யல],  பனீரா ப்ரெட்ஸ்-ல இருந்து வந்திருக்கு. :)
பனீரா ப்ரெட்ஸ் - வடஅமெரிக்கா மற்றும் கனடாவில்  பிரபலமான ஒரு செய்ன் ஆஃப் பேக்கரி, கஃபே, ரெஸ்டாரன்ட்டுங்க.  சமீபத்தில் ஒருநாள் அங்கே போய் மேலிருக்கும் தட்டை காலி செய்தது நானேதான்! :) அதில அந்த ரவுண்டா  உளுந்து வடை ஷேப்ல இருக்கே, அந்த ஹாலப்பினோ பேகல்- எல்லாம் வேண்டாம், பக்கத்தில ஒரு வஸ்து:) உட்காந்திருக்கே, அதான் இன்னிக்கு போஸ்ட்டோட கதாநாயகி/கதாநாயகன்??! ;) 
இவருக்குப் பேர் "சின்னமன் சிப் ஸ்கோன் [Cinnamon Chip Scone]". ஸ்கோன் எனப்படுவது யாதெனின், யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்! :)))))) கோவப்படாதீங்க! சும்மா டமாசு! :)))) 

Scone  என்பது கொஞ்சமா இனிப்பு போட்ட கேக்/ க்விக் ப்ரெட்..டீ டைம்ல, ப்ரேக்ஃபாஸ்ட் டைம்ல உண்ணப் படுவது. இதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கலை. அன்று பனீரா ப்ரெட்-ல அதிர்ஷ்டவசமா என் கண்ணில பட்டுச்சு, "ஏனுங், இதொண்ணு வாங்கி குடுங்.." -னு எங்கூட்டுக்காரர்கிட்ட கேட்டனுங்களா, அவரும் வாங்கிக் குடுத்தாருங்கோ. பிச்சு ஒரு வாய் வாயில போட்டனா...ஆஹா!! செம ருசியா இருந்துச்சு. பிறகு மறுபடி ஒருமுறை போனப்ப நான் என்ன வாங்கி சாப்பிட்டிருப்பேன் அப்படின்னு கஷ்டமான கொஸ்டின் எல்லாம் உங்ககிட்ட கேக்க மாட்டேன். கவுன்ட்டருக்குப் போனேன், ஒரே ஒரு சி.சி.ஸ்கோன் குடுங்க அப்படினு அதய மட்டும்ம்ம்ம் வாங்கி சாப்பிட்டேன். எங்காத்துக்காரர் "இப்படியும் ஒரு ஜந்து!"-ங்கறமாதிரி ஓரப்பார்வை பாத்துகிட்டே சான்ட்விச் சாப்ட்டாரு. 

வீட்டுக்கு வந்தப்புறம் கை கம்முன்னு இருக்குமா?  இன்டர்நெட்டில தேட ஆரம்பிச்சேன், ஒரே தேடல்ல இந்த வலைப்பக்கம் கிடைச்சது. இவ்ளோ ஈஸியா ரெசிப்பி கிடைச்சிருச்சேன்னு படிக்க ஆரம்பிச்சேன், அப்பதான் "சின்னமன் பேக்கிங் சிப்ஸ்" அப்படின்னு இருந்ததை கவனிச்சேன்.  சாக்லட் சிப்ஸ் - பட்டர் ஸ்காட்ச்  சிப்ஸ் இவையெல்லாம் பார்த்திருக்கேன், ஆனா இதுவரை சின்னமன் பேக்கிங் சிப்ஸ் கேள்விப்படவே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்! 

பொறகென்ன?  அதுக்கு ரெசிப்பியத் தேடினேன். அதிகம் தட்டுப்படாமல் ஒண்ணு-ரெண்டு கிடைச்சிது. அங்கே காத்திருந்தது இன்னொரு ஆப்பூ! :) தேவையான பொருட்கள்-ல "லைட் கார்ன் ஸிரப்" இருந்தது. அதெல்லாம் நான் இதுவரை வாங்கினதில்லீங்க. கடைக்குப் போகவும் வாய்ப்பில்லை. வாட் நெக்ஸ்ட்? "லைட் கார்ன் ஸிரப் ஸப்ஸ்டிட்யூட்" என்று கூகுளைத் தட்டியதில் காதில, ச்சே, கண்ணில தேன் பாய்ந்தது! :) ஆமாம் தேனேதான் ஸப்ஸ்டிட்யூட்! ஸோ, முஷ்டிய மடக்கிட்டு களத்தில குதிச்சேன்.  
படங்களில் எண்கள் அங்கங்க இருக்கு, உங்களுக்கு 1-2-3 தெரியும்தான? அந்த வரிசப்படி பாக்கோணும்.  பட்டை  தூள்-சர்க்கரை-வெண்ணெய்-தேன் இந்த நாலு ஐட்டத்தையும் கலந்து, பேக்கிங் ட்ரேல பரப்பி, சதுரமாத் தட்டி, 200F-ல ஒரு அரைமணி நேரம் bake செய்யணும்ங்க. படம் -7 ல இருக்க மாதிரி அவுட்கம் வரும். அது கொஞ்சம் ஆறினதும் பிஸ்ஸா கட்டர்/ கத்தியால குறுக்கும் நெடுக்குமா கோடுகள் போட்டு வைச்சிருங்க. நல்ல்ல்ல்ல்லா ஆறினதும் சின்ன சதுரங்களாப் பிச்சு எடுத்தா சின்னமன் பேக்கிங் சிப்ஸ் ரெடி! :) :) 

இதையெல்லாம் செய்து முடிக்க வெள்ளிக்கிழம சரியாப் போச்சா, சனிக்கிழம ப்ரெக்ஃபாஸ்டுக்கு ஸ்கோன் செய்யலாம்னு ஆர்வமா எழுந்து வந்தேன். மாவு-பேக்கிங்பவுடர்-உப்பு-பேக்கிங் சோடா-சர்க்கரை-வெண்ணெய் எல்லாம் பவுல்ல எடுத்து போட்டாச்.  பேக்கிங் சிப்ஸ் கொஞ்சம் கொழகொழன்னு இருக்க மாதிரி இருந்துச்சு. கொஞ்ச நேரம் oven-ல வைச்சா இறுகிரும்-அப்படினு ஒரு சாத்தான் மண்டைக்குள்ள உட்கார்ந்து வேதம் ஓதுச்சு, நானும் ட்ரேய அவன்ல வைச்சிட்டேன். அதிகமில்ல ஜென்டில்மென்/ வுமன், ஜஸ்ட் அஞ்சே நிமிஷம்!! ட்ரேய எடுத்தா........ஆஆஆஆஆஅ..ஆஆ! சிப்ஸ் எல்லாம் உருகி, மறுபடி படம் 7-ல இருக்க லெவலுக்கு வந்திருச்சு!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! 

சுக்குநூறா ஒடஞ்சு போன மனசைத் திடப்படுத்திகிட்டு, மாவு போட்ட பாத்திரத்தை பத்திரமா மூடி ப்ரிஜ்ல வைச்சிட்டு, சின்னமனை ஆறவிட்டேன். அப்பதான் எழுந்து வந்த என்னவர், நான் செஞ்ச காமெடியக் கேட்டு கன்னா-பின்னான்னு சிரிச்சுட்டு, சிப்ஸ்-ஐ கொஞ்ச நேரம் ஃப்ரீஸர்ல வைச்சிருந்தா hard ஆகியிருக்குமே அப்படின்னு valuable suggestion கொடுத்தாருங்க. ஒடனே ட்ரேய ப்ரீஸர்ல போட்டு,  பிறகு அதை கட் பண்ணி, சிப்ஸாக்கி எடுத்து வைச்சு.

அடுத்தநாள் காலைல அவர் பைக்கிங் போனபிறகு  வெற்றிகரமா சின்னமன் சிப் ஸ்கோன் பேக் பண்ணி எடுத்தேன். ட்ரே-ய oven-la  இருந்து எடுக்கவும், என்னவர் வீட்டுக் கதவைத் திறக்கவும் சரியா இருந்துச்சு. 

"சுடச்சுட ஸ்கோன்.. சாப்பிடுங்க!"என்றதும் ஆச்சர்யத்தில மூழ்கிட்டார். இருக்காதா பின்னே? 24 மணி நேரம் முன்னே முசுமுசுன்னு மூக்கச் சிந்திகிட்டு இருந்த புள்ள, இப்ப சிரிச்சுகிட்டே ஸ்கோன் எடுத்துக் குடுத்தா?!! "அந்த ஸ்கோனை உனக்கு அவ்வ்வ்வ்வ்வளவு புடிச்சிருச்சாம்மா?"என்று கேட்டவாறே சாப்பிட்டார், ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அதுக்கப்புறம்! 
"HEAVENLY!" 
 இஸின்ட் இட் லவ்லி?! ;) :)
அவரே எடுத்துக் கொடுத்ததுதான் மேலேயுள்ள மற்றும் கீழே கொலாஜில் உள்ள  படங்கள் எல்லாமே!
 
நம்புங்க, நம்புங்க, பனீரா ப்ரெட் சி.சி.ஸ்கோன் டேஸ்ட்ல 95% வந்துருச்சு. ரெடிமேட் சின்னமன் சிப்ஸ் கிடைக்காததுதான் மீதி 5%க்கு காரணமே தவிர என் குற்றம்  எதுவுமே இல்லை! இங்கே கடைகளில் தேடியமட்டும் சின்னமன் பேகிங் சிப்ஸ் கிடைக்கலை. ஸோ ஹோம் மேட் இஸ் த பெஸ்ட் வே! ஸோ, நீங்க ரெடியா? ஸ்கோன் செய்வமா? 
:)))))))

LinkWithin

Related Posts with Thumbnails