Thursday, August 29, 2013

மேத்தி ரொட்டி & கத்தரிக்காய் மசாலா கறி

மேத்தி ரொட்டி- தேவையான பொருட்கள்
கோதுமை மாவு-11/2கப்
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை-1/2கப்
தயிர் (அ) மோர்-1/4கப்
தண்ணீர்-சுமார் 1/2கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
மல்லித்தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்த்தூள்-1/4டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகம்+ஓமம் -1டீஸ்பூன் [1/2டீஸ்பூன் சீரகம், 1/2டீஸ்பூன் ஓமம் இவற்றை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும்.]
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன் + சப்பாத்தி செய்ய
உப்பு

செய்முறை
கீரை, பொடிவகைகள், உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும்.
அதனுடன் மோர் அல்லது தயிர் சேர்த்து கலக்கவும்.
கோதுமை மாவையும் சேர்க்கவும்.
சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு பிசைந்துகொள்ளவும்.
2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
சப்பாத்தி மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும்.
காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா- ஊறுகாய் -வெண்ணெய்- தேன் இவை பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும். படத்தில் இருப்பது பீட்ரூட் ரைத்தா.
~~~
கத்தரிக்காய் மசாலா கறி
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்-3
வெங்காயம்-1
பூண்டு-2 பற்கள்
கடுகு-1/டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம்
மஞ்சள் பொடி-1/4டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
கொறகொறப்பாக அரைக்க 
சோம்பு-1/2டீஸ்பூன்
கிராம்பு-1
கொத்துமல்லி-1டீஸ்பூன்
மிளகு-3
வரமிளகாய்-2
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்


செய்முறை
கத்தரியை கழுவி பெரிய துண்டங்களாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம், பூண்டை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் கொறகொறப்பாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பூண்டு-வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய கத்தரித் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி, மஞ்சள்தூள்-உப்பும் சேர்த்து கலந்துவிடவும்.
கடாயை மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
இதற்குள் கத்தரிக்காய் முக்கால்பாகம் வெந்திருக்கும். அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, இன்னும் 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.
மசாலாவின் பச்சை வாசம் போய், கத்தரியுடன் நன்கு கலந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான காரசாரமான கத்தரிக்காய் பொரியல் தயார். சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
~~~
வெந்தயக் கீரை-கத்தரிக்காய் இரண்டுமே நம்ம வீட்டு பால்கனித் தொட்டிகளில் விளைந்தது. அது பற்றிய விவரங்கள் அடுத்து வரும் பதிவுகளில்... நன்றி! 

Monday, August 26, 2013

வீட்டுத்தோட்டத்தில் ஒரு வீக்-எண்ட்!

முன்னெச்சரிக்கை: பதிவின் நீளம் கொஞ்சம் அதிகம். இன்னமும் சொல்லவேண்டியவை இருந்தாலும், வாசிப்போர் நலன் கருதி:) அவற்றை அடுத்த பதிவுக்கு ஒத்தி வைத்திருக்கிறேன். அவசரமாய் ஓடிவந்து எட்டிப்பார்த்துவிட்டு கம்பி நீட்டாம, நிதானமா வந்து படிங்க என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :) 
எல்லாருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன். எங்க வீட்டில்  பலநாட்கள் தவணையாய் இருந்த ஒரு வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. வசந்தம் முடிந்ததுமே  பழைய செடிகளை அகற்றி புதிதாகச் செடிகள் நட்டிருக்கவேண்டும், நாட்கள் நீண்டு கோடையின் இறுதியே வந்துவிட்டது. ஆனாலும் பரவாயில்லை, Its better late than never-என்பதாக தொட்டிச்செடிகளை தொடர்ந்து சில மணி நேரங்கள் கவனித்தோம். யெஸ், யு ஆர் ரைட்! பால்கனித் தோட்டம் பற்றிய (படங்களால் நிறைந்த) பதிவிது. :)

டேலியா-வின் சீஸன் முடிந்து, பூக்கள் சிறுத்துப் போயின, கூடவே பூச்சித் தொற்றும் வந்துவிட்டது. ஆனாலும் செடிகளைப் பறிக்க மனமில்லாமல், அப்படியே விட்டிருந்தோம். மனதைத் தேற்றிக்கொண்டு நானே(!) செடிகளை மண்ணிலிருந்து சில இன்ச் உயரத்தில் நறுக்கிவிட்டேன். வறண்டுபோன அவற்றை நீக்கிவிட்டு, தொட்டியிலிருந்து கிழங்குகளை எடுத்து வைத்திருக்கிறோம். அடுத்த வசந்தத்தில் அவை மீண்டும் முளைக்குமா இல்லை வராதா என எனக்கும் என் கணவருக்கும் போட்டி! நான் கிழங்குகள் தழைக்கும் என்கிறேன், பார்க்கலாம்![நீங்க எந்தக் கட்சி?! என் கட்சியா, இல்ல எதிர்க்கட்சியா?  ;) :)]
மற்றும் சில தொட்டிகளில் பூக்கள் இல்லாமல் இருந்த செடிகளின் இலைகளை நறுக்கி, ரோஜாக்களிலும் பூத்து முடிந்த தண்டுகளை நறுக்கி..ஒழுங்கு செய்து நிமிர்ந்து பார்த்தால், ஏதோ தானே எல்லா வேலையையும் செய்து முடித்ததுபோல சோம்பல் முறித்தார் [கொலாஜில் முதல் படம்! ;) ] திருவாளர் ஜீனோ! :)))) 
டாலர் ஷாப்பில் இருந்து சில தொட்டிகள், சில பூக்கள் வாங்கி வந்திருந்தேன், அவற்றையும் நட்டு, மண் குறைந்த மற்ற தொட்டிகளில் மேலும் மண்ணிட்டு நிரப்பி(னார்)னோம்! ;) [நாந்தான் பிஸியா போட்டோ புடிச்சுகிட்டிருந்தேனே!..ஹிஹி]

புதினாவை நட்டு வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அதனை நீக்கிவிட்டு புதிதாக வளர்ப்போம் என நினைத்திருந்தேன். புதினாத் தொட்டியைக் கவிழ்த்து, செடியை வெளியே எடுத்தால்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்....மண்ணே இல்லாமல் தொட்டியின் வடிவில் வேர்விட்டு இருந்தது புதினா!! நல்லவேளை இப்போதாவது ஞானோதயம் வந்ததே நமக்கு என நினைத்துக்கொண்டு, சில தண்டுகளை பறித்து புதுத்தொட்டியில் நட்டுவிட்டு, இதனை எறிந்துவிடலாம் என என்னவரிடம் சொன்னேன். அவர் அதிர்ச்சி ஆகிவிட்டார்! ;) என்னது...ஏன் இதை வீசணும்? வேறு தொட்டியில் வைப்போம் என்றார். அப்படி வருமா என எனக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் முயற்சிப்போம் என சற்றே பெரிய கருப்புத் தொட்டியில் மண் நிறைத்து இந்த புதினா மரத்தை வைத்திருக்கிறோம்! :)
ஒரு வாரம் கழிந்தபின் பார்த்தால், பச்சைத்தொட்டியை விட கருப்புத் தொட்டியில் வைத்த புதினா மரம்தான் நன்றாக துளிர்த்திருக்கிறது! ;)

அடுத்து வருபவர் கொஞ்சம் ஸ்பெஷல்!! பலநாட்கள் பழம் பறித்து வந்து விதை போட்டபோதெல்லாம் முளைக்காமல் ஏமாற்றினார். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் ஒரு தொட்டியில் தானாகவே முளைத்திருந்தார். அந்தத் தொட்டியிலிருந்த மற்ற செடிகளனைத்தும் வறண்டு போன நிலையில் இவர் மட்டும் சிறு செடியாக, பசுமையாக நின்றிருந்தார்!!  எனக்கென்னமோ சந்தேகத்தில் இருக்கட்டும் என விட்டுவைத்து காத்திருந்தேன். இந்தமுறை என்னை ஏமாற்றவில்லை, அவர் மணத்தக்காளிச் செடியேதான்! :))))
ஜெரேனியம் பூக்கள் உள்ள படத்தில் பாருங்கள், அப்போதுதான் சிறு நாற்றாக வளரத்துவங்கியிருந்தது. பிறகு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது சுக்குட்டிச் செடி! [கோவையில் இதன் பெயர் சுக்குட்டிச் செடி-சுக்குட்டிக் காய்-சுக்குட்டிப் பழம்! :)]
பூக்கள் வந்தன, பூக்கள் பிஞ்சாகிக் காயாகிப் பழமும் ஆனது. கீரையைப் பறிக்கலாம், பறித்துச் சமைத்தால் ஒரு ஸ்பூன் கீரைதான் கிடைக்கும்! ;) எனக்குள் ஒளிந்திருந்த சிறுமி, பறிக்காதே...பறிக்காதே என கட்டளையிட நானும் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தேன். இறுதியாக சிறுமிக்கு அவள் வேண்டியது கிடைத்துவிட்டது. ஆமாங்க, கை நிறைய சுக்குட்டிப் பழம்! :))))
செடியில் நிறையப் பழங்கள் பழுத்தபிறகும் சின்னக் குழந்தை மாதிரி பறிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே சிலநாட்கள் விட்டுவிட்டேன். பின்னொரு சுபயோக சுபதினத்தில்(!) பழங்களைப் பறித்து கழுவி ருசித்தாயிற்று. :)  

இன்னும் காய்கள் இருக்கின்றன செடியில். ஆனால் பாருங்க, சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக ஹோம் டிப்போ-வில் இருந்து ஆர்கானிக் மிளகாய்ச்செடிகள் வாங்கிவந்தேன், [அவற்றில் அப்போதே பூச்சிகள் இருந்தன] அந்தச் செடிகளிலொன்றை  மணத்தக்காளித் தொட்டியில் வைக்க, அங்கிருந்து இங்கே பூச்சிகள் பரவிவிட்டன. நிறைய இலைகளைப் பறித்துப் போட்டேன். சிலவற்றில் பச்சை நிறப் புழுக்களும் தெரிகின்றன. வேப்பிலைப் பொடி கிடைத்தால் தூவிவிடவேண்டும் அல்லது சோப் தண்ணீர் தெளிக்கவேண்டும் என தெரிந்தாலும், இப்போதைக்கு அவற்றையெல்லாம் செய்யாது பூச்சி அரித்த இலைகளைக் கிள்ளியெறிந்துகொண்டிருக்கிறேன்.
ஹோம் டிப்போவில் ஒரு தக்காளியும் சில மிளகாய்ச்செடிகளும் வாங்கிவந்த வாரம் எங்க ஊர் உழவர் சந்தைக்குப் போனேன், அங்கே நர்ஸரியில் சிவப்பு குடைமிளகாய்ச் செடி கிடைத்தது. இந்த வகை நன்றாக வளரும் என முன்பதிவுகளில் கருத்துக்கள் சொல்லியிருந்தார்கள், அதனால் அதை வாங்கியாயிற்று.
ஃபார்மர்ஸ் மார்க்கட் நர்ஸரியில் இன்னுமொரு ஆச்சர்யம்...கறிவேப்பிலை மரம்! :) நல்ல ஆரோக்கியமான சிறு மரக்கன்றுகளாகவே விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தரையிலிருந்து சுமார் 11/2 உயரம் வளர்ந்திருந்தன கறிவேப்பிலைக் கன்றுகள். விலைதான் கொஞ்சம் அதிகம் போல தோன்றியது..$25!! வாங்கலாமா வேண்டாமா என குழம்பி அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துவிட்டு குடைமிளகாயை மட்டிலும் வாங்கிவந்தேன்.

நர்ஸரியில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த சில தகவல்கள்..கறிவேப்பிலை வளர்க்க மணல்தான் நல்லது, அல்லது உரங்கள் கலக்காத potting soil உபயோகிக்கலாம். மிராக்கிள் க்ரோ போன்ற உரமூட்டப்பட்ட மண்ணில் நடுகையில் செடி முதலில் நன்றாக வளர்ந்தாலும் ஒன்றிரண்டு வருஷங்களில் வாடிப் போகுமாம். குளிர் காலங்களில் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், கறிவேப்பிலை குளிர் தாங்காதாம்! :) கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார், இப்போது நீங்கள் இந்தச் செடியை வாங்கிப் போனாலும், உடனே இதிலிருக்கும் கறிவேப்பிலையை உபயோகிக்கக் கூடாது. இலைகள் மீது சில ரசாயனங்கள் தெளித்திருக்கிறோம். அதனால், மரக்கன்றை வீட்டில் நட்டபிறகு புதிதாகத் தளிர்க்கும் கறிவேப்பிலைதான் சமையலுக்கு உகந்தது- என்றார்! அப்படி கறிவேப்பிலை நட்டு, தழைந்து, இலை முற்ற சுமார் ஒரு  வருஷமாவது ஆகுமாம்! 

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதனால் வாங்காமல் வந்துவிட்டேன். என்னை விட என்னவருக்கு நிறைய்ய ஏமாற்றம்! ஏன் வாங்காமல் வந்தே என எனக்கு ஒரே அர்ச்சனை! ;) 
யு.எஸ்.-ல் தோட்டம் போட்டிருக்கும் நட்புக்கள் யாராவது கறிவேப்பிலை வளர்த்திருக்கிறீர்களா? மரக்கன்று இவ்வளவு விலைதானா?  நம்பி வாங்கி வளர்க்கலாமா என தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் வரும் வாரங்களில் வாங்கலாமா என முடிவு செய்ய உதவியாக இருக்கும். செய்வீர்களா? 
~~~
தோட்டத்தில் நிறைய வேலை செய்ததால் சமைக்க நேரமில்லை, அதனால் பழங்களை நறுக்கி மதிய உணவுக்கு வைத்தாயிற்று! 
எனக்கு பழங்களை அப்படியே சாப்பிடத்தான் விருப்பம். ஆனால்....
 சிலருக்கு உப்பு-மிளகாய்ப்பொடியெல்லாம் தூவிச் சாப்பிட விருப்பமாய் இருக்கும். :) 
ஒரு பாதி ஸ்பைஸி ஃப்ரூட்ஸ், மறு பாதி ப்ளெய்ன் ஃப்ரூட்ஸ்...ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்!
அந்த ஞாயிறு சமைக்காமல் டிமிக்கி கொடுத்தாலும், உங்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக...
ஒரு சிம்பிள் லஞ்ச்!
தக்காளி சாதம், தயிர் சாதம், கேரட் பொரியல், அப்பளம், மோர் மிளகாய்.

Thursday, August 22, 2013

வெள்ளெருக்கம் பூ

நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்றுவிட்டு மீண்டும் நம்மிடம் வரும்போது ஒரு கூடுதல் கவனிப்பு கிடைத்துவிடும் அதற்கு! :) என்னங்க, ஓவரா குழப்புறேனா? :) 

அது ஒண்ணுமில்லை, அந்தப் "பொருள்" என்னோட சாவிக்கொத்து! வீட்டுச்சாவியுடன் மெயில் பாக்ஸின் சாவி, அபார்ட்மெண்ட் கேட் சாவி மற்றும்  ஒரு thumb drive-ஐக் கோர்த்து வைத்திருப்பேன். (thumb drive-ல் ஊரில் எடுத்த படங்கள் மொத்தமும் இருக்கு)...ஸ்ஸ்ஸ்,, பொறுமை! தலையச் சுத்தினாலும் கடைசில கரீக்ட்டா மூக்கைத் தொட்டுடுவேன்னு தெரியுமில்ல, அப்புறம் எதுக்கு டென்ஷன் ஆகறீங்க? வெயிட்!!

வீட்டில் இருக்கும்வரை சாவி வீடு திறக்க பூட்ட மட்டுமே உபயோகம்! நேற்று என்னவர் சாவியை மாற்றி எடுத்துப் போய்விட்டார். அப்பதான் சாவிக்கொத்தை அவ்வ்வ்வ்வ்வளவவவவு மிஸ் பண்ணேன்என்பது புரிந்ததுன்னா பாத்துக்குங்களேன்! ;) தபால் வந்திருக்கான்னு செக் பண்ண முடில, ஒரு வாக் போக அபார்ட்மெண்ட்டை தாண்டி வெளில போக முடில. கை ஒடஞ்ச மாதிரி இருந்தது. மாலையில் இவர் வீடு வந்ததும் சாவியைக் கைப்பற்றிட்டேன். அப்ப thumb drive கண்ணில் படவே, சுடச்சுட ஒரு பதிவும் ரெடி! :)) 
~~~
கடந்த அக்டோபரில் பெங்களூருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கே விநாயகர் சதுர்த்தி ஊர்லவங்கள் நடைபெற்றவண்ணம் இருந்தன. ஒருநாள் நாங்கள் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகையில் கடந்து சென்ற அழகான விநாயகர்..
உச்சிக்கொண்டை எல்லாம் போட்டுக்கொண்டு வெகு அழகாக இருந்தார். அவரைக் கண்டு ரசித்தவாறே வீட்டில் நுழையத் திரும்பியபோது பாதையின் இருபுறமும் எருக்கஞ்செடிகள் தலையாட்டின. வெள்ளெருக்கு என்றால் விநாயகர்-தான் என் டிக்‌ஷனரியில்! சிறு வயதில் இருந்தே நேரம் கிடைக்கையில் வெள்ளை எருக்கஞ்செடிகள் தேடி பூப்பறித்து மாலை கோர்த்து அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்கோ, வீட்டிலிருக்கும் படங்களுக்கோ சாற்றுவது வழக்கம். இத்தனை வருஷங்கள் கழித்து கண்டுகொள்வாரில்லாமல் வெள்ளெருக்கு பூத்திருக்கையில் என் கை கம்மென்று இருக்குமா? :) எல்லாருமாகச் சேர்ந்து பூக்களைப் பறித்துவந்து மாலையாக்கினோம். :) 
வெள்ளெருக்கு 
எருக்கு- குடும்பத்தில் சுமார் 9 வகையான எருக்கஞ்செடிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வெகுசாதாரணமாக நம் கண்ணில் படும் கத்தரிப்பூ நிற எருக்கம் பூச்செடி ஒன்று, அதிக இடங்களில் தலைகாட்டாமல் ஆங்காங்கே ஒளிந்து இருக்கும் வெள்ளெருக்கு இவையே எனக்குத் தெரிந்தவை. எருக்கு விஷத்தன்மை வாய்ந்தது என்றாலும் இந்த வெள்ளெருக்கு அதற்கு விதிவிலக்கு. பல்வேறு மருத்துவகுணங்கள் கொண்டதாம், இதனை வீட்டில் வளர்க்கலாம், விநாயகர் மற்றும் சிவனுக்கு உகந்த பூ என்றும் சொல்கிறார்கள்.  12 ஆண்டுகள் மழை இல்லாவிட்டாலும் சூரியஒளியினைக் கொண்டே உயிர் வாழும் சக்தி கொண்டாதாம் எருக்கஞ்செடிகள். வெள்ளெருக்கின் வேரில் செய்யப்படும் பிள்ளையார் சிலைகள் மிகவும் பிரபலமானவை. வெள்ளெருக்கின் பட்டையை விளக்கேற்ற திரியாகப் பயன்படுத்தலாமாம். இது பற்றிய இன்னும் மேலதிக தகவல்கள் வேண்டுவோர் இங்கே பாருங்கள். பல ஆன்மீக விவரங்கள் தரப்பட்டுள்ளன. 

வெள்ளெருக்கின் மொட்டுக்கள். கோடை விடுமுறை நாட்களில் கண்ணில் படும் எருக்கம்மொட்டுக்களை டப்-டப் என அமுக்கி உடைத்து "பாஸா-ஃபெயிலா?" விளையாடிய நினைவு வருகிறதா?! :) ;)  முற்றிலும் மலர்ந்த எருக்கம் பூ என்றில்லாமல், ஓரளவு முதிர்ந்த மொட்டுக்களையும் பறித்து மாலைகோர்க்கலாம். 
முழுவதும் மலர்ந்த வெள்ளெருக்கு மலர். பறிக்கையில் கைகளில் எருக்கம்பால் படும், கவனமாகப் பறித்துவந்து கையாளவேண்டும். 
இந்த செடியில் எதிரிலேயே சாதாரண  எருக்கஞ்செடி ஒன்றும் இருந்தது. படங்களைப் பார்த்தாலே வண்ணங்களின் வேறுபாடு தெள்ளென விளங்கும்.  விநாயகர் சதுர்த்தி நேரங்களில் இந்த வயலட் எருக்கம்பூவும் மாலையாகி பூமார்க்கெட்களில் இடம்பிடித்திருக்கும். இந்தப் பூக்களை கடவுளுக்கு படைக்கலாமா எனத்தெரியவில்லை. 

சரி..எருக்கம்பூக்கள் பறிச்சாச்சு, இனி அவற்றை சுத்தம் செய்து மாலையாக்கலாம். முதிர்ந்த மொட்டுக்களையும் பறிக்கலாம் என சொன்னேன் அல்லவா? அவற்றை கைகளால் உடைத்து பிரித்தபிறகும் 2-ஆம் எண் உள்ள பூப்போல இருக்கும். முதலில் பெரிதாக இருக்கும் அந்த 5 இதழ்களையும் பூவின் காம்புடன் பிரித்து எடுக்கவேண்டும். எண்3-ல் உள்ள பூ மட்டிலும் தனியே வரும். 
அந்த மலரின் தலையில் இருக்கும் சிறு கொண்டை போன்ற பகுதியையும் பிய்த்து எடுத்த பின்னால் (எண்-4) மாலை கோர்க்க வெள்ளெருக்கம்பூ தயார். ஒரு சிலர் இப்படியெல்லாம் பூவுக்கு சிசுருஷைகள் செய்யாமல் 'அப்படியே' கோர்த்தும் போடுகிறார்கள். ஆனால் இப்படிச் செய்வதுதான் என் பெரியம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்த வழக்கம். 
கொஞ்சம் வேலை அதிகம் போல இருந்தாலும் எனக்குப் பிடித்தமான வேலை இது! :) இனி பூக்களை ஊசி-நூல் கொண்டு கோர்த்தெடுக்கவேண்டும்.
உதவிக்கு பல கைகள் இருந்ததால் வெள்ளெருக்கு மாலை விரைவில் தயார் ஆகிவிட்டது.
முதலில் வீட்டிலேயே இருந்த விநாயகருக்கே சாற்றிவிடலாமா என யோசித்தோம். பிறகு அருகிலேயே பிள்ளையார் கோயில் ஒன்று இருப்பதாகத் தெரியவும், அடுத்தநாள் காலையில் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை தரிசித்து மாலையையும் சாற்றிவிட்டு வந்தோம். 
கோயிலில் ஹாய் சொன்ன அணில் பிள்ளை! நல்லா பார்த்துக்குங்க, நம்மூரு அணிலுக்கு முதுகில 3 கோடு எப்படி பளிச்சுன்னு தெரியுது என! :)
விநாயகர் இந்தப் பதிவினை ஆக்ரமித்துவிட்டதால், அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையே அவருக்கு நைவேத்யமாகத் தயாரிக்கப்பட்டு, படிக்கும் உங்களுக்கும் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. :)
காரக் கொழுக்கட்டை-சர்க்கரைப் பொங்கல்-கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
~~~
இன்றைய(பதிவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லா)இணைப்பு : Geno playing Peekaboo! 
எங்க வீட்டுப் பால்கனியிலிருந்து  ஜீனோ வெளியே பார்க்க வசதியாக தரையோடு கொஞ்சம் இடமிருக்கிறது. அரையடி உசரத்தில் இருப்பதால் அந்த ஓட்டை வழியாகத்தான் மாடியிலிருந்து அவர் வெளியுலகைப் பார்க்கவேண்டும். :)
 அப்படிப் பார்த்துப் பார்த்தே கீழே போக வர இருக்கும் fellow friends-ஐப் பார்த்து வாள்-வாள் என கத்தி(!)ப் பேச்சுக்கொடுப்பது ஜீனோவின் வழக்கம்.
 ஒரு நாள் என்னவர் கேமராவுடன் கீழே போய் ஜீனோவைக் கூப்பிட்டபோது ஜீனோவின் போஸ்தான் மேலே! :)
 நமக்கு பேச்சு இருப்பது போல ஜீனோவுக்கு way of communication வாலாட்டுவது மற்றும் காதுகள் மூலம் எக்ஸ்பிரஷன் கொடுப்பது! சந்தோஷமாக இருந்தால் காதுகள் இரண்டும் முதுகோடு சேரும் வண்ணம் ஆகிவிடும். கூடவே தொண்டையில் இருந்து "ம்ம்ம்...ம்ம்ம்" என ஒரு விதமான சந்தோஷச்சத்தம்!! தாவிக் குதித்து அவ்வளவு அழகாக சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். அதுவே கோபம், என்றால் காதுகளிரண்டும் 90டிகிரி கோணத்தில் நேராக நிற்கும். புதிதாக ஏதாவது ஒன்றை பார்ப்பது, கேட்பது, புது ஆட்கள் யாராவது தன்னை அழைத்தால் respond செய்வது என்றால் இரு காதுகளும் மேலே உயர்ந்து அழகாக செங்குத்தாக மடங்கி நிற்கும். :) படத்தில் பாருங்களேன், Isn't he cute? :) 
~~~

Tuesday, August 20, 2013

ப்ளாக் & ஒயிட்...ப்யூட்டிஃபுல் சைட்! :)

கவுனி அரிசி & பூசணிக்காய் தயிர் பச்சடி 
இரண்டு குறிப்புகளுமே மிகவும் சிம்பிளான குறிப்புகள் என்பதால் ஒரே பதிவில் வெளியிடுகிறேன்.  கருப்பு-வெள்ளை கலர் காம்பினேஷனில், தேவையான பொருட்களும் குறைவாக, செய்முறையும் சின்னதாக, உடலுக்கும் ஆரோக்கியமான குறிப்புகள். செய்து பார்த்து சொல்லுங்க! :) 
~~~!!~~~
கவுனி அரிசி -தேவையான பொருட்கள்
வைல்ட் ப்ளாக் ரைஸ்/ Wild black rice -1/2கப்
சர்க்கரை-1/4கப் (சுவைக்கேற்ப)
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
கருப்பரிசியை 2-3 முறை களைந்து, 11/2 கப் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரங்கள் ஊறவைக்கவும். [நேரமிருந்தால் 8 மணி நேரங்கள் கூட ஊறவைக்கலாம், உங்க வசதி!]
அரிசியை ஊறவைத்த தண்ணீருடன் குக்கரில் வைத்து 3-4 விசில்கள் வரும்வரை வேகவிடவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மசித்துவிட்டு, சர்க்கரை தேங்காய்ப்பூ சேர்த்து கிளறவும்.
சுவையான கவுனி அரிசி தயார்! 
கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது, ப்ரோட்டீன் அதிகம் உள்ளது என சொல்கிறார்கள். இப்படி சர்க்கரை சேர்த்து செய்கையில் சுவையாக உள்ளது. வெறும் சாதமாக வடித்து சாப்பிட (எங்களால்) முடியவில்லை! ;) முழுவதும் பாலீஷ் செய்யப்படாத அரிசி என்பதால் உமி நிறைய இருக்கிறது. விலையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது! ;)  செட்டி நாட்டுப் பக்கம் இந்த கவுனி அரிசி மிகவும் பிரபலமான இனிப்பு வகை எனத் தெரிந்தது. ஸ்ப்ரவுட்ஸ் ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் வாங்கி வந்தது இந்த வைல்ட் ப்ளாக் ரைஸ்தான்! 
~~~
பூசணிக்காய் தயிர் பச்சடி 
தேவையான பொருட்கள்
பூசணிக்காய்- சிறு கீற்று[துருவியதும் சுமார் அரைகப் வந்தது]
தயிர்-கால் கப்
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-1
உப்பு 
தாளிக்க
எண்ணெய்
கடுகு-1/4டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம் 
வரமிளகாய்-1
பெருங்காயத்தூள்-2 சிட்டிகை 
செய்முறை
பூசணிக்காயைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். 
அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி-பச்சைமிளகாய்-உப்பு-தயிர்-தேங்காய்த்துருவல் சேர்த்து கலக்கி வைக்கவும்.
தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து தயிருடன் சேர்க்கவும்.
சுவையான பூசணி-தயிர் பச்சடி தயார். பூசணியை பச்சையாக சேர்த்திருக்கிறோம் என்பதே தெரியாது. சுடுசாதத்துடன் கலந்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.
இந்த குறிப்பு போனவருஷம் ஊருக்கு போயிருந்த பொழுது அவள் விகடனில் பார்த்து முயற்சி செய்தேன். சூப்பராக இருந்தது. இங்கே வந்த பிறகு சுத்தமாக மறந்தே போயிருந்தேன். திடீரென நினைவு வரவே செய்தாச்சு. :) 

Thursday, August 15, 2013

முட்டைக்கோஸ் கூட்டு(அ)சாம்பார்

வழக்கம் போல டைட்டில்லயே குழப்பம் ஆரம்பம்! பின்னே என்னங்க அது? கூட்டு அல்லது சாம்பார்? ஒண்ணு கூட்டா இருக்கணும், அல்லது சாம்பாரா இருக்கணும், கரெக்ட்டா? ஆனா இந்த குழம்பு [ஆஹா...இப்ப குழம்பாகிருச்சே!! அவ்வ்வ்வ்] கொஞ்சம் கலவையா இருக்கும். கடலைப் பருப்பு-கோஸ் இருக்கு, அப்ப கூட்டுன்னு சொல்லிக்கலாம். ஆனா கூட்டு-தான்னு அடிச்சு[யாரை அடிச்சு??! ;)] சொல்ல முடியாது. ;) :)

கூட்டு போல கெட்டியாக இல்லாமல் சாம்பார் போல தண்ணியா இருக்கும், கூடவே சாம்பார் பொடி- தக்காளி -வெங்காயம் எல்லாமும் போட்டிருக்கேன், ஸோ இது கூட்டுன்னு சொல்ல முடியாது.
சரி, சாம்பார்னு சொல்லலாம்னா அதும் முடியாது. கடலைப்பருப்பு போட்டு யாராச்சும் சாம்பார் வைப்பாங்களா என்ன? ஹிஹி...அதனால உங்களுக்குப் பிடிச்ச பெயரில கூப்பிடுங்க[என்னை இல்லை, இந்த ரெசிப்பிய! :)] டக்குன்னு 20 நிமிஷத்தில செய்துடலாம். மசாலா எல்லாம் அதிகம் இல்லாம மைல்டா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு-1/4கப்
நறுக்கிய முட்டைக்கோஸ்-1/3கப்
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-2
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
சாம்பார்த்தூள்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
எண்ணெய்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-1
கறிவேப்பிலை-கொஞ்சம்

செய்முறை
கடலைப்பருப்பை தேவையான தண்ணீருடன் குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துவைக்கவும். பருப்பு வெந்து ஒரு விசில் வருவதற்குள் கோஸ், வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி இவற்றை நறுக்கி வைச்சுக்கலாம்.
ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து நறுக்கிய கோஸ், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், சாம்பார்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கப் தண்ணீரும் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்துச் சேர்க்கவும்.

எளிதில் செய்யக் கூடிய சுவையான முட்டைக்கோஸ் கூட்டு(அ)சாம்பார் தயார். சுடுசாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். அப்பளம் பொரித்தால் வேலை முடிந்தது! :)
ஆனா பாருங்க, எங்க வீட்டில "பொரிப்பது" எனக்கு கொஞ்சம் அலர்ஜி என்பதால் ஸ்பினாச் பொரியல், காலிஃப்ளவர் வறுவல், அவித்த முட்டை மற்றும் ரசம் இவற்றுடன் சாப்பிட்டோம். 

குறிப்பு: பருப்பையும் காய்களுடனே சேர்த்தும் வேகவைக்கலாம், ஆனால் கடலைப்பருப்பு ஒரு விசிலில் வெந்துவிடுமா என்ற சந்தேகத்தில் இப்படி செய்தேன். பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்ப்பதானால் எல்லாவற்றையும் குக்கரில் கொட்டி:) ஒரு விசில் விட்டு எடுத்து தாளிச்சு கொட்டிக்கலாம். :) 
வெறுமனே சாம்பார் பொடி மட்டும் சேர்த்தால் காரம் போதாதது போல (எனக்குத்) தோன்றுவதால் கொஞ்சம் மிளகாய்ப்பொடியும் சேர்ப்பேன். 
~~~
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
~~~

Monday, August 12, 2013

மேக ஊர்வலமும், அக்வாஃபோபியாவும்!

ஒரு சனிக்கிழமை மாலை நேரம்..
கடைக்குப் போகலாம் என கிளம்பி காரில் அமர்ந்து அண்ணாந்து பார்த்தால்...
வானவீதியெங்கும் வெண்மேகங்களின் ஊர்வலம்...
எப்படி இத்தனை அழகாக மேகங்கள் உருவெடுத்தன எனத் தெரியவில்லை, வானெங்கும் 360டிகிரி கோணத்தில் பார்த்தாலும் கிள்ளிப்போட்ட பஞ்சுத் துணுக்குகளாக மேகத்துளிகள் ஒரே சீராகப் பரவிக் கிடந்தன.
சிறிது நேரம் கழித்து காற்றும் மேகச் சதுரங்களை கலைத்துவிட்டிருந்தது. சூரியன் மேற்கில் இறங்க, சூரியஒளி பட்டு மேகத்துணுக்குகள் பிரகாசித்த காட்சி மிக அழகாக இருந்தது. :)
~~~
ஒரு சில வகை நாலுகால் செல்லங்கள்(water friendly dogs) தண்ணீர், குளியல், ஸ்விம்மிங், கடலில் விளையாட்டு என்றால் உற்சாகமாக இருக்கும்.  ஆனால் ஜீனோவின் பாரம்பரியத்தைச் சேர்ந்த CHUG ஆட்களுக்குத் தண்ணீர் என்றாலே அலர்ஜி! வீட்டில் குளிக்கவே வேண்டாவெறுப்பாக எப்ப முடிப்பாங்க, எப்ப வெளியே ஓடி தண்ணீரை உதறலாம் என பயத்துடன் காத்திருப்பார். இதுவரை கடலோரம் கூட்டிப்போகவில்லை, சிலநாட்கள் முன் சான்டியாகோ சென்றபோது அங்கே ஒரு கடற்கரைக்கு அழைத்துப்போனோம், அப்போது அரங்கேறிய காட்சிகள் உங்கள் பார்வைக்கு..
ஜீனோ: ….இது என்னது? ஒரே தண்ண்ண்ண்ண்ண்ணியா இருக்கே??! எல்லாரும் தண்ணிக்குள்ள வெளாட்றாங்க..பக்கத்தில ஒரே மண்ணு மண்ணா இருக்கே?!!
டாடி தண்ணில பயமில்லாம நிக்கறாங்க..நாமளும் போலாமா??! ஹ்ம்ம்ம்….
போலாமா வேணாமான்னு முடிவு பண்றதுக்குள்ள இப்படி இஸ்த்துக்கினு:) போறாங்களே? நான் என்ன்ன்ன்ன்ன செய்வேன்??!...
ஜீனோவ இழுத்துட்டுப் போனாங்க, பட் ஜீனோ தண்ணிக்கு  வரமாட்டேன்னு அடம்புடிச்சு மண்ணெல்லாம் பிறாண்டி, கண்ணுக்குள்ள எல்லாம் மண்ணு விழுந்து..போராடி எஸ்கேப் ஆகி... 
மம்மி மடில செட்டில் ஆகிட்டேன்! இதான் நமக்கு ஸேஃப் ப்ளேஸ்!! அடிக்கிற குளிர் காத்துக்கு கதகதப்பா பாதுகாப்பா இருக்கு!
 அப்பாடா!! வீடு வந்தாச்சுப்பா! ஐ யம் அ டொமஸ்டிக் டாக் யு ஸீ! :) 
போங்கய்யா,,,நீங்களும் உங்க கடலும்! அவ்வ்வ்வ்வ்வ்!
~~~ 
மேக ஊர்வலம் பார்த்தவாறே நாங்கள் சென்ற கடை "Sprouts-Farmers Market".
அங்கே இருந்து வாங்கி வந்தது..
இதை வைத்து செய்யப்போவது...
என்ன ஏது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம். நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails