Saturday, January 31, 2015

கேப்ஸிகம் பொரியல் / குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள்
குடைமிளகாய் -2
வெங்காயம் - பாதி 
பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு 

செய்முறை 
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சம அளவு சதுரத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை கீறியும், வரமிளகாயைக் கிள்ளியும் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து பருப்பு தாளித்து வெங்காயம், ப.மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து , கொஞ்சமாகத் தண்ணீர் தெளிக்கவும். 
அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். 
சுவையான குடைமிளகாய் பொரியல் சில நிமிடங்களில் தயார். 
சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என பலவண்ண மிளகாய்களை உபயோகித்தால் பொரியல் கண்ணுக்கு அழகாகவும் இருக்கும். தனியாக ஒரே வண்ண மிளகாயை உபயோகித்தாலும் நன்றாக இருக்கும். முதல் படத்தில் சிவப்பு +மஞ்சள் மிளகாய்கள், இரண்டாவது படத்தில் மஞ்சள் + பச்சை மிளகாய்கள். 
குடைமிளகாயை ரொம்பவும் குழைவாக வேக வைக்காமல் கொஞ்சம் க்ரஞ்ச்-சியாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

Tuesday, January 20, 2015

கல்கண்டு பொங்கல்

2015-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்பாய்த் தொடங்கலாமே என பொங்கலுக்கு செய்த ரெசிப்பியுடன் ஆரம்பமாகிறது.  

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2கப்
பாசிப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கல்கண்டு-1/4கப்
சர்க்கரை-1/4கப் 
(கல்கண்டு மட்டுமே கூட சேர்த்துக்கொள்ளலாம். அப்படியாயின் அரை கப் கல்கண்டு அல்லது இனிப்பிற்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
பால்-1/4கப் 
நெய்-3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை 

செய்முறை
அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வர வறுத்து வைக்கவும்.
குக்கரில் அரிசி-பருப்புடன் 21/2 கப் தண்ணீர் விட்டு 3 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்.

ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சூடான பாலைச் சேர்த்து பொங்கலை மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் கல்கண்டு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான சூட்டில் வைத்து கிளறவும். 
கற்கண்டு கரையும் வரை குறைந்த சூட்டில் கிளறவேண்டும். இடையில் ஓரொரு டேபிள்ஸ்பூனாக 2 முறை நெய்யையும் சேர்த்துக் கொண்டு கிளறவும்.
மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையை பொரித்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், முந்திரி திராட்சையை பொங்கலில் சேர்த்து கலக்கவும்.
கல்கண்டு பொங்கல் தயார்.
குறிப்பு
அரைக்கப் கல்கண்டைச் சேர்க்காமல் ஏன் கால் கப் மட்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு பதில் தேவைப்பட்டால் அடுத்துள்ள வரிகளைப் படிங்க..அல்லது கமெண்ட் பாக்ஸுக்கு ஜம்ப் பண்ணிருங்க! ;) 
ஏதோ ஒரு காலத்தில் லட்டு செய்வதற்காக வாங்கிய கல்கண்டு கொஞ்சம் இருப்பது நினைவு வரவே க.பொங்கல் செய்ய ஆரம்பித்தேன், வீட்டுக்குள் ஒரு கூகுள் சர்ச் செஞ்சு கல்கண்டு பேக்கட்டைக் கண்டுபிடிச்சு பார்த்தா.....கால் கப் கல்கண்டுதேன் இருக்கு!! அவ்வ்வ்வ்வ்...இதுக்காக முன் வைச்ச காலை பின் வைக்க முடியுமா? மிச்சம் மீதிக்கு சர்க்கரையச் சேத்து பொங்கிட்டேன்.  ஹிஹி...

Tuesday, January 13, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இங்கு வருகை தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்!
~~~

ஐந்து நீண்ட வருடங்களைக் கடந்து,
ஆறாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வேளை இது!
அவ்வப்போது சோர்ந்தாலும், ஓய்ந்து விடாமல் மீண்டு வந்து
உங்களையெல்லாம் விடாமல் நச்சரிக்கும்;):)
தெம்பைத்தந்த ஆண்டவனுக்கு நன்றிகள்!
அலுக்காமல் சலிக்காமல் என் பதிவுகளை வாசித்து
மறக்காமல் கருத்துக்கள் பதிக்கும்
நட்பூக்களுக்கும்
நேரமில்லாத காரணத்தால் படித்துவிட்டுப்
பறக்கும் நட்பூக்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்!
நீங்கள் இல்லாமல் இந்த வலைப்பூ இல்லை..
இங்கே உங்கள் வருகை இல்லாமல்
என் வருகையும் இல்லை..
புத்துணர்ச்சியுடன் வலைப்பூவுலகில் வலம் வர வாய்ப்பளிக்கும் வாசகர்களே,
உங்களனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி!
~~~

Wednesday, January 7, 2015

புத்தாண்டு 2015 - கோலங்கள்

 2015 பிறந்து ஒரு வாரமே ஆனபிறகும் ப்ளாகை அப்டேட் செய்யாமலிருந்தால் எப்படி? அதான் அடிச்சுப் புடிச்சு 7ஆம் தேதி ஒரு போஸ்டைப் போட்டுரலாமேன்னு வந்திருக்கேன். :) இந்தப் பதிவில் முதல் படம், நியூ இயர் கொண்டாட்டத்தில் நாங்கள் ருசித்த ஃப்ரூட் கேக்...

அடுத்து வரும் கோலங்கள், கோவையில் இருந்து. இந்த முறை வாட்ஸப்-பில் வந்தவை என் கஸின் (சித்ரா வேலுமணி) வீட்டுக் கோலங்கள்..
அதே கோலம்தான், வேறொரு கோணத்தில்..

 சின்னதாக இருந்தாலும் அழகான ஒரு விளக்குக் கோலம்..அதற்கு மேலே, கலர்ஃபுல்லா ஏதோ தெரியுதே...
ஆஹா...அடுத்த படத்தில் தனியாகவே கலர்க்கோலம்! :) அழகான கோலங்களை இட்டு, அவற்றை இங்கே பகிர அனுமதியும் அளித்த சித்து-விற்கு என் அன்பான நன்றிகள்!
~~
 புத்தாண்டு அன்று ரிவர்சைட் என்ற இடத்தில் இருக்கும் ஶ்ரீ லக்‌ஷ்மி நாராயண் மந்திர் சென்றிருந்தோம். அன்று வைகுண்ட ஏகாதசி என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது.
கோயிலில் வெங்கடேசப் பெருமாள், சிவபெருமான், உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உண்டு. 
மீண்டும் சந்திப்போம். நன்றி!  

LinkWithin

Related Posts with Thumbnails