தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம்-11/2கப்
தேங்காய்த் துருவல்-1/4கப்
தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
சமையல் எண்ணெய்-2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு , உளுந்துப் பருப்பு-தலா 1டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-2
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
சாதத்தை உதிரியாக செய்து ஆறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் + தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
பருப்புகள், கடலை வறுபட்டவுடன் கீறிய பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சர்க்கரை-உப்பு சேர்த்து, கடாயை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு, சாதத்தை கட்டிகளில்லாமல் உதிர்த்து சேர்க்கவும்.தேங்காய்க் கலவையுடன் சாதத்தை கலக்கி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
சாதம் லேசாகச் சூடேறியதும் அடுப்பை நிறுத்திவிட்டு மேலும் சில நிமிடங்கள் கடாயை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
சுவையான தேங்காய் சாதம் தயார். விருப்பமான பக்க உணவு(களு)டன் சாப்பிடலாம். படத்தில் நீங்கள் பார்ப்பது பருப்புச் சட்னி, கேரட் ப்ரோக்கலி பொரியல் மற்றும் அவித்த முட்டை.
பொதுவாக தாளித்த சாதத்துக்கு வெங்காயம் சேர்க்காமல் செய்வது எங்க வீடுகளில் வழக்கமில்லை. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் போன்றவற்றில் வெங்காயம் சேர்க்காமலே செய்யலாம் என்று எனக்கு இணையத்தைப் பார்த்த பிறகே தெரிய வந்தது. [ஆரது அங்கே? சத்தமில்லாமச் சிரிக்கிறது?? கர்ர்ர்ர்ர்ர்!!] ஆனாலும் வெகு நாட்களுக்குப் பிறகே எலுமிச்சை-தேங்காய் சாதங்கள் மட்டும் வெங்காயம் இல்லாமல் செய்கிறேன். சுவையும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, வேலையும் குறைவு. ;) :) வெங்காயம் சேர்த்த தே.சாதம் ரெசிப்பி இங்கே.
கடந்த பதிவு நீளம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக மேலிடத்தில் இருந்து (எங்க ஊட்டுக்காரர்தேன்! ;)) புகார் வந்தது. இந்தப் பதிவு சுருக்கமாப் போடணும் என நினைச்சு அதையும் இறுதியில் கொஞ்சம் இழுத்துட்டேன், அஜீஸ்;) பண்ணிக்குங்கோ!! நன்றி!













