இங்க வந்து படிக்கறவங்களுக்கெல்லாம் இந்த பதிவு உபயோகமா இருக்குமான்னு தெரில..ஆனா, எனக்கு ஒரு பிற்பகல் பொழுது போரடிக்காம கழிந்துடுச்சு..பொறுமையா படிக்கப்போகும் உங்களுக்கு நன்றி & ஆல் த பெஸ்ட்! :)))
நீங்க சவுத் இண்டியனா, எப்படி டோசா(!!??)-க்கு மாவு அரைக்கறது? -- இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி எனக்கு மனப்பாடம் ஆகிடுச்சுங்க..ஏன்னா இங்கே எங்க நண்பர்கள் முக்கால்வாசி வட இந்தியர்கள். அவங்களுக்கு புழுங்கல் அரிசி-ன்னு ஒண்ணு இருப்பதே தெரியாது..பாஸ்மதி அரிசி மட்டும்தான் தெரியும்.
வட இந்தியர்கள்னு இல்லை, என் கர்நாடகா பிரெண்ட் ஒருத்தங்க(நம்ம ஊர்தான்..ஆனா பிறந்து வளர்ந்தது வேற மாநிலம்)..கல்யாணமாகி அஞ்சாறு வருஷமா இட்லி செஞ்சதே இல்லையாம்..எப்படி செய்யறதுன்னு தெரியலையாம் அவங்களுக்கு..(என்ன கொடும சரவணா இது??)
இன்னொரு தோழிக்கு மாவு சரியா பொங்கியிருக்கா இல்லையான்னு கூட கண்டுபிடிக்கத் தெரியாது..புளிக்காத மாவில் இட்லி ஊத்தி அணுகுண்டு ரேஞ்சுல இருக்கும் அவங்க வீட்டு இட்லி.
சரி..இணையத்துல தேடுவோம்னு பாத்தா...
இட்லிக்கு தனியா, தோசைக்கு தனியா மாவு அரைக்கணும்..தோசை முருகலா வர மாவுல சர்க்கரை சேர்க்கணும்..கடலைப்பருப்பு சேர்த்து அரைக்கணும்..ரவை சேர்த்து கலக்கணும்..பச்சரிசி -புழுங்கலரிசி சேர்த்து அரைக்கணும். உளுந்தை ஐஸ் வாட்டர்ல அரைக்கணும்..ஊறவைக்கும் போது பிரிட்ஜ்ல வைக்கணும்.. எக்ஸட்ரா..எக்ஸட்ரா....எக்ஸட்ரா!
அப்பப்பா..ஒரே டிப்ஸ் மழையா இருந்தது..மாவு அரைக்கறதே பெரிய வேலை போல!!!!
இப்படி பல்வேறு அனுபவங்கள் கொடுத்த தைரியத்துல தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். என் கணவருக்கு டெய்லி இட்லி-தோசை குடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடுவார்..ஊர்ல மாமியார் வீட்டுல பிரிட்ஜ்ல மாவு எப்பவும் இருந்துட்டே இருக்கும்.
புழுங்கல் அரிசி தான் நாங்க யூஸ் பண்ணறோம்..அதனால தனியா இட்லி அரிசி-ன்னு வாங்கறதில்ல.. 4:1 ரேஷியோலதான் நான் மாவரைக்கறது..நாலு கப் அரிசி, ஒரு ஸ்பூன் வெந்தயம், ரெண்டு கைப்பிடி அவல் எல்லாவற்றையும் சுத்தமா களைந்து நாலஞ்சு மணி நேரம் ஊறவைத்துடுவேன். (ஒரொரு நாள், வெந்தயம் போட மறந்தும் போயிடுவேன்..இல்ல அவல் தீர்ந்து போயிருக்கும்..ஸோ, இந்த ரெண்டும் போட்டே ஆகணும்னு கட்டாயம் இல்லை.)ஒரு கப் உளுந்தை மாவு அரைப்பதற்கு ஒண்ணு-ஒண்ணரை மணி நேரம் முன்னால நல்லா அலசி ஊற வைப்பேன்.
அரைக்கும்போது, அரிசிய கிரைண்டர்ல போடும்போதே போதுமான தண்ணீர் ஊத்திடணும்.அப்போதான் மோட்டாருக்கு அதிக வேலை இல்லாம ஈசியா அரிசி அரைபடும்.ஆனா உளுந்து அரைக்கும் போது முதல் அஞ்சு நிமிஷம் தண்ணியே ஊத்தக்கூடாது..ஏன்னா, தண்ணி அதிகமான உளுந்து சரியா அரைபடாதாம்..அதுக்கப்புறம் கொஞ்ச நேரத்துக்கொருமுறை தண்ணி தெளிச்சு அரைக்கணுமாம்.(இது எங்க வீட்டு லக்ஷ்மி வெட் கிரைண்டர் கூட வந்த டிப்ஸ்..உபயோகமான டிப்சாத்தான் தெரியுது. இந்த டிப்ஸ்-ஐ நான் ஆறு மாதம் கழிச்சுதான் பாத்தேன்..அது வேற கதை :) )
ஸோ, டிப்ஸ்-ஐ பாலோ பண்ணி அரிசி மாவு அரைக்கோணும்..உணர்ச்சி வசப்பட்டு அரிசிய கிரைண்டர்ல போடும்போதே ஒரு லிட்டர் தண்ணிய ஊத்திடாதீங்க..கொஞ்சம் அளவு பாத்து ஊத்தி அரையுங்க.
மாவு ரொம்ப நைசா இருக்கணும்னு அவசியமில்ல.( டீவி, கீவி பாத்துட்டு, இல்ல மடிக்கணினில மூழ்கி மறந்து போயி உட்டுட்டீங்கன்ன பரவால்ல..கொஞ்சம் நெகு-நெகு ன்னு அரைபட்டுடும்..பட், இட்ஸ் ஓகே!) இல்ல, ஒருவேளை டைம் ரொம்ப கம்மியா இருக்கு..அபார்ட்மென்ட்ல நைட் பத்து மணிக்கு மேல சத்தம் வரக்கூடாதுங்கற ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ணக் கூடாது, சீக்கிரமா அரைச்சு முடிக்கணும்னு இருந்தா கொஞ்சம் முன்னாலேயே கூட எடுத்துடுங்க..தட் இஸ் ஆல்ஸோ ஓகே!)
அப்புறம் என்ன...உளுந்தை அரைக்க வேண்டியதுதான்..டிப்ஸ்-ஐ பாலோ பண்ணி கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீர் தெளித்து அரையுங்க..தண்ணி ஊத்தி ஊத்தி அரைக்கும் போது மாவு நல்லா பொங்கி வரததைப் பாக்கும்போது உங்களுக்கே ஒரு சந்தோஷமா இருக்கும்.(ஹி,ஹி!!)
இப்போ அரிசி மாவு, உளுந்து மாவு, தேவையான உப்பு எல்லாம் சேர்த்து நல்லா கலக்கி வையுங்க..கிரைண்டர்ல இருக்க மிச்சம் மீதி மாவு வேஸ்ட் ஆனா பரவால்ல. நான் சிக்கன சிகாமணியாக்கும்னு கிரைண்டர்ல தண்ணி ஊத்தி கழுவி, அந்த தண்ணிய மாவோட சேர்த்து கலக்கிடாதீங்க..மாவு கெட்டியா இருந்தா இட்லி/தோசை ஊத்தும்போது தேவைப்பட்டா தண்ணி ஊத்தி கலக்குங்க..இப்ப வேணாம்,சரியா?
அடுத்து கிரிட்டிகலான டெக்னிகல் விஷயம் ..மாவை புளிக்க வைக்கணும்..பொதுவா யு.எஸ்.ல சம்மர் சீசன்ல மாவு சாதாரணமா வெளில( வீட்டுக்கு வெளியே இல்ல..வீட்டுக்குள்ள..ஆனா அவன்,பிரிட்ஜ் இதெல்லாத்துக்கும் வெளியே) வைச்சாலே பொங்கிடும்..நைட் மாவு அரைச்சு காலைல 'பூ போல இட்லி -புதினா சட்னி 'சாப்பிடலாம்.
ஆனா என்ன பிரச்சனைன்னா இங்கே அந்த சம்மர் சீசனே மேக்சிமம் நாலு மாசம் தான்..மீதி எட்டு மாசம் மாவு சாதாரணமா பொங்காது. அதுக்காக நம்ம பேவரிட் ப்ரேக் பாஸ்ட்-ஐ மிஸ் பண்ண முடியுமா என்ன?
கன்வென்ஷனல் அவன்-னு ஒண்ணு நம்ம அடுப்புக்கு கீழே இருக்கே..அதை ஒரு நாலஞ்சு நிமிஷம் ஆன் பண்ணி வைங்க..அப்புறம் மாவை அதுக்குள்ள வைச்சு மூடி வைச்சுடுங்க. மாவு பொங்கிடுச்சான்னு,
அப்பப்ப அவன் டோர்-ஐத் திறந்து பாக்கக் கூடாது. ஆண்டவனை வேண்டிகிட்டு உள்ளே வைச்சு மூடி வைங்க..எல்லாம்
அவன் (இது, கன்வென்ஷனல் அவன் இல்ல,ஆண்டவன்..ஹி,ஹி! ) பாத்துக்குவான்.
இன்னொரு மேட்டர் என்னன்னா, கன்வென்ஷனல் அவன்-ல பிளாஸ்டிக் பாத்திரத்த வைக்கக் கூடாது..
பொதுவாவே,
எல்லா சீசன்லையும் மாவு எவர் சில்வர் பாத்திரத்தில வைச்சா நல்லா பொங்கும்.
அவன்-
ல வைக்கும்போதும் பயமில்லாம வைக்கலாம்.
சில புத்திசாலிகள்(யாருன்னு கிரிடிகல் கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது) மாவு பாத்திரத்த அவன்ல வைச்சே ஆன் பண்ணுவாங்க, அஞ்சு நிமிஷத்தில ஆப் பண்ணிடுவோம்ங்கர நம்பிக்கைல..ஆனா மறந்து போயி பக்கத்து வீட்டுக்கு போயி அரட்டை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க..அரை மணி நேரம் கழிச்சு ஓடோடி வந்து ஆப் பண்ணுவாங்க..அவன் டெம்பரேச்சர் குறைவா இருந்திருந்தா நீங்க பிழைச்சீங்க..இல்ல, பேக்ட் இட்லிதான்!!
கவனமா இருங்க.
ஓகே..இப்போ மாவரைச்சாச்சு..பொங்கவும் வைச்சாச்சு..அடுத்து இட்லி ஊத்துவோமா?
பதிவு அனகோண்டா மாதிரி நீளமா போவதால்..அடுத்த பதிவுல இட்லி சுட்டு, தோசையும் ஊத்திடலாம்..என்ன சொல்றீங்க?
--தொடரும்