Tuesday, May 29, 2012

முன்னோட்டம்..

எதற்கு முன்னோட்டம்? என்று கேட்டுக்கொண்டே என் வலைப்பூவுக்கு *வருகை தரும்* அனைவருக்கும் வணக்கம்! அது வேற ஒண்ணுமில்லீங்க, சில பல வருஷங்கள் கழித்து நமக்குப் பிடித்த சில பொருட்களை பார்த்தா கொஞ்சம் ஓவர் எக்ஸைட் ஆவோம் இல்லையா? என்னது...இல்லையா?? அவ்வ்வ்வ்வ்...அப்ப நாந்தான் ஓவர் ரியாக்ட் பண்ணறேனா? எனிவேஸ்..வந்தது வந்துட்டீங்க, மேற்கொண்டு படிங்க, உங்களுக்கே புரியும்!

எங்க வீட்டில் இருந்து ஜஸ்ட் 10 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சனீஸ்..ச்சீ,வாய் குழறுதே, சைனீஸ் மார்க்கெட் போனதும், அங்கே வாங்கிய பொருட்களும், அதை வைச்சு நான் சமைச்ச ரெசிப்பிகளும் பற்றிய ஒரு முன்னோட்டம் தாங்க இந்தப் பதிவு.

இந்த 99 Ranch Market என்னவரின் அலுவலகம் போகும் வழியிலேதான் இருக்கிறது. வாரம் 5 நாட்கள் அதே டைரக்ஷனில் போவதாலோ என்னவோ, வீகென்ட் ஆனால் அங்கே ஷாப்பிங் என்றால் எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிருவார். கூடவே அங்கே இருக்கும் பிரத்யேகமான வாசனை(!)யும் அந்தக் கடையை அவாய்ட் பண்ண வலு சேர்க்கும் காரணமாகிவிடும். இந்தக் கோடையில் ஒரு முறையாவது போய் பலாப் பழம் வாங்கிவரவேண்டும் என்று பலநாள் திட்டமிட்டு(!) ஒரு நாள் வெற்றிகரமா போயிட்டு வந்துட்டோம். அந்தக் கொலாஜ் தான் முதல் படத்தில் நீங்க பார்ப்பது.
இவையெல்லாம் ரான்ச் மார்க்கட் சென்று வந்ததின் பை-ப்ராடக்ட்ஸ்! :)))) மொதப் படத்தில் பலாப் பழமும், கொட்டையும் & பலாக்கொட்டை பொரியல் (லஞ்ச் பாக்ஸில்), மாம்பழம் (நறுக்குவது எப்படின்னு போனவருஷம் போட்ட பதிவு மறந்து போயிருந்தா இதோ, இங்கதான் இருக்கு. மறுபடியும் பாருங்க), அடுத்த படத்தில், முருங்கை கீரை & முருங்கை கீரை பொரியல், அது ஒண்ணும் பிரமாதமான ரெசிப்பி இல்லே, இங்க இருக்கு, நேரமிருந்தா அதையும் எட்டிப் பாருங்க. கடைசிப்படம் ஆர்கானிக் மஷ்ரூம். அதில செய்த ரெசிப்பியும் விரைவில் வரும்.
~~~~~~
இன்றைய பதிவில், "ஸ்டார் ஆஃப் தி போஸ்ட்"! :)
பழங்களின் அரசன் பலா!

ராஞ்ச் மார்க்கட்டில் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது ஸேல்-ல இருந்த ஸ்ட்ராபெரியும், மாம்பழமும்! இரண்டையும் எடுத்து ட்ராலில போட்டுகிட்டு உள்ளே என்டர் ஆனோம். உள்ளே போய் முருங்கை கீரையையும் எடுத்தாச்சு. என்னவர் அவர் பங்கிற்கு 2 பாக்கட் மஷ்ரூமை எடுத்துப் போட்டார். அங்கயும் இங்கயும் சுத்தி சுத்தி பாத்தோம், நம்ம தேடி வந்ததை காணோம்! சரி இந்த வருஷம் வரவே இல்லை போலன்னு மனசைத் தேத்திட்டு திரும்பினோம், ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார் பழங்களின் அரசர்! :))

உடனடியாக என்னவரிடம் இருந்து ஐ-ஃபோனைப் புடுங்கி ஆசைதீர படம் பிடித்தபிறகு மெதுவா பக்கத்தால போய்ப் பார்த்தேன். ரெண்டு துண்டு நறுக்கி வைச்சிருந்தாங்க, மத்த பழம்லாம் முழுசு! நறுக்கிய 2 துண்டுமே அழுகிப் போயிருந்தது! பொக்குன்னு போச்சு எனக்கு. அப்புறம் அங்க இங்க தேடி, மார்க்கட்டில் வேலை செய்யும் ஆளை தேடிப் பிடித்து, புதுசா பலாபழம் வெட்டிக் குடுங்க என்று கூட்டிவந்தேன், அதற்குள் அங்கே புதிதாய் வெட்டிய பழத்துண்டுகள் ரெண்டு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டியது! நான் அங்கிட்டுப் போய் இந்த ஆளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள புதுசா கட் பண்ணி வைச்சிருக்காங்க... கர்ர்ர்ர்ர்ர்! என் பேச்சைக் கேட்டு, கைவேலையை விட்டுட்டு, பலாப்பழம் நறுக்கித்தர வந்த ஆளிடம் கொஞ்சம் அசடு வழிஞ்சுட்டு, பழத்தை எடுத்து கார்ட்-ல வைச்சுகிட்டு நடையக் கட்டினேன்! :)))

உஸ்....ஸப்பா! ஒரு வழியா அரசரை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். வந்த உடனே எங்க வீட்டு அரசர் மும்முரமாக பழத்தை நானே கட் பண்ணி எடுக்கிறேன் என்று கையில் எண்ணெயெல்லாம் தடவிக்கிட்டு போஸ் குடுத்தார். ஆனா அவர் நினைச்சது போல ஈஸியா வேலை நடக்கலை. இந்தா நீயே பாத்துக்கோ என்று என்னிடம் தள்ளிட்டார்!

மேலே இருந்த தண்டுப் பகுதியை நறுக்கிட்டு...பழத்தைப் பிளந்து..

சுளைகளை எடுத்தாச்சு...மொத்தம் 15 சுளைகள் முழுதா இருந்தது. வேலை நடக்க நடக்க சைடுல வாய்க்குள்ள போனதெல்லாம் கணக்கில்லைங்கோ! ;)
முழுசா தேறிய சுளைகளில் இருந்து கொட்டை, மாசு ( பழத்துக்கும் கொட்டைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய படலம்) எல்லாம் எடுத்து க்ளீன் பண்ணி, சாப்பிடத்தயாராய் பலாச்சுளைகள்!

கோவையில் உக்கடம் பகுதியில் கோடையில் மாம்பழமும் பலாப் பழமும் சக்கைப்போடு போடும்! கேரளாவில் இருந்து வரும் இரண்டு பழங்களும் மலை போலக் குவித்து வைச்சிருப்பாங்க. இது மட்டும் வாங்க என்றே தனியாக ட்ரிப் போய் வருவோம். முழுப்பழம், அரைப் பழம் என்று கிடைக்கும் பலாவை அரிவாள் மனையில் தேங்காயெண்ணெய் தடவி அரிந்து பிரிப்பதுக்கு வீட்டில் எல்லாரும் அலுத்துக்கொண்டாலும் நான் மட்டும் விதிவிலக்கு. ரொம்ப ஆர்வமா இந்த வேலையைச் செய்வேன்.

பலாச்சுளைகள் நிறையஇருந்தால் வெல்லம் சேர்த்து வதக்கி வைப்பது/ பாயசம் செய்வதும் எப்பவாவது நடக்கும். பலாக்கொட்டையை விறகடுப்பில் வேகப்போட்டு சாப்பிட்டா ஜூப்பரா இருக்கும்! பலா சீசனில் கடைகளில்/சந்தையில் கொட்டைகள் மட்டுமே கூட தனியா விற்பாங்க..50, 100 என்று எண்ணிக் குடுப்பாங்க. இங்கே பலாப் பழம் எப்படி இருக்குமோ என்று டவுட்டிலயே வாங்கினோம், ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க..தேன் போல சுவைம்பாங்களே,அப்படி ஒரு இனிப்பு! :P

பலாவுடன் தேன் சேர்த்தும் சாப்பிடுவது நிறையப் பேரின் வழக்கம். என்னவர் பலாப் பழம் தயாரானதுமே தேன் எங்கேன்னுதான் கேட்டார்! வெறும் சுளைகளே தேன் போல இருக்கே, அப்புறம் தேன் எதுக்கு என்று கேட்டேன். "சாப்பிட்டுப்பார் உனக்கே தெரியும்"-னு பதில் கிடைத்தது! :P :)

பழங்களை அப்படியே சாப்பிடறதுதான் என் (ப)வழக்கம். என்னன்னாலும் இப்படி காம்பினேஷன்லாம் அவ்வளவு சீக்கிரம் ட்ரை பண்ணிர மாட்டேன்! அதனால் நான் தேன் தொட்டு சாப்பிடலை. நீங்க எந்தக் கட்சி? ;)

இந்த முறை பழத்தைப் பிரித்து எடுக்கையில் என்னவர் சொன்னார், "என்ன மாதிரி ஒரு பாதுக்காப்பான பெட்டகத்துக்குள்ளே இவ்வளவு இனிப்பான பழத்தை வைத்திருக்கு இந்த இயற்கை..முள்ளு முள்ளா இருக்கும் பழத்தைப் பிரிக்கணும், அதிலும் பிசின் போலே ஒட்டும் பாலுடன் போராடி! சுளைகளை எடுத்தாலும் உடனே சாப்பிட முடியாது..உள்ளே இருக்கும் கொட்டை, அதைச் சுற்றி இருக்கும் மாசு ..இதையெல்லாம் பொறுமையா எடுக்கணும்! அப்புறம்தான் சாப்பிடமுடியும்! மனிதர்களைத் தவிர வேறு யாருமே இந்தப் பழத்தை ருசிக்க முடியாது"என்று! இல்லையே, நம்ம முன்னோர்கள் ருசித்திருக்காங்க என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார். நீங்க நம்புறீங்களா?

எதுவுமே சுலபமாக் கிடைச்சுட்டா அதன் அருமை தெரியாது இல்லையா? அதனாலதான் கஷ்டப்பட்டு சாப்பிடணும் என்று இப்படி ஒரு பழமும் படைக்கப்பட்டிருக்கிறது போலும்! சரிவிடுங்க, ரொம்ப பேசிப்போட்டன், 2 பலாச்சுளை சாப்டுட்டுப் போங்க! :)))

*-- இந்த வார்த்தையைத் தவறவிட்டு மறுபடி இணைத்திருக்கிறேன். :)

Thursday, May 24, 2012

வெங்காய பஃப்ஸ்/ஆனியன் சமோஸா

மேல் மாவுக்குத் தேவையான பொருட்கள்
கோதுமை மாவு -1/2கப்
மைதா மாவு/ஆல் பர்ப்பஸ் மாவு -1/2கப்
உப்பு- 1/4டீஸ்பூன்
தண்ணீர் - 1/2கப்புக்கும் குறைவாக
எண்ணெய் - 2 டீஸ்பூன்

ஸ்டஃபிங்-கு தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் -1/
அவல் -1/4கப்
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகத்தூள் -1/2டீஸ்பூன்
உப்பு-சிறிது
சாட் மசாலா (அ) எலுமிச்சை சாறு -சிறிது (விரும்பினால்)

பஃப்ஸை மடித்து,ஒட்டுவதற்கு..
மைதா -1டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
1. மாவுகள், உப்பு இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு..

2.கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயும் விட்டு நன்றாக 5 நிமிடங்கள் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
3. மாவை சம அளவில் நான்காகப் பிரித்து...

4. உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.

5. தோசைக்கல்லை காயவிட்டு, தேய்த்த சப்பாத்திகளை சூடான கல்லில் சிலவிநாடிகள் போட்டு, திருப்பி விட்டு சில விநாடிகளில் எடுத்துவிடவும். (மொத்தமே 20-30 விநாடிகள் தோசைக்கல்லில் இருந்தால் போதுமானது)

6. ஸ்டஃபிங்-கிற்கு தேவையான வெங்காயம்,அவல், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை ஒன்றாக கலந்து வைத்துவிடவும். (நான் சாட் மசாலா/எலுமிச்சை ஜூஸ் எதுவும் சேர்க்கவில்லை, விரும்பினால் அதையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.

7. சப்பாத்திகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு, சீரான செவ்வகத் துண்டுகளாக வெட்டவும். (3x6 செ.மீ. வெட்டினால் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்லறாங்க, நான் அளந்தெல்லாம் பார்க்கலை! ;) )

8.இதே போல எல்லா சப்பாத்திகளையும் நறுக்கிக் கொள்ளவும்.

9. ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலந்துவைக்கவும். செவ்வகத்துண்டை ஒரு ஓரத்திலிருந்து மடித்துவிட்டு மீதியுள்ள ஓரத்தில் மைதா பசையைத் தடவவும்.

10. பசை தடவிய பக்கத்தை மடித்து ஒட்டவும். இப்போது அதனை கையில் எடுத்துப் பார்த்தால் ஒரு கோன் வடிவம் கிடைத்திருக்கும்.

11. வெங்காயக் கலவையை கோனில் நிரப்பி,

12. மீதியுள்ள பக்கத்தில் மைதா பேஸ்ட்டை தடவி,

13. இறுக்கமாக ஒட்டவும். இப்போது அழகான (!) முக்கோண வடிவில் பஃப்ஸ் தயாராகியிருக்கும்.
14. எல்லா செவ்வகத்துண்டுகளையும் பஃப்ஸாக செய்துவைக்கவும். மடித்த பஃப்ஸ்களை காய்ந்து போகாமல் மூடிவைக்க வேண்டியது அவசியம்.

15. மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, பஃப்ஸ்களை பொரிக்கவும்.

16.சில நிமிடங்களில் லேசாக நிறம் மாறியதும், பஃப்ஸ்களை எடுத்துவைக்கவும்.

17. எல்லா பஃப்ஸ்களையும் அரைவேக்காடாக எடுத்து வைத்தவுடன், மீண்டும் அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (இரண்டு முறை பொரிப்பது ஆப்ஷனல்..நல்லா முறுகலா வருவதற்காக அப்படி செய்வது, இல்லையெனில் ஒரே முறையிலும் பொரித்து எடுத்துவிடலாம்.)

சுவையான மொறு மொறு பஃப்ஸ் ரெடி!

தேங்கா பன் செய்தபொழுது பூரணம் கொஞ்சம் மீதமாகியிருந்தது, அதனால் பஃப்ஸில் அதையும் கொஞ்சம் ஃபில்லிங்-ஆக வைத்தேன், எண்ணி மூணே மூணு ஸ்வீட் பஃப்ஸ்தான் வந்தது. சப்ளை கம்மியா இருக்கவும், டிமாண்ட் அதிகமாகிடுச்சு! :) போட்டோ எடுக்கவும், சுவை பார்க்கவும் என்னவரிடம் கெஞ்சி பாதி பஃப்ஸ் வாங்கினேன்! ;) அவ்வளவு சூப்பரா இருந்தது ஸ்வீட் பஃப்ஸ்! :P :P

குறிப்பு
பஃப்ஸ்களை ஸ்டஃபிங் வைத்து மடித்த நிலையில் (ஸ்டேஜ் 14) காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஃப்ரிட்ஜ்/ஃப்ரீஸரில் வைத்து தேவையான பொழுது பொரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு முறை பொரித்து எடுத்த பின்னர் (ஸ்டேஜ் 16) கூட ப்ரிட்ஜில் வைத்து அடுத்த முறை டீ டைமில் பொரித்து சூடாகச் சாப்பிட சூப்பராக இருக்கும்.

*****************
முதல் படத்தில் X>Y>Z வடிவத்தில் இருக்கு மூணு பஃப்ஸும், அப்படின்னு நினைக்காதீங்க, மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்குன்னு நினைக்கோணும், சரியா? ;) அப்படி இப்படின்னு நானும் முக்கோணமா பஃப்ஸை மடிக்க கத்துகிட்டேன். அதை முடிந்தளவு(!) விளக்க்க்க்கமான படங்களுடன் குடுத்திருக்கேன், ஒவ்வொரு ஸ்டெப்பையும் விடாமல் போட்டோ எடுத்ததால் நிறைய படங்கள் வந்துவிட்டது, ப்ளீஸ் அட்ஜஸ்ட்! ;)
*****************


Tuesday, May 22, 2012

சந்திரரே,சூரியரே...

சாப்பாட்டுத்தட்டை வைச்சுட்டு "சந்திரரே,சூரியரே.."ன்னு டைட்டில்!! :) :) சிரிக்காதீங்க, தெம்பா சாப்ட்டுட்டு அவங்க ரெண்டு பேரையும்பார்க்கப் போலாம், சரியா? veggie bowl, chicken bowl ரெண்டுமே இருக்கு. க்ளோஸ் அப்-ல இருப்பது சைவம், சாப்பிடுங்க!

சில நாட்களுக்கு முன் வந்த சித்ரா பௌர்ணமியன்று பஸிஃபிக் கடலோரம் சூரிய அஸ்தமனத்தையும், சந்தோரதயத்தையும் பார்க்கப் போயிருந்தோம். பின்மதிய நேரம் கிளம்பி, பீச் போகும் வழியில் Chipotle மெக்ஸிகன் க்ரில்-ல மதிய உணவை முடித்தோம். இதுவும் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் செய்ன் என்றாலும் கொஞ்சம் ஹெல்த்தியான உணவாக சாப்பிடலாம். உணவை விடவும், அதை வைத்துக் கொடுத்த ட்ரே என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அந்த தட்டைப் பாருங்களேன், மெகா சைஸ்ல நம்மூர் அலுமினியத்தட்டு! :)

சரி.. சாப்பிட்டாச்சு, சாப்பாட்டோட தட்டையும் சேர்த்து போட்டோவும் எடுத்தாச்சு,கிளம்புவோமா?...

சிறிய மலைக்குன்றுகளுக்கிடையில் வளைந்து நெளிந்து செல்லும் சாலை வழியே பயணம் தொடர்ந்தது.. படத்தை ரைட் க்ளிக் செய்து பாருங்க, ரோடு தெரியும்! :) [ரைட் க்ளிக் செய்து open in a new tab-என்று போட்டால், போட்டோவை ஜூம் செஞ்சு பார்க்கலாம்! ]
இந்தமுறை கடலோரம் போகாமல் மலைகள் மேலே ஏறினோம். அங்கே ஒரு ஹைக்கிங் ட்ரெய்ல் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து நேராக கடலுக்கு இறங்கும் 8மைல் ரவுன்ட் ட்ரிப் ஹைக் அது. "இறங்கையில் எதுவும் தெரியாது, ஜாலியா இறங்கிடலாம், திரும்போதுதான் பெண்டு நிமிர்ந்துரும்" - இது நான் சொல்லலை, அனுபவப்பட்ட ஒருவரின் கமென்ட்டு..அவர் யாருன்னு நீங்களே இந்நேரம் கண்டுபுடிச்சிருப்பீங்க! ;)
அதோ...அங்க அந்த ஆரஞ்ச் கலர் பலூன் தெரியுதா? அந்த பலூனுக்குக் கொஞ்சம் அந்தப்பக்கம் ஒரு ப்ரவுன் கலர் பில்டிங் தெரியுதா? அதானுங்க எங்க வீடு! ஹாஹா! :) ஹைக்-ல சும்மா கொஞ்ச தூரம் போலாம்னு இறங்கினோம், அப்ப எடுத்த படங்கள்தான் இவை!
குளிரடிக்க ஆரம்பிச்சுட்டதால் ஹைக்-ஐ தொடராமல் திரும்பிவிட்டோம். பார்க்கிங் லாட் அருகே இருக்கும் வியூ பாயின்ட்டில் இருந்து மஞ்சள்ப் பூக்களும், தொலைதூர வீடுகளும், பஸிஃபிக் கடலும், நீலவானமும்! ரொம்ப அழகா இருந்தது.
சன்ஸெட் வரையிலும் நேரத்தைப் போக்கணுமே என்று என்னவர் புத்தகம் படிக்க ஆரம்பிச்சார். நான் சுத்திச் சுத்தி அங்கிருந்த பூ, பூச்சி-பொட்டு எல்லாமும் படமெடுத்துவிட்டு வந்து அவரிடம் தொணதொணக்க ஆரம்பிச்சேன்! தொந்தரவு தாங்க முடியாமல் படிச்சிட்டிருந்ததை என் கையில் குடுத்துட்டு அவர் காமராவுடன் கிளம்பிட்டார். ;)

சிறிது நேரத்தில் சூரியனும் அந்திவானில் இறங்க ஆரம்பிக்க, கீழ்வானில் சந்திரன் மேலே ஏற ஆரம்பித்தான். சூரிய அஸ்தமனத்தின் பிறகு சற்று தள்ளியிருந்த உயரமான ஒரு இடத்துக்கு தட்டுத் தடுமாறி ஏறி வானத்தைப் பார்த்த எல்லாரையும் தன்னை மறந்து "வாவ்" என்று சொல்லவைத்தது சித்திரை மாதப் பௌர்ணமி..
நிலா உதயமாகும் நேரத்தில் பிரம்மிப்பூட்டும் அழகும் வண்ணமும் பிரம்மாண்டமுமாய் இருந்தது..சரியாக அந்நேரம் காமெராவில் பேட்டரி தீர்ந்துவிட்டது..இருளும் சூழ ஆரம்பித்தது.
~~
(20/05/2012) மாலை ஐந்து முப்பதிலிருந்து சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு சூரியகிரகணம் இருந்தது. அதை நேரடியாகப் பார்க்கக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள். அதனால் கண்ணாடி வைத்து, ஒரு பேப்பரில் சிறிய துளை செய்து, சூரியகிரகணத்தின் பிரதிபலிப்பைப் பார்த்தோம். :)

பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எக்லிப்ஸைப் பார்க்கும் protective glasses வாங்கியிருந்தார்கள். கடைசி இரண்டு படங்கள் அந்தக் கண்ணாடி வழியே எடுத்தது. அதனால்தான் இப்படி அடர்ந்த வண்ணத்தில் இருக்கிறது. மற்றபடி வெயில் அடித்த மாதிரிதான்(!) இருந்தது.

எங்க வீட்டுக்குள் விழுந்த பிரதிபலிப்பு, மங்கலாய் அடித்த வெயில், கிரகணம் பார்க்க கூடியிருந்த மக்கள்.. என்று இரண்டு மணி நேரங்கள் இன்ட்ரஸ்டிங்காய் கழிந்தது! இதைப் படித்த சிலநிமிஷங்கள் உங்களுக்கும் இன்ட்ரஸ்டிங்காய் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, 'சந்திரரே, சூரியரே' நிறைவு பெறுகிறது! நன்றி!

Friday, May 18, 2012

எம்ப்ராய்டரி - நிழலும், நிஜமும்!

சிலபல மாதங்களுக்கு முன் இந்த பேன்ஸி (Pansy flowers) பூக்களை எம்ப்ராய்டரி செய்ய ஆரம்பித்த பொழுது, இந்த சீஸனுக்கு இதே பூக்களை வாங்கி வளர்ப்போம் என்று நினைக்கவே இல்லை. :)

பாதி தைத்து வைத்து கிட்டத்தட்ட மறந்தே போயிருந்த நிலையில் தொட்டிப் பூக்கள் பூத்து துணியில் பூத்த எங்களை அப்படியே நிறுத்திவிட்டாயே என்று நினைவூட்டின! தைத்து முடித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வந்துவிட்டன பூக்கள்.

இந்தப் பூக்கள் இணையத்தில் கிடைத்தவைதாம்..பூவை துணியில் ட்ரேஸ் செய்த நிலையில்..

மூன்று பூக்களும் சங்கிலித்தையலில் அவுட்லைன் தைத்த நிலையில்...
இந்த டிசைனை நான் எடுத்த காரணமே லாங் & ஷார்ட் ஸ்டிச்-ல் தைக்கலாம் என்றுதான். ஒரு பூவில் முக்கால்வாசி முடிந்து, அடுத்த பூவுக்கும் தையல் ஆரம்பித்த நிலையில்..

அடுத்து சில க்ளோஸ்-அப் படங்கள்..

லாங் & ஷார்ட் ஸ்டிச்சில் முக்கியமான விஷயமே பொருத்தமான வண்ண நூல்களை அழகாகக் கலந்து தைப்பதுதான். அதில் கொஞ்சம் கோட்டைவிட்டுவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது, இலைகளையும் பூக்களையும் பார்க்கும்போது.

ஒரு பூவின் மகரந்தங்களுக்கு ஃப்ரென்ச் நாட் தைத்தேன், மற்ற இரண்டு பூக்களும் ஸாடின் ஸ்டிச்-சிலேயே தைத்தாயிற்று..
ம்ம்ம்...இதுக்கும் மேல் எங்களைக் கொடுமைப்படுத்தாதே என்று இந்த மூணு பூக்களும் கெஞ்சுவது போல தோன்றவே, இத்தோடு (இப்போதைக்கு) நிறுத்தியிருக்கிறேன்.
என்னதான் சொல்லுங்க, நிஜம் நிஜம்தான்! நிழல் நிழல்தான்! :)))))
~~~
இது என்னுடைய 250வது பதிவு! ஆதரவு தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும்...

எனது இனிப்பான நன்றிகள்!

Tuesday, May 15, 2012

காரக் கடலை

தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை-1கப்
கடலைமாவு-1/4கப்
அரிசிமாவு-1/4கப்
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4டீஸ்பூன்
பூண்டு-2பற்கள்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு-அரிசிமாவு-பெருங்காயம்-மிளகாய்த்தூள்-உப்பு- நசுக்கிய பூண்டு உப்பு சேர்த்து கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மாவை கெட்டியாக கலந்துகொள்ளவும். அதனுடன் வேர்க்கடலையை சேர்த்து எல்லாக் கடலையுடனும் மாவுக்கலவை படுமாறு பிசறி வைக்கவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து கடலைகளை உதிர்த்து விடவும்.
எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் கடலையை எடுத்து,பேப்பர் டவலில் வைக்கவும்.
காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

குறிப்பு
காரத்துக்கு மிளகாத்தூள் மற்றும் பூண்டு உங்க விருப்பப்படி சேர்த்துக்கோங்க. கலர்ஃபுல்லா வேணும்னா மாவு கலக்கும்போது ஒரு துளி சிவப்பு/ஆரஞ்ச் ஃபுட்கலர் சேர்க்கலாம்.

Friday, May 11, 2012

மீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா

ஆசியா அக்காவின் வலைப்பூவில் இந்த சோயா கீமா-வைப் பார்த்ததுமே செய்து பார்க்கவேண்டும் என்று கை துறுதுறுக்க, ஒரு ஞாயிற்றுகிழமை லன்ச்சுக்கு செய்துவிட்டேன். அவசரமாய் சமைத்ததில் சில மாறுதல்கள், கூட்டல்கள் நடந்தது, ஆனாலும் சுவை குறையவில்லை! ;)

தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) -12
ஃப்ரோஸன் பட்டாணி-1/4கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
தக்காளி-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்
மல்லித்தூள் -1/2டீஸ்பூன்
சக்தி கறிமசாலா பொடி -1டீஸ்பூன்
***தேங்காய் விழுது கொஞ்சம் (விரும்பினால்)
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மல்லி-புதினா இலை சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
1.சோயா உருண்டைகளை கொதிநீரில் 3 நிமிடங்கள் போட்டு கொதிக்கவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துவைக்கவும்.

2.சிறிய ப்ரெஷ்ஷர் குக்கரில் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு பச்சைவாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு தூள்வகைகளை சேர்த்து கிளறவும்.
3. தேங்காய் விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி,
4. உதிர்த்த சோயா மற்றும் பட்டாணியையும் சேர்க்கவும்.
5. கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.

6. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
7. நறுக்கிய மல்லி-புதினா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.
[பொரியல் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க! ;)]
8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி!

பருப்பு-ரசம்-சோயா பொரியல்-வடகம்- சாப்பாடு இவற்றுடன் ஒரு ஞாயிறு மதிய உணவு!
ஆசியாக்கா, சுவையான ரெசிப்பிக்கு நன்றி!

Monday, May 7, 2012

ஸ்பைஸி ஃப்ரெஞ்ச் டோஸ்ட்

தேவையான பொருட்கள்
ரொட்டித் துண்டுகள் - 4
முட்டை-1
பால்-1/2கப்
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
நறுக்கிய குடைமிளகாய்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை மிக்ஸியில் கொறகொறப்பாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டை-பால்-உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதனுடன் அரைத்த வெங்காயம்-பச்சைமிளகாயையும் சேர்த்து கலக்கவும்.
நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து, சிறிது எண்ணெய் விட்டு ஒரு துண்டு ரொட்டியை வைக்கவும். மேலாக முட்டை கலவையை சீராக ஊற்றிவிடவும்.

ரொட்டியைத் திருப்பி வைத்து அந்தப் பக்கமும் முட்டைக் கலவையை ஊற்றவும். சிறிது எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்து எடுக்கவும்.

ரொட்டியை முட்டை கலவையில் தோய்த்தும் டோஸ்ட் செய்யலாம், ஆனால் ஒவ்வொருமுறையும் கையைக் கழுவணும். இப்படி செய்தால், ஸ்பூனாலேயே முட்டைகலவையை எடுத்து ஊற்றிவிடலாம், அங்க இங்க சிந்தாமலும் இருக்கும். எப்படி என் கண்டுபுடிப்பூ??! :) ;)

இதிலே கலர் குடைமிளகாய் சேர்த்தா பார்க்கவும் நல்லா இருக்கும், ருசியும் சூப்பராக இருக்கும். எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்தும் டோஸ்ட் செய்யலாம். கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், தோசைக்கல்லை மிதமான சூட்டில் காயவிடணும், காலையில் ப்ரேக்ஃபாஸ்டுக்கு லேட்டாச்சுன்னு கொஞ்சம் அடுப்பை வேகமா வைத்தீங்கன்னா.......

...ஃபோர்க் & நைஃப் படத்தில இருக்க மாதிரி கொஞ்சம் கலர் மாறிப்போயிரும், ஹிஹி! :)
ஷார்ட் & ஸ்வீட்..இல்லைல்ல, ஷார்ட் & சேவரி-யா ஒரு ரெசிப்பி குடுத்திருக்கேன். செய்து பாருங்க.

இந்த குறிப்புக்கு இன்ஸ்பிரேஷன் இங்கே...அவங்க சொல்லியிருந்ததை கொஞ்சம் என் வசதிப்படி மாத்தி செய்திருக்கேன்.

Friday, May 4, 2012

ரெய்ன்..ரெய்ன்..கம் எகெய்ன்!

திங்கள் முதல் வெள்ளி வரை மழைவந்தால் என்ன செய்யலாம்??!
  • மீதி இரண்டு நாட்களாவது விடுமுறை தருகிறாரே வருணபகவான் என்று சந்தோஷப் படலாம்!
  • பார்த்துப் பார்த்து தண்ணீர் பாய்ச்சினாலும் காட்டாத செழுமையை மழைநீர் ருசித்துக் காட்டும் தொட்டிச் செடிகளை ரசிக்கலாம்!
  • மழையில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிப்பதை சலிக்கச் சலிக்க கேமராவில் சிறை பிடிக்கலாம்!
  • யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்! -என்ற நல்லெண்ணத்துடன் வீட்டுப் பூக்களை வலைப்பூவிலும் பகிரலாம்!

  • முக்கோணமாய் மடிக்கத் தெரியாமல் போராடி ஒரு வழியாய் சுமாராய் வெற்றியும் பெற்று, வெங்காய ஃபப்ஸ் செய்து சுடச்சுட காபியுடன் ருசிக்கலாம்!
  • காரக்கடலை செய்து, அண்ணாச்சி கடையில் இருப்பது போல், கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் கொஞ்சம் கொறிக்கலாம்!
  • இரண்டையும் படமெடுத்து ப்ளாகில் போட்டு எல்லாரையும் கொஞ்சம் வெறுப்பும் ஏற்றலாம்! :)))))))))

மழை கவிதை கொண்டு வருது, யாரும் கதவடைக்க வேண்டாம்! - ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்! இது தேவதையின் பரிசு, யாரும் திரும்பிக் கொள்ளவேண்டாம்! - என்
வலைப்பூவை ரசிக்க, ஒருவரும் தயக்கம் கொள்ளவும் வேண்டாம்! ;)

ஆல்பத்திலிருக்கும் படங்களை ரசிங்க, காஃபி -ஸ்னாக்ஸ் எடுத்துக்குங்க, ஹேப்பி வீக் எண்ட் எவ்ரிபடி!

LinkWithin

Related Posts with Thumbnails