2011-ல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது உறவினர் வீட்டுத் திருமணம் (தஞ்சையில்) இருந்தது. எங்கள் பயணத்தேதி நெருங்கிவிட்டதால் திருமணத்திற்குச் செல்ல இயலாதென்று முதல்நாளே கோவையில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் வாழ்த்திவிட்டு வந்தோம். கல்யாண வீட்டில் இருந்த கோலங்கள், காமெராவில் புகுந்து இங்கே பிரசன்னமாகின்றன. :)
மாப்பிள்ளையின் அம்மா அழகாகக் கோலங்கள் போடுவார். மகன் கல்யாணத்துக்கு கோலம் என்றால் சொல்லவும் வேண்டுமா? :)
மாக்கோலம், வெளியே வாசலில் போட்டிருக்கும் கோலம் எல்லாமே வெகு அழகாய் இருந்தன.
~~
இந்தக்கோலம் என் அக்கா போட்டது..7புள்ளி, இடைப்புள்ளி 4 வரை. ரொம்ப சிம்பிளான கோலம்தான் என்றாலும், சுற்றிலும் வரும் பூவின் இதழ்கள் சரியாக வரவில்லை என்றால் கோலத்தின் அழகே கெட்டுப் போய்விடும், வடிவமும் வராது. கோலம் போடப் பழகிய காலங்களில் இந்தக் கோலத்தைத் தப்பாகாமல், இதேபோல அழகாய்ப் போடுவதே எனக்கொரு சவாலாய் இருந்தது. அதனால்தானோ என்னமோ, இக்கோலத்தின் மீது எனக்கேற்பட்ட ஈர்ப்பு குறையவே இல்லை! :) இப்பொழுது நானும் சுமாராய்ப் போட்டுவிடுவேன் என்றாலும், அக்காவைப் போல பர்ஃபெக்ட்டாக வராது! ;)
~~
சித்திரம் பேசுதடி..- என்று தலைப்பு வைக்க முக்கிய காரணம் இந்த வண்ணக் கிளிதான். :) அம்மா வீட்டில் முக்கியமான போன் நம்பர்களை பெரிய எழுத்தில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருப்போம். அந்தக் காகிதம் பழசாகிப் போக, திடீரென்று ஒருநாள் புதிதாக ஒரு காகித்ததில் போன்நம்பருடன், பக்கத்தில் இந்த வண்ணக்கிளியும் உட்கார்ந்திருந்தது. :))
என் (அக்கா) பையனின் கைவண்ணம்! :))) எங்க இருந்து தம்பி இந்தக் கிளியப் புடிச்சே? - என்று கேட்டதற்கு, ஒரு பழைய நோட் அட்டையில் இருந்து பார்த்து வரைந்ததாக நோட்டை எடுத்துக் காட்டினார். அசலும், நகலும் எப்படியிருக்கு?! ;)
என் கை சும்மா இருக்குமா? துறுதுறு..ன்னுச்சா..நானும் பென்சில் பேப்பர் எடுத்து கிளிய அழகாக் கீறிட்டேன். :))) [கவனிக்க, ரப்பர் உபயோகமே படுத்தலையாக்கும்! :)]
கிளிக்கு உடல் கொஞ்சம் நீளமாப் போயிருச்சோ? ;) ஆனா அதைக் கூட யாரும் கவனிக்கலை, கிளி ஏன் இப்படி "சிரிச்சிட்டு" இருக்கு என்றுதான் கிண்டல் பண்ணினாங்க!! நீங்களே சொல்லுங்க, என் கிளி சிரிக்குதா..சிரிக்குதா...சிரிக்குதா??! அவ்வ்வ்வ்வ்......
அடுத்த சில நாட்களில் கிடைச்ச கலர் பென்ஸில்களை வைச்சு கிளிக்கு கொஞ்சம் வண்ணமும் தீற்றி வைச்சிட்டு வந்தேன், பையன் கிளியை மட்டும் அழகா நறுக்கி, போன் நம்பர் பக்கத்தில் ஒட்டிவைச்சிட்டார்! :)
இவ்ளோதாங்க இந்த சித்திரம் பேசியது! :) ஹ்ம்ம்ம்...கிளிப் பேச்சு கேட்க வா- அப்படின்னு தலைப்பு வைச்சிருக்கணுமோ? இருங்க, வரேன்...ஒரே நிமிஷம்! டைட்டிலை மாத்திட்டு வந்துடறேன்! ;)))