வெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே உண்டு. காலைநேரத்தில் கோயிலுக்குப் போகையில் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் இந்த மலர்களை எடுத்துவந்து கோர்த்து சுவாமி படங்களுக்கு போடுவது வழக்கம்.
ஊரில் இருந்தபோது காலை வாக் போகும் நேரங்களில் ஒரு வீட்டு வாசலில் பூத்து உதிர்ந்திருந்த பூக்களை எடுத்துவந்தேன். (உடனே கண்ணை உருட்டாதீங்க, வீட்டம்மா கிட்ட கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சுட்டு, பர்மிஷனும் வாங்கிட்டு(தான்) எடுத்துவந்தேன்.) :)
பூவின் இதழ்கள் சற்றே க்ரீம் கலர் கலந்த வெள்ளை நிறம், காம்பு ஆரஞ்சு நிறம். அதனாலேயே இந்தப் பெயரைப் பெற்றிருக்குமோ இந்த மலர்?!..
இன்னொரு மரத்தின் மலர்கள் நல்ல பவழ நிறத்திலேயே (அடர்ந்த ஆரஞ்சு, கிட்டத்தட்ட சிவப்பு என்றே சொல்லலாம். :)) காம்புகளை கொண்டிருந்தன, ஆனால் அவற்றை எடுத்துவந்து படமெடுக்க நேரமில்லாது போயிற்று.
ஊசியில் நூல் கோர்த்தாயிற்று, இனி மலர்களை கோர்க்கவேண்டியதுதான் பாக்கி..
பாரிஜாதம் என்றும் அழைக்கப்படும் இந்த மலரைப் பற்றி புராணக்கதைகள் உண்டு. திருமாலுக்கு உகந்த மலர் என்று இதனைச் சொல்கிறார்கள். பவழமல்லியின் வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சொர்க்கத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா-ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவழமல்லி மரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால் மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களைச் சொரிந்ததாம். இதுதானே கண்ணனின் லீலை? :)
அழகுப் பூக்களை ஆசைதீர படமெடுத்துவிட்டு, கோர்த்து பாரிஜாதப் பிரியரான திருமாலுக்கும் கொடுத்தாச்சு. :) கோயில் மரத்தில் நிறைய்ய்ய்ய பூக்கள் கிடைக்கையில், நீளமாகக் கோர்த்து பிள்ளையார் சிலை அளவுக்கு வருமளவு மாலையாக்கிக் கொண்டு போய் பிள்ளையாருக்கும் கொடுத்திருக்கிறேன்.
இன்னொரு கதை என்னவென்றால் பாரிஜாதம் - என்ற பெயர் கொண்ட ஒரு இளவரசி சூரிய பகவானை விரும்பினாளாம். ஆனால் சூரியபகவானோ அவளை விடுத்து இன்னொரு பெண்ணை மணம் புரிந்துகொண்டாராம். அந்த ஏமாற்றம் தாளாமல் பாரிஜாதம் தீக்குளித்ததாகவும், அவளது சாம்பலில் இருந்து உருவானதே இந்த பாரிஜாத மரம் என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் ஏமாற்றிய காதலன் உதயமாகையில் பவழமல்லி மரம் இரவெல்லாம் பூத்த மலர்களை கண்ணீர் சிந்துவது போல தரையில் உதிர்க்கிறது என்றும் ஒரு கதை இருக்கிறது.
பவழமல்லியை "coral jasmine" என்றும் சொல்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Nyctanthes arbor-tristis - இதன் அர்த்தம் " a night flowering sad tree." - வருந்தும் மரம்! இந்தப் பெயர் இளவரசி பாரிஜாதத்தின் கதையால் வந்திருக்கலாமோ? மரத்தின் இலைகளும் பகலில் சுருங்கிக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள், இதை நான் கவனித்ததில்லை..யாராவது பார்த்திருந்தால் சொல்லுங்கள். :)
பவழமல்லிக்கு மருத்துவகுணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சர்க்கரை வியாதிக்கு இந்த மலர் நல்லதொரு மருந்தாக இருக்கிறது, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதனை சமைத்து சாப்பிடலாமாம், லேசான கசப்புச் சுவையுடன் இருக்குமாம் பவழமல்லி. இதன் இலைகள் மரத்தை பாலீஷ் போடவும் பயன்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். பவழமல்லியை மீனுடன் சேர்த்து சமைத்து, அதன் மருத்துவகுணங்களையும் பயன்களையும் அழகுற ஆங்கிலத்தில் தொகுத்து தரப்பட்டிருக்கிறது அந்த வலைப்பூவில்.
இவ்வளவு அழகான மென்மையான ஒரு பூவை அடுப்பில் போட்டு கொதிக்கவைப்பது என்று நினைக்கையிலேயே என் மனம் கொதிக்கிறது! இருப்பினும், மருத்துவ குணங்கள் உள்ள போது உபயோக்கிப்பதில் என்ன தவறிருக்கிறது என்றும் ஒரு பக்கம் கேள்வி எழுகிறது.
இணையத்தில் தேடும்வரை இந்தமலரின் மருத்துவ உபயோகங்கள் பற்றிய விஷயங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. படிப்பவர்களுக்குப் பயன் தருமே என்ற எண்ணத்தில் தகவல்களை இங்கு பகிர்கிறேன். யாராவது பவழமல்லியை சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம் எனில், எப்படி என்று கருத்துப் பெட்டியில் சொன்னீர்களானால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி!
பி.கு. இது பவள மல்லியா அல்லது பவழ மல்லியா? கொஞ்சம் கு(ள/ழ)ப்பமா இருக்கு! :)))))))




