Friday, June 24, 2011

மாம்பழம் நறுக்குவது எப்படி? / How to cut a Mango?

தேவையான பொருட்கள்
நல்ல சுவையான,இனிப்பான மாம்பழம்
கத்தி
கட்டிங் போர்டு
நிதானமாக நறுக்குவதற்கு தேவையான நேரம் & பொறுமை & அழகுணர்ச்சி & நளினம் எக்ஸட்ரா,எக்ஸட்ரா!! :)))))))

செய்முறை
முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
பழத்தின் மேலே இருக்கும் காம்புப்பகுதியைக் கத்தியால் நறுக்கி நீக்கவும்.
மாம்பழத்தை 90டிகிரி கோணத்தில் செங்குத்தாக நிற்க வைத்து இடது கையால் பிடித்துக்கொள்ளவும்.
வலது கையால் பதமான (ஷார்ப்-ஆன) கத்தியை எடுத்து மாம்பழத்தினை படத்திலுள்ளவாறு நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளில் ஒன்றை இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, வலது கையில் உள்ள கத்தியால் கவனமாக குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டது போல் நறுக்கவும். (கோடு நேரா இருக்கோணும், கோணையா நறுக்கிராதீங்க)
நறுக்கிய பழத்தின் விளிம்புகளைப் பிடித்து மெதுவாக (பழத்தின் தோல் பகுதியை உட்புறமாக கொஞ்சம் அழுத்தம் கொடுத்துவிட்டு) விரிக்கவும். டடா! அழகான மாம்பழத்துண்டுகள் ரெடி!

அவ்ளோதாங்க, மாம்பழம் நறுக்க ஸ்டெப்-பை-ஸ்டெப் ப்ராஸஸ்!! சாப்பிடுறவங்க விரல்களால் துண்டுகளை எடுத்து சாப்பிடுவார்கள் என்றால் அப்படியே பரிமாறலாம், அல்லது ரொம்ப நாசூக்கு பார்ப்பாங்க என்றால், கத்தியால் துண்டுகளை நறுக்கி எடுத்து பரிமாறலாம். ;)

சரி, பழத்தின் 2 துண்டுகளை நறுக்கறதுக்கு மட்டும்தானே ஸ்டெப் இருக்கு? மீதி பழத்தை என்ன செய்வது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம், எனக்கும் வந்தது. இந்த ஸ்டெப் சொல்லியிருந்த லைப்ரரி புக்கில் அதுக்கு மேலே ஒண்ணும் சொல்லல. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? இன்டர்நெட்டில் தேடியதில் இப்படி ஒரு வீடியோ கிடைத்தது. நீங்களும் அதை ஃபாலோ பண்ணுங்கோ!!



நான் என்ன செய்தேன்னு கேப்பீங்கன்னு தெரியும்...பழத்தை அப்படியே சாப்பிடாம இப்படி பொறுமையா நறுக்குவதே ஒரு பெரிய வேலை,அதனால் மீதி இருக்கும் பழத்தை அப்படியே(!!) சாப்பிட்டுட்டேன். ஹிஹிஹிஹி!

ரொம்ப மொக்கையா இருக்கோ?? போன வாரம் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிட்டு மஷ்ரூம் வாங்கப்போன மார்க்கெட்லே தான் இந்த மாம்பழங்கள்(Bunny Mangoes, Product of Mexico) கிடைத்தது. நம்ம ஊர் மாம்பழம் போலவே சூப்பர் இனிப்பு!

கரெக்ட்டா அதே நேரம் லைப்ரரியில் ஒரு வார இதழைப் புரட்டுகையில் ஹவ் டு கட் எ மேங்கோ என்று படமெல்லாம் போட்டு விளக்கியிருந்தாங்களா.. தமிழ் வலையுலகிலும் இம்பூட்டு விளக்கமா யாரும் சொல்லிருந்த மாதிரி தெரில, அதான் வீட்டிலிருந்த பழத்தை வைச்சு நானும் உங்களுக்கு விளக்கி கழுவிட்டேன்! :))))))))

அடுத்தமுறை மாம்பழம் வாங்கைல இதே போல நறுக்கி அழகா சாப்புடுங்க,ஓக்கே? முதல் படத்தில் இருப்பது (நான் செய்த வண்டு இல்லை,கூகுள் இமேஜிலே கிடைத்த வண்டு ) போல அழகான பூச்சி-புழு ச்சீ,ச்சீ, கார்விங் செய்து வீட்டில் உள்ள குட்டீஸ்-ஐ/பார்ட்டிகளில் வைத்து விருந்தினர்களை அசத்துங்கோஓஓஓ!


ஓஹ்..அதாரது கையில் உருட்டுக்கட்டையுடன் ஓடி வருவது?? கமென்ட் போட்டு ஊக்கம்தரும் அன்புள்ளங்கள் எல்லாரும் கத்தி-கபடா-ஆயுதங்களுடன் பெரிய படையா வர மாதிரி தெரியுது, பக்கத்தில் வாரதுக்குள்ள மீ த எஸ்கேஏஏப்பு! ஹேப்பி வீகெண்ட் எவ்ரிபடி!

Tuesday, June 21, 2011

மஷ்ரூம் பஃப்ஸ்

தேவையான பொருட்கள்
பேஸ்ட்ரி ஷீட்
மஷ்ரூம்-100கிராம்
வெங்காயம்(சிறியது)-1
கரம் மசாலாத்தூள்-1/2டீஸ்பூன்
கொத்துமல்லி இலை-சிறிது
உப்பு
எண்ணெய்
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பால்-2ஸ்பூன்

செய்முறை
காளானை சுத்தம் செய்து நறுக்கவும்.வெங்காயம்-கொத்துமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காளானை சேர்த்து கிளறி, கடாயை மூடி 3 நிமிடங்கள் வேகவிடவும்.
உப்பு,கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து, கடைசியில் கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.பஃப்ஸ்-க்கான ஸ்டஃபிங் ரெடி.

பேஸ்ட்ரி ஷீட்டை அரைமணி நேரம் முன்பாக ப்ரீஸரில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.
உலர் மாவு தூவி, சப்பாத்திக் கட்டையால் லேசாகத்தேய்த்து, விரும்பிய அளவில் நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு பேஸ்ட்ரி துண்டிலும் கொஞ்சமாக ஸ்டஃபிங் வைத்து, ஓரங்களில் நீர் தடவி ஸ்டஃபிங் வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.

மடித்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவிவிட்டு, 425F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மாலை நேரத்தில் சட்டென்று செய்து சுவைக்க மஷ்ரூப் பஃப்ஸ் ரெடி!

இந்த காளானின் பெயர் Mushmaru Mushrooms. போனவாரம் சைனீஸ் மார்க்கெட் போயிருந்தபோது வாங்கிவந்தது. படத்திலிருப்பது ஒரு bunch. அழகா ப்ளாஸ்டிக் பேப்பர்ல ராப் பண்ணி, இன்னொரு ப்ளாஸ்டிக் கவர்ல பேக் செய்து இருந்தது. [அதுக்காகவெல்லாம் நான் வாங்கிட்டு வரலை, நிஜமாவே நல்ல ருசியாக இருந்தது. :) ]

இந்தக்காளான் பிரியாணிக்கெல்லாம் நன்றாக இருக்குமா என்று தெரியல, ஒரு பன்ச்சை பஃப்ஸ் பண்ணிட்டேன்,இன்னொரு பன்ச்சை குழம்பு செய்தேன்,சூப்பரா இருந்தது. காளான் குழம்புக்கு ரெசிப்பி இங்கே .

Friday, June 17, 2011

ஊருன்னா ஊருதான்,கோயமுத்தூருதான்!

ஸாதிகா அக்கா ஆரம்பித்து வைத்திருக்கும் தொடர்பதிவு.. எங்க ஊரைப்பத்தி எழுதச்சொல்லியிருக்காங்க. எங்கூரு கோயமுத்தூருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். காந்திபுரம் பஸ்ஸ்டாண்டுல இருந்து ஒரு ஏழெட்டுக் கிலோமீட்டர் தூரத்துல எங்க வீடு இருக்குதுங்க. அதுனால பர்ட்டிகுலரா எங்க கிராமத்தைப் பத்திச் சொல்லாம பொதுவா கோயமுத்தூரைப் பத்தி ஏதோ எனக்குத் தெரிஞ்சளவுக்கு சொல்லிடறேனுங்க.

பொறந்து,வளந்து,படிச்சு,வேலைக்குப் போறவரைக்கும் அங்கயே இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச,நான் போய்வந்த இடங்கள்னு பாத்தம்னா ஒரு முப்பது நாப்பது கிலோமீட்டர்தானுங்க. அதுக்கு மேலே எங்கியும் போனதில்ல. எனக்குத்தெரிஞ்ச கோயமுத்தூரை (என் பார்வைல) சொல்லறேன்.
~~~~~~~~~~~~~~~

தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் மாவட்டங்களில் முக்கியமானது கோவை. மரியாதையான கொங்குத்தமிழ், சிறுவாணித்தண்ணி, குளு குளு தட்பவெப்பத்துடன் அதிநவீன மருத்துவம், தரமான பள்ளி-கல்லூரிகள், பஞ்சாலைகள், பல்வேறு சாஃப்ட்வேர் கம்பெனிகள், டைடல்பார்க் இப்படி எல்லாத்துறைகளிலும் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற ஒரு நகரம்னே கோவையைச் சொல்லலாம்.

எங்க வீடுகளில் வீட்டுக்கு வந்தவங்களுக்கு "தண்ணி குடிக்கிறீங்களா?"ன்னு கேட்பதெல்லாம் கிடையாது, வந்தவர்களை வாங்கன்னு சொல்லும்போதே ஒரு சொம்பு தண்ணியுடன்தான் இருக்கும் எங்கள் வரவேற்பு & விருந்தோம்பல்! எதுவும் சாப்பிடுவீங்களான்னு விசாரணையெல்லாம் கிடையாது. பலமான கவனிப்புதான். :)

பஞ்சாலைகள்
ஊருன்னா ஊருதான் கோயமுத்தூருதான்,உழைப்பாளி வாழும் ஊருதான்னு எதோ ஒரு சினிமாவுல பாட்டே படிப்பாங்க. கோயமுத்தூருன்னா மொதல்ல நினைப்பு வரது பஞ்சாலைகள்தான். இந்தியாவின் மான்செஸ்டர் பம்பாய்(மும்பை),தமிழகத்தின் மான்செஸ்டர்னு கோயமுத்தூர்னு பள்ளிக்கூடத்துல புவியியல் பாடம் படிக்கையிலே நீங்கல்லாருமே படிச்சிருப்பீங்க. ஆமாங்க,பஞ்சாலைகள் எங்கூர்ல அதிகம் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் வேஸ்ட்காட்டன் மில்கள்,பஞ்சாலைகள் இருக்கும். இப்ப ஒரு சில வருஷங்களுக்கு முன்பு நிறைய ஆலைகளை இழுத்து மூடி, எல்லாத்தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இருந்தாலும் டெக்ஸ்டைல் துறையில் சக்கைப்போடு போடும் திருப்பூரை அடிச்சுக்க ஆள் கிடையாது.

கல்வி
மிகவும் புகழ்பெற்ற பள்ளி-கல்லூரிகள் எங்கூர்ல உண்டு. ஸ்டேன்ஸ்-அவிலா கான்வென்ட்-பாரத் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்,சர்வஜனா பள்ளி, மணி மேல்நிலைப்பள்ளி என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். கல்லூரிகளிலும் அரசு பொறியியல் கல்லூரி,வேளாண்பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. -சி.ஐ.டி. -அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்,கிருஷ்ணம்மாள் கல்லூரி-நிர்மலா கல்லூரி -மருத்துவக்கல்லூரிகள் என்று முடியாத பட்டியல் இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகம்,சட்டக்கல்லூரி,கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்று புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் இருக்கு. கோவையிலிருந்து பல்வேறு அரசுப்பணிகள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுவோர் பலர்.

மருத்துவம்

பல்வேறு அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனைகள் நிறைய இருக்கிறது. ராமகிருஷ்ணா மருத்துவமனை,குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.ஜி.ஹாஸ்பிடல்-கே.எம்.சி.ஹெச்.-அரவிந்த் கண் மருத்துவமனை-தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை இப்படி புகழ்பெற்ற மருத்துவமனைகளும், கைராசிக்கார மருத்துவர்களும் நிறைந்த ஊர் எங்கள் ஊர்.

பேரூர் கனகசபை
கோயில்கள்
சிற்பக்கலையில் பிரசித்தி பெற்ற 'மேலைச் சிதம்பரம்' என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பூண்டி (எ) வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், மருதமலை இவை கோவையிலிருந்து சற்றே தள்ளி இருக்கும் கோயில்கள். பேரூர்க்கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. கோயில் முழுவதும் சிற்பங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் நடராஜர் நர்த்தனம் புரியும் கனகசபை. அங்கே பிரம்மாண்டமான சிற்பங்கள் தத்ரூபமாக இருக்கும். கோயில் முழுவதுமுள்ள சிற்பங்களை ரசித்துப் பார்க்க ஒரு நாள் போதாது.

ஈஷா தியானலிங்கம்

பூண்டியில் சித்திரா பவுர்ணமி மிகவும் விஷேஷம். ஏழு மலை ஏறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க மக்கள் வெள்ளம் அலைமோதும். ஈஷா யோகமையம் வெள்ளிங்கிரி அருகிலேயே இருக்கிறது. அங்கிருக்கும் தியானலிங்கம் மிகவும் நன்றாக இருக்கும். பெரிய ரவுண்டு பவுலை கவிழ்த்து வைத்த மாதிரி ஒரு கட்டிடம்,நடுவில் பிரம்மாண்டமான தியானலிங்கம், சுற்றிலும் அமர்ந்து தியானம் செய்ய குட்டிக் குட்டியா அறைகள் என்று அழகாக இருக்கும். (பவுல் வர்ணனையைப் படித்து திட்டிராதீங்க, ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய உவமானம் அது!!ஹிஹி).

கோனியம்மன், தண்டுமாரியம்மன் ,காமாட்சியம்மன்,ஈச்சனாரி வினாயகர்,சாரதாம்பாள் இவர்களெல்லாம் டவுனுக்குள்ளேயே இருப்பவர்கள். கொஞ்சம் தள்ளிப்போனீங்கன்னா, அவினாசியில் இருக்கும் அவினாசிலிங்கீஸ்வரர்-கருணாம்பிகை அம்மன் கோவில். பரந்து விரிந்து கிடக்கும் இந்தக்கோயிலிலும் மிகவும் அழகான சிற்பங்கள் இருக்கு. தென்திருப்பதி, காரமடை, மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில் என்று பல்வேறு திருத்தலங்கள் இங்கே உண்டு. (மற்ற மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்களும் உண்டு, எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் தெரியவில்லை)

பொழுதுபோக்கு- சுற்றுலா

பொழுதுபோக்கு என்று பார்த்தால் திரையரங்குகள், சிதம்பரம் பூங்கா, வேளாண் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பொட்டானிகல் கார்டன் இதெல்லாம் ஊருக்குள்ளேயே இருப்பவை.கோவையில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் ப்ளாக்தண்டர் என்ற வாட்டர் தீம்பார்க்,சிறுவாணி மெய்ன் ரோடில் ஒரு வாட்டர் தீம்பார்க்கும் இருக்கிறது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் வந்ததால் வைதேகி சுனை என்றே பெயர்பெற்ற சுனை, கோவை குற்றாலம் அருவி, பொன்னூத்து (இது எங்கவீட்டுப்பக்கதில் இருக்கும் பிக்னிக் ஸ்பாட்..அதிகம் பேருக்கு தெரியுமா என்று சந்தேகம்தான்) என்ற சுனை இதெல்லாம் இயற்கை அமைத்துத்திருக்கும் தீம்பார்க்குக்கள்! :) வருடமொருமுறை கோடை விடுமுறை சமயத்தில் சிறைச்சாலை மைதானத்தில் பொருட்காட்சி போடுவார்கள். சூப்பராக இருக்கும்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தொடக்கத்தில் இருக்கும் ஆனைகட்டி என்ற இடம்..அங்கே இருக்கும் வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாழும் கலைப்பயிற்சி மையம், பறவைகள் சரணாலயம் என்று இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும். கோவையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டரில் ஊட்டி..ஊட்டியின் புகழ் உங்களனைவருக்குமே தெரியும்,நான் சொல்லவேண்டியதில்லை.

கோவையிலிருந்து சிலமணி நேரப்பயணத்தில் வரும் திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயிலும், அற்புதமான நீர்வீழ்ச்சியும் அசத்தலான பிக்னிக் ஸ்பாட்ஸ்! அப்படியே கொஞ்சம் மேலே(!) போனம்னா வால்பாறை-பாலாஜி கோயில் என்று கூலான இடங்கள் நிறைய! பொள்ளாச்சி பக்கம் நான் அதிகம் போனதில்லை. கோபி-சத்தியமங்கலமெல்லாம் நிறைய சினிமா படம் எடுத்திருக்காங்க. கண்ணுக்கு விருந்தளிக்கும் வயல்வெளிகள்-தோப்புகள் நிறைய இருக்கும்.

ஷாப்பிங்
எல்லாத்தையும் சொல்லியாச்சு, நம்ம ஷாப்பிங் பற்றி சொல்லைன்னா எப்படி?ராஜேஸ்வரி ஹால், நல்லி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஸ்ரீதேவி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், பி.எஸ்.ஆர்.சில்க்ஸ், எஸ்.கே.ஸி., போத்தீஸ் என்று பிரபலமான துணிக்கடைகள்..ஆண்டுக்கொருமுறை ஆடித்தள்ளுபடி என்ற பேரில் சிறப்பு விற்பனை!! டவுன்ஹால்-உக்கடம்-பெரியகடை வீதி -உப்புக் கிணறு சந்து -க்ராஸ்கட் ரோடு-ஆர்.எஸ்.புரம் D.B.ரோடு என்று ஷாப்பிங் செய்ய ப்ளாட்ஃபார்ம் கடை முதல் ப்ராண்டட் ஷோரூம் வரை கோவையில் கொட்டிக்கிடக்கும். டவுன்ஹாலில் நகைக்கடைகள் -பாத்திரக்கடைகள்-தினசரி மார்க்கெட் -உணவகங்கள் என்று எல்லாமே உண்டு.

பேருந்துகள்

எங்கூர்ல ப்ரைவேட் பஸ்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு பஸ்சுக்கும் பேர் இருக்கும்..தங்கராஜா, சங்கீதா, S.T., அமுதசுரபி, தங்கமயில் இப்படிப் பலபெயர்கள்!! ப்ரைவேட் பஸ்னு இல்ல, கவர்மென்ட் பஸ் உட்பட எல்லா பஸ்ஸுமே பளபளன்னு புத்தம்புதுசா இருக்கும்.(சென்னைவாசிகள் மன்னிக்க, ஒரே ஒருமுறை சென்னைப் பேருந்தில் பயணம் செய்த அனுபவம் இந்த வரிகளை எழுதவைத்தது.:)) கிட்டத்தட்ட எல்லா பஸ்ஸிலும் ரேடியோ-டேப் ரெக்கார்டர் இருக்கும். எஃப்.எம். ரேடியோக்கள் வந்ததிலிருந்து என்னேரமும் பஸ்ஸில் ரேடியோப் பாடல்கள்தான். இவைதவிர அங்கங்கே கிராமங்களுக்குள் செல்ல மினிபஸ் உண்டு. மினி பஸ் கண்டக்டர்-ட்ரைவர்கள் எல்லாம் பயணிகளுடன் சொந்தபந்த ரேஞ்சுக்கு நட்பாக இருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட பஸ்ஸிலேயே செல்லும் கல்லூரி இளசுகள் பஸ் டே
என்ற பெயரில் கேக்வெட்டி, எல்லாருக்கும் ஸ்வீட்-காரம்-கேக் எல்லாம் கொடுத்து கலக்குவாங்க.

உணவு

கோவை என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா!! அப்புறம் அன்னபூர்ணா-கௌரிஷங்கர் ஹோட்டல். சுவையான உணவகங்களுக்கு இங்கே குறைவில்லை. அன்னலக்ஷ்மி என்ற உணவகம் உண்டு, இங்கே விரும்பிய உணவைச் சாப்பிட்டுவிட்டு நம் விரும்பிய தொகையை வைத்துவிட்டு வரலாம்.அந்தப்பணம் ஒரு சேவை நிறுவனத்துக்கு செல்வதாக சொல்வார்கள். அங்கே சேவைநோக்கில் பணிபுரிபவர்கள் எல்லாரும் வசதியான பெண்மணிகள் என்று சொல்வார்கள். எங்க வீட்டருகிலேயே அன்னலக்ஷ்மியின் ஒரு ப்ரான்ச் உண்டு, ஆனால் நான் அதிகம் சென்றதில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் லாலா கடையில் இனிப்பு காரம் சூப்பரா இருக்கும். பஸ் ஸ்டாப் தவறாமல் மஹாலக்ஷ்மி பேக்கரி (அ) அரோமா பேக்கரி இருக்கும். எந்நேரம் போனாலும் சுடச்சுட டீயும் தேங்காபன்னும் சாப்பிடலாம். :) அதுமட்டும் இல்லை, பல பேருந்து நிறுத்தங்களில் தள்ளுவண்டிகளில் சில்லி காலிஃப்ளவர்-சில்லி மஷ்ரூம்-பானிபூரி-பேல்பூரி விற்பாங்க பாருங்க, ஆஹாஆஆஆ!! அந்தசுவையை வார்த்தைகளில் சொல்ல முடியாது,சாப்பிட்டுத்தான் உணரணும்.

எழுத எழுத தீர மாட்டீங்குது எங்க ஊர்க்கதை!! நினைவுக்கு வந்தவற்றை எழுதியிருக்கிறேன். இந்தத் தொடர் பதிவைத் தொடரும்படி சிலரைக் கூப்பிட்டுடறேன்.

1.பாலாஜி சரவணா (கொஞ்சநாளா ஆளையே காணோம்..ஊருக்குப் போயிட்டீங்களா?? )
2.சித்ரா (நீங்க விடுமுறை சொல்லியிருப்பது தெரியும்,சீக்கிரம் லீவை முடித்துவிட்டு வந்து எழுதுங்க ஆச்சி!;) )
3. காம்ப்ளான் பாய் சிவா (ஏற்கனவே சொல்லிருக்கீங்க, ஸ்டில் தொடரலாம்..சிங்கப்பூரைப் பத்தி சொன்னாலும் சரி.)
4.அப்பாவி தங்கமணி( அம்மணி, என்ர பதிவுல விடுபட்டுப்போன பாயின்ட்டுகளை நீங்க கரெக்க்ட்டா புடிச்சிருவீங்கள்ல? அதுக்குத்தேன்!!!;) )
5.சாருஸ்ரீராஜ் (சாரு,எங்கே போனீங்க? பசங்களுக்கு லீவு விட்டப்புறம் பார்க்கவே முடியலை,வந்து தொடருங்க.)

இப்போதைக்கு இந்த 5 பேருடன் நிறுத்திக்கறேன், இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நினைவு வந்தால் கண்டிப்பாக இந்தப்பதிவைத் தொடருவேன்.ஜாக்கிரதை!!! ;)

சூடா டீயும் மஷ்ரூம் பஃப்ஸும் சாப்பிடுங்க. பஃப்ஸ் ரெசிப்பி அடுத்தபதிவில்! :)
நன்றி!

Tuesday, June 14, 2011

நவதானிய அடை


தேவையான பொருட்கள்
1.கொள்ளு
2.பாசிப்பயறு
3.மசூர்தால்
4.கடலைப்பருப்பு
5.உளுந்துப்பருப்பு
6.துவரம்பருப்பு
7.தட்டைப்பயறு
8.லென்டில் ( இது தோலுடன் இருக்கும் துவரம்பருப்பின் கஸின்னு சொல்லலாம்.;) அமெரிக்கன் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் ஒருவகை தானியம். உள்ளே பருப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.)
9.பட்டாணிப்பருப்பு

பருப்புவகைகள் எல்லாம் சேர்ந்து அரைகப்
ப்ரவுன் ரைஸ்-1/2கப்
வரமிளகாய்- 7
சீரகம்-1டீஸ்பூன்
பெருங்காயம்- 1/4டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-கொத்துமல்லி சிறிது
தேங்காய்ப்பல்லு-2 டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய்

செய்முறை
அரிசி,பருப்புவகைகளை களைந்து, மிளகாயுடன் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறியதும், பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, கொறகொறப்பாக அரைக்கவும். கடைசியில் சீரகம் சேர்த்து 2 சுற்று மிக்ஸியை ஓடவிட்டு மாவை எடுத்துவைக்கவும்.
(அரைத்த உடனேயும் அடையாக ஊற்றலாம்,நான் அரைத்து ஒன்றிரண்டு மணிநேரம் வைத்துவிடுவேன்.)
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்-கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறுதியாக தேங்காய்ப்பல்லு, கொத்தமல்லித்தழை சேர்த்து ஆறவைக்கவும்.

அடை சுடும்பொழுது வதக்கிய வெங்காய கலவை,தேவையான உப்பு சேர்த்து அடைமாவில் கலந்து (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரும் ஊற்றி கலக்கிக் கொள்ளலாம்.)

தோசைக்கல்லை காயவைத்து அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

காரசட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சட்னி ரெசிப்பி இங்கே.

பின்குறிப்பு-1
  • பருப்புவகைகளுக்கு குறிப்பிட்ட அளவுன்னு இல்லை,இதுதான் போடணும்னும் இல்லை, வீட்டுல இருக்க பருப்புவகைகள் எல்லாத்துலயும் ஒரொரு ஸ்பூன் எடுத்துக்குங்க. அல்லது உங்களுக்கு பிடித்த பிடிக்காத தானியங்களை கூட்டி குறைச்சு எடுத்துக்கங்க.
  • அடை செய்யும்போது தேங்காய் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.அதை மிஸ் பண்ணாம சேர்த்தால் சூப்பரா இருக்கும்.
  • சிலசமயம் சீரகத்துக்கு பதிலா சோம்பு சேர்த்தும் அரைப்பேன்,அதுவும் டேஸ்ட் நல்லா இருக்கும்.
  • அடை-அவியல் காம்பினேஷனும் நல்லா இருக்கும். தேங்காய்ச்சட்னியுடனும் சாப்பிடலாம்.
  • அடை-வெல்லம்,அடை-வெண்ணெய் காம்பினேஷன் நாங்க சாப்பிடமாட்டோம், நீங்க தாராளமாச் சாப்பிடலாம்.:)
(மிக முக்கியமான)பின்குறிப்பு-2
கிச்சன்ல தீராம இருக்க சாமானையெல்லாம் போட்டு அடை சுட்டுட்டு, பொழுதுபோகாம போட்டோல இருந்ததை எண்ணி ஒன்பது வகை தானியம்னு தெரிந்ததும், ஃபேன்ஸியா "நவதானிய அடை"-ன்னு பேரு வச்சு, ஸ்டைலா ரெசிப்பியா போட்டுட்டேன்னு நினைச்சுராதீங்க மக்களே!! "ப்ரோட்டீன் ரிச் அடை", "ப்ரவுன் ரைஸ் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது", "ஹெல்த்தியான ரெசிப்பி", "சூப்பரா இருக்கு! " இப்படியெல்லாம் கமென்ட் போடுங்கன்னு அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.(எ.கொ.ச.இ.???!!)
நன்றி வணக்கம்ம்ம்ம்ம்ம்!

Friday, June 10, 2011

பாவ் பாஜி / Pav Bhaji

இண்டியன் ஸ்டோர் போகும்போதெல்லாம் பாவ்-பாஜி சாப்பிடுவது இப்பொழுது வழக்கமா நடக்குது எங்க வீட்டில். போனவாரம் ஒருமுறை பன் செய்து, டீயுடனே காலியாகிட்டதால் இந்தமுறை பாஜி செய்துவைத்துவிட்டுதான் பன்னே பேக் பண்ணினேன். சூப்பரா இருந்தது. போட்டோஸ் கொஞ்சம் நிறைய்ய்ய எடுத்துட்டேன், போடாமல் இருக்க மனசில்ல! அதனாலே "படம்பார்த்து கதை சொல்"- டைப்ல இருக்குது ரெசிப்பி, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. :) ;) :)

முதல்ல ஒருகப் மிக்ஸ்ட் வெஜிடபிள்ஸை சுத்தம் செய்து கழுவி, பொடிப்பொடியா நறுக்கிக்கோங்க.(2 கேரட்-7பீன்ஸ்-கொஞ்சம் காலிஃப்ளவர்,ப்ரோக்கலி,1 உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி பட்டாணி சேர்த்திருக்கேன்)
ஒரு சிறிய தக்காளி, சின்னதா ஒரு பெரியவெங்காயம், ஒரு பச்சைமிளகாயைப் பொடியா நறுக்கிட்டு, குக்கர்ல எண்ணெய் காயவைச்சு சீரகம் தாளிச்சு, நறுக்கினதைப்போட்டு வதக்குங்க.

தக்காளி குழைய வதங்கினதும் காய்கறிகளைச் சேர்த்து கால்டீஸ்பூன் மஞ்சப்பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாப்பொடி, ஒரு டீஸ்பூன் மல்லிப்பொடி, அரை டீஸ்பூன் சீரகப்பொடி, காய்கள் அளவுக்கேற்ப உப்பு போடுங்க.
அரைக்கப் தண்ணி ஊத்தி, குக்கரை மூடி 3 விசில் விடுங்க.
ப்ரெஷர் அடங்கியதும்,குக்கரைத்திறந்தா காய்கள் இப்படி இருக்கும்..(தண்ணியில்லாம ட்ரையா இருக்கும்னு தப்பா நினைச்சுராதீங்க, கொஞ்சம் தண்ணியாத்தான் இருக்கும். :) )
மத்தாலயோ கரண்டியாலயோ காய்களை மசிச்சுவிட்டு, 1 1/2டீஸ்பூன் MDH பாவ்பாஜி மசாலாவும் போட்டு கலக்கி,
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காய்கறி கலவையை அஞ்சாறு நிமிஷம் கிளறுங்க. மசாலா வாசம் போய், பாஜி கொஞ்சம் திக்கா வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கிருங்க.

பாவ்-பாஜிக்குத் தேவையான பாஜி ரெடி!
பாவ் பன்களை (ரெசிப்பி இங்கே ) ரெண்டா நறுக்கி, வெண்ணெய் தடவி டோஸ்ட் பண்ணி ஒரு தட்டுல வச்சு, கொஞ்சம் பாஜியயும் வச்சு, பாஜிமேல லைட்டா வெங்காயம்-கொத்துமல்லித்தழை தூவி, ஒரு துண்டு லெமனையும் வச்சு..
வெளுத்துக்கட்டுங்க!! :)))))))))))))

இந்த ரெசிப்பிக்கு "அவசரசமையல்"னு லேபிளா?? ன்னு முறைக்காதீங்க, பன்-பாஜி எல்லாம் முன்னாடியே ரெடி பண்ணிவச்சிருந்தம்னா 5 நிமிஷத்தில் சாப்பிட்டுடலாம்! ஹிஹிஹி!

Tuesday, June 7, 2011

கார்ல்ஸ்பெட் ஃப்ளவர் ஃபீல்ட்ஸ் & Maze

பூக்கள் மேல் எனக்கிருக்கும் ஈர்ப்பு எவ்வளவு என்பது இந்த வலைப்பூவை ரெகுலராகப் படிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்! :) இந்த வருடத்தின் வசந்தத்தில், இங்கே அப்பார்ட்மென்ட்டில் நான் ரசித்த ரனன்குலஸ் பூக்கள் பற்றி ஒரு தனிப்பதிவே போட்டிருந்தேன். Carlsbad என்ற இடத்தில் சுமார் 50ஏக்கர் பரப்பில் அந்தப்பூக்களாலான ஒரு பெரீய்ய ஃப்ளவர் ஃபீல்ட் இருக்கிறது என்ற விஷயம் தெரிந்ததும் போகாமல் இருக்க முடியுமா?? வெற்றிகரமாக அங்கே சென்றுவந்தோம். மிகவும் அழகாக இருந்தது.

பூந்தோட்டம் மற்றும் இல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கான தோட்டக்கலைப் பயிற்சி வகுப்புகள், அன்னையர்தின சிறப்பு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இன்ட்ரஸ்டிங்கான விளையாட்டுக்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் என்று நிறைய விஷயங்கள் அங்கே இருந்தது. அதைப்பற்றிய ஒரு சிறு கட்டுரை அவள்விகடனுக்கு அனுப்பியிருந்தேன்.
இந்தத் திங்கள் (21.06.2011) தேதியிட்ட இதழில் 'கண்களில் விரியும் கவிதைப்பூக்கள்' என்ற தலைப்பில் அது வெளியாகியிருக்கிறது. :)

சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று இதைப்பற்றி நான் யாருக்குமே சொல்லவில்லை. ஆன்லைனில் புதுப்புத்தகம் செவ்வாய்க்கிழமைதான் வரும்,அதனால் ஃப்ளவர் ஃபீல்ட் கட்டுரை பிரசுரமானதும் எனக்கு தெரியவில்லை,ஊருக்குப் போன் செய்யும்போது அம்மா சொன்னார்கள். அவர்களுக்கு பெங்களூரில் இருக்கும் அக்காவின் ஃப்ரெண்ட் அக்கா சொல்லித்தான் தெரிந்திருக்கிறது. :) :)

என் கட்டுரையைப் பிரசுரித்த அவள்விகடன் குழுவிற்கும், அன்பாகத் தொலைபேசிய தலைமை நிருபர் ப்ரியா அவர்களுக்கும், அவள் விகடன் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பிய பிரியாவுக்கும் என் மனமார்ந்த நன்றி!

~~~~~~~
பள்ளி நாட்களில் சிறுவர் மலர் புத்தகம் படித்த காலங்களில்(இப்பவும்தான் படிக்கிறேன்.:)) அதில் வரும் படங்களை கலர் பண்ணுவது, மேஸ்(maze)-க்கு வழி கண்டுபிடிப்பது இவையிரண்டும் என் ஃபேவரிட் டைம்பாஸ்! இது போன்ற மேஸ்கள் நிஜமாவே இருக்குமா, காகிதத்தில் இருக்கும் மேஸில் வழி கண்டுபிடிப்பதே சிரமமா இருக்கே,நேரில் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். எப்படி இருக்கும்னுதெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது.

கார்ல்ஸ்பெட் ஃப்ளவர் பீல்டில் இனிப்பு பட்டாணி (sweet peas) செடிகளால் ஆன ஒரு மேஸ் இருந்தது. மேஸ் இருந்தது குழந்தைகள் ப்ளே ஏரியாவில்! அதனால் கொஞ்சம் கெத்தாவே(!) உள்ளே நுழைந்தோம். ஒரே வழியாய்க் கொஞ்ச தூரம் போனது, ஒரு இடத்தில் 6 வழிகளாகப் பிரிந்தது. அதுக்கப்புறம் எந்தப்பக்கம் போனாலும் சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கு வந்து சேர்வதாய் இருந்தது. ஒவ்வொரு வழியாய் எக்ஸ்ஃப்ளோர் பண்ணி, கொஞ்ச நேரத்தில் நான் ஒருவழியிலும் என்னவர் ஒரு வழியிலும் பிரிந்து சுற்ற ஆரம்பித்தோம்.

குழந்தைகள்-பெரியவங்க இப்படிப் பலபேர் உள்ளே வழிதெரியாமல் சுத்திட்டு இருந்தாங்க. எல்லாருக்கும் சிரிப்போ சிரிப்பு!! யார் முதலில் எக்ஸிட்-ஐ கண்டுபிடிப்போம்னு வேகவேகமா ஓடறோம்,எங்கே ஓடினாலும் முதலும் முதலும் நீ,முடிவும் முடிவும் நீ மாதிரி அதே 6 வழிப்பாதைக்கு கொண்டுவந்து விட்டுடுது!
என்னவர் பைனாகுலர் எல்லாம் வைச்சு வழிதேடி கண்டுபிடிச்சார். ஒருவழியா வெளியே வந்துசேர்ந்தோம். அதுக்கப்புறம்தான் நிறையப்பேர் இந்த மஞ்சக் கலர் நோட்டீஸக் கையில் வைச்சிருப்பதைப் பாத்தேன். ஒரு குட்டிப்பையன் தான் வைச்சிருந்த எக்ஸ்ட்ரா காப்பிய எனக்குக் குடுத்தான். வீட்டுக்கு வந்து நிதானமா, மேஸில் நுழைந்து வெளியே வரும் வழியை ஒரே அட்டெம்ப்ட்டில் கண்டுபிடிச்சேன். :)

~~~~~~~
ஃப்ளவர் ஃபீல்ட் புகைப்படங்கள் இன்னும் சில இந்த ஆல்பத்தில்..

Carlsbad Flower fields

Sunday, June 5, 2011

DMV-யும் நானும்..

முதல் பகுதியைப் படிக்க

இடம் மாறியதால், என்னவர் லைசென்ஸ்-ஐயும் இந்த ஸ்டேட்டுக்கு மாற்ற வேண்டியதாகிவிட்டது. வேறு ஸ்டேட் லைசென்ஸ் இருந்தால், இங்கே எழுத்துத்தேர்வு மட்டும் போதும். அதை எழுதுவதற்காக இவரும் இவர் நண்பரும் ரெடியானாங்க. யூட்டாவில் எழுத்துத்தேர்வுக்கு 'கவனமாக'ப் படித்ததால், எனக்கு எதுவும் மறக்கவில்லை. ஒரு ட்ரை செய்து பார்ப்போமேன்னு இலவச இணைப்பா நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன். ஒரு புதன் கிழமை காலங்காத்தால மூணு பேருமா DMV(Department of Motor Vehicles )-ஆபீஸ் போனோம்.

ஆஃபீஸ் திறக்கும் முன்பே பத்திருபது பேர் நின்றிருந்த க்யூவிலே நாங்களும் இணைந்து, வெயிட் பண்ணி, ஃபார்மாலிட்டியெல்லாம் முடிந்து டெஸ்ட் எழுதப்போயாச்சு. இங்கே பேப்பர் டெஸ்ட்தான், ஜஸ்ட் லைக் தட் போன நான் முதல் ஆளா டெஸ்ட்டை முடிச்சு கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டேன்,இவங்க ரெண்டு பேரும் வரவேயில்ல. அடுத்து நண்பரும் கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டார்,என்னவர் இன்னும் எழுதிட்டேஏஏஏஏஏ இருக்கிறார். அவர் வருவதுக்குள்ளே எங்க 2 பேருக்கும் பாஸ்-னு ரிஸல்ட் சொல்லிட்டாங்க, என்னவரும் டெஸ்ட்டை முடித்தார்.வெற்றிகரமா லர்னர்ஸ் பர்மிட்டை வாங்கிட்டு வந்துட்டேன். அவங்க 2 பேருக்கும் ஒரு சில நாட்களில் லைசென்ஸ் போஸ்ட்லே வந்துடுச்சு.

ஒரு வீகெண்டில் பக்கத்திலிருக்கும் ஸ்கூல் க்ரவுண்டில் போய் ப்ராக்டீஸ் பண்ணுவோம் என்று கிளம்பினோம். சால்ட்லேக் சிட்டியில் இங்கே இருக்குமளவு ட்ராஃபிக் இருக்காது,ரோடுகளும் இவ்வளவு பெரியதா இருக்காது. இங்கே ரோடுகள் நல்ல அகலமா இருக்கும், 6 லேன் ரோடெல்லாம் சாதாரணமா பார்க்கலாம். ஸ்பீட் லிமிட்டும் அதிகம். ட்ராஃபிக்கும் அதிகம். ஸ்டியரிங் வீலைத்தொட்டு பலநாளாகிட்டதால் எல்லாமே புதுசா இருந்தது எனக்கு!! இவருக்கும் ரொம்ப திகிலா இருந்ததால் கொஞ்ச நேரம் முயற்சித்துட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

எங்களுடன் எழுத்துத்தேர்வுக்கு வந்த நண்பரின் மனைவியும் லர்னர்ஸ் பர்மிட் வாங்கினாங்க. அவரும் கணவருடன் ட்ரைவிங் பழக ஆரம்பித்து, அவங்களுக்கும் எனக்கு நேர்ந்த அதே அனுபவம்! ஸோ,நாங்க ரெண்டு பேரும் என்ன செய்யலாம்னு தீவிரமா யோசிச்சோம். பெட்டர்ஹாஃப்-களுடன் ட்ரைவிங் ப்ராக்டீஸ் போனால் வீணா வாக்குவாதம்,டென்ஷன், பயம்,திகில் எல்லாம் வருது,அதனால் எதாவது ட்ரைவிங்ஸ்கூல்ல ஜாயின் பண்ணலாம்னு முடிவு செய்தோம். இதற்கு ரெண்டு வீட்டிலும் அமோக ஆதரவு!! :)

ஒருவழியா ட்ரைவிங் ஸ்கூல்ல முதல் க்ளாஸ் போயிட்டு வந்தாச்சு. "நாங்க 2 மணிநேரம்தான் சொல்லித்தரோம், நீங்க உங்க காரில் ப்ராக்டீஸ் பண்ணுவதில்தான் எவ்வளவு சீக்கிரம் லைஸென்ஸ் வாங்கமுடியும் என்பது இருக்கிறது"ன்னு அந்த இன்ஸ்ட்ரக்டர் சொல்லிட்டார். விட்டது தொல்லைன்னு ஹாயா இருந்த மிஸ்டர்.A-வும் மிஸ்டர்.M-ம்மும் மறுபடியும் மாட்டிகிட்டாங்க. :)
இன்ஸ்ட்ரக்டருடன் இரண்டுமணி நேரம் ட்ராஃபிக்கில் ட்ரைவ் செய்திருக்கிறோம் என்பது எங்களைவிட A &M -க்கு கான்ஃபிடன்ஸ் லெவலை பூஸ்ட் பண்ணிவிட்டது. மெதுமெதுவா நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. இடையிடையே ட்ரைவிங் ஸ்கூலில் இன்னும் சில பயிற்சி வகுப்புகள். இப்படியாக சுமாரா காரோட்ட ஆரம்பித்துவிட்டோம். இனி என்ன? ரோட் டெஸ்ட் புக் பண்ணவேண்டியதுதான்.

சாதாரணமாக நல்லா ட்ரைவ் பண்ணும் நான் லைசென்ஸ் எடுக்க ப்ராக்டீஸ் என்றால் சும்மா சொதப்புவேன். இன்டர்செக்ஷன்ல நுழையுமுன் எல்லா டைரக்ஷனும் பார்க்கணும், லேன் சேஞ்ச் பண்ணுவதற்கு முன்னும் பின்னும் கண்ணாடிகளை பார்க்கணும்,15 செகண்டுக்கு ஒருமுறை 3 கண்ணாடியையும் பார்க்கணும்.. இப்படி பல பாயின்ட்களை கோட்டை விடுவேன். இதனாலேயே ரோட் டெஸ்ட்டை போஸ்ட்போன் பண்ணிகிட்டே இருந்தேன்.

நாட்கள் ஓடிட்டே இருந்தது. தோழி லைசென்ஸும் வாங்கிட்டாங்க. நான் டெஸ்ட் அப்பாயின்ட்மென்ட் புக் பண்ணவே இல்ல. பர்மிட் ஒரு வருஷத்துக்கு குடுத்திருந்தாங்க,அதனால ரொம்ப ரிலாக்ஸா விட்டுட்டேன். சமீபத்தில் இவர் ஆபீஸில் இருந்து 2-3 பேர் லைஸென்ஸ் வாங்கினாங்க. நீ வாங்கலையா?-ன்னு பலதரப்பிலிருந்தும் கேள்விகள். தூங்கிட்டிருந்த சிங்கத்தை(ஹ்ஹிஹீ) தட்டி எழுப்பிட்டாங்க!! சிங்கமும் டெஸ்ட்டுக்கு புக் பண்ணுச்சு!! எப்பத் தெரியுமா? கரெக்ட்டா என்னவரின் பிறந்தநாள் அன்று!! இவரும் அன்று லீவ் போடுவதாக இருந்ததால் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிட்டு அப்பாயின்ட்மென்ட்டை கன்ஃபர்ம் பண்ணிட்டேன்.

எங்க வீடு இருப்பது மலைப்பாங்கான இடம், இங்கே இருக்கும் DMV-ஆஃபீஸும் ஒரு குட்டி மலை மீதுதான் இருக்கும். டெஸ்ட்டுக்கு முதல்நாள் மாலை அங்கே போய் கொஞ்சநேரம் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்தோம். அடுத்தநாள் காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப்போய் டெஸ்டுக்கு பார்ம் வாங்கியாச்சு. நான் 14வது ஆள்! வந்த நம்பரைப் பார்த்ததுமே( ஏழு-ஐந்து ரெண்டுமே என் ராசி நம்பர், அன்னிக்கு தேதி 25! எனக்கு கிடைத்திருக்கும் நம்பர் 14! :)) ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.

இங்கே டெஸ்ட் ப்ரொஸீஜர் என்னன்னா ஒரு ஆளுக்கு 20-25 நிமிஷம் எடுப்பாங்க. DMV-ஆபீஸை சுற்றி நாலைந்து மைலுக்கு நம்மை ட்ரைவ் பண்ணச்சொல்லுவாங்க. வழியிலே ஒரு இடத்தில் ரோட்டோரம் பார்க் செய்து 20 அடிதூரம் curb-க்கு பேரலல்லா ரிவர்ஸ்லயே வரணும். அப்புறம் DMV வரவேண்டியதுதான். ஸ்கோரிங் ஷீட் வச்சு ஒரொரு தப்புக்கும் ஒரு மார்க் போட்டுகிட்டே வராங்க. -15 வரை வாங்கினா பாஸ்,அதுக்கும் மேலே தப்பு செய்தா அம்புட்டுதான்.

அன்னிக்குன்னு ரெண்டே ரெண்டு இன்ஸ்பெக்டர்ஸ்தான் இருந்தாங்க. அதிலே ஒருவர் கடு-கடுன்னு இருந்தார்,இன்னொருவர் ப்ரெண்ட்லியா தெரிந்தார். யார் வரப்போறாங்கன்னு சஸ்பென்ஸோட வெயிட் பண்ணினா அவிங்க ரெண்டுபேருமில்லாம புதுசா இன்னொருவர் வந்துவிட்டார்!! என்னவருக்கு பை-பை சொல்லிட்டு கிளம்பினேன். டெஸ்ட்டை முடித்துவந்ததும், ஒண்ணு ரெண்டு கரெக்ஷன் சொல்லிட்டு "நீ பாஸ் பண்ணிட்டே, குட் லக்! கவுன்ட்டர் நம்பர்1-க்குப் போய் லைஸென்ஸை வாங்கிக்கோ" னு சொல்லிட்டாங்க. :)))))))))

சந்தோஷமா("ஆத்தா நான் பாஸாகிட்டேன்!"ன்னெல்லாம் கத்தமுடில) கார்ல இருந்து இறங்கி என்னவரைத் தேடறேன்,தேடறேன், ஆளையே காணலை!! அக்கம் பக்கம் கார்ல இருந்தவங்ககிட்டவெல்லாம் விசாரிக்கிறேன், DMV ஆபீஸ் உள்ளே போய்ப் பார்க்கிறேன், எங்கே போனாருனே தெரில! போன் செய்தா வாய்ஸ் மெய்ல் போகுது. மறுபடி அங்கே இங்கே தேடிட்டு டென்ஷனாகி போன் பண்ணறேன், நான் பக்கத்தில இருக்க கடைல இருக்கேன், இங்கே சிக்னல் இல்லைங்கறாரு. நான் பாஸ் பண்ணிட்டேன்ங்கறேன், "நீ காரை எடுத்துட்டு மலைல இருந்து இறங்கும்போதே பாஸ் பண்ணிடுவேன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு, அங்கே வெயிட் பண்ண போரடிச்சுது, அதான் கடைக்கு வந்திருக்கேன்"னாரு. சரி,இப்பதான் நான் வந்துட்டேனே வாங்க-ன்னா " நீ தான் பாஸ் பண்ணிட்டியே, இனி நான் எதுக்கு? காரை எடுத்துட்டு கடைக்கு வந்துடு"-ன்னு போனை வச்சுட்டார். கர்ர்ர்ர்ர்ர்ர்!

கவுன்ட்டர்ல போய் லைசென்ஸை வாங்கணுமே?! இவரைத் தேடியதில் சிலபல நிமிஷங்கள் கரைந்து, அங்கே அனுமார் வால் போல கியூ நீண்டிருந்தது. எவ்வளவு வெயிட் பண்ணிட்டம்,இது என்ன பெரிய கியூன்னு மனசைத் தேத்திகிட்டு நின்னேன். என்னையக் காணம்னு இவரும் வந்து சேர்ந்தார். வந்ததும் சாவியக்குடுன்னு வாங்கிட்டு மறுபடி காருக்குப் போயிட்டு வந்தார். டெம்பரவரி லைசென்ஸைக் குடுத்து, இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள லைசென்ஸ் அனுப்பிடுவோம்னாங்க. அப்பாடான்னு சந்தோஷமா வெளியே வந்தோம்.

கால்மணி நேரம் வெயிட் பண்ணமுடியாதா? அதுக்குள்ளே கடைக்கு போகணுமா? அப்படி என்ன அவசரம் உங்களுக்கு?ன்னு கடுகடுத்துட்டே காருக்கு வந்தா......

அங்கே எனக்காக அழகான ஒரு பூந்தொட்டி காத்துட்டு இருக்குது!! அதை வாங்கத்தான் போயிருக்கார் ஐயா! :))))))

இன்னும் சிலநாட்கள் கழித்து இதைப் படிக்கையில் ஆஃப்டர் ஆல் லைசென்ஸ் வாங்கினதை ஒரு பெரிய சாதனை மாதிரி பில்டப் குடுத்து ப்ளாக்ல எல்லாம் எழுதியிருக்கோமேன்னு எனக்கே தோணும், ஆனாலும் நான் கடந்து வந்த அனுபவங்களை காலப்போக்கில் மறக்காமல் இருக்க இங்கே பதித்து வைக்கிறேன்னு வைங்களேன்! இந்த நினைவுகளை அசைபோடும்போது கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கு, இருக்கும்!. :)))))))))))))

பொறுமையாப் படித்த அனைவருக்கும் நன்றி!

Wednesday, June 1, 2011

தோசை,ஆறு வகை!

கோவையிலே ஹோட்டலுக்கு(கவனிக்க,ரெஸ்டாரன்ட் இல்ல,நாங்கள்லாம் கொஞ்சம் பட்டிக்காடுங்க, ஹோட்டல்ல போய் சாப்பிடறதுன்னுதான் சொல்லுவோம்!:)). ஊர்ல எல்லாம் ரெஸ்டாரன்ட் எல்லாம் போனதில்லீங்க. அன்னபூர்ணா,சுகம், ஆனந்தாஸ்,அமுதசுரபி,லலிதாஸ்,ஐயப்பாஸ் பர்ல், ஆரியபவன் இதெல்லாம் நாங்க ரெகுலரா சாப்பிடும் ஹோட்டல்கள். சான்ஸ் கிடைச்சப்ப எல்லாம் தவறாம சாப்பிடுவது காலிஃப்ளவர் ரோஸ்ட். மூணுவகை சட்னி-சாம்பாரோட சுடச்சுட மொறுமொறு தோசை சூப்பரா இருக்கும்.:P :P

இங்கே இண்டியன் ரெஸ்டாரன்ட்ஸ்லே இட்லி தோசை நான் சாப்பிடவே மாட்டேன். (சாப்பிட்டா வெறுத்துப்போயிரும்,அந்தளவுக்கு சுமார் ரகம்தான் இதுவரை சாப்பிட்ட ஹோட்டல்கள்ல எல்லாமே!) எப்பவாவது ஊர்ல சாப்பிட்ட தோசைகள் நினைவுகள் வரப்ப இப்படி வீட்டுலயே செய்து மனசைத் தேத்திக்கறது!!!!

ஆறு வகை தோசைகள் பத்தி சுருக்கமா ஒரு முன்னுரை..
  • மசால் ரோஸ்ட் என்னவருக்கு சுத்தமா பிடிக்காத ஐட்டம்..ஆனா இந்த மாதிரி செய்தா மூச்சுக்காட்டாம சாப்பிடுவார்.;) ரெசிப்பி இங்கே.
  • காலிஃப்ளவர் ரோஸ்ட் தனி போஸ்ட்டாவே போடுமளவு போட்டோஸ் இருக்கு,யாராவது ஆர்வமா கேட்டீங்கன்னா போஸ்ட் பண்ணறேன். :)
  • மஷ்ரூம் ரோஸ்ட்,இதுவும் ஊரிலே சாப்பிட்ட நினைவில் ஒருநாள் செய்துபார்த்தேன்,சூப்பரா இருந்தது,அதிலிருந்து மஷ்ரூம் வாங்கும்போதெல்லாம் செய்துடுவேன். அதுக்கு ரெசிப்பி இங்கே.
  • முட்டை தோசை,வெங்காய தோசை..எங்களுக்குத் தெரியாதா?-ன்னு கேப்பீங்க..ஓக்கே,அதுக்கு ரெசிப்பில்லாம் நான் சொல்லல..ஒன்லி போட்டோஸ்!
  • பொடி தோசை,ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருக்கேன்,ரெசிப்பி இங்கே.
என்ஜாய் பண்ணுங்கோஓஓஓஓ!!!
காலிஃப்ளவர் ரோஸ்ட்

~~~~~
மசால் ரோஸ்ட்
~~~~~~
ஆனியன் ரோஸ்ட்

~~~~~
முட்டை ரோஸ்ட்

~~~~~
மஷ்ரூம் ரோஸ்ட்

~~~~~
பொடி தோசை
**********************
இந்த போஸ்ட்டுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்னு யோசிக்கைல இந்தப்பாட்டு நினைவுக்கு வந்தது,இலவச இணைப்பா தோசையுடன் இதையும் இணைத்துட்டேன். :)

LinkWithin

Related Posts with Thumbnails