பேசன் லட்டு, ரவா லட்டு,இந்த லட்டுன்னு பலவகைகள் இருந்தாலும்,என்னைப் பொறுத்தவரை லட்டுன்னா பூந்தி லட்டுதான்! ரவா லட்டுன்னு சொல்லறத விட ரவை உருண்டைன்னு சொல்லுவதுதான் எங்க வீட்டில் வழக்கம். அதனால் லட்டுன்னாலே பூந்தி லட்டுதான்.
சின்ன வயசில இருந்தே விநாயகர் கிட்ட இருக்கும் லட்டுத்தட்டு மேல எனக்கு ஒரு கண்ணு! ;) விநாயகர் படத்தை கவனிச்சுப் பார்த்தீங்கன்னா மோஸ்ட்லி எல்லாப் படங்கள்லயும் லட்டு கண்டிப்பா இருக்கும், சில படங்களில் தும்பிக்கையிலயும் லட்டை வச்சு டேஸ்ட் பண்ணிட்டும் இருப்பார்! அவரோட வாகனமான மூஞ்சூறும் கூட லட்டு சாப்பிடுவார்! :)
சாமி கும்பிடும்போதும் லட்டு ஞாபகமா?!!!! சரியான சாப்பாட்டு ராமி(ராமனுக்கு பெண்பால்..ஹிஹிஹி!) போலவே இந்தப்பொண்ணுன்னு நீங்க நினைக்கமாட்டீங்க, அவ்ளோ கெட்டவங்களா என்ன நீங்கள்லாம்? :) ;) ;)
இந்த வருஷம் தீபாவளிக்கு நிறைய ப்ளாக்ஸ்ல லட்டு ரெசிப்பி கண்ணில பட்டுது,இருந்தாலும் ட்ரை பண்ணிப்பார்க்கும் தைரியம் வரல..ரேவதியின் காரசாரம்-ல வந்த லட்டு ரெம்ப டெம்ப்ட் பண்ணிடுச்சு, கொஞ்சமா செய்துபார்ப்போம்னு ஆரம்பிச்சேன், அங்கிருந்த ரெசிப்பியவும் அப்படியே செய்யல, என் வசதிக்கேத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி செய்தேன். சூப்பரா வந்தது லட்டு! Thanks for the tempting snaps Reva! :)
தேவையான பொருட்கள்
பூந்திக்கு
கடலைமாவு-1கப்
அரிசிமாவு-1டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
மஞ்சள் & சிவப்பு food colors- தலா 2 துளிகள்
தண்ணீர் -1/2கப் to 3/4கப்
எண்ணெய்
சர்க்கரைப் பாகுக்கு
சர்க்கரை -1கப்
தண்ணீர் 1 கப்
அலங்காரத்துக்கு :)
ஏலக்காய்-2
கிராம்பு-2
முந்திரி -10
திராட்சை-10
கல்கண்டு-1 டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்
செய்முறை
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும். ஏலக்காயைத் தட்டி பாகில் போட்டுவைக்கவும்.
முந்திரி, திராட்சை,கிராம்பு இவற்றை நெய்யில் பொரித்து எடுத்துவைக்கவும்.
கடலைமாவு,அரிசிமாவு,பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். அதனுடன் food color சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து பூந்திகரண்டியில் மாவை ஊற்றவும். பூந்திகளை அதிகம் முறுகவிடாமல் எடுத்துவிடவும்.[எண்ணெயில் விழுந்த பூந்திகள் சில நொடியிலே எண்ணெய் ஓசை அடங்கி மிதக்க ஆரம்பிக்கும். உடனே எடுத்துருங்க.]
பொரித்த பூந்திகளை பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும். எல்லாமாவையும் பூந்திகளாக பொரித்து எடுத்ததும், ஒரு கைப்பிடி பூந்தியை மிக்ஸியில் ஒருமுறை pulse-ல் போட்டு எடுத்து பூந்தியுடன் கலக்கவும். வறுத்த முந்திரி-திராட்சை-கிராம்பு, 2 கரண்டி சூடான சர்க்கரைப் பாகு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து இன்னும் இரண்டு கரண்டி சூடான பாகு சேர்த்து கல்கண்டும் சேர்த்து கலந்துவைக்கவும். [முந்திரி திராட்சை சேர்க்கும்போதே கல்கண்டும் போட்டுக்கலாம், நான் மறந்துட்டேன். ;)]
மீண்டும் 5 நிமிஷங்கள் கழித்து மீதமுள்ள (சூடான) பாகு முழுவதையும் ஊற்றி கலந்து, 1/2 மணி நேரம் ஊறவிடவும். கையில் நெய் தடவிக்கொண்டு லட்டுகளாகப் பிடித்துவைக்கவும். சுவையான சூப்பர் டூப்பர் லட்டு (!) ரெடி!
என்ஜாய்!
குறிப்பு
- பச்சைக்கற்பூரம், வெள்ளரிவிதை இதெல்லாமும் கிடைச்சால் சேர்த்துக்கோங்க.
- சர்க்கரைப் பாகை அடுப்பிலிருந்து இறக்கியதும் ஏலக்காய் போடுங்க, ஏலக்காய் சேர்த்தபிறகு கொதிக்கவிடக்கூடாது..கொதிக்கவிட்டா ஏலம் மணம் குறைஞ்சுடுமாம்.
- பூந்தியில் பாகை சேர்க்கும்போது பாகு ஆறியிருக்கக்கூடாது(அதுக்காக கொதிக்கக் கொதிக்கவும் ஊத்தக்கூடாது,ஹிஹி!) ஆறியிருந்தால் கொஞ்சம் சூடாக்கி ஊற்றி வைக்கவும்.
- பேக்கிங் சோடா போடாமலே செய்தாலும் பூந்தி நல்லா வரும்னுதான் (எனக்குத்) தோணுது.[காராபூந்தி பொரிக்கும்போதெல்லாம் நான் பேக்கிங் சோடா சேர்க்காமல்தான் செய்தேன்.நன்றாகவே வந்தது.]