Tuesday, July 30, 2013

Dahi-Papdi Chaat/ தஹி-பப்டி சாட்

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி "அடி பின்னீட்டீங்க, நன்றி!" என நன்றி சொன்னேன், இப்போது ஐந்தே மாதங்களில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லும் தருணம் வந்துவிட்டது. ஆமாம், ஞாயிறு இரவு ப்ளாக் ஹிட்ஸ் நான்கு லட்சத்தை கடந்துவிட்டது! :))) கவனமாக உட்கார்ந்து கவனித்தும் அந்த "4,00,000" என்ற எண்ணைக் கேமராவில் பதிக்க முடியவில்லை! ஹிஹ்ஹிஹி...
தினசரியோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ என் வலைப்பூவுக்கு வந்து என் மொக்கையை, சமையல் குறிப்புகளை, புகைப்படங்களை ரசித்துச் செல்லும் அனைவருக்கும் என் இனிய நன்றிகள்! 2 லட்சம், 3 லட்சம் என்பதெல்லாம் வெறும் எண்களே என்றாலும், ஆர்வம் குறையாமல் வலைப்பூவை நான் ஆக்டிவ்-ஆக வைத்திருக்க உதவும் கிரியா ஊக்கிகள் அவை என்றால் அது மிகையாகாது. இதனை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி அனைவருக்கும்! தஹி-பப்டி சாட் எடுத்துக்கோங்க! :) 
வட இந்திய "சாட் ஐட்டங்கள்" செய்து பல நாட்கள், இல்லையில்லை, வருஷங்களே ஆகிவிட்டது. அவ்வப்போது வெளியே உணவகங்களுக்குச் செல்கையில் சாப்பிடுவதோடு நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வீட்டில் செய்யவேண்டும் என நினைத்து நினைத்து ஒருவழியாக செய்தும் ஆச்சு!  இந்த முறை (சிறு)பூரி (கோல் கப்பா) செய்வதற்கு பதிலாக பப்டி செய்தேன். செய்முறையைப் பார்க்கலாம் வாங்க. 

பப்டி- தேவையான பொருட்கள்
மைதா-11/2கப்
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
ஓமம்-1/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் +1 டேபிள்ஸ்பூன்
உப்பு 

செய்முறை
மாவு, உப்பு, ஓமம் இவற்றுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து விரல்களால் நன்றாக கலந்துகொள்ளவும். 
தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். 
பிசைந்த மாவை அரைமணி நேரம் காற்று புகாமல் மூடி வைக்கவும்.
நான்கு சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
முள்கரண்டியால் சப்பாத்தியின் எல்லா இடங்களிலும் குத்திவிட்டு, பிஸ்ஸா கட்டர் அல்லது கத்தியால் துண்டுகள் போடவும்.
[துண்டுகள் போடுவதற்கு பதில்,  குக்கீ கட்டர்/பாட்டில் மூடியால் வட்டமாக வெட்டியும் எடுக்கலாம், ஆனால் அப்படி செய்கையில், வட்டம் தவிர மீதி சப்பாத்தி மீதியாகும், அதை மறுபடி எடுத்து தேய்த்து மறுபடி சிறு வட்டம் வெட்டி...என வேலை கொஞ்சம் நீளும்! ;) உங்க வசதிப்படி செய்துக்கலாம்! :)]

மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து நறுக்கிய பப்டி-களைப் பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் வடியவிட்டு காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். இவை வாரம் -பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

ஸ்வீட் சட்னி- க்ரீன் சட்னிகளும் மொத்தமாகச் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், அவையும் வாரம் -பத்துநாட்கள் தாங்கும்.
ஸ்வீட் சட்னி - தேவையான பொருட்கள்
பேரீட்சை பழம் - 6
உலர் திராட்சை-10
கெட்டியான புளிக்கரைசல்-1/4கப்
வெல்லத்தூள் அல்லது சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள்-1/2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு 

செய்முறை
அனைத்துப் பொருட்களுடன் 11/2 அல்லது 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரெஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும். 
ப்ரெஷ்ஷர் அடங்கி, ஆறியதும் குக்கரைத் திறந்து சட்னியை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். 
ஸ்வீட் சட்னி தயார்.
~~~
க்ரீன் சட்னி - தேவையான பொருட்கள் 
புதினா-1/2கப்
கொத்துமல்லி இலைகள் -1/2கப்
பச்சைமிளகாய்-3 [அல்லது காரத்துக்கேற்ப]
சீரகம்-1/2டீஸ்பூன்
புளி - சிறிது
உப்பு
எலுமிச்சை சாறு- அரைப் பழத்தில் இருந்து 

செய்முறை
எலுமிச்சைச் சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் மைய அரைக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும். 
க்ரீன் சட்னி தயார்.
~~~
தஹி-பப்டி சாட் - தேவையான பொருட்கள் 
பப்டி - தேவையான அளவு [ஒரு ப்ளேட்டுக்கு 6 அல்லது 7 பப்டி சரியாக இருக்கும்.]
தயிர்-1/2கப் 
வேகவைத்த கொண்டைக்கடலை 
வேகவைத்த உருளைக் கிழங்கு [இங்கே சேர்க்கப்படவில்லை! ;)]
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய தக்காளி
நறுக்கிய கொத்துமல்லித் தழை
ஸ்வீட் சட்னி
க்ரீன் சட்னி  

செய்முறை
தயிருடன் கொஞ்சம் தண்ணீர், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்துகொண்டு, மேலாக ஒரு சிட்டிகை மிளகாய்ப்பொடி தூவி வைக்கவும். 

சாட்-ஐட்டங்களில் தட்டில் இந்த ஆர்டரில்தான் பொருட்களை வைத்து சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை எல்லாம் இல்லை. அவரவர் விருப்பப்படி தேவையான பொருட்களை தட்டில் வைத்து வெளுத்துக் கட்டலாம்! ;) 
இங்கே நாங்கள் தட்டில் முதலில் பப்டி-ஐ வைத்து, வெங்காயம்-தக்காளி தூவி, கொண்டைக் கடலை நாலைந்து தூவி, இனிப்பு-பச்சை சட்னிகளைக் கொஞ்சம் தெளித்து,  மேலாக தயிர் விட்டு,  கடைசியாக கொத்துமல்லி இலை தூவி இருக்கிறோம். [ஆமாங்க, பேஸிக் ப்ரிப்பரேஷன் பை மீ, ப்ரசென்டேஷன் பை என்னவர்! ;) ]
நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருட்களை வைத்து சாப்பிடலாம். முதலில் தட்டில் வைக்க வேண்டியது பப்டி-யை! அதை மட்டும் மாத்திராதீங்க, தட்ஸ் ஆல்! :)

நம்ம இப்படி கலர் கலரா காரசாரமாச் சாப்பிடுறோம். ஆர்வமாகப் பார்க்கும் எங்க வீட்டுக் குட்டிப்பையனுக்கும் எதாவது குடுக்கணுமில்ல?! 

சட்னிகள் இல்லாமல், கொஞ்சம் பப்டி, தயிர், கொண்டைக்கடலை, தக்காளி -- இது ஜீனோவுக்கு! அவருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு தஹி-பப்டி! ;)

உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். கண்டிப்பா செய்து சுவைத்துப் பாருங்க.
அனைவருக்கும் மீண்டுமொருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!

Saturday, July 27, 2013

மேத்தி புலாவ்/வெந்தயக்கீரை புலாவ்

தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த வெந்தயக் கீரை -1/2கப்
பாஸ்மதி அரிசி-1கப்
பச்சைப் பட்டாணி -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய் -2 (அ) 3 [காரத்திற்கேற்ப]
இஞ்சி- சிறுதுண்டு
பூண்டு-2பற்கள்
தேங்காய் துருவல்-1டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை- கொஞ்சம்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பொடித்துக்கொள்ள
பட்டை-சிறு துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1

செய்முறை
அரிசியை 2-3 முறை அலசி, 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கீரையை மண் போக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 
பச்சைமிளகாயை நீளமாக கீறி வைக்கவும். 
இஞ்சியைப் பொடியாக நறுக்கியும், பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டியும் வைக்கவும். 
பட்டை கிராம்பு ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து முந்திரி-திராட்சை சேர்த்து வதக்கவும். 
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை சேர்த்து வதக்கி, பட்டை-கிராம்பு-ஏலம் பொடியைச் சேர்த்து வதக்கவும்.
இதற்கிடையில் கீரையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
வெங்காயம் வதங்கியதும் பட்டாணி மற்றும் வெந்தயக் கீரையைச் சேர்த்து சர்க்கரையையும் போட்டு வதக்கவும். 
கீரை வதங்கியதும் தக்காளி-தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். 
பிறகு ஊறிய பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து 11/2கப் தண்ணீர் விடவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 7 நிமிடங்கள் சமைக்கவும். அதற்குள் விசில் வந்துவிடும், வராவிட்டாலும் பாதகமில்லை, ஏழு நிமிடங்கள் கழித்து குக்கரை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். அரிசி ஊறி இருப்பதால் விரைவில் வெந்துவிடும். [இந்த முறை ஒரு கப் அரிசி அளவுக்கு...அரிசி அதிகம் சேர்த்தால் குக்கர் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும்.]

குக்கரின் ப்ரெஷ்ஷர் முழுவதும் அடங்கிய பிறகு திறந்து சாதம் உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.
இந்தப் புலாவ் அப்படியே சாப்பிடவும் அருமையாக இருக்கும். எனக்கு பச்சடி, சைட் டிஷ் எல்லாம் தேவையில்லாததால் செய்யவில்லை. உங்கள் விருப்பப்படி வெள்ளரி தயிர் பச்சடி, கேரட் தயிர் பச்சடி இவற்றுடன் சாப்பிடலாம்.

Recipe Courtesy : HERE

பின் குறிப்பு : வெந்தயக்கீரை  வீட்டில் வளர்ந்ததுதான், அது பற்றியும் இதேபதிவில் இணைக்கலாமென நினைத்தேன், (வழக்கம் போல) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் இல்லாததால் பதிவு நீண்டுவிடவே வெந்தயக்கீரை வளர்ப்பு பற்றி தனிப்பதிவு ஒன்று விரைவில் வெளியிடப்படும். :) 

Wednesday, July 24, 2013

மழையின் துளியில் லயமிருக்குது...

மழையின் துளியில் லயம் இருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்..
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்!
........
கோடைக் கதிரவனின் வெப்பத்தில் பூமிப்பெண் கசகசவென்று வியர்த்து வடிந்துகொண்டிருந்த சமயம்..கடந்த வாரம் ஒரு நாள் மேகமூட்டமாய் இருந்த வானம், பின்மதியத்தில் பூமிப் பெண்ணுக்குப் பன்னீராய்ச் சாரல் தெளித்து தென்றல் சாமரம் வீசியது! சில நிமிடங்கள் மட்டுமே இந்த சிசுருஷை நடந்தாலும் பூக்களால் சிரிக்கும் பூமாதேவி தன் மகிழ்வைத் தெரிவிக்க மறக்கவில்லை. அந்த அழகை கேமராவில் சிறைப்பிடித்தேன்.

செம்பருத்தி, செம்பருத்தி..
பூவைப் போல பெண்ணொருத்தி.. :) 
இந்த செம்பருத்திப் பெண் தினமும் சில பூக்கள் மலரத் தவறுவதில்லை. முழுவதும் நனையும் அளவுக்குக் கூடச் சாரலடிக்காமல் இருந்தாலும் விழுந்த ஓரிரு துளிகளிலும் ஓர் அழகு! 

ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ!
கொத்துக் கொத்தாய் பூத்துச் சிரிக்கிறது சிவப்பு ரோஜா! கொத்தில் ஒரு மொட்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கிவிட்டால் பெரிய ரோஜாமலர்கள் கிடைக்கும் என்று தோட்டம் போட்ட அனுபவஸ்தர்கள் சொன்னாலும் அங்ஙனம் செய்ய எனக்கு மனம் வருவதில்லை.
ரோஜாப்பெண்ணின் மொட்டுப்பிள்ளைகளைக் கிள்ளியெறிய எனக்கு உரிமையும் இல்லை, அது சரியென்று என் மனம் ஒப்பவுமில்லை. பூ சிறிதாய் இருந்தாலென்ன, அதுவும் ஓரு அழகுதான்! நீங்க என்ன சொல்றீங்க?
இயற்கையைத் தொல்லை செய்யாமல் அதனோடு ஒன்றி ரசிப்போமே! :)

ஒரு மலர்..
இந்த ஜெரேனியம் மலர்கள், கொத்துக் கொத்தாய் மலரும்,

இந்தப் படத்தில் கொத்தில் மலர்ந்த ஒரு மலர் மட்டும் சாரலில் நனைந்து உவகை கொள்கிறது.
~~
ஜீனோ: பால்கனில கேமராவோடு சுத்திட்டு வந்து உட்கார்ந்தாங்க, அக்கடா-ன்னு நானும் வந்து படுத்தேன், ஆனா இன்னும் கேமரா ஆஃப் ஆகலை போலிருக்கு...கிர்ர்ர்ர்ர், கர்ர்ர்ர்ர்-ன்னு ஏதேதோ சத்தமெல்லாம் கேக்குது...ஹ்ம்ம்ம்!
அட போங்கப்பா..நீங்க போட்டோ எடுத்தாலும் சரி, எடுக்காம ஜூம் பண்ணிகிட்டே இருந்தாலும் சரி..நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணறேன்.
யாரது என்ர மஞ்சக் கலர் பொம்மைய கண்கொட்டாமப் பாக்குறது? அது ஜீனோவுது..நீங்கள்லாம் பூக்களை ரசிங்க, ஜீனோ இஸ் வெறி;) பொஸஸிவ் அபவுட் ஹிஸ் டாய்ஸ்! யாருக்கும்ம்ம்ம்ம்ம் தரமாட்டேன்!! :) 

~~
பதிவின் முதலில் வந்த வரிகள் இந்தப் பாடலில் இருந்து...


சின்னத்தம்பி-பெரியதம்பி எங்க ஊருப்பக்கம் எடுக்கப்பட்ட படம்.. நரசீபுரம் அருகில் உள்ள "வைதேகி சுனை" என்ற அழகான இடம் இந்தப் படத்தில் பல இடங்களில் வரும். அழகான நதியா, இனிமையான இசை, சின்னக் குயில் சித்ராவின் அற்புதமான  குரலில்.... மழையை ரசிக்க ஒரு பர்ஃபெக்ட் பாட்டு! :)
~~
இத்தனை நாட்கள் மறந்து போகாமல், மறைந்தும் போகாமல் தொடர்ந்து எழுத ஆர்வத்தையும், வாய்ப்பையும், ஊக்கத்தையும் கொடுக்கும் இறைவனுக்கும், ஆதரவு தரும் அன்பான வாசகர்கள் மற்றும் நட்புக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை என் 350வது பதிவான இப்பதிவில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். 
நன்றி!
~~

Sunday, July 21, 2013

பொன்னரளி & தங்க அரளி..

சிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் ,  இலவு காத்த கிளி போல "அரளி காத்த இமா"-வின் உலகிலும் நடந்தது. கலிஃபோர்னியா வந்த புதிதிலேயே அரளிப்பூக்கள் சாலையோரங்களிலும், நெடுஞ்சாலைகளின் நடுவிலும் கூட வளர்க்கப்படுவதை  கவனித்திருந்தேன். முன்பே "ஒரு பொன்மாலைப் பொழுது.." பதிவிலும் பகிர்ந்திருந்தேன். இப்போது அரளிப்பூக்கள் தூசு தட்டப்பட்டதும், என் கேமராவில் உறங்கிக் கொண்டிருந்த சில படங்களையும் தூசு தட்டி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். :) 

மேலே முதல் படத்தில் இருப்பது செவ்வரளி. இதிலேயே ஓரடுக்கிற்குப் பதிலாக பல அடுக்குகளுடன் லேசான இளஞ்சிவப்பு வண்ணத்திலும் அடுக்கரளிப் பூக்களுண்டு. 
வெண்மை நிறத்திலும் அரளி உண்டு. இவையெல்லாம் பொதுவாக கோயில்களில் வளர்க்கப்படும். ஸ்வாமி விக்ரஹங்கள், ஸ்வாமி படங்களுக்கு மட்டுமே அணிவிக்கப்படும். மகளிர் தலையில் சூடப்படுவதில்லை. மேலும் அரளியின் படங்கள் இங்கே. 

அடுத்து வருவது பொன்னரளி..இந்தப் பூவுக்கு எங்க ஊர்ப்பக்கம் பொன்னரளி என்றுதான் பெயர். வேலிக்காக வளர்க்கப்படும் மரங்களாக இருக்கும். ஆட்காட்டி விரல் நீளத்திற்கு குழல் போல பூக்கள், பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் மலரும். வாசனையும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த மரத்தின் இலைகள், தண்டுகளில் இருந்து வரும் பால் விஷத்தன்மை கொண்டது. அதே போல இந்த அரளியின் விதைகளும் மிக மிக நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளி விதையும் கீழேயுள்ள படத்தில் தெரிகிறது பாருங்கள். 
சிறுவயதில் மண் வீடுகட்டி விளையாடும்போது எங்க வீட்டு வேலிகளில் இருக்கும் இந்தப் பூவைப் பறித்து தென்னை ஈர்க்குகளில் வரிசையாகச் செருகி, வீட்டுக்கு அலங்காரம் செய்வோம்! :) இந்த மஞ்சள் பூவின் உள்ளே பார்த்தால் "ஹமாம்" சோப்பின் விளம்பரத்தில் முன்காலத்தில் ஒரு பூ வருமே, அதே பூ இருக்குமாக்கும்! ;)) ஹமாம் சோப்பை தேடினேன், இப்பல்லாம் விளம்பரங்கள் உட்பட எல்லாமே மாறிப்போச்சுங்க! 
இந்தப் படங்கள் போனவருஷம் கோவை போயிருந்தபொழுது செம்மேட்டில் எங்க சித்தி வீட்டுத் தோட்டத்தில் எடுத்தவை. 
சாலையோரம் வேலியாக நட்டிருந்தார்கள். பொன்னரளி பொதுவாக கண்ணைக்கவரும் பளீர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். பச்சை மரத்தில் மஞ்சள்ப் பூக்கள் வெகு அழகாக இருக்கும். பெங்களூரில் "பன்னர்கட்டா ஜூ" சென்றிருந்தபோது அங்கே யானைக் குளியலை ரசித்துக் கொண்டிருக்கையில் இந்த நிறப் பூக்களும், மரமும் என் கருத்தைக் கவர்ந்தன.
மஞ்சளுக்குப் பதில் வெண்பழுப்பு நிறத்தில் பொன்னரளி..மரம், இலைகள் எல்லாம் ஒன்று போலவே இருந்தாலும் பூக்கள் மட்டும் நிறம் வேறாக இருந்தன. :) 
~~
அரளி வரிசையில் அடுத்து வருபவர் "தங்க அரளி"..இதற்கும் வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்கள் இருக்கலாம். இதுவும் ஒரு அழகான மஞ்சள்ப் பூ! ஊரில அம்மா வீடு இருக்கும் இடம் டெவலப்பிங் ஏரியா-வாக இருப்பதால் கட்டப்பட்ட எல்லா வீடுகளிலும் இந்தத் தங்க அரளியும்,  ஜாதி மல்லிப் பூச்செடியும் தவறாமல் இடம் பிடித்திருக்கும். :) 
இந்தச் செடி பொன்னரளி அளவிற்கு விஷம் கிடையாது. பார்வைக்கும் அழகாய் இருப்பதால் எல்லா வீடுகளிலும் முன்வாயில் கதவோரங்களில் அழகாய்த் தலையாட்டும் இந்த மலர்கள்!
இந்தப் படத்தில் தெரிகிறதே சிறு மொட்டு, அதைப் பறித்து நெற்றியில் அடித்தால் பட்டென்று உடையும்! அது ஒரு விளையாட்டு! :))))
இந்த மலர்கள் சரமாகத் தொடுக்கப்பட்டு தெய்வங்களுக்குச் சாத்தப்படும். சில நேரங்களில் பூக்களுடன், செடியின் இலையையும் சேர்த்து வைத்து சரமாகத் தொடுப்பார்கள். பச்சை-மஞ்சள் காம்பினேஷன் கண்ணை அள்ளும், சரமும் நீளமாகக் கிடைக்கும். ஒரே கல்லில ரெண்டு மாங்கா! :) நான் கூட அப்படி ஒரு சரம் தொடுத்தேன் என நினைக்கிறேன், மீண்டும் படக்கோப்புகளைத் துழாவிப் பார்த்துப் படம் கிடைத்தால் இணைக்கிறேன். 
~~
இன்றைய பதிவின் இணைப்பு, பன்னர்கட்டா  ஜூ-வில் மரத்தின் மெலே உட்கார்ந்து கொய்யாவை ருசிக்கும் மகா கனம் பொருந்திய, மேன்மை தாங்கிய குட்டிக் குரங்கார்! :) 
பின்னே, நம்ம முன்னோர்களுக்கு மரியாதை கொடுக்க வேணாமா? இல்லனா கொய்யாப்பழத்த விட்டுப்புட்டு நம்மளப் புடிச்சுக் கடிச்சுர மாட்டாரா? அவ்வ்வ்வ்!

Thursday, July 18, 2013

தவலை வடை

புதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆமவடை இந்த வரிசையில் சேர்ந்து "தவல வடை/தவலை வடை" என்ற பேரிலேயே என் கருத்தைக் கவர்ந்த ரெசிப்பி இது! :)) சாதாரண வடையில் ஏதாவது ஒரு வகை பருப்பு மட்டிலும் உபயோகிப்போம், ஆனால் இந்த தவல வடையில் அரிசி, து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, பாசிப் பருப்பு என பலவிதப் பொருட்களும் சேர்ந்திருக்கின்றன. செய்முறையைப் பார்க்கலாம் வாங்க. 

இங்கே நான் செய்திருப்பது 21/4 பேருக்கான அளவு (ஜீனோ ஆல்ஸோ இன்க்ளூடட் யு ஸீ! ;) அவருக்கு இப்படியான "பொரிச்ச" உணவுவகைகள் ரொம்பப் பிடிக்கும்! :) )

இது தஞ்சாவூர் பக்கம் ஃபேமஸான மாலை சிற்றுண்டி என அறிந்தேன். சிலர் இதில் ஊறவைத்த ஜவ்வரிசியும் சேர்த்துச் செய்கிறார்கள். இந்த ரெசிப்பி என்னைக் கவர்ந்த இடம் இங்கே

தேவையான பொருட்கள்
ஊறவைக்க வேண்டியவை
துவரம் பருப்பு -1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக
கடலைப் பருப்பு-1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக
உளுந்துப் பருப்பு-1/8கப்பிற்கு கொஞ்சூண்டு அதிகமாக
பாசிப் பருப்பு-1/8கப்
புழுங்கல் அரிசி-1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக
பச்சரிசி-1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக [நான் பாஸ்மதி அரிசி உபயோகித்திருக்கிறேன்.]

குறிப்பு: 1/4கப் என்பது 50கிராம் அளவு. நான் அதற்கும் கொஞ்சம் குறைவாகவே பொருட்கள் எடுத்தேன். 

முதலில் அரைக்க வேண்டியவை
வரமிளகாய்-3
பச்சை மிளகாய்-2
பெருங்காயப் பொடி-1/4டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
தேங்காயெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்து பருப்பு-1டீஸ்பூன்
வடைமாவில் சேர்க்க
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-கொஞ்சம் 
பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காய்-1டேபிள்ஸ்பூன்

வடை பொரிக்கத் தேவையான எண்ணெய்


செய்முறை
அரிசிகளை ஒன்றாக களைந்து ஊறவைக்கவும். 
து.பருப்பு, க.பருப்பு இரண்டையும் ஒன்றாக களைந்து ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பு, உளுந்துப் பருப்பு இரண்டையும் தனித்தனியே களைந்து ஊறவக்கவும். 
எல்லாப் பொருட்களும் குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும். 
மிக்ஸியில் வரமிளகாய், இரண்டு பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை முதலில் சேர்த்து  கொறகொறப்பாக அரைக்கவும். பிறகு அதனுடன் ஊறிய அரிசியை வடிகட்டி சேர்த்து அரைக்கவும். 
அரிசி ஓரளவு அரைபட்டதும் ஊறிய து.பருப்பு + க.பருப்பை தண்ணீர் வடித்துவிட்டு சேர்த்து கொறகொறப்பாக அரைத்தெடுக்கவும். 

உளுந்துப் பருப்பை தனியாக மிக்ஸியில் எடுத்து நைஸாக அரைத்து (இட்லிக்கு அரைப்பது போல) வடை மாவுக் கலவையுடன் சேர்க்கவும். 
ஊறிய பாசிப் பருப்பையும் தண்ணீர் வடித்துவிட்டு வடைமாவில் சேர்க்கவும். 
தாளிப்புக் கரண்டியில் தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு-உளுந்து தாளித்து வடைமாவில் ஊற்றவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய்த்துண்டுகளையும் சேர்த்து பத்து நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.

வடைக்கு எண்ணெய் காயவைக்கவும். வடை மாவை கரண்டியால் நன்றாக கலக்கி, சூடான எண்ணெயில் சிறிய வடைகளாகப் போடவும். பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சூடான தவல வடை ரெடி! தேங்காய் சட்னியுடன் சுடச்சுட  சாப்பிட ஜோராக இருக்கும்.
 
காரசாரமான வடை + சட்னி மட்டும் போதுமா? பக்கவாத்தியத்துக்கு பைப்பிங் ஹாட் காப்பி அல்லது டீ வாண்டாமோ? இதோ, அதுவும் இருக்கு, திவ்யமாச் சாப்பிடுங்க! :))))

Monday, July 15, 2013

ஆனியன் பஃப்ஸ்

கோவையில் பெரும்பாலானா பேக்கரிகளில் மாலை நேரங்களில் சூடான பஃப்ஸ் பல சுவைகளில் கிடைக்கும்.  வெஜ் பஃப்ஸ், காலிஃப்ளவர் பஃப்ஸ், எக் பஃப்ஸ், ஆனியன் பஃப்ஸ் இப்படி பலசுவைகள், நான்வெஜ் பஃப்ஸும் உண்டு. பலநாட்களாக இந்த வெங்காய பஃப்ஸ் செய்ய நினைத்திருந்தேன். இங்கே ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரி ஷீட்ஸ் கிடைப்பதால் இது ஜஸ்ட் அரை மணி நேர வேலைதான். ஸ்டஃபிங்-ம் வெறும் ஆனியன் என்பதால் அதுவும் ஐந்து நிமிஷத்தில் தயாராகிவிடும்.

தேவையான பொருட்கள்















பஃப் பேஸ்ட்ரி ஷீட்-1 [நான் சதுர வடிவிலான சிறிய பேஸ்ட்ரி ஷீட்ஸ் உபயோகித்திருக்கிறேன். மேலே படத்திலுள்ள பெரிய பேஸ்ட்ரி ஷீட்என்றால் தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி உபயோகிக்கவும்]
உலர்ந்த மாவு-சிறிது
பால்-1டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பில, கொத்துமல்லி இலை -சிறிது
கறிமசாலாதூள்-3/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
பேஸ்ட்ரி ஷீட்-ஐ ப்ரீஸரில் இருந்து வைத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவரவும்.

வெங்காயத்தை கனமான நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு, கறிமசாலாதூள் சேர்த்து வெங்காயம் முக்கால் பாகம் வதங்கும் வரை வதக்கி கொத்துமல்லி இலை தூவி ஆறவைக்கவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை விருப்பமான வடிவில் நறுக்கி..

மாவு தூவிக்கொண்டு, சப்பாத்திக் கட்டையால் லேசாகத் தேய்த்து..
ஒவ்வொரு ஷீட்டிலும் வெங்காயக் கலவையை வைத்து, ஓரங்களை தண்ணீர் தடவி ஒட்டவும்.
சீல் செய்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவன் - ல் சுமார் 20 நிமிடங்கள் அல்லது பஃப்ஸ் பொன்னிறமாகும் வரை bake செய்து எடுக்கவும்.
சூடான சுவையான மொறு மொறு ஆனியன் பஃப்ஸ் ரெடி! 

Wednesday, July 10, 2013

வசந்தத்தின் இறுதி..

கோடை துவங்கியதன் பின்னால் டேலியாக்கள்  மலர்வதும் குறைந்து இப்போது செடிகள் இறுதிநிலைக்கு வந்துவிட்டன. மலர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் பூத்துச் சிரித்துக் கொண்டிருந்த  ஜூன் முதல் வாரத்தில் எடுத்த படங்கள் இவை!!
இந்த பிங்க் லேடி:) நேரில் பார்க்கும்போது இருப்பதை விட காமெராவில் பார்க்கையில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் ப்ரெட்டி லேடி:)யாக இருக்கிறாள்!
மஞ்சள் மலர்கள் இந்த வருஷம் தோட்டத்தை டாமினேட் செய்துவிட்டன. பிங்க் நிற டேலியா அந்த அளவுக்கு பூக்கள் வரவில்லை.
இந்த சிவப்பு ரோஜாக்கள் 2011ஆம் ஆண்டு டாலர் ஷாப்பில் 99காசுக்கு வாங்கியது.  வீடு மாறியபோதும், பத்திரமாகக் கொண்டுவந்து கட்டிக் காப்பாற்றி வருகிறேன். :)
இருவண்ண டேலியாக்கள் நாளாக ஆக அளவில் சிறுத்து மினி டேலியாக்களாக மாறிவிட்டிருந்தன..

செண்டுமல்லி, டென்னிஸ் பந்து அளவில் வந்த முதல் பூ நாட்களோட ஓட கோல்ஃப் பந்து அளவுக்கு வந்தது.. :)
இது நான் ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் இருந்து வாங்கிவந்த கத்தரி நாற்று..படத்தில் காய்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றன என்று பாருங்கள்..
இது பூச்சி அரிப்பிற்கு முன் செழிப்பாக வளர்ந்திருந்த கத்தரி..

தொடர்ந்து ஒரு வாரம் பத்துநாட்கள் தினமும் காலையில் செடியை பரிசோதித்து, பூச்சி அரித்த இலைகளைக் கிள்ளி எறிந்து, தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு ஒரு வாறாக கத்தரியைக் காப்பாற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன். செடி இருந்த இடத்தையும் மாற்றி வைத்திருக்கிறேன்.   கத்தரிக்காய்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்! :)))

LinkWithin

Related Posts with Thumbnails