
கோதுமைப் பாயசம், கேரளாவில் பிரபலமான இனிப்பு. ஊரில் எங்க வீட்டுப் பக்கத்தில் நிறைய மலையாளிகள் வீடு இருக்கும், என்ன விஷேஷம் என்றாலும் கோதுமைப் பாயசம் செய்துடுவாங்க. பலமுறை ருசி பார்த்திருக்கேன். சிலமுறை வீட்டில் செய்தும் இருக்கோம் என்று நினைவு. பலதிங்களுக்கு முன்பு
எங்க(!) மார்க்கட்டில் இந்த கோதுமைப் பேக்கட்டைப் பார்த்ததும் கோதுமைப் பாயசம் நினைவு வர வாங்கிவந்துவிட்டேன்.

குக்கரில் கோதுமையைப் போட்டு வேகவிட்டால், மணிக்கணக்காய் வெந்து எக்கச்சக்க விசில் வந்தபிறகும் கோதுமை வேகாமல் கண்ணை முழிச்சுகிட்டு நின்றது! கோதுமைப்பாயசம் வைக்கப்போறேன் பேர்வழி-ன்னு பந்தாவாய் என்னவரிடம் சொல்லியாச்சு..வேறவழியில்லாமல் அதையே பாயசமாக வைச்சு, நறுக் நறுக்குன்னு கோதுமை சாப்பிட்டவாறே பாயசம் குடிச்சோம். அதன் பின்னர், இந்த கோதுமை இருப்பதே சுத்தமாய் மறந்துபோய்விட்டது. வேற ஏதாச்சும் செய்யலாம்னு ஒரு சில சமயம் தோணினாலும், சூடு கண்ட பூனையாய் அப்படியே வைச்சிருந்தேன். ஒருநாள் வெற்றிகரமா அம்மாவிடம் தொலைபேசியில் சந்தேகம் கேட்டுகிட்டு அடுத்த எக்ஸ்பெரிமென்ட்டை துவங்கினேன்!
வறட்டு கோதுமையை அப்படியே போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து, இறுதியாக வெல்லம் -ஏலக்காயும் சேர்த்து அரைத்தெடுத்து கச்சாயமாக சுடுவாங்க. இனிப்புக்கு பதிலாக வரமிளகாய்-சீரகம் சேர்த்து அரைச்சு, வெங்காயம் அரிஞ்சு போட்டு காரக் கச்சாயமும் செய்வதுண்டு. சரிவருமா வராதா என்ற சந்தேகத்திலயே ஆரம்பிச்சேன். கச்சாயத்தை சுட்டு எடுத்துவைக்கும் வரை சந்தேகம் அப்படியே இருந்தது. கரெக்ட்டாக என்னவரும், பக்கத்து வீட்டு நண்பர்களும்
பரிசோதனை எலிகளாக வந்தார்கள். தட்டுல வைச்சு, போட்டோ கூட சரியா எடுக்கலை, அப்படியே திகிலோடு தட்டை அவங்க கையில் கொடுத்தேன்!

சூப்பரா இருக்கு கச்சாயம் என்று அடுத்த ஈடு பொரித்து எடுப்பதற்குள் தட்டைக் காலி செய்துவிட்டார்கள்! அதுக்கப்புறம் ப்ளாகுக்கு வருகை தராமல் இருக்குமா கச்சாயம்? :))))
----------
தேவையான பொருட்கள்கோதுமை -1 கப்
வெல்லம் - 1/2 கப் (இனிப்புக்கேற்ப )
ஏலக்காய்-2
எண்ணெய்
செய்முறை சுத்தம் செய்த கோதுமையை க்ரைண்டரில் போட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். (வெல்லம் சேர்க்கும்போது மாவு இளகிவிடும், அதனால் தண்ணீர் கம்மியாகத் தெளித்து அரைப்பது முக்கியம்)

கோதுமையை ஊறவைக்காமல் போட்டால் அரைபடுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இந்த unpelted wheat வேறு ஏதாவது(!)க்கு உபயோகிக்கும் கோதுமையோ என்னவோ தெரியவில்லை, ஜவ்வு மாதிரி எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டே இருந்தது. நானும் சலிக்காமல் ஸ்பூன் வைச்சு பிரிச்சு பிரிச்சு தள்ளி விட்டுகிட்டே இருந்தேன். ஒரு கட்டத்தில், போகாத ஊருக்கு வழி தேடுகிறோமோ என்றே தோன்ற ஆரம்பிச்சது. ஆனாலும் விடாமல் அரைமணி நேரத்துக்கும் மேலாக அரைச்சு ஒரு வழிக்கு கொண்டுவந்துட்டமில்ல?! :)

அரைகப் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து அரைத்து..

2 ஏலக்காயும் தட்டிப் போட்டு கச்சாயத்துக்கு மாவு தயாராகிவிட்டது.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, கோதுமைமாவை ஸ்பூனால் எடுத்து ஊற்றி...

ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு, கச்சாயங்கள் பொன்னிறமானதும் எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.

சுவையான கோதுமைக்கச்சாயம் ரெடி! கச்சாயம், பொன்னிறமாவேண்டும் என்பதைவிடவும், கொஞ்சம் நல்லாவே டார்க் ப்ரவுன் கலர் ஆகும்வரை வேகவைத்து எடுத்தால் நன்று.

இன்னுமொரு விஷயம் என்னன்னா, இந்தக் கச்சாயம் செய்த உடனே சாப்பிடுவதை விடவும், பழசாகி சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். அப்ப, ப்ரெஷ்ஷாச் சாப்புட நல்லா இருக்காதான்னு எக்குத்தப்பாக் கேக்கப்படாது, என்ன வேகத்தில் கச்சாயம் காலியாகுதுன்னு பாருங்க! :))))))

ஒரு க்ளிக் பண்ணிவிட்டு, தட்டை கொண்டுவந்து காஃபி டேபிளில் வைக்கும் முன் 2 கச்சாயம் காணோம்! சீக்கிரமா வந்து எடுத்துக்குங்க, அப்புறம் தட்டு காலியானபிறகு வந்து ஏமாந்து போயிராதீங்க! ;)
"விடாது கருப்பு!" மாதிரி இந்த முறை வேற ஒரு ப்ராண்ட் கோதுமை வாங்கிவந்திருக்கிறேன், சீக்கிரமா காரக்கச்சாய எக்ஸ்பெரிமென்ட்டும் செய்து பார்த்துடலாம், என்ன சொல்றீங்க? ;)))))