2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுதிருந்து இது பற்றிய நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஷக்கர்பரா அல்லது சங்கர்பாலி என்று பெயர் கொண்ட இந்த இனிப்புவகை மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் மிகவும் பிரபலமான ஒன்று என்று விக்கிபீடியா சொல்கிறது! :) மக்கள் தீபாவளி சமயத்தில் ஷக்கர்பராவை வீடுகளில் செய்கிறார்கள், மற்ற நாட்களில் கடைகளில் வாங்கி ருசிக்கிறார்களாம். புத்தாண்டுக்கு நாமும் இதனை வீட்டில் செய்து ருசிக்கலாம்,வாங்க! :)
ரெசிப்பிக்கு போகுமுன்னர் சிறு முன்குறிப்பு..இங்கே வீட்டுப்பக்கத்தில் ஒரு நாக்பூர்-ஐச் சேர்ந்த நண்பி இருக்கிறார். அவரின் அம்மாவும் இப்பொழுது வந்திருப்பதால் சில வடஇந்திய சமையல் குறிப்புகள் அந்த ஆன்டி-யிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருநாள் வாக் போய்விட்டு திரும்புகையில் அவங்க வீட்டுக்குப் போனோம், டீயுடன் இந்த ஷக்கர்பரா-வைத் தந்தாங்க. எனக்கோ ஒரே இன்பஅதிர்ச்சி!! ;)) எப்படி செய்யணும் என்று கேட்டுக்கொண்டு வந்தேன். சாம்பிள் கொண்டுபோய் ஆன்டிக்கும் கொடுக்க அவங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி! முதல்நாள் மாலை ரெசிப்பி கேட்டுக்கொண்டு அடுத்தநாள் மதியம் ஷக்கர்பரா-வைக் கொடுத்தா...எப்படியிருக்கும்?! :))
தேவையான பொருட்கள்(எந்த கப் எடுத்தாலும் எல்லாப் பொருட்களையும் அதிலேயே அளக்கவும்.)
பால் -1கிண்ணம்
சர்க்கரை -1கிண்ணம்
நெய் -3/4கிண்ணம்
மைதா -தேவையான அளவு***
எண்ணெய்
செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பால்-சர்க்கரை-நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும்.
இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
பிசைந்தமாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.
கத்தி (அ) பிஸ்ஸா கட்டர் கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
கீழே படத்தில் இடதுபுறம் இருப்பது கொஞ்சம் மெல்லியதாக நறுக்கப்பட்ட சங்கர்பாலி, வலப்புறம் இருப்பது கொஞ்சம் தடிமனாக நறுக்கியது. இரண்டில் எது நன்றாக இருக்கும் என பார்க்கலாம்னு இப்படி டெஸ்ட் எல்லாம் செஞ்சேன்! ஆனா பாருங்க, ரெண்டுமே சூப்பராதான் இருந்துது! ஹிஹி! :))
என்னதான் சொல்லுங்க, கோயமுத்தூர்ல இருந்து வாங்கிவந்த அந்த "அது" மாதிரி இந்த "இது" வரலையோன்னு கொஞ்சம் மனக்குறையாத்தான் இருக்குது. அடுத்த முறை செய்கையில் இன்னும் இம்ப்ரூவ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு ஷக்கர்பராவைச் சுத்திச் சுத்திப் படமெடுத்தாச்! ;)
என்ஜாய்!








