--------------------------
இது கத்தரிக்காயைப் பொரிச்சு ஒரு ஶ்ரீலங்கா ஸ்பெஷல் குழம்பாக்கும்! இதுக்கு இங்கத்தைய பெரிய கத்தரிக்காய்தான் சரி.. ( ஒபஜின்) .. இரண்டாகப் பிளந்துபோட்டு , மூன்று துண்டாக வெட்டுங்கோ.. அதாவது பெரிய பெரிய பீஸாக...
நன்கு பொரித்தெடுங்கோ, பின்னர் உங்கட முறையில் தாளிதம் அனைத்தும் சேர்த்து வெங்காயம் மிளகாய் வதக்கி, கறித்தூள் போட்டு வதக்கி, பழப்புளி கரைத்து விடோணும்.. கொஞ்சம் புளித்தன்மையாக
இருப்பின்தான் சுவை அதிகம்.
பின்னர், அளவுக்கு தண்ணி, விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து கொதித்ததும், இக்கத்தரிக்காய்களைப் போட்டு இறக்குங்கோ..
--------------------------
என்று குத்துமதிப்பாகக் கிடைத்த ரெசிப்பியை, என் ருசிக்கேற்ப டெவலப் பண்ணி, சுவையான குழம்பாக மாற்றி, வெற்றிகரமாக போட்டோக்களும் எடுத்து இங்கே பகிர்கிறேன். கத்தரியை டீப் ஃபிரை செய்வதற்கு பதிலாக கொஞ்சம் எண்ணெய் நிறைய:) விட்டு ஷாலோ ஃபிரை செய்துவிட்டேன். விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து என ரெசிப்பி தந்தவர் குறிப்பிட்டதால், நானாகவே கெட்டியான பசும்பாலைச் சேர்த்துச் செய்திருக்கிறேன்! ;)
Authentic Sri Lankan Recipe-வேண்டுவோர், நல்லெண்ணெயில் கத்தரிக்காயை முறுகலாகப் பொரித்தும், தேங்காய்ப்பால் சேர்த்தும், கெட்டியான குழம்பாகச் செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். கருத்துப் பெட்டியில் ஒரு நட்பு பல்வேறு டிப்ஸ்கள் கொடுத்திருக்காங்க, அதையும் கவனித்துக்கொள்ளவும். :)
--------------------------------
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய் -2
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
புளிக்கரைசல்-1/4கப்
கறிப்பொடி-2டீஸ்பூன் [நான் தோழி கொடுத்த கலவை மிளகாய்ப்பொடி உபயோகித்திருக்கிறேன், நீங்க வசதிப்படி சாம்பார் பொடி (அ) மிளகாய்த்தூள்+மல்லித்தூள் (அ) கறிமசாலாத்தூள் சேர்த்துக்கலாம்.]
ஹாஃப் & ஹாஃப் மில்க்/ கெட்டியான பசும்பால்-3டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/4டீஸ்பூன்
வெந்தயம்-5
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
செய்முறை
கத்தரிக்காயைக் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம்-பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, நறுக்கிய கத்தரித் துண்டுகளைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் கத்தரிக்காயை முறுவலாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் வெந்தயம்-சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, கறிப்பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
புளிக்கரைசல் பச்சைவாசம் போக கொதித்து வற்றியதும் பொரித்த கத்தரிக்காய் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கால் கப் கொதிநீரும் சேர்க்கலாம்.
சில நிமிடங்கள் கழித்து, தீயைக் குறைத்துக்கொண்டு பாலைச் சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு குழம்பு சூடானதும், சர்க்கரையைச் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும். குழம்பு அடுப்பின் சூட்டிலேயே சில நிமிடங்கள் இருக்கட்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குழம்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு ரெடி.
பொங்கலும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் சூப்பர் காம்பினேஷன்! தேங்க்ஸ் பூஸக்கா ஃபார் தி ரெசிப்பி! :)
கோ-இன்சிடென்டலாக நானும் காலை உணவுக்கு வெண்பொங்கல்தான் செய்திருந்தேன்! :) அது என்ன கோ-இன்சிடென்ஸ், யாரந்த பூஸக்கா:) என அறிய விரும்புவோர் இங்கே கையை வையுங்கோ! மறக்காமல் அந்தப் பதிவின் கருத்துக்களையும் படிக்கணும். :)
~~~
கத்தரிக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்-1 (அ) சின்னக் கத்தரிக்காய்கள் -4
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
துவரம் பருப்பு-1/4கப்
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சாம்பார்பொடி-1டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
பருப்புடன் தக்காளி, 2 துளி எண்ணெய், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும்.
கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
வெந்த பருப்பு & தக்காளியை கரைத்து கத்தரிக்காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் சாம்பார்பொடி, தேவையான உப்பு சேர்த்து குறைவான தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
காரம் குறைவான, புளி சேர்க்காத, சுவையான சாம்பார் தயார். சாதம், இட்லி தோசை இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.